061. மடி இன்மை - 05. நெடுநீர் மறவி

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "நீட்டித்த இயல்பு, மறதி, சோம்பல், தூங்குதல் என்னும் இவை நான்கும், அழியும் தன்மையை உடையவருடைய ஆசையான மரக்கலங்கள்" என்கின்றார் நாயனார்.


தாமத குணத்தால் உண்டாகின்ற செயல்களை இங்குக் கூறினார். செய்யவேண்டிய காரியங்களை விரைந்து செய்யாது, காலம் தாழ்த்திச் செய்தல்; மறதி, சோம்பல், காலம் நேரும்போது எல்லாம் தூங்கிக் கொண்டே இருத்தல் ஆகிய குற்றங்களை உடையவர் கெடுதல் திண்ணம்.


கடலில் முழுகிய கப்பலானது கரை சேராமல், அதில் இருந்தவர்களும் முழுகி அழிவது போல், இவர்கள் தமது குடியை மேல் உயர்த்துவதற்கு இல்லாமல் நடுவில் அழிந்து போவர் என்கின்றார்.


இதற்குத் திருக்குறள்...


நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் --- மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; 


கெடும் நீரார் காமக்கலன் --- இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.


(முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல் மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன் நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


நெடிய திருப்புல்லை நாரணனே, நெடுநீர் மறவி

மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் எனும் அக்

கொடிய வினை அணுகாது, எளியேனை நின் கோகனகத்து 

அடியில் படியவைத்து, ஆண்டுகொண்டாய் என்அருட்கடலே.


இதன் பொருள் ---


திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணமூர்த்தியே! எனது அருட்கடலே! ஒருவனுக்கு அழிவைத் தரும் தன்மையை உடைய நீட்டித்த இயல்பு, மறதி, சோம்பல், தூங்குதல் என்னும் இந் நான்கு கொடிய செயல்களும் அடியேனை அணுகாவண்ணம், எளியவனான என்னை உனது தாமரைத் திருவடியில் பொருந்த வைத்து ஆண்டுகொண்டாய்.


அக்கொடிய வினை - நெடுநீர் மறவி முதலியன. கோகனகத்தடி - தாமரை மலர் போன்ற திருவடி. படிய வைத்து --- பொருந்துமாறு வைத்து.


பின்வரும் பாடல், இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.


வான் உலாம் அருணன் என்னும் 

மக்கள் ஆயுளின் கணக்கன்

தான் எழும் முன் எழாரைச் 

சகத்திரக் கரத்தால் தட்டும்

ஏன் என எழார் வாழ் நாளை

எண்குறைத்து எழுதிக் கொள்வான்

ஆனது கண்டு காலன் 

அவரிடம் அணுகு வானே. ---  நீதிநூல்.

 

இதன் பொருள் ---


விண்ணிலே படர்ந்து செல்லும் ஞாயிறு என்னும் கதிரவன், மக்கள் வாழ்நாளாகிய அகவையைக் (வயதைக்) கணக்கெடுப்பவன். சோம்பல் இல்லாமல் அவன் தோன்றுவதன் முன்னம் மக்கள் எழுதல்வேண்டும். அப்படி எழாதவர்களை அவன் தன்னுடைய ஆயிரங் கதிர்க் கைகளால் தட்டி எழுப்புவான். உடன் ஏன் என்று எழாதவர்களின் அகவையைக் குறைத்து எழுதிக் கொள்வான். காலன் அக்கணக்கைப் பார்த்து மக்களுயிரைக் கொண்டுபோக நெருங்குவான்.


  அருணன்-ஞாயிறு. சகத்திரம்-ஆயிரம். கரம்-கை. வாழ்நாள்-அகவை. அணுகுவன்-நெருங்குவன்.


No comments:

061. மடி இன்மை - 05. நெடுநீர் மறவி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 61 -- மடி இன்மை இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "நீட்டித்த இயல்பு, மறதி, ...