திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "அரசன் குடிமக்கள் அஞ்சி ஒழுகும்படியாகச் செய்கின்றவனாக இருப்பானாயின், அவன் நிச்சயமாக வெகுவிரைவில் எல்லா நலங்களும் நீங்கப் பெற்று கெடுவான்" என்கின்றார் நாயனார். ஒருவந்தம் --- நிச்சயம், ஒருதலை.
இதற்குத் திருக்குறள்...
"வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின்,
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். "
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் --- குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்;
ஒருவந்தம் ஒல்லைக் கெடும் --- அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
(வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
தாடகைதன் மைந்தர் தவமுனியை அச்சுறுத்தி
ஈடுஅரக்கர் ஆனார், இரங்கேசா! --- நாடி
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! தாடகை தன் மைந்தர் - தாடகை மக்களாகிய மாரீசன், சுவாகு என்பார், தவ முனியை அச்சுறுத்தி - தவத்தில் சிறந்த அகத்திய முனிவரைப் பயப்படுத்தி (அதனால்), ஈடு அரக்கர் ஆனார் - அரக்கருக்கு சமானமானார்கள், (ஆகையால், இது) வெருவந்த - (குடிகள்) அஞ்சுகின்ற காரியங்களை, செய்து ஒழுகும் - செய்து நடக்கின்ற, வெம் கோலன் ஆயின் - கொடுங்கோலனாய் (அரசன்) இருந்தால், ஒருவந்தம் - நிச்சயமாகவே, ஒல்லை - விரைவில், கெடும் - கெட்டுப் போவான் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- கொடுங்கோலரசன் விரைவில் அழிந்து போவான்.
விளக்கவுரை - சுகன் என்று ஓர் யட்சன் (இயக்கன்) பொதியமலையைச் சார்ந்த வனத்தில் வந்து, அகத்திய முனிவரின் ஆச்சிரமத்தில் இருந்த பூமரங்களைப் பிடுங்கி நாசமாக்கிச் சேட்டை செய்தான். அதுகண்ட அகத்திய முனிவர், அவனைக் கோபத் தீயினால் எரித்துச் சாம்பராக்கி விட்டார். அவன் மாண்டது தெரிந்த அவனுடைய மனைவி மக்களாகிய தாடகை, மாரீசன், சுவாகு என்பார், பொதியமலையில் வந்து, பழிக்குப் பழி வாங்க முனிவரைப் பயமுறுத்தினார்கள். அவர்களை அவர் மசகங்களாக (மசகம் - கொசு) எண்ணிக் கோபித்து, நீவிர் மூவரும் அரக்கர் ஆகுவீர்களாக எனக் கடும் சாபமிட்டார். ஆகையால், அம்மூவரும் அநாதை அரக்கர்களாய்ப் பாதலத்தில் புகுந்து மாலியவான் ஆதரவில் அடங்கியிருந்து, பிறகு, அரக்கருக்குரிய கொடுங்குணத்தைக் காட்டியதால் இராமபிரான் கைவில்லுக்கு இரையாகி மாண்டார்கள்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
வண்ண மகள்நோவ வருகீச கன்மடிந்தான்
திண்ணம்இது அன்றோ சிவசிவா --- எண்ணின்
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
திரௌபதி விராடபுரத்தில் விராட மன்னனின் மனைவியாகிய சுதேட்டிணைக்கு வண்ணமகளாக இருந்தாள். கீசகன் அவளை ஒருதலையாகக் காதலித்தான். அவன் வீமனால் கொல்லப்பட்டான்.
கீசகன் மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதேட்டிணையின் தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். விராட நாட்டு மன்னனின் மைத்துனன் என்ற அகங்காரம் அவனிடம் இருந்தது.
பாண்டவர்கள் சூதாடி நாடிழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலே வாழ்ந்து, கரந்துறைதல் வேண்டி மாறுவேடமும் வேறு பெயரும் கொண்டு, விராட ராசனைச் சார்ந்து, ஒவ்வொரு தொழிலில் அமர்ந்து வாழ்கையில், திரௌபதி விராடராசனுடைய மனைவியாகிய சுதட்டிணைக்குப் பணிப்பெண் ஆனாள். ஒருநாள் அச் சுதட்டிணையின் உடன் பிறந்தானாகிய கீசகன் தனது தமக்கையைக் காணவந்த இடத்தில், திரௌபதியைக் கண்டு மோகம் கொண்டு, சுதேட்டிணை என்ன சொல்லியும் கேளாது அவளை அணுகினான். அவள் ஓடிப்போய் விராடராசனது சபையின் முன் விழுந்தாள். அங்கும் அவளை விடாது தொடர்ந்து வந்த கீசகன் கைப்பற்றும்முன் சூரியனால் ஏவப்பட்ட ஓர் ஏவலாளன் அவனை எடுத்து அப்பால் எறிந்தான். அதுகண்டு, பலாயனன் என்னும் பெயரோடு மடைத்தொழில் தலைவனாய் இருந்த வீமன் அவனைக் கொல்லுதற்கு ஒரு மரத்தைப் பெயர்த்தெடுக்கச் சென்றபோது, கங்கபட்டர் என்னும் பெயரோடு சந்நியாசியாய்ச் சபையில் விராடன் அருகில் இருந்த தருமபுத்திரர், 'இம் மரம் எரியாது' என்ற குறிப்பினை உணர்ந்து அப்போது ஒன்றும் சொல்லாது வாளா இருந்தான். மறுநாள் நள்ளிரவில் திரௌபதியைக் கொண்டு ஆசைகாட்டிக் கீசகனை ஒரு சோலைக்கு வருவித்துக் கொன்றான்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
"சங்கோடு சக்கரம் சேர் புல்லைமால் கஞ்சன் ஆருயிரை
அங்கு ஓட மாய்த்தது அறியார் கொலோ, வெருவந்தசெய்வார்,
செங்கோல் நெறிஒன்று இலனாய் வெருவந்த செய்தொழுகும்
வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் என்பதே".
இதன் பொருள் ---
கொடுங்கோலன் ஆகிய கம்சனது அரிய உயிரை, சங்கும் சக்கரமும் திருக்கரத்தில் தரித்துள்ள திருமால் மாய்த்தது கொண்டு, செங்கோல் நெறியில் நில்லாமல் கொடுங்கோல் நெறியில் ஆட்சி புரிபவர், தாம் விரைவில் கெட்டு அழிவோம் என்பதை அறியமாட்டார்கள் போலும்.
திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகிய கண்ணபிரானுடைய தாய் தேவகி. அவள் கம்சனுடைய தங்கை. எனவே, கண்ணனுடைய அம்மான் கம்சன். அப் பாதகன் அறநெறி விடுத்து, மறநெறி அடுத்து, தீமை பல புரிந்து வந்தான்.
கம்சன் தன்னைக் கொல்லும் பொருட்டு, எங்கேயோ ஒருவன் பிறந்து இருக்கின்றான் என்று, மாயை சொல்லக் கேட்டு அஞ்சினான். அக் குழந்தை எங்கு உள்ளது என்று அறியானாய், உலகில் உள்ள குழந்தைகளை எல்லாம் கொல்லுமாறு பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் தேவமாது போல் வடிவு கொண்டு, கண்டார் மயங்கிக் காதல் கொள்ள நடந்து, பால் கொடுப்பதுபோல் பாவனை செய்து குழந்தைகளைக் கொன்று குவித்துக்கொண்டு, கண்ணபிரான் வளர்கின்ற ஆயர்பாடிக்கு வந்தாள்.
கண்டவர் மனம்புகு காவிபுரை கண்ணாள்
வண்டுபடு தாமரை மலர்க்கையின் விளங்கப்
புண்டரிக மாதுவரல் போலஅருள் மாரிக்
கொண்டல்விளை யாடல்புரி கோயிலின் அடைந்தாள்.
குண்டலம் இலங்கவொர் குறங்குஇனிது இருத்தி
வெண்தளவு அரும்புஅனைய மென்னகை விளைத்து,
மண்டுபுனல் வேலிதிகழ் மண்ணும்உயர் விண்ணும்
உண்டவனை வெய்யமுலை ஊட்டினள் அணைத்தே.
யசோதையின் திருமாளிகையின் முன், இளங்கொண்டல் மேகம்போல் அழகின் கொழுந்தாக ஆடல் புரியும் கண்ணபிரானைக் கண்டாள். கல்லும் கரையும் அக் குழந்தையைக் கண்டு அவள் மனம் கரையவில்லை. இரு கரங்களால் எடுத்தாள். மடியில் இருத்தி, நஞ்சுடன் கூடிய தனது முலையை மண்ணும் விண்ணும் உண்ட வாசுதேவனுக்கு உண்ணக் கொடுத்தாள். நீலமேகம் போன்ற பாலகிருட்டிணர் அவளுடைய பால், உணர்வு, உயிர் எல்லாவற்றையும் ஒருங்கே உண்டனர். மலைபோலே கீழே வீழ்ந்து மாண்டனள். அம் மாயப் பேயாகிய பூதனை மாண்டும், அவள் மீது அஞ்சாது குழந்தையாகிய கோபாலமூர்த்தி விளையாடி அருளினார்.
கம்சன் கண்ணனை மதுரைக்கு அழைத்து, அவரைக் கொல்லும் பொருட்டு, தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி வாயிலில் வைத்திருந்தான்.
கஜேந்திரம் என்ற யானையைக் காத்தருளிய கண்ணபிரான் அந்த யானையுடன் பொருது, அதன் தந்தத்தை ஒடித்து வெற்றி பெற்றனர்.
கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு இரண்டு அரக்கர்களைக் கம்சன் ஏவினான். ஒரு அரக்கன் கண்ணன் மேய்க்கின்ற பசுவின் கன்றுகளுடன் தானும் ஒரு கன்றாக வடிவெடுத்து,சமயம் பார்த்து, தன் கொம்பினால் குத்திக் கொல்லுதற்கு ஆயத்தமாக இருந்தான். மற்றொரு அரக்கன், கண்ணபிரான் கன்று மேய்த்து வெய்யிலுக்கு ஒதுங்கும் சோலையில் ஒரு விளாமரமாக நின்றான். அதன் நிழலில் வந்து ஒதுங்கியவுடன் வேருடன் சாய்ந்து கொல்லக் கருதி இருந்தான்.
இந்த இருவருடைய மாயச் சூழ்ச்சியையும் ஆயர்குலக் கொழுந்தாகிய அண்ணல் உணர்ந்தார். ஆயர் சிறார்களுடன் கன்றுகளை மேய்த்து அவ் விளாமரத்தின் நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்கினார். அடே கோபாலர்களே! இந்த விளா மரத்தில் நிரம்பவும் பழங்கள் பழுத்து நிறைந்திருக்கின்றன. இங்கே இவைகளை அடித்து உதிர்க்கக் கல்லும் இல்லை என்று கூறி, கன்றின் உருவமாக மாறி வந்துள்ள அரக்கனை எடுத்து விளாமரத்தின் மீது சாடினார். விளாமரமாக நின்ற அரக்கனும், கன்றாக வந்த அரக்கனும் ஒருங்கே மாண்டு ஒழிந்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட ஆயச் சிறுவர்கள் தூய மாதவனை வாயார வாழ்த்தி வணங்கினார்கள்.
இந்தச் செய்தி, திருவாசகப் பாடலிலும் கூறப்பட்டுள்ளது.
"என்றும் பிறந்துஇறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ".
கம்சன் கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு, ஒரு இரக்கமில்லாத அரக்கனை ஏவினான். அவன் பசுவினை மேய்த்து வரும் கண்ணன் எதிரில் பெரிய பறவை வடிவாக வாயில் அனல் பொறிகள் பறக்க எதிர்ந்தான். கண்ணபிரான் அஞ்சாது சென்று அப் பறவையின் அலகுகளை இரு கரங்களாலும் பற்றிப் பிளந்து எறிந்தார்.
குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை நீத்து, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.
"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்று வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க் கண்ணபிரானாகத் திருமால் அவதரிப்பார். அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.
கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.
உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.
யசோதை தன் குலக்கொழுந்தாகிய கண்ணனை வாயில் முற்றத்தில் கண்வளரச் செய்து, அந்தப்புரத்தில் குடும்ப அலுவலில் ஈடுபட்டிருந்தாள். கமசனால் அனுப்பப்பட்ட ஒரு அரக்கன், அருகில் இருந்த ஒரு வண்டியில் மறைந்து, அச் சகடத்தைக் கண்ணபிரான் மீது உருட்டினான். கண்துயின்று கொண்டு இருந்த கமலக்கண்ணர், சட்டென்று கண் விழித்து, சகடத்தைச் சிறிது திருவடியால் உதைத்தருளினார். அரக்கன் அழிந்தனன்.
கண்ணபிரான் பலராமருடன் கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் இனிது வளர்கின்றபோது, கம்சன் அவர்களை அக்ரூரரை ஏவி அழைத்தான். கார்வண்ணமூர்த்தியும், சங்கவண்ண மூர்த்தியும் கம்சனைக் காணும் பொருட்டு, மதுரையம்பதியை அடைந்தார்கள். அரண்மனை வாயிலில் அவர்களைத் தடுத்துக் கொல்லும் பொருட்டு, மிகப் பெரிய மல்லர்களாகிய சாணூரன், முட்டிகன் என்ற இருவரை கம்சன் நியமித்து இருந்தான். மலைகள் இரண்டு எதிர்ப்பது போல் இருவர்களும் இருபாலகர்களை எதிர்த்தார்கள். சாணூரன் கண்ணபிரானுடனும், முட்டிகன் பலராமருடனும் பொருதார்கள். இவர்கள் இருவரையும் மல்யுத்தத்தில் கூறிய முறைப்படி வலசாரி இடசாரியாகத் திரிந்தும், சுழன்றும் போராடி, முடிவில் கண்ணபிரானும் பலராமரும் அம் மல்லர்களைக் கொன்றார்கள்.
கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண-பலராமரை பாராட்ட மனமில்லாதது மட்டுமின்றி, "வீரர்களே! இந்த கண்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும்" என ஆணையிட்டான்.
சற்றும் நியாயமின்றி நடந்து கொள்ளும் கம்சனின் மீது கோபம் கொண்ட கிருஷ்ணர், அதே வேகத்தில் அவன் வீற்றிருந்த சிம்மாசனம் நோக்கி ஓடினார். தலையில் இருந்த கிரீடத்தை தள்ளி விட்டவர், அவன் முடியை பற்றி மல்யுத்த மைதானத்திற்கு இழுத்து வந்தார்.
பின்னர் கம்சனை கீழே தள்ளி மார்பின் மீது ஏறி அமர்ந்து முகத்தில் ஒரு குத்து விட்டார். அந்த ஒரு அடியை தாங்க முடியாமல் அந்த அரக்கன் உயிரை விட்டான். கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரையும் பலராமர், ஒருவர் பின் ஒருவராக கொன்றார்.
தனது நலத்தை மட்டுமே கருதி குடிமக்கள் அஞ்சுமாறு கொடுங்கோல் புரிந்த கம்சனது செல்வமும், செல்வாக்கும் ஒருங்கே அழிந்து போயின.
கஞ்சன் ஆருயிரை - கம்சனுடைய அரிய உயிரை. அங்கு ஓட - உடலைவிட்டு ஓட. செங்கோல் நெறி - செவ்விய அரசாட்சி முறை.
No comments:
Post a Comment