ஏரகத்துச் செட்டி




முருகப் பெருமானுக்கு "செட்டி" என்ற ஒரு பெயர் உண்டு.


முருகவேள் வள்ளிபிராட்டியைக் காத்தருளும் பொருட்டு வளையல் செட்டியாராக வனம் போனார். “காதலால் கடல் சூர் தடிந்திட்ட செட்டி அப்பனை, பட்டனை, செல்வ
ஆரூரானை மறக்கலும் ஆமே” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுகின்றார்.

கடலிலே மரமாக எழுந்திட்ட சூரனைத் தடிந்த செட்டி ஆகிய முருகவேளுக்கு அப்பன் திருவாரூரிலே கோயில் கொண்டு இருக்கும் சிவபிரான் என்னும் முகமாக "செட்டி அப்பன்" என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.

"செட்டி வடிவைக் கொடு தினைப்புனம் அதில் சிறு குறப்பெண் அமளிக்குள் மகிழ் செட்டி! குரு வெற்பில் உறை சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே" என்று "சுத்திய நரப்புடன்" எனத் தொடங்கும் திருவேரகத் (சுவாமிமலை) திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றி உள்ளார்.
                                         .
"செட்டி என்று வனம் மேவி, இன்பரச சக்தியின் செயலினாளை அன்பு உருக தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் பெருமாளே” என்று "கட்டிமுண்டக" எனத் தொடங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றி உள்ளார்.

"செட்டி எனும் ஓர் திரு நாமக் கார!" என்று "விட்ட புழுகு" எனத் தொடங்கும் பொதுத் திருப்புகழிலும் வைத்து அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் போற்றி உள்ளார்.

"........     ........     ........ அயில்விடும்
புத்தி ப்ரியத்தன், வெகு வித்தைக் குணக்கடல்,
புகழ்ச்செட்டி, சுப்ரமணியன்,

செச்சைப் புயத்தன், நவரத்ன க்ரிடத்தன், மொழி
தித்திக்கு முத்தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முனிவர்க்கு உரைத்தவன்
சேவல் திருத்துவசமே".

என்று சேவல் வகுப்பிலும் அருணகிரிநார், முருகப் பெருமானை, "செட்டி" எனப் போற்றி உள்ளார்.
                                                   
 ... ... ... ... ... ... ... “வள்ளி
கை வளையல் ஏற்றி, ரு காலில் வளைந்து ஏற்றி
மை வளைய நெஞ்ச மயல் ஏற்றி - வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு வியாபாரம் செய் செட்டி, - வெருட்டி ஒரு
வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியும் குறச்செட்டி, - பாடாநல்
கீரனைப் பூதத்தால் கிரிக் குகையுள் கல்சிறை செய்து
ஓர் அரிய பாவை உகந்து அணைந்து - கீரனுக்கு
வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மையாம் செட்டி,
ஆட்டில் உவந்து ஏறும் அன்ன தானசெட்டி, - ஈட்டுபுகழ்
தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி,
நாவேந்தர்க்கே இன்பம் நல்கு செட்டி, - பூ ஏந்திக்
கண்டு பணிபவர் தம் காசு பறிக்கும் செட்டி,
பண்டு அறுவர் ஊட்டு தனபால் செட்டி, - தொண்டர்
மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
குதிரை மயில் ஆம் குமர செட்டி, சதிர் உடனே
சீவ பர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி,
மூவர் வணங்கும் முருகப்ப செட்டி - பாவனைக்கும்
அப்பாலுக்கு அப்பாலாம் ஆறுமுக செட்டி, இவன்
தப்பாமல் கண்டால் உன் தன்னை விடான், - இப்போதுஎம்
வீட்டில் அவல் வெல்லம் வேணது உண்டு வா எனச் சீர்  
ஆட்டி அனைமார் அகம் புகுந்தார்”

என்று தணிகை உலா என்னும் நூலில் முருகப் பெருமான் புகழப்பட்டு உள்ளார்.

"இனம் எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி" என்று தாம் பாடியருளிய "சண்முக கவசம்" என்னும் நூலில், பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைப் போற்றி உள்ளார்.

இருபொருள் பட, சிலேடையாகப் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர் காளமேகப் புலவர்.   
திருவேரகம் (திரு + ஏர் + அகம்) என்னும் சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதப் பெருமானை, "திருவேரகச் செட்டி" என்று விளித்து, இந்த (காயம்) உடம்பை ஒழித்து, இனிப் பிறவாமல் இருக்கும் பெருவாழ்வை அருளுமாறு ஒரு வெண்பாவைப் பாடினார்.

அது வருமாறு...

வெங்காயம் சுக்கு ஆனால், வெந்தயத்தால் ஆவது என்ன?
இங்கு ஆர் சுமந்து இருப்பார் இச் சரக்கை? -- மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்,
ஏரகத்துச் செட்டியாரே.

இப் பாடலின் முதற்பொருள் (உலகியல் பொருள்) வருமாறு ---

திரு ஏரகம் என்ற ஊரில் உள்ள செட்டியாரே!, வெங்காயம் சுக்குப் போல உலர்ந்து வற்றி விடுமானால், வெறும் வெந்தயம் என்னும் ஒரு பொருளால் மட்டும் ஆவது என்ன? இந்தச் சரக்கை எவர் சுமந்து இருப்பார். மங்குதல் இல்லாத சீரகத்தைத் தந்தால், நான் பெருங்காயத்தைத் தேட மாட்டேன்.

விளக்கம் ---

வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்பவை உணவுப் பொருள்கள்.

ஏரகத்துச் செட்டியார் - திரு ஏரகம் என்னும் சுவாமிமலையில் வணிகம் செய்கின்றவர்.

இப் பாடலுக்கு இரண்டாவதாகக் கூறப்படும் (அருளியல்) பொருள் ---

திரு ஏரகம் என்னும் (சுவாமிமலை) திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் முருகப் பெருமானே! கொடிய (வினைகளால் ஆன இந்த உடல், வெறும் உடல் இன்பத்தை மட்டுமே கருதி, உணவு வகைகளை உண்டு கொழுத்துப் பெருக்காமல், உண்டி சுருக்குதல் முதலான தவத்தால்) சுக்குப் போல வற்றிப் போகுமானால், கொடிய வினைகளால் வரக் கூடிய துன்பம் ஏதும் இல்லை. வினைகளால் வரக் கூடிய துன்பங்கள் நீங்கிவிட்டால், இந்த உடலை யார் சுமந்து இருப்பார்கள்? பெருமைக்கு உரிய வீடுபேறு என்னும் மோட்சத்தை எனக்கு அருளிச் செய்தால், இனிப் பலவாகிய உடல்களைத் தேடிப் பிறக்க மாட்டேன்.

விளக்கம் ---

வெங்காயம் --- வெம்மை + காயம், வெங்காயம். கொடிய இந்த உடல்.

"வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் தீர்ந்தால் தினைப் போது அளவும் நில்லாது" என்று பட்டினத்தடிகள் பாடி உள்ளார். வினைகளை அனுபவித்தற்கு இந்த உடல் இறையருளால் நமக்கு வந்தது. வினைகள் துன்பத்திற்கு இடமாக அமைவதால் கொடியவை ஆயிற்று.  துன்பத்திற்குக் கொள்கலமாக இந்த உடல் இருப்பதால் கொடிய உடல் எனப்பட்டது.

சுக்கு - வற்றிய பொருள். விரதம் தவம் முதலியவற்றால் உடம்பு இளைக்கவேண்டும். உணவு முதலியவைகளால் கொழுப்பதால் ஒரு பயனும் இல்லை. "திருத்தணிகைத் திருமாமலை வாழ் தேவா! என் தன் சந்நிதிக்கு வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே" என்றும், "கொழுத்த உடலை எடுத்தேனே" என்றும் வள்ளல் பெருமான் பாடி உள்ளார். இடம்பு கொழுத்தால் உள்ளமும் கொழுக்கும். உடம்பு இளைத்தால், உள்ளம் உருகும்.

வெந்த + அயம், வெந்தயம் என்று ஆனது. அயம் என்றால் பஸ்பம் என்று பொருள். வெந்த பின் கிடைப்பது அயம். அயம் என்பது இங்கு, அயச் செந்தூரப் பொடியைக் குறிக்கும். உடம்பு நோயால் இளைத்தால் செந்தூரம் என்னும் மருந்து வேண்டும். தவத்தால் இளைத்தால் அம் மருந்து தேவை இல்லை. இதை உணர்த்த, "வெந்தயத்தால் ஆவது என்ன" என்று பாடினார்.

சரக்கு - பொருள். இங்கே உடலைக் குறித்தது. "சரக்கு அறைத் திருவிருத்தம்" என்று ஒரு திருப்பதிகத்தையே பாடி உள்ளார் அப்பர் பெருமான். தவம் முற்றிய பிறகு, இந்த உடலைச் சுமந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், "இங்கு ஆர் சுமந்து இருப்பார் இச் சரக்கை" என்று பாடினார்.

சீரகம். சீர் + அகம். சிறந்த வீடாகிய மோட்சத்தை இது குறிக்கும். தமிழில் வீடுபேறு எனப்படும். வீடு பேற்றினை இறைவனு அருள் புரிந்தால், இந்தப் பெரிய உடம்பு (பெரும் + காயம். காயம் = உடம்பு) என்பதை ஆன்மா தேடவேண்டிய அவசியம் இல்லை என்பதைக் குறிக்க, சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்" என்று பாடினார்.

ஏரகத்துச் செட்டி --- முன்னர்ப் பலவாறாக அருளாளர்கள் பலரும் துதித்து வணங்கியபடி, ஏரகத்துச் செட்டி என்பது திரு ஏரகம் என்னும் சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு இருக்கும் முருகப் பெருமான்.

உண்மைப் பொருள் இவ்வாறு இருக்க, பலரும் தத்தமக்கு ஏற்றவாறு பொருள் காண்பர். என்னை? அவரவர் இயல்பு அது ஆகும். மறுத்தால் பிணங்குவர். உண்மைப் பொருளை உள்ளவாறு உணர்தல் வேண்டும். திரிபாக உணர்தல் பயன் தராது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...