திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன் கொடுங்கோலன் என்று சொல்லுகின்ற துன்பம் தரும் சொல்லை உடையவன், அவனது வாழ்நாள் குறைந்து, விரைவில் ஏனைய நலங்களும் கெட்டு அழிவான்" என்கின்றார் நாயனார்.
மக்கள் வருந்திக் கூறும் சொற்களே, மன்னனது வாழ்நாளைக் குறைக்கும் கூரிய படைக்கலமாக, ஆயுளைக் குறைப்பதோடு, செல்வத்தையும் போக்கிவிடும்.
இதற்குத் திருக்குறள்...
இறைகடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல்,வேந்தன்
உறை கடுகி, ஒல்லைக் கெடும்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் --- குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்,
உறை கடுகி ஒல்லைக் கெடும் --- ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
காத்தகபி லற்குஇடும்பை செய்து கணன்அழிந்தான்
மூத்தோன் மழுவால், முருகேசா! --- ஏத்தும்
இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
இதன் பொருள் ---
முருகேசா - முருகப் பெருமானே, கணன் - கணன் என்னும் அரசன், காத்த கபிலற்கு இடும்பை செய்து - மெலிவைப் போக்கப் பாதுகாத்த கபிலமுனிவருக்குத் துன்பம் செய்து, மூத்தோன் மழுவால் அழிந்தான் - உனக்கு மூத்தவரான ஆனைமுகக் கடவுளுடைய மழுப் படையினாலே இறந்து ஒழிந்தான், ஏத்தும் - போற்றப் பெறுகிற, இறைகடியன் என்று உரைக்கும் - நம்முடைய அரசன் மிகவும் கொடியவன் என்று குடிகளால் கூறப்படுகின்ற, இன்னாச் சொல் - துன்பச் சொல்லைப் பெறுகின்ற, வேந்தன் உறை கடுகி - அரசன் தன் ஆயுள் குறைந்து, ஒல்லை கெடும் - விரைவில் அழிவான்.
மெலிவைப் போக்கிக் காத்த கபிலருக்குத் துன்பம் செய்து கணன் என்பவன் ஆனைமுகக் கடவுளுடைய மழுப்படையால் இறந்து ஒழிந்தான். நம்முடைய அரசன் மிகவும் கொடியவன் என்று குடிமக்களால் கூறப்படுகின்ற துன்பச் சொல்லைப் பெறுகிற அரசன் தன் ஆயுள் விரைவில் குறைந்து அழிவான் என்பதாம்.
கணன் கதை
முன்னாளில் கணன் என்னும் பெயருடைய ஓர் அரசன் இருந்தான். அவன் வேட்டைக்குச் சென்ற பொழுது பசியாலும் தாகத்தாலும் மெலிந்து கபிலமுனிவருடைய இருப்பிடத்திற்குச் சென்றான். அரசனுடைய நிலையைக் கண்டு அவர் இரங்கினார். தாம் இந்திரன்பால் பெற்ற சிந்தாமணியைக் கொண்டு ஒரு நகரத்தையும் பல புதுமை மிக்க உணவையும் உண்டாக்கிக் கணனையும் அவனுடைய படையினரையும் உணவு கொள்ளச் செய்தார். பிறகு அரசன், பெருஞ்சிறப்புக்குக் காரணமாகவுள்ள சிந்தாமணியைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டான். அவர் உடன்படவில்லை. வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு தன்னுடைய நகரத்திற்குச் சென்றான். தான் கவர்ந்து வந்த சிந்தாமணியைத் தந்தைக்குக் காட்டினான். தந்தை மனம் நடுங்கினான். "முனிவர்கட்குக் கேடு செய்தால் தீமை உண்டாவது திண்ணம். இதை மீண்டும் அவர்பால் கொடுத்து விடுவாயாக" என்று வற்புறத்தினான். கணன் அம்மொழியை மறுத்துவிட்டுச் சிந்தாமணியைக் கொடுக்காமலிருந்தான். பிறகு முனிவருடைய வழிபடு கடவுளாகிய ஆனைமுகக் கடவுள் கணனைக் கொன்றார். பொல்லாத மன்னன் விரைவில் கெடுவான் என்பது இவனிடம் உண்மையாகியது.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காண்க.
அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
செங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்
தண்கோல் எடுக்குமாம் மெய். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
அம் கோல் அவிர் தொடி - அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்!, வேந்தர்கண் - அரசன் பகையரசர்மாட்டு, வெம் கோன்மை சிறிது வேண்டும் எனினும் - கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினானாயினும், செங்கோலன் அல்லாக்கால் – தனது ஆட்சிக்கு உட்பட்டு வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் அல்லாத இடத்து, ஆழியான் ஆயினும் - ஆழிப்படையை உடைய திருமாலேயாயினும், சேர்ந்தாரும் - தன்னைச் சேர்ந்தவர்களும், எள்ளுவர் - இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே, மெய் - உண்மையாக, எடுக்கும் - வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான்.
No comments:
Post a Comment