055. செங்கோன்மை - 07. இறைகாக்கும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "அரசன் தனது நாட்டுக் குடிகளை எல்லாம் நீதி தவறாமல் காத்து வருவானேல், அவனை அந்த நீதி வழுவா ஆட்சிமுறையே காப்பாற்றும்" என்கின்றார் நாயனார்.

நடுநிலை தவறாத ஆட்சி முறையானது, ஆட்சி புரிவோர்க்குக் காவலாக அமையும். 

செம்மையான அரசாட்சியை (செங்கோலை) முட்டுப்படாமல் செலுத்திய இரண்டு அரசர்களை, பரிமேலழகர் காட்டி உள்ளார். தன்மகனை என்றும் பாராமல் அவனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன் வரலாறு ஒன்று. இது திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த ஒரு பாடலில் கீழே காட்டபட்டுள்ளது.

மற்றொன்று, பொற்கைப் பாண்டியன் வரலாறு. அது வருமாறு...  மதுரையில் ஒரு காலத்தில் வேதியர் வாழும் அக்கிராமத்தில், ஓர் ஏழை வேதியன் காசி யாத்திரை செல்வதாகத் தன் மனைவிக்கு அறிவித்தான். அவளுக்கு வேறு துணை இல்லையாகையால், அவள், "எனக்கு ஆர் துணை?" என்றாள். "உனக்கு அரசன் துணை" என்றான் கணவன்.  அப்போது பாதி இரவு ஆகையால், நகர் சோதனை வந்த பாண்டியன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.  தன் விஷயத்தில் குடிகளுக்கு இருக்கும் நம்பிக்கைக்காக மன மகிழ்ந்த அரசன், மறுநாள் முதல் அவ்வீட்டையும் அதற்காக மற்ற வீடுகளையும் காவல் புரிந்து வந்தான். அவ் வேதிய மாதுக்குக் கொடுத்தது போலவே, அவ் அக்கிராரத்தில் இருந்த மற்றப் பெண்களுக்கும் அரிசி பருப்பு ஆடை அணிகள் வழங்கினான். இப்படிப் பதினெட்டு மாதம் கழிந்தது.  கடைசியாய் ஒருநாள் இரவில் பாண்டியன் அவ் வீட்டண்டை வந்தபோது ஆண்பிள்ளையின் பேச்சரவம் கேட்டது. ஆகையால், அவன் சந்தேகம் தெளியக் கதவைத் தட்டினான். "யாரடா கதவினை இடிக்கின்றவன்?" என்று கணவன் சந்தேகத்தோடு அதட்டிக் கேட்டான். "ஐயோ, இவனுக்குச் சந்தேகத்துக்கு இடம் பண்ணிவிட்டோமே, கற்புடைய பார்ப்பனிக்குக் கெடுதி வருமே" என்று அரசன் கொஞ்சமேனும் தாழ்க்காமல் மற்ற வீட்டுக் கதவுகளையும் தட்டிக் கொண்டே போய்விட்டான். விடிந்ததும் அக்கிரகாரத்தார் அனைவரும் அரசனை அணுகி, "யாரோ ஒருவன், போக்கிரி, எங்கள் அக்கிரகார வீதியில் நுழைந்து, நிர்நிமித்தமாகக் கதவுகளைத் தட்டி எங்களுக்குப் பயம் காட்டினான். அவனைப் பிடித்துத் தண்டிக்கவேண்டும்" என்றார்கள். "அப்படியே செய்யலாம்" என்றான் பாண்டியன். அது கேட்ட வேதியர், "அவனைக் கண்டு பிடிக்கத் தாமதிக்கக் கூடாது.  ஒருகால் அவன் இன்றைக்கு வந்தாலும் வருவான். அவனை அதி சாக்கிரதையாய்ப் பிடித்துக் கையை வாங்கிவிட வேண்டும்" என்றார்கள். "நான்தான் அவன்" என்று சொல்லி வாளால் தன் கையைத் தறித்துக் கொண்டான் அரசன். அது கண்ட வேதியர், அரசனால் உண்மை அறிந்து, அவன் கை இழந்தமைக்கு வருந்தி, எப்போதும் போல அது வளரும் பொருட்டு யாகம் செய்தார்கள்.  அப்படியே அவனுக்குப் பொற்கை வளர்ந்து, பொற்கை மாறன் என்று பெயர் பெற்றான். குற்றம் சிறிதாயினும், பெரிதாக் கொண்ட பாண்டியன் செய்கை வியக்கற்பாலது.

“வச்சிரத் தடக் கை அமரர் கோமான் 

உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை 

குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து, 

இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை...”

--- சிலப்பதிகாரம் கட்டுரைக்காதை.


இதற்குத் திருக்குறள்...

“இறைகாக்கும் வையகம் எல்லாம், அவனை

முறைகாக்கும், முட்டாச் செயின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

வையகம் எல்லாம் இறை காக்கும் --- வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், 

அவனை முறை காக்கும் --- அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், 

முட்டாச் செயின் --- அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.

(முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும் (சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது'  என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“மைந்தன்உய்ந்தான் வற்சம்அமைச் சோடுமனு நீதிகண்டோன்

முந்தைமுறை தன்னால் முருகேசா --- உந்தும்

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, மனுநீதி கண்டோன் - மனுநீதி கண்ட சோழ மன்னன், முந்தை - முன்னாளில், முறை தன்னால் - மநுநீதி முறைப்படி அரசாட்சி செய்தபடியினால், வற்சம் அமைச்சோடு - பசுங்கன்றுடனும் அமைச்சனுடனும், மைந்தன் உய்ந்தான் - அரசனுடைய மகனும் பிழைத்தான்.  உந்தும் - செலுத்தும், வையகம் எல்லாம் இறைகாக்கும் - உலகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான், முட்டாச் செயின் - அரசன் தவறில்லாமல் செய்வானாயின், அவனை - அவ் அரசனை, முறை காக்கும் - அந்த ஆட்சி முறையே காப்பாற்றும்.

மநுநீதி கண்ட சோழனானவன் முன்னாளிலே முறைப்படி அரசாட்சி செய்தபடியினால் பசுங்கன்றோடும் அமைச்சனோடும் அவ் அரசனுடைய மகனும் உயிர்பெற்றுப் பிழைத்தான்.  உலகத்தை எல்லாம் அரசன் தன்னுடைய ஆட்சி முறையினால் காப்பாற்றுவான். அவன் தன்னுடைய ஆட்சி முறையைக் குற்றம் இல்லாமல் செய்வானாயின் அவ் ஆட்சி முறையே அவனைக் காக்கும் என்பதாம். வற்சம் - பசுவின் கன்று.


                       மனுநீதி கண்ட சோழன் கதை


மநுநீதி மன்னன் என்னும் சோழனுடைய நல்வினையினால் வீதிவிடங்கன் என்னும் மகன் பிறந்தான். அவன் ஒருநாள், தேரில் ஏறித் தெருவிலே சென்றான். அப்பொழுது பசுவின் கன்று ஒன்று துள்ளிவந்து தேர்க்காலிலே அகப்பட்டு இறந்து போய்விட்டது.  கன்றையிழந்த பசுவானது வருந்தி அரண்மனைக்குச் சென்றது. அரண்மனை வாயிலில் கட்டியிருந்த ஆராய்ச்சி மணியைத் தன்னுடைய கொம்பினால் அடித்தது. அதனைக் கேட்ட சோழ மன்னன் வெளியே வந்து பசுவைப் பார்த்தான். நிகழ்ந்த செய்தியை உணர்ந்தான். அதனால் பெருங்கவலை அடைந்தான். இதற்கு யாது செய்யலாம் என்று அமைச்சர்களோடு ஆராய்ந்தான். அவர்கள் சில கழுவாயைக் கூறினார்கள். அவைகள் அரசனுக்குப் பொருத்தமின்மையாகத் தோன்றியபடியால் அவைகளை மறுத்துவிட்டு, இப் பசுவைப் போல் யானும் என்னுடைய ஒரே மகனை இழந்து வருந்தினால் அல்லாமல் இக் குற்றம் நீங்காது என்று முடிவு செய்தான். முதல் அமைச்சனைப் பார்த்து வீதிவிடங்கனுடைய மார்பிலே தேரைச் செலுத்துவாயாக என்று கட்டளை இட்டான். அவ் அமைச்சன் அவ்வாறு செய்யாது தன்னுடைய உயிரைப் போக்கிக் கொண்டான். அரசன் அம் மகனுடைய மார்பின் மீது தானே தேரைச் செலுத்தினான். அவ்வளவில் சிவபெருமான் தோன்றித் திருவருள் செய்தார். அமைச்சனும் வீதிவிடங்கனும் உயிர் பெற்று எழப் பசுவின் கன்றும் உயிர் பெற்று எழுந்தது.


“வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்."    ---  சிலப்பதிகாரம், வழக்குரை காதை.



“தன்புகழ் கருதி மருவல ரோடும்

சமர்புரிந்து, உயிர்களை மாய்த்துத்

துன்பமே செய்ய இயைந்திடான், முற்போர்

தொடுத்திடான், தன்னுயிர் அனைய

மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும்,

வாள்அமர் இயற்றி நீக்கிடுவான்,

இன்ப துன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும்

ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே.” --- நீதிநூல்.


இதன் பொருள் ---


வலியப்போர் செய்து உயிர்கள மாள மனம் இணங்காமை, உயிர்களைத் துன்புறுத்தும் மன்னனை வலிந்து போர்செய்து மடக்குதல், இன்பதுன்பம் குடிகளுக்கும் தனக்கும் சமமாகக் காண்டல் ஆகிய தன்மையன் வேந்தன்.


No comments:

055. செங்கோன்மை - 08. எண்பதத்தான் ஓரா

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில்,  "தன்னிடத்தில் முறையிடு...