அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆராதனர் ஆடம்பரத்தும் (பொது)
முருகா!
அடியேனை வாவா என அழைத்து, முத்தி நலத்தைத் தந்து அருளுவீர்.
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
தானாதன தானந் தனத்த ...... தனதான
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வானந்த சித்தி
நேரேபர மானந்த முத்தி ...... தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும்
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆராதனர் ஆடம்பரத்தும், மாறா துச ஆலம்பனத்தும்,
ஆவாகன மாமந்திரத்தும், ...... அடலாலும்,
ஆறார் தெச மாமண்டபத்தும், வேத ஆகமம் ஓதும் தலத்தும்,
ஆமாறு எரி தாம் இந்தனத்தும் ...... மருளாதே,
நீர் ஆள் அக நீர் மஞ்சனத்த, நீள் தாரக வேதண்ட மத்த,
நீ நான் அற, வேறு இன்றி நிற்க, ...... நியமாக,
நீ வா என நீ இங்கு அழைத்து, பாராவர ஆனந்த சித்தி,
நேரே பரமானந்த முத்தி ...... தரவேணும்.
வீராகர சாமுண்டி, சக்ர பாரா கண பூதம் களிக்க,
வேதாள சமூகம் பிழைக்க, ...... அமர் ஆடி,
வேதா முறையோ என்று அரற்ற, ஆகாச கபாலம் பிளக்க,
வேர் மாமர மூலம் தறித்து, ...... வடவாலும்,
வார்ஆகரம் ஏழும் குடித்து, மாசூரொடு போர் அம்பு அறுத்து,
வாண ஆசனம் மேலும் துணித்த ...... கதிர்வேலா!
வான்நாடு அரசாளும் படிக்கு, வாவா என வா என்று அழைத்து,
வானோர் பரிதாபம் தவிர்த்த ...... பெருமாளே.
பதவுரை
வீராகர சாமுண்டி --- வீரத்துக்கு இருப்பிடமான துர்க்கையும்,
சக்ர பாரா கண பூதம் களிக்க --- வளைவாகப் பெருங்கூட்டமாகிய பூதங்களும் மகிழ்ச்சி அடையவும்,
வேதாள சமூகம் பிழைக்க அமர் ஆடி --- பெரும் பேய்க்கூட்டம் உண்டு உய்யும்படியும், போர் புரிந்து
வேதா முறையோ என்று அரற்ற --- பிரமதேவர் முறையோ என்று கூறி ஓலமிடவும்,
ஆகாச கபாலம் பிளக்க ---- விண் முகட்டில் உள்ள மூதண்டம் பிளக்கும்படியும்,
வேர் மாமர மூலம் தறித்து --- ஆழமான வேருடன் கூடிய பெரிய மாமரத்தின் அடிப்பகுதியை வெட்டியும்,
வடவாலும் வார் ஆகரம் ஏழும் குடித்து --- வடவைத் தீயையும், தண்ணீரின் இருப்பிடமாகிய ஏழு கடல்கலையும் வற்றச் செய்தும்,
மாசூரொடு போர் அம்பு அறுத்து --- பெரிய சூரபதுமனோடு போருக்குரிய அம்புகளை அறுத்தும்,
வாண ஆசனம் மேலும் துணித்த கதிர்வேலா --- பாணங்களின் இருப்பிடங்களையும் அழித்து அருளிய ஒளிமிக்க வேற்படையை உடையவரே!
வானாடு அரசாளும் படிக்கு வாவா என வாஎன்று அழைத்து --- தேவர்கள் தமது வான லோகத்தை மீளவும் அரசாளும்படி, வாருங்கள், வாருங்கள், என்று அன்புடன் அனைவரையும் அழைத்து,
வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே --- வானவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமையின் மிக்கவரே!
ஆராதனர் ஆடம்பரத்தும் --- ஆராதனை புரிகின்றவர்களது ஆடம்பரமான வழிபாட்டிலும்,
மாறா துச ஆலம்பனத்தும் --- மாறுபாடில்லாத கொடிமரத்தில் பற்றுக்கோடாக இருப்பதிலும்,
ஆவாகன மாமந்திரத்தும் அடலாலும் --- தெய்வம் எழுந்தருளப் பண்ண வேண்டிக் கூறும் மந்திரங்களிலும், மந்திரசக்தியிலும்,
ஆறு ஆர்தெச மாமண்டபத்தும் --- ஆறாவது நிலையாக ‘ய’ என்ற எழுத்துடன் கூடி விளங்கும் ஆக்ஞையை நாடி நிற்கும் நிலைமையிலும்,
வேதாகமம் ஓதும் தலத்தும் --- காமியத்தைக் குறித்து வேதம், ஆகமங்களை ஓதுகின்ற இடத்திலும்,
ஆம் ஆறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே --- சுவர்க்க போகத்திற்கு ஆகும் வழியில் அக்கினி கவ்வுகின்ற யாகத்திற்கு உரிய சமித்துக்களிலும் அடியேன் மருட்சி அடையாமல்,
நீர் ஆள் அக நீர் மஞ்சனத்த --- குளிர்ச்சியை ஆளுகின்ற தண்ணீரால் அடியார்களால் ஆட்டப்படுகின்றவரே!
நீள் தாரக --- நீண்ட தாரகப் பொருளாயுள்ளவரே!
வேதண்டம் அத்த --- திருக்கயிலாய மலைக்குத் தலைவரே!
நீ நான் அற வேறு இன்றி நிற்க --- நீ வேறு நான் வேறு என்ற தன்மை நீங்கி, ஒன்றுபட்டு விளங்க,
நியமாக நீ வா என நீ இங்கு அழைத்து --- நியதியுடன் அன்பனே, நீ வருக என்று தேவரீர் இவ்விடத்தில் அடியேனை அழைத்து,
பாராவர ஆநந்த சித்தி --- கரையில்லாத சிவானந்தப் பெருஞ்சித்தி ஆகிய
நேரே பரம ஆநந்த முத்தி தரவேணும் --- பேரானந்த முத்தி நலத்தை நேரடியாகத் தேவரீர் அடிமையேனுக்குத் தந்து அருள வேணும்.
பொழிப்புரை
வீரத்துக்கு இருப்பிடமான துர்க்கையும், வளைவாகப் பெருங்கூட்டமாகிய பூதங்களும் மகிழ்ச்சி அடையவும், பெரும் பேய்க்கூட்டம் உண்டு உய்யும்படியும், போர் புரிந்து, பிரமதேவர் முறையோ என்று கூறி ஓலமிடவும், விண் முகட்டில் உள்ள மூதண்டம் பிளக்கும்படியும், ஆழமான வேருடன் கூடிய பெரிய மாமரத்தின் அடிப்பகுதியை வெட்டியும், வடவைத் தீயையும், தண்ணீரின் இருப்பிடமாகிய ஏழு கடல்கலையும் வற்றச் செய்தும், பெரிய சூரபன்மனோடு போருக்குரிய அம்புகளை அறுத்தும், பாணங்களின் இருப்பிடங்களையும் அழித்து அருளிய ஒளிமிக்க வேற்படையை உடையவரே!
தேவர்கள் தமது வான லோகத்தை அரசாளும்படி, வாருங்கள், வாருங்கள், என்று அன்புடன் அனைவரையும் அழைத்து, வானவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமையின் மிக்கவரே!
ஆராதனை புரிகின்றவர்களது ஆடம்பரமான வழிபாட்டிலும், மாறுபாடில்லாத கொடிமரத்தில் பற்றுக்கோடாக இருப்பதிலும், தெய்வம் எழுந்தருளப் பண்ண வேண்டிக் கூறும் மந்திரங்களிலும், மந்திரசக்தியிலும், ஆறாவது நிலையாக ய என்ற எழுத்துடன் கூடி விளங்கும் ஆக்ஞையை நாடி நிற்கும் நிலைமையிலும், காமியத்தைக் குறித்து வேதம், ஆகமங்களை ஓதுகின்ற இடத்திலும், சுவர்க்க போகத்திற்கு ஆகும் வழியில் அக்கினி தாவுகின்ற யாகத்திற்கு உரிய சமித்துக்களிலும் அடியேன் மருட்சி அடையாமல், "குளிர்ச்சியை ஆளுகின்ற தண்ணீரால் அடியார்களால் ஆட்டப்படுகின்றவரே! நீண்ட தாரகப் பொருளாயுள்ளவரே! திருக்கயிலாய மலைக்குத் தலைவரே! நீ வேறு நான் வேறு என்ற தன்மை நீங்கி, ஒன்றுபட்டு விளங்க, நியதியுடன் அன்பனே, நீ வருக என்று தேவரீர் இவ்விடத்தில் அடியேனை அழைத்து, கரையில்லாத சிவானந்தப் பெருஞ்சித்தி ஆகிய பேரானந்த முத்தி நலத்தை நேரடியாகத் தேவரீர் அடிமையேனுக்குத் தந்து அருள வேணும்”.
விரிவுரை
ஆராதனர் ஆடம்பரத்து ---
இந்தத் திருப்புகழில் அருணகிரிநாதர் அன்பில்லாத வெற்றுக் கிரியைகளுடன் கூடிய ஆடம்பரமான தன்மைகளைக் கண்டிக்கின்றனர்.
அன்பம், பயன் கருதாமையுமே அருள்நெறிக்கு அங்கங்கள் என்க. அன்பு இன்றி, பயன் கருதி ஆடம்பரமாகச் செய்யும் வழிபாட்டைக் கண்டு இறைவன் சிரிக்கின்றான் என்று கூறுகின்றனர் அப்பரடிகள்.
“பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்கும் அவர் தம்மை நாணியே.” – அப்பர்.
எனவே, விரிவாக ஆடம்பரமாகச் செய்யும் பூசையினும், சிறிது நேரமாவது அன்புடன் செய்யும் பூசையே சிறந்தது. “சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க" என்றார் பிறிதொரு திருப்புகழில்.
“ஆடம் பரங்கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.” --- திருமந்திரம்
முயற்சி ஏதும் இன்றி வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதி, தவம் புரிவாரைப் போலப் பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகளே! உங்களின் வெற்று வேடத்தால், வஞ்சக வேடத்தால், இறைவன் திருவருளைப் பெற முடியாது. “வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்?” வேடத்தைக் கொண்ட நீங்கள் செய்யும் பாவச் செயலில் இருந்து நீங்கி, புனைந்து கொண்ட வேடத்திற்கு ஏற்ப, உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள். அதுவே பயனுடையது ஆகும்.
மாறாதுச வாலம்பனத்து ---
மாறா துச ஆலம்பனம் என்று பிரிக்க. மாறா - மாறுபாடு இல்லாத. துவசம் என்பது துச என்று வந்தது. ஆலம்பனம் - பற்றுக்கோடு.
ஆடம்பரமாகக் கொடியேற்றுதல் புரிந்து, அதைப் பற்றிச் செய்யும் சடங்குகள்.
ஆவாகன மாமந்திரத்து ---
பூசை என்பது கிரியாபூசை, ஞானபூசை என்று இருவகைப்படும். கிரியா பூசை என்பது குண்ட மண்டலமிட்டு, ஒரு பொருளில் பரம்பொருளை ஆவாகனம் செய்து, மந்திரங்களைக் கூரி, அதற்குரிய அங்கங்களுடன் செய்வது. ஞான பூசையாவது, உள்ளக் கோயிலில் எங்கும் நிறைந்த பரம்பொருளை உன்னி, கருவிகரணங்கள் இன்றி, நிர்விகல்பமாகப் புரிவது.
இந்தப் பூசையின் சிறப்பையே தாயுமானார்,
“பண்ணேன் உனக்குஆன பூசை, ஒரு வடிவிலே
பாவித்து இறைஞ்ச,ஆங்கே
பார்க்கின்ற மலர்ஊடு நீயே இருத்தி,அப்
பனிமலர் எடுக்கமனமும்
நண்ணேன், அலாமல்இரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் உளம்நிற்றிநீ,
நான்கும்பி டும்போது அரைக்கும்பிடு ஆதலால்
நான்பூசை செய்யல்முறையோ...”
என்றும்,
“நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சனநீர், பூசைகொள்ள வாராய் பராபரமே..”
என்றும் கூறியருளுகின்றார்.
ஆதலின், ஆடம்பரமாக ஆவாகனாதி மந்திரங்களைக் கூறியும், கிரியா பூசையையே பெரிது என எண்ணி, மயங்கக் கூடாது என்று அடிகள் கூறியருளுகின்றார்.
ஞானபூசை வாய்க்கும் வரை, கிரியாபூசை செய்துவர வேண்டும். ஞானபூசை வாய்த்த பெரியவர்களும், கிரியாபூசை நிகழ்த்தலாம். அது உலகவரை நன்னெறிப்படுத்தும் பொருட்டு என்க. இல்லையேல், சாமானியர்கள் பூசையாதிகளைக் கைவிட்டு, மெய் விடுவர். அதனால் அன்றோ, இறைவனை நேரே கண்டு திருவருள்மயமாய் நின்ற நால்வர்களும் திருக்கோயில்கள் தோறும் சென்று வழிபட்டனர். அது உலகம் பின்பற்றி உய்யும் பொருட்டு என்க.
அடலாலும் ---
அடல் - வலிமை. மந்திரத்தை உருவேற்றி, அதனால் வந்த மந்திர வலிமையால் பலப்பல ஆடல்களைப் புரிவர். வசியம், மோகனம், தம்பனம் முதலியவைகளைப் புரியும் வலிமை மந்திர சக்தியார் ஏற்படும். அவைகளைக் கண்டு ஞானசீலர்கள் மருளக் கூடாது என்கின்றார்.
ஆறார் தெச மாமண்டபத்தும் ---
ஆறு ஆதாரங்களில், ஆறு அக்கரங்கள் நடுநாயகங்களாகவும், அவற்றைச் சூழ்ந்து ஐம்பத்தொரு அக்கரங்களும் இருக்கின்றன.
மூலாதாரத்தில் ஓம். சுவாதிட்டானத்தில் ந, மணிபூரகத்தில் ம, அநாகதத்தில் சி, விசுத்தியில் வ, ஆக்ஞையில் ய. ஆக்ஞாஸ்தானம் புருவடு. அங்கிருக்கும் எழுத்து ய. தசம் - பத்து. தமிழ்க் கணக்கில் பத்து - ய. தசமண்டபம் என்றால் யகரம் உள்ள ஆக்ஞை என்று அறிக. ஆக்ஞையிலே நாட்டத்தைச் செலுத்தித் தியானித்தல் ஒருபடி. ஆனால், அப் படியிலேயே நின்றுவிடக் கூடாது. அதையும் கடந்து, பிரமரந்திரம் கடந்து சகஸ்ராரப் பெருவெளி சேர்ந்து, சிவானந்த வெள்ளத்தில் அழுந்துதல் வேண்டும்.
நாளும்அதி வேக கால்கொண்டு தீமண்ட,
வாசிஅனல் ஊடு போய்ஒன்றி, வானின்கண்
நாமமதி மீதில் ஊறுங்க லாஇன்ப ...... அமுதுஊறல்
நாடி,அதன் மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி ஏறி, நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தான்இன்றி வாழ்கின்றது ...... ஒருநாளே.. --- (மூளும்வினை) திருப்புகழ்.
ஆறாவது ஆதாரமாக நிறைந்துள்ள யகார எழுத்துடன் கூடிய ஆக்ஞையைக் கண்டு, அங்கேயே நின்று மருட்சி அடையாமல், அதற்கு அப்பாலும் செல்லுதல் வேண்டும் என்று தெளிக. இந்தக் குறிப்பிலேயே அடிகளார்,
“தங்கிய தவத்துஉணர்வு தந்து,அடிமை முத்திபெற,
சந்திரவெளிக்கு வழி அருள்வாயே”... --- (ஐங்கரனை) திருப்புகழ்.
என்று அருளிச் செய்தனர்.
வேதாகமம் ஓதும் தலத்தும் ---
முத்தி நலம் கருதாமல், பத்தி நலம் இன்றி, காமியம் கருதி, வெறும் ஒலியாக வேதாகமங்களை ஓதுவதைப் பற்றி இது குறிக்கின்றது. பொருள் பற்றிச் செய்யும் பூசனை புனிதமுறாதது போல், பொருள் பற்றி வேதாகமம் ஓதுவதும் சிறப்புறாது என அறிக.
ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே ---
சுவர்க்காதி புவனபோகங்களைக் குறித்துச் செய்யும் வேள்விகளை விரும்புதல் கூடாது. மேலும் பகைவர் முதலியோர் அழியுமாறு செய்யும் வேள்விகளும் உண்டு. அதனால், "ஆமாறு எரிதாம் இந்தனத்தும்" என்று கூறினார்.
வேதவேள்வி முதலியன யாவும் புண்ணியத்தைத் தந்து, அப் புண்ணியத்தின் பயனாக வான் பதம் தருவனவே ஆகும். அவை பிறவி நீக்கத்திற்குத் துணையாகா எனத் தெளிக.
நம்முடைய நோக்கம் அனைத்தும் பிறவாமையை நாடி அமையவேண்டும். கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழிக்க வல்லவனாகி வள்ளல் பிரானை உள்ளபடி உன்னி, பள்ளத்தை நாடும் வெள்ளம் போல் அவரிடத்து அன்பு செலுத்தி, தெள்ளத் தெளிந்த சிந்தையுடன் இருத்தல் வேண்டும்.
“வெள்ளந்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்
பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மேல் ஆகப்
பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால், உடம்பெல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளந்தான் பாயாதால், நெஞ்சங் கல்லாம்,
கண்ணிணையும் மரமாம், தீ வினையி னேற்கே.” --திருவாசகம்.
“அன்பர் வார்ந்த கண் அருவி மஞ்சன சாலை" --- திருவிசைப்பா.
“முருக,சரவணமகளிர் அறுவர்முலை நுகரும்அறு
முக,குமர, சரணம்என ...... அருள்பாடி ஆடிமிக
மொழிகுழற அழுதுதொழுது உருகும்அவர் விழிஅருவி
முழுகுவதும்” --- சீர்பாத வகுப்பு.
வீராகர சாமுண்டி ---
சாமுண்டி - காளி - போர் செய்ய வல்லவள். வீரத்திற்கு உறைவிடமானவள். முருகவேள் அவுணர்களுடன் மிகவும் உக்கிரமாகப் போர் புரிந்த போது, போர்ச் சிறப்பைக் கண்டு போரில் வல்ல காளி களிப்புமிகுந்து ஆடினாள்.
சக்ர பாராகண பூதம் களிக்க ---
சக்ரம் - வளைவு. பாராகணம் - பெருங்கூட்டம். பூதங்கள் குறுகிய கால்களும் இறுகிய உடம்பும் உள்ளவைகள். இப் பூதங்கள் முருகவேளுடன் படைகளாகச் சென்றன. இவை ஒப்பற்ற ஆற்றல் படைத்தவை.
நீடுதேவர் நிலைகளும், வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும், நாட்டுவ
கோடிகோடி குறள்சிறு பூதங்கள்
பாடிஆடும் பரப்பது பாங்குஎலாம். --- பெரியபுராணம்.
கந்தவேள் அவுணரோடும் புரிந்த போர்த்திறத்தை நோக்கிப் பூதங்கள் பெரிதும் மகிழ்ந்தன.
வேதாள சமூகம் பிழைக்க ---
வேதாளம் - பெரும்பேய். கந்தவேளின் கணைகளால் மாண்ட அவுணரது நிணங்களை உண்டு வேதாள கணம் உய்ந்தன.
“கூதாள கிராத குலிக்கு இறைவா,
வேதாளகணம் புகழ் வேலவனே.”. --- கந்தர் அநுபூதி.
வேர் மாமர மூலம் தறித்து ---
சூரபதுமன் இறுதியில் உறுதியுள்ள மாமரமாகக் கடலின் நடுவே நின்றான். அதன் நிழல் ஆயிரத்து எட்டு அண்டங்களிலும் பரந்தது. அதன் எஃகு மயமான கிளைகளும் இலைகளும் அசைவதனால், அண்டங்கள் அதிர்ந்து அல்லல் பட்டன. ஆருயிர்கள் நிலை குலைந்தன. முருகப் பெருமான் அயில்வேலை விடுத்து, அப் பெரிய மாமரத்தைப் பிளந்து அழித்து அருளினார்.
வாராகரம் ---
வார் - நீர். ஆகரம் - உறைவிடம். நீருக்கு உறைவிடமாக உள்ளது கடல். சூரபதுமன் கடலிலே ஒளிந்தான். நூறுகோடி சூரிய ஒளியுடன் வேலாயுதம் கடலுக்கு அருகிலே சென்றவுடன், கடல்கள் எழும் வற்றித் திடர் பட்டன.
வேலை துகள்பட்டு மலை சூரன்உடல் பட்டு உருவ
வேலைஉற விட்டதனி வேலைக்காரனும்... --- திருவேளைக்காரன் வகுப்பு
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல்என
மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல்என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாஎன ......விசைகள்கூற
வேல்எ டுத்து நடந்த திவா கரா,சல
வேடு வப்பெண் மணந்த புயா சலா,தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபா கரா,சிவ ...... குமரவேளே. --- (ஓலமிட்ட) திருப்புகழ்.
குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்
திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே .. --- கந்தர் அலங்காரம்.
கருத்துரை
முருகா! அடியேனை வாவா என அழைத்து, முத்தி நலத்தைத் தந்து அருளுவீர்.
No comments:
Post a Comment