திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 54 -- பொச்சாவாமை
அதாவது, தொழிலில் மறதி கொள்ளாமல் இருத்தல். அழகு, செல்வம், ஆற்றல் முதலியவற்றால் மகிழ்ந்து தன்னைக் காத்துக் கொள்ளுதலிலும், மாற்றாரை ஆழித்தல் முதலிய காரியங்களிலும் மறதி கொள்ளாமல் இருத்தலைக் குறித்தது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "மிக்க இன்பக் களிப்பால் உண்டாகும் மறதியானது, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீமையானது" என்கின்றார் நாயனார்.
அதாவது பகைவரை வெல்வதற்கும், கொடியவரைத் தண்டிப்பதற்கும் வேண்டுவதாகிய அளவான கோபம், அளவு கடந்து போகுமானால் எத்தகைய தீமையை அது விளைக்குமோ, அத்தகைய தீமை ஒருவனுக்குத் தன்னிடத்து உள்ள பெருஞ்செல்வம், அழகு, ஆற்றல் முதலியவற்றால் ஆன அளவிறந்த மகிழ்ச்சியானல் உண்டாகும் மறதி அல்லது சோர்வினால் உண்டாகும்.
இதற்குத் திருக்குறள்.....
“இறந்த வெகுளியின் தீதே, சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு --- மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி,
இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை அறியலாம்...
“வெகுளியே உயிர்க்கு எல்லாம் விளைக்கும் தீவினை,
வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்,
வெகுளியே அறிவினைச் சிதைக்கும், வெம்மைசால்
வெகுளியில் கொடும்பகை வேறொன்று இல்லையால். --- காஞ்சிப் புராணம்.
இதன் பொருள் ---
கோபமே உயிர்களுக்கெல்லாம் பாபமாகிய பைங்கூழை விளைவிக்கும் வித்தாம். மேலும், கோபமே நற்குணம், தவம், நோன்பு முதலிய புண்ணியச் செயல்களை அழிக்கும் கருவியாம்; கோபமே அறிவினை அழிக்கும் மயக்கப் பொருளாம். கொடுமை மிக்க கோபத்தினும் கொடிய பகை ஒருவற்குப் பிறிதொன்றும் இல்லை. (அதுவே என்க)
“சில்சொல் பெருந்தோள் மகளிரும், பல்வகையுந்
தாளினால் தந்த விழுநிதியும், --- நாடோறும்
நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும், இம்மூன்றும்
காப்பு இகழல் ஆகாப்பொருள். “ --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
சில்சொல் பெருந்தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும், பெரிய தோள்களையுமுடைய, பெண்டிரும்; பல்வகையும் தாளினால் தந்த விழுநிதியும் - பலவகையாலும் தமது முயற்சியினால் தேடிய சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் - எப்பொழுதும் நாக்கில் நீர் அருந்தும்படி சமைத்த உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு இகழல் ஆகாப் பொருள் - காத்தலைத் தாழ்த்திக் கூறுதலாகாத பொருள்களாம்.
பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்ற வேண்டி முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி.
No comments:
Post a Comment