திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 54 -- பொச்சாவாமை
இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செயலை நன்கு மதித்து எண்ணிச் செய்தால், செய்வதற்கு அரிய செயல்கள் என ஆகாதவை எவையும் இல்லை" என்கின்றார் நாயனார்.
உள்ளத்தில் மறதி இல்லாதவர்களுக்கு, செயலின்மேல் இடைவிடாத நினைப்பு இருக்கும். இருக்கவே, அதனை முடித்தற்கு உரிய உபாயங்களைத் தேடிக் கொள்வர். கருமத்தில் கண்ணாக உள்ளவர்க்கு, செயலானது எளிதில் முடியும்.
இதற்குத் திருக்குறள்...
“அரிய என்று ஆகாத இல்லை, பொச்சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அரிய என்று ஆகாத இல்லை --- இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை,
பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
(பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளலாகா
மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே! -சிறந்த
ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து. --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
மாண்பு ஒழியும் நெஞ்சே – பெருமை இல்லாத நேஞ்சே!, பிறந்த இடம் - இதற்கு முன் பிறந்த இடங்களை, நினைப்பின் - நீ நினைந்து பார்த்தாயானால், மறந்தேயும் பேர்த்து உள்ளலாகா - அவற்றை மறந்தும் திரும்ப எண்ணுதலாகாது (ஆதலின் நீ), புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து - புழுக்கள் கூடி வாழும் இடமாகிய இவ்வுடலைப் பெற்றதால் உண்டான மறதியைக் கெடுத்து, சிறந்த ஒழுக்கத்தோடு ஒன்றி - பெரியோர் ஒழுக்கத்தில் நின்று, உயப் போதி - துன்பத்தினின்றும் உய்தி பெறுவாயாக.
No comments:
Post a Comment