அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆனாத ஞான (பொது)
முருகா!
அடியேனுக்குச் செய்த திருவருளை ஒருபோதும் மறவேன்.
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ......ரழியாதே
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்
ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும்
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்
மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு
மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ......லொருமூவர்
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும்
தேநாய காஎ னத்து தித்த வுத்தம
வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்
சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச்
சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ
மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி
சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்,
ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும்,
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து, இளைத்து, உயிர்..அழியாதே,
ஆசா பயோதியைக் கடக்க விட்டதும்,
வாசாம கோசரத்து இருத்துவித்ததும்,
ஆபாதனேன் மிக ப்ரசித்தி பெற்று, இனிது, ...... உலகு ஏழும்
யான் ஆக நாம அற்புதத் திருப்புகழ்
தேன் ஊற ஓதி, எத்திசைப் புறத்தினும்
ஏடு ஏவு ராஜதத்தினைப் பணித்ததும், ...... இடர்ஆழி
ஏறாத மா மலத்ரய, குண த்ரய,
நானா விகார புற்புதப் பிறப்பு அற,
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் ...... மறவேனே.
மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஒர்
மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ஒரு
மால் ஆய வாளியைத் தொடுத்து, அரக்கரில் ......ஒரு மூவர்
மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்
தூளாகவே, முதல் சிரித்த வித்தகர்
வாழ்வே! வலாரி பெற்று எடுத்த கற்பக ...... வனமேவும்
தே நாயகா! எனத் துதித்த உத்தம,
வான்நாடர் வாழ, விக்ரமத் திருக்கழல்
சேராத, சூரனைத் துணித்து அடக்கிய ...... வரைமோதிச்
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ,
மாறா நிசாசரக் குலத்தை இப்படி
சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய ......பெருமாளே.
பதவுரை
மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி --- பெரிய நாகமாகிய வாசுகியை நாணாம வலிமை பெறக்கட்டி,
ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து --- ஒப்பற்ற பெரிய மேருமலையை வில்லாகப் பிடித்து,
ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து --- ஒப்பற்ற திருமாலைக் கணையாகத் தொடுத்து,
அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே --- அங்கிருந்த அசுரர்களில் சிறந்த தலைவர்களாகிய மூன்று பேர் மட்டும் இறந்து போகாமல் பிழைக்கவும், பாவங்களைப் புரிந்த முப்புரத்தில் உள்ளார் வெந்து பொடியாகவும்,
நுதல் சிரித்த வித்தகர் வாழ்வே --- புன்முறுவல் புரிந்த ஞானவடிவினர் ஆகிய சிவபெருமான் அருளிய திருப்புதல்வரே!
வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் தே நாயகா --- வலன் என்ற அரக்கனைக் கொன்ற தேவேந்திரன் வளர்த்த, கற்பக வனத்தை உடைய தேசத்திற்குத் தலைவரே!
எனத் துதித்த உத்தம வான் நாடர் வாழ --- என்று துதித்த உத்தமர்களாகிய தேவர்கள் இனிது வாழும்பொருட்டு,
விக்ரமத் திருக் கழல் சேராத சூரனைத் துணித்து --- வல்லமை பொருந்திய திருவடியை அணுகாதவனாகிய சூரபதுமனைப் பிளந்தும்,
அடக்கிய வரை மோதி --- பூத வெள்ளங்களை அடங்கச் செய்த கிரவுஞ்ச மலையைத் தகர்த்தும்,
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ --- உதிரச் சேறு சென்று கடலில் திட்டு உண்டாகவும்,
மாறா நிசாசர குலத்தை --- மாறுபட்ட அசுரர் குலத்தை இவ்வாறு,
சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே ---
உடைவாளினால் அறுத்துத் அறுத்துத் தள்ளிய பெருமையில் மிக்கவரே!
ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும் --- நீங்காத ஞானத்துடன் கூடிய அறிவைக் தந்ததையும்,
ஆராயும் நூல்களில் கருத்து அளித்ததும் --- ஆராய்வதற்கு உரிய அறிவு நூல்களின் உட்கருத்துக்களைக் கொடுத்ததையும்,
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே --- திரிபு உடைய வாழ்க்கையினை மெய்யென்று மயங்கி, இளைத்து ஆவியானது அழிந்து போகா வண்ணம்
ஆசா பய உததியைக் கடக்க விட்டதும் --- ஆசை என்கின்ற நீர்க் கடலைக் கடக்கும் ஆற்றலைத் தந்ததையும்,
வாசா மகோசரத்து இருத்து வித்ததும் --- வாக்கும் மனமும் கடந்த அதீத நிலையில் அடியேனை இருக்க வைத்ததையும்,
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று --- அசுத்தனாகிய சிறியேன் மிக்க புகழினால் எங்கும் வெளிப்படும் தன்மையைப் பெற்று, எய்தி
இனிது உலகேழும் யான் ஆக --- இனிமையுடன் ஏழு உலகும் யானாக விளங்க,
நாம அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி --- புகழும் அற்புதமும் நிறைந்த தேவரீரது திருப்புகழை, இன்பத் தேன் ஊறுமாறு பாடி,
எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் --- எல்லா திசைகளிலும் அத் திருப்புகழ் ஏட்டினை அனுப்பும் ஆளுகையை எனக்குப் பணித்து அருளியதையும்,
இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய --- துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாமல் செய்வதாகிய பெரிய மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும்,
நானா விகார புற்புத பிறப்பு அற --- நாலா வகையான வேற்றுமைகளுடன் கூடிய, நீர்க்குமிழி போல் தோன்றி மறைவதுமான பிறவிகளும் நீங்க,
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே --- பரம காரணமாகிய பாதுகாவலுடன் அடியேனுக்கு அருள் புரிந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
பொழிப்புரை
பெரிய நாகமாகிய வாசுகியை நாணாக வலிமை பெறக் கட்டி,ஒப்பற்ற பெரிய மேருமலையை வில்லாகப் பிடித்து, ஒப்பற்ற திருமாலைக் கணையாகத் தொடுத்து, அங்கிருந்த அசுரர்களில் சிறந்த தலைவர்களாகிய மூன்று பேர் மட்டும் இறந்து போகாமல் பிழைக்கவும், பாவங்களைப் புரிந்த முப்புரத்தில் உள்ளார் வெந்து பொடியாகவும், புன்முறுவல் புரிந்த ஞானவடிவினர் ஆகிய சிவபெருமான் அருளிய திருப்புதல்வரே! வலன் என்ற அரக்கனைக் கொன்ற தேவேந்திரன் வளர்த்த, கற்பக வனத்தை உடைய தேசத்திற்குத் தலைவரே! என்று துதித்த உத்தமர்களாகிய தேவர்கள் இனிது வாழும்பொருட்டு, வல்லமை பொருந்திய திருவடியை அணுகாதவனாகிய சூரபதுமனைப் பிளந்தும், பூத வெள்ளங்களை அடங்கச் செய்த கிரவுஞ்ச மலையைத் தகர்த்தும், உதிரச் சேறு சென்று கடலில் திட்டு உண்டாகவும்,மாறுபட்ட அசுரர் குலத்தை இவ்வாறு, உடைவாளினால் அறுத்துத் அறுத்துத் தள்ளிய பெருமையில் மிக்கவரே!
நீங்காத ஞானத்துடன் கூடிய அறிவைக் தந்ததையும், ஆராய்வதற்கு உரிய அறிவு நூல்களின் உட்கருத்துக்களைக் கொடுத்ததையும், திரிபு உடைய வாழ்க்கையினை மெய்யென்று மயங்கி, இளைத்து ஆவியானது அழிந்து போகாவண்ணம் ஆசை என்கின்ற நீர்க் கடலைக் கடக்கும் ஆற்றலைத் தந்ததையும், வாக்கும் மனமும் கடந்த அதீத நிலையில் அடியேனை இருக்க வைத்ததையும், அசுத்தனாகிய சிறியேன் மிக்க புகழினால் எங்கும் வெளிப்படும் தன்மையைப் பெற்று, இனிமையுடன் ஏழு உலகும் யானாக விளங்க, புகழும் அற்புதமும் நிறைந்த தேவரீரது திருப்புகழை, இன்பத் தேன் ஊறுமாறு பாடி, எல்லா திசைகளிலும் அத் திருப்புகழ் ஏட்டினை அனுப்பும் ஆளுகையை அடியேனுக்குப் பணித்து அருளியதையும், துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாமல் செய்வதாகிய பெரிய மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும், நாலாவகையான வேற்றுமைகளுடன் கூடிய, நீர்க்குமிழிபோல் தோன்றி மறைவதுமான பிறவிகளும் நீங்க,பரம காரணமாகிய பாதுகாவலுடன் அடியேனுக்கு அருள் புரிந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
விரிவுரை
முருகப் பெருமானது இன்னருளினை இனிது பெற்ற அருளாளர் அருணகிரிநாதர். தாம் பெற்ற அருள் திறத்தை அகில உலகமும் உணர ஓதுகின்ற திருப்புகழ் இது. அதனை உணர்ந்து, உலகினரை அவ்வருளைப் பெறுதற்கு ஊக்கம் உள்ளவராகச் செய்யும்கருணைத் திறம் ஆகும்.
ஆனாத ஞான புத்தி ---
ஆனாமை -- கெடாமை. குறையாமை, நீங்காமை. "ஆனா அமுதே, அயில் வேல் அரசே" என்பது கந்தர் அனுபூதி.
ஆன்மா சித்துப் பொருள். சித்து - அறிவு அவ்வறிவு அறிவிக்க அறிகின்ற அறிவு. அது குறைபாடு உடையதும், காமக் குரோதங்களால் நீங்குவதுமாய் உள்ளது.
இறைவர் அறிவு வடிவானவர். அறிவும் அறியாமையும் கடந்த அறிவு அவரது திருமேனி. அத்தகைய பரம்பொருளாகிய முருகவேள் அருணகிரிநாதருக்கு, தமது அறிவு நிறைந்த அறிவை அருள் புரிந்தனர்.
யாம்ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்தனால்,
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்,
நாமேல் நடவீர் நடவீர் இனியே. ---கந்தர் அநுபூதி.
இங்கே புத்தி என்றது அந்தக்கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல.. ஞானபுத்தி என்றது அறிவின் சிகரமான மெய்யறிவு ஆகும்.
ஆராயும் நூல்களில் கருத்து அளித்ததும் ---
நூல் - அறிவைத் தருகின்ற நூல்கள்.
மரவேலை புரிவோன் முதலில் மரத்தில் நூல் தட்டியே தொழிலைத் தொடங்குவான். மரத்தின் கோணலை நூலால் அகற்றுவான். அதுபோல் நூலால் மனத்தில் உள்ள கோணலை அகற்றவேண்டும். நூல் தட்டி கோணலை நீக்கிய மரம் சிறப்பாக நிழலில் பெரிய பெரிய கட்டிடங்களில் அமைந்து விளங்குகின்றது. நூல் தட்டிக் கோணல் நீங்காத மரம் விறகுத் தொட்டியில் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் எரிக்கப்படுகின்றது.
அதுபோல், அறிவு நூல்களைக் கற்றவன், மற்றவர்களால் மதிக்கப்படுவான். கல்லாதவன், மற்ற எல்லாம் இருந்தும், மற்ற எல்லோராலும் இகழப்படுகின்றான்.
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல், அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு. --- நன்னூல்
நூல் எனப்படுவது நுவலும் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. --- தொல்காப்பியம்.
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல்பயனே --- நன்னூல்.
ஆன்றோர்கள் ஆராய்கின்ற அறிவு நூல்களின் உட்கருத்துக்களை முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு உணர்த்தி அருளினார்.
“அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப்பொழுதின் வாழ்வித்த வேதியனும்” --- வேடிச்சிகாவலன் வகுப்பு.
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே ---
ஆதேசம் -- திரிபு. "ஆதேச வாழ்வனை" என்றார் சிதம்பரம் திருப்புகழில். ஐம்பெரும் பூதங்களின் பரிணாமத்தால் ஆகியது இந்த உலகம். உலக வாழ்வு இன்பம்போல் தோன்றித் துன்பத்தைச் செய்வது. துன்பத்தைச் செய்யும். ஒரு விளக்கை ஒரு கனி என விரும்பி வீழ்ந்து வேதனை அடையும் விட்டில் பூச்சியைப் போல்,உயிர்த்தொகைகள் துன்பத்தை இன்பமாக எண்ணி மயங்குகின்றன.
தவநெறியை விடுத்து, அவநெறியை அடுத்து, அதில் உழைத்து உழைத்து, உடலும் உயிரும் இளைப்பு அடைகின்றன. இறுதியில் அழிந்து ஒழிகின்றன.
ஆசா பய உததியைக் கடக்க விட்டதும் ---
பயம் – நீர். உததி – கடல். ஆசை ஒரு கடல் போன்றது. கடல் கங்கு கரை அற்றது. அதன் ஆழத்தையும் அகலத்தையும் நீளத்தையும் அறிந்தார் இல்லை. ஆசையே எல்லா இடர்களுக்கும் பரமகாரணம். ஆசையைக் கடல் என்று தாயுமானாரும் அருளிச்செய்கின்றார்.
“ஆசைக் கடல் சுழலில் ஆழாமல் ஐயாநின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.”
மண்ணுலகம் முற்றும் ஆளுகின்றதோடு அமையாது, கடல் மீதும் தமது ஆணையைச் செலுத்த எண்ணி அமர் தொடுக்கின்றனர். குபேரனுக்கு நிகராகச் செல்வம் படைத்தவர்களும் இரசவாதம் செய்து பொருள் ஈட்ட முயல்கின்றனர். கன்னம், களவு, சூது, வாது, வஞ்சனைகள் செய்து மேலும் மேலும் பொருள் ஈட்ட முயல்கின்றனர். நீண்ட நாள் வாழ்ந்தோரும், நான்கு பேருக்குச் சுமையான இவ்வுடம்பை சுமந்து அலைய எண்ணி காயகல்பம் தேடி அலைந்து திரிகின்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்கால், பசிதீர உண்பதும் உறங்குவதும் தவிர வேறு இல்லை. ஒருவனுக்கு எத்தனை மாடமாளிகைகள் இருப்பினும் அவன் படுக்கும் இடம் ஐந்தரை அடிநீளம் தான். எத்தனை ஏக்கர் நிலம் இருந்தாலும் அவன் உண்பது கால்படி அரிசி தான். எத்தனை நூல்-துணி ஆலைகள் இருந்தாலும் அவன் உடுப்பது நான்கு முழம் தான்.
“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.” --- புறநானூறு.
“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.” ---நல்வழி.
“ஆசைக்கு ஓர் அளவில்லை; அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல்மீதிலே
ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்தபேரும்
நிலையாகவே இ(ன்)னும் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக் கடற்கு(ள்)ளே வீழாமல், மனது அற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்!
பார்க்கும் இடம் எங்கு ஒரு நீக்கம்அற நிறைகி்ன்ற
பரிபூரண ஆனந்தமே.” ---- தாயுமானார்.
ஆசையாகிய பெரும் காற்றில் மனமானது ஒரு இலவம்பஞ்சு போல் அகப்பட்டு அலைந்து அல்லல் படுகின்றது. அதனால் அழிந்தவர் அநந்தம். நிராசை இல்லையானால் தெய்வமும் இல்லை. ஆதலின் ஆசையை மெல்லமெல்ல அகற்ற முயலுதல் வேண்டும்.
“ஆசையெனும் பெருங்காற்றுஊடு இலவம்பஞ்சு
எனவும், மனது அலையும் காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும், கேட்-
டதும் தூர்ந்து, முத்திக்கு ஆன
நேசமும், நல் வாசமும் போய்ப் புலனாய், இல்
கொடுமை பற்றி நிற்பர், அந்தோ,
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே!
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ.” ---தாயுமானார்.
“ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே.” --- அபிராமி அந்தாதி.
வாசா மகோசரத்து இருத்துவித்ததும் ---
வாசா மகோசரம் --- வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதது. மனமும் வாக்கும் அற்ற இடத்திலே நிலைத்து நிற்பதுவே சமாதி நிலை.
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்... --- (தறையின்) திருப்புகழ்.
“வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்அருளை
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண்ணறிவைக் காண்பேனோ.” --- தாயுமானார்.
இந்த அரிய பெரிய நிலையானது கேவலம் கல்வி அறிவால் உண்டாவதல்ல. இறையருள் துணைபுரியத் தவ வலிமையால் உண்டாகும்.
“வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்னருளை
நோக்கும் மவுனம் இந்த நூல்அறிவால் உண்டாமோ.” --- தாயுமானார்.
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று ---
ஆபாதன் - அசுத்தன். "ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்" என்பார் விராலிமலைத் திருப்புகழில். உலகமெல்லாம் புகழும் மிகப்பெரிய தகுதியை அடிகளாருக்கு அருள் புரிந்தனர் அறுமுகக் கடவுள்.
உலகு ஏழும் யான் ஆக ---
இந்த சொற்றொடர் மிகவும் அருமையானது. இனிமையானது. ஆழமும் அகலமும் உள்ளது. ஏழு உலகங்களிலும் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் யாவும் தானாகக் கண்டு, எனது யான் என்ற எண்ணங்கள் நீங்கி அகண்டாகாரமாய் நிற்கும் நிலை. இந்நிலை நின்றார்க்கு, இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு, நன்மை தீமை, உறவு பகை முதலியன இல்லை.
“யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.” --- திருக்குறள்.
இந்த யான் எனது ஆகிய இரு பற்றுக்களும் நீங்கினால் பார்க்கும் இடம் எங்கும் கடவுள் இருக்கும் கருவறையாகத் தெரியுமாம் என்கிறார் தாயுமான சுவாமிகள்.
“என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின்
சன்னதியாம் நீ பெரிய சாமி பராபரமே.”
“எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக ...... வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீதம் ...... அருள்வாயே” --- (அமலவாயு) திருப்புகழ்.
நாம ---
நாமம் – புகழ். முருகப் பெருமானின் அருட்புகழை அமுது ஊறுவது போல் கூறுவது அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ்.
இனி, நாமம் என்னும் சொல்லுக்கு அச்சம் என்றும் பொருள் உண்டு. அவ்வாறு கொண்டால், மலையின் அடியில் இருந்து கண்டார் அச்சம் அடைவது போல், திருப்புகழின் ஆழத்தையும் சந்தபேதங்களையும் கண்டு தமிழ்ப்புலவர்கள் அஞ்சுவர் என்று ஆகும்.
அற்புதத் திருப்புகழ் ---
நடை அழகு. தொடை அழகு. பொருளழகு. சொல்லழகு, ஓசை அழகு முதலிய எல்லா அழகுகளையும் உடையதாய்,வேதாகம புராண இதிகாச சாரமாய், யோகஞான உட்பொருளை உடையதாய் திருப்புகழ் விளங்குவதால், "அற்புதம் அற்புதம்" என்று அறிஞர்கள் விம்மிதம் உறுகின்றார்கள்.
“பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே” --- திருப்புகழ்.
"மனது குழைந்து உருகும் தொண்டத் தொகையின் உடன் கூடித் தொனிக்க இனிக்கும் திருப்புகழைச் சொல்லித் துதிக்க, நல் இயலாம் தொலையா வாழ்வு' என்பது திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.
தேன் ஊற ஓதி ---
திருப்புகழ் சந்தச் செறிவுடன், சிந்தைக்கு இனிமை பயப்பதாய், தேனினும் இனியதாய் தித்திப்பது. அதன் இனிமையை அடியில் வரும் கவிராஜ பண்டாரத்தையா பாடி அருளிய திருமலை முருகன் பிள்ளைத்தமிழில் அறிக.
“உதிரும் கனியை நறும்பாகில்
உடைத்துக் கலந்து தேனைவடித்து
ஊற்றி அமுதினுடன் கூட்டி
ஒக்கக் குழைந்த ருசி பிறந்த
மதுரம் கனிந்த திருப்புகழ்”
புற்புதப் பிறப்பு அற ---
புற்புதம் – நீர்க்குமிழி.
"படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி, - தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார்? நீள் நிலத்தின் மேல்". – நாலடியார்.
பெய்கின்ற பெருமழை நீரில் பலகாலும் தோன்றி மறைகின்ற நீர்க்குமிழிகளைப் போல், மனித உடலானது பலமுறையும் பிறந்து பிறந்து இறக்கும் தன்மை உடையது. இதை உணர்ந்து, இந்த உலகில் பிறந்து பிறந்து தடுமாற்றத்தை அடைகின்ற நிலையை ஒழிக்கவேண்டும் என்னும் உறுதியான அறிவு உள்ள பெரியோருக்கு நிகரானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை.
நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும்,எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது. எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம்.
"நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்" என்பது கந்தர் அலங்காரம்.
“நீர்க்குமிழி பூண்அமைத்து நின்றாலும் நில்லா, மெய்
பார்க்கும் இடத்து இதன்மேல் பற்று அறுவது எந்நாளோ?” --- தாயுமானார்.
“ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை,
நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது”. --- தாயுமானார்.
“விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்” --- கம்பராமாயணம்.
எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே ---
அநுக்கிரகம் – அருள். முருகப் பெருமான் தனக்கு அருள் புரிந்த திறத்தை ஒருபோதும் மறவேன் என்று அடிகள் பல இடங்களில் கூறி மகிழ்கின்றனர்.
“சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே” --- (பத்தர்கண) திருப்புகழ்.
மாநாக நாண் வலுப்புறத் துவக்கி.........சிரித்த வித்தகர் ---
கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.
திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.
அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.
"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்" --- (ஆனாத) திருப்புகழ்.
"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என, வானோர்
எல்லாம்ஒரு தேராய், அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப,
வல்லாய்எரி, காற்று ஈர்க்கு,அரி கோல்,வாசுகி நாண், கல்
வில்லால் எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே.” --- திருஞானசம்பந்தர்.
“வரிஅரவே நாண்ஆக, மால்வரையே வில்லாக,
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்,
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்ததுஓர்
கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.” --- திருஞானசம்பந்தர்.
"குன்ற வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே? விடைஏறும் வேதியனே!
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே." --- திருஞானசம்பந்தர்.
“கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.” --- அப்பர்.
“நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே.” --- சுந்தரர்.
முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள். இந்தக் கருத்தை, "பற்றலர்க்குப் பொற்பதத் துய்ப்பைப் புணர்த்துப் பித்தன்" என்று திருக்கச்சித் திருப்புகழில் அடிகளார் குறிப்பிடுகின்றார்.
“மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை
ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் க அருள் செய்த
தேவ தேவநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.” --- சுந்தரர்.
வலாரி பெற்ற தே நாயக ---
தேசம் என்பது தேம் என்று குறுகியது. வலன் என்ற அசுரனைக் கொன்றதால் இந்திரன் வலாரி எனப்பெற்றான். அந்த இந்திரன் வளர்த்த கற்பக வனத்துடன் கூடிய அமரலோகத்திற்குத் தலைவர் முருகக் கடவுள்.
சீரா ---
சீரா - உடைவாள். அடியில் வரும் கந்தர் அலங்காரப் பாடலாலும் அறிக.
“தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
ஆராது, உமைமுலைப் பால்உண்ட பாலன் அரையில்கட்டும்
சீராவும் கையில் சிறுவாளும், வேலும் என் சிந்தையவே,
வாராது அகல் அந்தகா, வந்தபோது உயிர் வாங்குவனே.”
கருத்துரை
முருகா! அடியேனுக்குச் செய்த திருவருளை ஒருபோதும் மறவேன்.
No comments:
Post a Comment