திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன்னளவில் பெருமுயற்சி இல்லாத ஒருவன், பிறன் ஒருவனுக்கு உதவி செய்தல் என்பது, கோழை ஒருவன் தனது கையில் உள்ள வாளை ஆளுதல் போலத் தொடர்ந்து நிகழாது கெடும்" என்கின்றார் நாயனார்.
பேடி ஒருவன் கையில் வாளைக் கொடுத்து, போர்க்களத்திற்கு அனுப்பினால், அவன் தனக்கு உள்ள அச்சம் மிகுதியால், வாளால் ஆன பயனை அடையாது, ஓடிவந்து விடுவான். அது போல, முயற்சி இல்லாதவன் எண்ணிய எண்ணம் கைகூடாது போகும். அதுபோல, முயற்சி இல்லாதவன் ஒருவன், பலருக்கும் உதவி செய்யவேண்டும் என்னும் கருத்தினை உடையவனாக இருந்தாலும், அவனது முயற்சி இன்மையால் பொருள் வருவதற்கு உரிய வழி இல்லாமல் இருப்பதால், உதவி செய்யவேண்டும் என்னும் எண்ணம் நன்மை உடையதாய் இருந்தாலும் பயனை தராது.
இதற்குத் திருக்குறள்...
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை --- முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை;
பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் --- படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.
('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக உள்ளது காண்க...
கழி தறுகண்மை பேடியில் துவ்வாது. --- முதுமொழிக் காஞ்சி.
இதன் பொருள் ---
இடமும் காலமும் அறியாத மிக்க தறுகண்மையானது, பேடித் தன்மையின் நீங்கி ஒழியாது
பகைவர்மேல் செல்லுதற்கேற்ற காலமும் பகைவரை வெல்லுதற்கேற்ற வசதியும் அறியாது மிக்க தறுகண்மை செய்பவன், தோல்வி அடைவது நிச்சயமாதலால், அத் தறுகண்மை பேடித்தன்மையோடு ஒக்கும்.
No comments:
Post a Comment