057. வெருவந்த செய்யாமை - 01. தக்காங்கு நாடி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


அதாவது, குடிமக்கள் பயப்படக்கூடியதும், அதிகாரிகள் பயப்படக்கூடியதும், தான் பயப்படக்கூடியதும் ஆகிய செயல்களைச் செய்யாது இருத்தல். கொடுங்கோன்மையால் நிகழும் செயல்கள் இவை. ஆகையால், கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தின் பின் இது வைக்கப்பட்டது.


இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "நடுநிலையாக ஆராய்ந்து, குற்றத்தில் மீண்டும் தலைப்படாத முறையில், செய்த குற்றத்திற்குத் தக்கபடி தண்டனை வழங்குதல் அரசனின் கடமை ஆகும்" என்கின்றார் நாயனார்.


செய்த குற்றத்திற்கு ஏற்ப தண்டை வழங்குதல் வேண்டும். தக்கபடி விசாரித்து, குற்றம் செய்தவனைத் தண்டிக்காமல் விடுவதும், செய்த குற்றத்திற்கு ஏற்ப அல்லாமல், ஏதேனும் ஒரு காரணம் பற்றி, மிகையாகத் தண்டனை வழங்குவதும் கூடாது எனப்பட்டது.


இதற்குத் திருக்குறள்...

தக்குஆங்கு நாடி, தலைச் செல்லா வண்ணத்தால்

ஒத்துஆங்கு, ஒறுப்பது வேந்து.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

'தக்காங்கு' நாடி --- ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: 

தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து --- பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.

(தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்லபவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“இசைபயின்றார் வாதத்து இறைவரும் ஒன்றேனும்

இசைவன்றி ................  வியற்றான் -- இசைவொன்றத்

தக்குஆங்கு நாடி, தலைச் செல்லா வண்ணத்தால்

ஒத்துஆங்கு, ஒறுப்பது வேந்து.”


முதலிரண்டடிகளின் உண்மை உருவம் புலப்படவில்லை. இப்பாடில் குறிப்பிட்ட வரலாறு திருவிளையாடல் புராணத்துள் இசைவாது வென்ற படலத்துள் கண்டதுபோலும் எனத் தோன்றுகிறது.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.

“வழிபடு வோரை வல் அறிதீயே,

பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே,

நீ மெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி,

வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமுந் தணிதி நீ பண்டையில் பெரிதே,

அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்

மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப!

செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும்புகழ்

நெய்தல் அம் கானல் நெடியோய்

எய்த வந்தனம் யாம், ஏத்துகம் பலவே! --- புறநானூறு.


இதன் பொருள் ---


உன்னை வழிபடுவோர் யார் என்பதை நீ விரைவில் அறிந்து கொள்வாய். புறங்கூறுவோர் பிறர் மேல் சொல்லும் பழிமொழிகளை நீ சற்றும் ஏற்றுக் கொள்ள மாட்டாய். தவறு உடையது என்று நீ உண்மையாக நம்பும் ஒரு தீமையை யாரேனும் செய்யக் கண்டால், முறை தவறாது, நடுநின்று ஆராய்ந்து, அவர்க்குத் தண்டனை தருவாய். தண்டைக்கு ஆளானோர், தமது தவறு உணர்ந்து வருந்தி, உன் முன் வந்து வணங்கி நின்றால், அவர்க்கு அளித்த தண்டனைக்கும் மேலாக, அவரிடம் அன்பு காட்டி அருள் செய்வாய். அமுதைப் பழிக்கின்ற, உண்ண உண்ணத் தெவிட்டாத, மணம் மிக்க, சுவை உணவை விருந்தாய் வருவோர்க்கு எல்லாம் வாரி வழங்குகின்ற, குறையில்லா நிறை உடைய உனது மனைவியர் தோள்களைத் தழுவுவதே அல்லாமல், பகை அரசர் நெருங்க அஞ்சுகின்ற, வானவில் போலும், வண்ண மலர் மாலை புரளும் மார்பினை உடையவனே! செய்துவிட்டுப் பின் வருந்தாமல், எதையும் முதலிலேயே சீர்தூக்கிப் பார்த்துச் செய்யும் இயல்பும், பரந்து விரிந்து சிறந்த புகழும் உடையவனே! நெய்தல் அம் கானல் என்னும் பெயருடைய ஊரினை உடைய பெரியவனை! இளஞ்சேட்சென்னியே, உன்னைச் சரண் அடைகின்றோம். உன் புகழே பாடுகின்றோம். எமக்கு நீ இன்னருள் புரிவாய்.



No comments:

057. வெருவந்த செய்யாமை - 02. கடிதோச்சி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பெருஞ்செல்வமானத...