திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 61 -- மடி இன்மை
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், " சோம்பலில் வீழ்ந்து, சிறந்த முயற்சி இல்லாதவர்க்கு, தன் குடும்பமானது வீழ்ச்சி உற்று, குற்றங்கள் பலவாகப் பெருகிக் கெடும்" என்கின்றார் நாயனார்.
சோம்பலானது செல்வத்தைக் கெடுத்துப் பெயரையும் கெடுக்கும். அல்லாமல் பல குற்றங்களையும் கொண்டு வந்துவிடும்.
இதற்குத் திருக்குறள்...
குடிமடிந்து குற்றம் பெருகும், மடிமறந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு --- மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு;
குடி மடிந்து குற்றம் பெருகும் --- குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.
('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிதாகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேரா தவர். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
ஒன்றால் – இருப்பது ஒன்றுதானே என்றும், சிறிதால் – (அதுவும்) சிறிதளவு தானே உள்ளது என்றும், உதவுவது ஒன்று இல்லையால் – நாம் எடுத்த செயலை முடிப்பதற்குப் போதிய உதவி இல்லையே, என்று ஆங்கு இருப்பின் - என்று நினைத்து, முயற்சி ஏதும் இல்லாமல் சோம்பி இருப்பின், இழுக்கம் பெரிதாகும் – அதனால் அவனுக்கு வரும் குற்றமே பெரிதாகும்; நின்றது சென்றது பேராதவர் --- தம்மிடத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்தும், பிறரிடத்துக் கொடுத்த பொருளைத் தாம் மீளக் கொண்டும், மேலும் பொருளைத் தேடுவதிலும் எவ்விதத்திலும் முயற்சி செய்யாதவர்கள், அன்றைப் பகலேயும் வாழ்கலார் --- ஒருநாளின் பொழுதிலேயே வளமாக வாழமுடியாதவர் ஆவார்.
ஒருவன் சோம்பலுடையவனாய் இருப்பின், அதனால் மிகுந்த குற்றங்கள் மிகுதியாகும். இருப்பதைக் கொண்டு முயற்சியுடன் பாடுபட்டுப் பொருளைஈட்டியும், அனுபவித்தும், பிறர்க்குக் கொடுத்து உதவியும் வாழ்வதே சிறந்த வாழ்வு ஆகும்.
“மடிமை கெடுவார்கண் நிற்கும், கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம், பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர், நட்டமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு. --- நான்மணிக் கடிகை.
இதன் பொருள் ---
மடிமை கெடுவார்கண் நிற்கும் – முயற்சியின்மை என்னும் சோம்பலானது கெட்டுப் போக உள்ளவர் இடத்திலேயே ஏற்படும். கொடுமை தான் பேணாமை செய்வார்கண் நிற்கும் - தீமையானது மேலோர் விரும்பாத செயல்களைச் செய்வாரிடத்தில் உண்டாகும். நற்பெண்டிர் பேணிய நாணின் வரை நிற்பர் - நன்மகளிர் விரும்பப்பட்ட நாணத்தின் எல்லையில் நிற்பார்கள். களிறு நட்டு அமைந்த தூணின்கண் நிற்கும் - யானையானது கீழே நட்டு வலிவமைந்த தூணின் வலுவில் நிலைபெறும்.
மடிசேரும் அவர்க்கு ஒரு நாளும் மறல்,
விடியாதவர் நெஞ்சிடை வெந்துயரே,
குடியாகு மறந்தொடர் குற்றமெலா
நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே. --- நீதிநூல்.
இதன் பொருள் ---
வேண்டாதவர்க்குத் தம்மை அடிமைப்படுத்தும் வன்மை வாய்ந்த மடியை மேற்கொள்பவர், எப்பொழுதும் வறுமைப் பிணியில் இருந்து நீங்கார். அவருடைய மனத்தில் கடுந்துன்பம் குடிகொள்ளும். பாவத்தைச் சேர்க்கும் தீமைகளெல்லாம் வளரும். இது நிச்சயம்.
மடி-சோம்பல். மறல்-வறுமை. மறம்-பாவம். நிச்சயம்-உறுதி.
No comments:
Post a Comment