திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை
இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பெருஞ்செல்வமானது நெடுங்காலம் தம்மை விட்டு நீங்காமல் இருக்கவேண்டும் என்று விரும்புவோர், ஒருவன் செய்த குற்றத்திற்குத் தண்டனை வழங்க முற்படும்போது, அளவு கடந்து செய்வது போலக் காட்டி, அளவு கடவாமல் செய்யவேண்டும்" என்கின்றார் நாயனார்.
குற்றம் செய்த ஒருவன் மேன்மேலும் குற்றம் செய்யாமல் இருக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாதல் பொருட்டு, மிகப் பெரியதோர் தண்டனை விதிக்கப்படுவது போல் தொடங்கி, பின்னர் தொடங்கிய அளவில் செய்யாது குறைத்துச் செய்வானாயின், அந்த எண்ணத்தால் குடிகள் அவன் வழி நிற்பார்கள், செல்வ வளங்களும் நிலைத்து நிற்கும். மாறுபட்டுச் செய்வானாயின், கொடுங்கோலன் என்று குடிமக்கள் அஞ்சுவார்கள்.
இதற்குத் திருக்குறள்...
“கடிது ஓச்சி, மெல்ல எறிக, நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கடிது ஒச்சி --- அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி,
மெல்ல எறிக --- செய்யுங்கால் அளவிறவாமல் செய்க,
ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் --- ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்..
பேதைமைப் பாலின் ஆதல்,
பெருங் கிழமையினால் ஆதல்,
மேதக நட்டோர் மாட்டும்
விரவிடும் பிழைகள் எல்லாம்
காதுதற் பால அல்ல,
காதிடில் கண்ணின் ஓடி,
நோதக ஓச்சி, மெல்ல
நோன்றவே எறிகுவாரால். --- தணிகைப் புராணம்.
இதன் பொருள் ---
அறியாமை காரணமாகவாவது, பெரிய நட்பின் உரிமை பற்றியாவது, மேன்மை பொருந்திய நட்பினரிடத்துப் பொருந்தும் குற்றங்கள் எல்லாம் தண்டிக்கும் தரம் உடையன அல்ல. அவற்றினுக்கு ஒறுக்க வேண்டின், கண்ணோட்டம் செய்து, வருந்தத் தக்கதாக ஓங்கி, மெல்லப் பொறுக்கும் வண்ணம் அடித்தலைச் செய்வார்.
காதுதற் பால அல்ல - ஒறுக்கும் பகுதி உடைய அல்ல. காதிடின் - தண்டிக்கப் புகின். கண்ணினோடி - கண்ணோட்டஞ் செய்து. நோதக - வருந்த. ஓச்சி - ஓங்கி. நோன்ற - பொறுக்க.
No comments:
Post a Comment