அன்பு என்பது மனிதப் பண்பு

அன்பு என்பது மனிதப் பண்பு

---


"துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்,

பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு"


கலித்தொகை என்னும் நூலில், புலவர் கபிலர் பாடிய பாடல் வரிகளின் விளக்கம் --- நெருப்புப் போலும் வெப்பம் உடைமையால் அடிபொறுக்க இயலாத கொடுமை உடைய காட்டில், துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கிச் சேறாக்கிய சிறிது நீரையும், காதலியாகிய பெண்யானைக்கு முன்னே ஊட்டிவிட்டு, பிறகே தான் உண்ணும் ஆண்யானையும் உள்ளது.


ஐந்தறிவு உடைய விலங்குக்கே இத்தகைய அன்பு விளங்கும் என்றால், ஆறு அறிவு உடைய மனிதனுக்கு உள்ளத்தில் அன்பு விளங்கத்தானே வேண்டும். உண்மை அன்பு தன்னலம் கருதாது. தனது துயரைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன்னைச் சேர்ந்தோரின் துயரைத் துடைப்பது உயர்ந்த மனிதப் பண்பு ஆகும். 


“அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை, வன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று” என்றார் திருவள்ளுவ நாயனார்.  உள்ளத்தில் அன்பு இல்லாமல், இல்லறத்தில் ஒருவன் பொருந்தி வாழ்வது என்பது, கொடிய பாலை நிலத்தில் உலர்ந்து வற்றிப் போய் நிற்கும் ஒரு மரமானது தளிர்த்து விளங்கியது என்பதைப் போன்றதாகும்.  பாலை வனத்தில் பட்ட மரம் தளிர்க்காது. அன்பு என்பது புறத்தில் காணப்படுவது அல்ல. “யாக்கை அகத்து உறுப்பு அன்பு” என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு என்பது உள்ளத்தில் பொருந்தி இருக்க வேண்டிய உறுப்பு ஆகும். அது புறத்து உறுப்பு அல்ல.


“அன்பின் வழியது உயிர்நிலை, அஃது இல்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதை கருத்துப் பொருந்தி உணர்தல் வேண்டும்.  உள்ளத்தில் பொருந்தி இருக்க வேண்டிய அன்பு ஒன்றுதான் உயிர்நிலை ஆகும். அன்பு இல்லாத ஒருனுக்குப் பொருந்தி உள்ள உடம்பு என்பது, உயிர் இல்லாத்தும், எலும்பைத் தோலால் மூடி இருப்பதும் ஆகிய உடம்பு. அப்படி என்றால், அது நடைப்பிணம் தானே.


பேச வராத ஊமைகளுக்கு, பழைமையான நூல்கள் என்ன பயனைத் தரும்? பார்வை அற்றவனுக்கு விளக்கால் என்ன பயன் விளையும்? அதுபோல, இந்த உலகில் பெரிய இடமும், நிறைந்த பொருளும், எவல் தொழில் செய்பவர்களும் நிறைந்து இருந்தாலும், அன்பு இல்லாதவனுக்கு அவைகளால் ஒரு பயனும் இல்லை என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.


இராமாயணத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஒரு பாடலின் மூலம் கலித்தொகையில் கூறிய நிகழ்வைக் காட்சிப் படுத்தி நமக்குக் காட்குகிறார். பம்பை வாவிப் படலத்தில் ஒரு பாடல்....


“வார் அளித் தழை மாப் பிடி வாயிடை,

கார் அளிக் கலுழிக் கருங் கைம் மலை

நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன்,

பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான்.”


இதன் பொருள் ---


மிக்க பெருங்கருணைக்குப் பிறப்பிடமாக உள்ள இராமபிரான், கரிய வண்டுகள் மொய்க்கப் பெற்ற மதநீர்ப் பெருக்கை உடைய கரிய ஆண்யானைகள், நீண்ட குளிர்ந்த தழைகளை உண்ணும் பெரிய பெண்யானைகளின் வாயில் தண்ணீரை முகந்து கொடுத்து ஊட்டுவதை நோக்கி நின்றான்.

இராமபிரான் கருணையின் பிறப்பிடமானவன். 'கருணையின் நிலையும் அன்னான்' என்று கூறுவார் கம்பர். மதநீர்ப் பெருக்குடைய ஆண்யானை, தனது துணையாகிய பெண்யானை வருந்தா வண்ணம் நீர் ஊட்டி அன்பு காட்டுவதைக் கண்ட இராமன், அறிவும் ஆண்மையும் மிக்க தன்னால் சீதையின் துயர் நீக்கிப் பாதுகாக்க இயலாமை எண்ணி வருந்தி நின்றான் என்பதைக் குறித்த பாடல் இது.


No comments:

அன்பு என்பது மனிதப் பண்பு

அன்பு என்பது மனிதப் பண்பு --- "துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப், பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு" கலித்தொகை என்னும் நூலில், பு...