பொருளை அருளாக மாற்றும் வழி

“பொருளை அருளாக மாற்றும் வழி”

-----


    “அருளுடைமை” என்னும் அதிகாரத்துள் ஏழாம் திருக்குறளில்,  "பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லை என்பது போன்று, உயிர்களின்மேல் அருள் இல்லாதவர்க்கு முத்தி உலக இன்பம் இல்லை" என்றார் நாயனார். 

“அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு

இவ் உலகம் இல்ஆகி ஆங்கு.”    --திருக்குறள்.

    இவ்வுலக இன்பத்தை அடைதற்கு, பொருள் காரணமானது போல், அவ்வுலக இன்பத்தை அடைவதற்கு அருள் காரணம் ஆயிற்று என்று கொள்ளவேண்டும். அதிகார முழுமையும் ஓதி உணர்ந்தால் இந்த உண்மை விளங்கும். இவ்வொரு திருக்குறளை மட்டும் படித்துவிட்டு, திருவள்ளுவரே பொருள் இல்லை என்றால் இவ்வுலக இன்பம் இல்லை என்று அறுதியிட்டுக் கூறிவிட்டார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, பொருளைச் செய்வதிலேயே வாழ்நாளைச் செலவிடுவோர் உண்டு.

    பொருள் இல்லாதவர்க்கு, இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்னாளில் என்றைக்காவது அவர்களின் நல்வினைப் பயனாகவும், அயராத உழைப்பின் காரணமாகவும் பொருள் வரும். செல்வத்தில் பூத்துப் பொலிவார்கள். அருள் இல்லாதவர்க்கு என்றைக்குமே அது வரும் வாய்ப்பில்லை. முந்திய திருக்குறளில், பொருள் இல்லாமையோடு அருள் இல்லாமையை ஒருவிதத்தால் ஒப்பாக்கிச் சொன்ன நாயனார், அதனை மறுத்து, மற்றொரு விதத்தினால், பொருள் இல்லாமையினும், அருள் இல்லாமை கொடிது என்றும், தீவினையின் பயனாக வறுமையை அடைந்தோர், அத் தீவினையின் பயன் நீங்கிய காலத்து, பின்னர் நல்வினைப் பயனால் செல்வத்தை உடையவர் ஆகலாம் என்றும், அருள் இல்லாதவர் எக்காலத்தும் மேம்பாடு அடைவதில்லை என்றும் அடுத்த திருக்குறளில் தெளிவுபடுத்தினார் நாயனார்.

“பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது.” --திருக்குறள்.


    தற்போதைய சமூக நிகழ்வுகள் திருவள்ளுவ நாயனார் காட்டியதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பொருள் இல்லாமல் வாழ்வைத் தொடங்கியவர்கள் எப்படியோ பொருளைப் பெறுகிறார்கள். ஏதும் இல்லாமல் வந்தோம். எதும் இல்லாமல்தான் போகப் போகிறோம். கொண்டு போவது ஏதும் இல்லை என்பதை அறியாமல், அஞ்ஞானத்தின் வயப்பட்டு, பொருளைக் குவித்து வைப்பதற்கு வழிமுறைகளை ஆராய்ந்து ஆராய்ந்து செயல்படுத்துகிறார்கள் சிலர். இதனால், அருள் வருமா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

    “புண்ணியம் புரி பூமி பார்; அதில் வரு போகம் நண்ணி இன்புறு பூமி வானாடு” என்று திருவிளையாடல் புராணம் கூறும். அறத்தைச் செய்தவற்கு இடமாக அமைந்தது இந்த உலகம். அறத்தின் பயனால் வரும் புண்ணியத்தின் பயனை அனுபவித்தற்கு இடமாக அமைந்தது வானுலகம். இவ்வுலகத்தில் ஈட்டிய பொருளைக் கொண்டு, அறத்தைப் புரிந்து புண்ணியத்தைத் தேடி வைத்துக் கொண்டால், அது மறுமைக்கு இன்பம் ஆகும். எனவே, பொருளை கொண்டு அருளைத் தேடவேண்டும் என்பது விளங்கும். அறத்தை விளக்கி அறிவுறுத்திய திருவள்ளுவ நாயனார், அருள் என்பது குறித்தும் விளக்கம் தருகிறார். அருள் என்பது அன்பின் குழந்தை. அன்பு இல்லாமல் அருள் பிறக்காது. (“அருள் என்னும் அன்பு ஈன் குழவி”) அன்பு என்பது தொடர்பு உடையவர்கள் மேல் காட்டுவது. அருள் என்பது தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மேலும் காட்டுவது.

    வள்ளற்பெருமான் அருளை இரண்டாக வகுத்துக் காட்டுகிறார். மனிதர்கள் மேல் வைக்கும் அருள், “ஆன்ம நேய ஒருமைப்பாடு”. அது, “ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்துதல்” என்றார். பிற உயிரினங்கள் மேல் வைக்கும் அருளை, “சீவகாருண்ணியம்” என்றார். பொதுவாக உயிர் அருள் என்று கொள்ளலாம். இறையருளை ஒருவன் பெறவேண்டுமானால், அவனிடத்து உயிர் அருள் இருக்கவேண்டும். “எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும், நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே”  எனவும், “எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தபோதனர்கள் செவ்வறிவை நாடி மிகச் சிந்தை வைப்பது எந்நாளோ” எனவும் தாயுமான அடிகளார் பாடினார். “எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி, உள்ளே ஒத்து, உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர், அவர் உள்ளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்” என்று வள்ளல்பெருமான் பாடுகிறார். “எவ்வுயிரும் பொது எனக் கண்டு, இரங்கி உபகரிக்கின்றார் யாவர், அந்தச் செவ்வியர் தம் செயல் அனைத்தும் திரு அருளின் செயல் எனவே தெரிந்தேன்” என்றும் பாடுகிறார்.

    உடல்களால் வேறுபாடுகள் காணப்பட்டாலும், உயிர்கள் என்ற நிலையில் வேறுபாடு இல்லை. இறைவன் உயிர்களைப் படைப்பது இல்லை. உயிர்களுக்கு உடம்பையே படைத்து அருள்கிறான். ஒரு தாயின் வழியாக வந்தவர்கள் எல்லோரும் உடன்பிறந்தார் ஆவதுபோல, இறைவன் அருள் வழியாக உடம்பினை எடுத்து வந்தவர்களும் உடன்பிறந்தோரே ஆவர். உடன்பிறப்புகளில் ஒருவர் துன்புறும்போது, மற்றவர் தானும் அத் துன்பத்தில் பங்கு கொள்வது இயற்கை. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். அதுபோல, ஓர் உயிர் துன்பமடைகிறபோது, மற்றோர் உயிர் அதற்காக உருகவேண்டுவதும் இயற்கையே. பலரும் அப்படி உருகுவதில்லை. காரணம், உயிரில் அறியாமை அல்லது அஞ்ஞானம் என்னும் அழுக்குப் படிந்து கிடக்கிறது. அழுக்குப் படிந்த கண்ணாடியில் உருவம் தெரியாது. அதுபோல, அஞ்ஞானம் நிறைந்த உள்ளத்தில் உண்மை அன்பு விளங்காது. உண்மை அறிவு இருந்தால், உண்மை அன்பு இருக்கும்.

    உண்மை எது – பொய் எது,  நல்லது எது – கெட்டது எது, நிலையானது எது – நிலையற்றது எது எனப் பகுத்து அறிந்து, “நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு தெளிந்து உணர்தல்” உண்மை அறிவு என்னும் இயற்கை அறிவு ஆகும். அந்த உண்மை அறிவை விளங்கவொட்டாமல் தடுப்பது பசி என்னும் தீராப் பிணி ஆகும். பசிப்பிணி என்னும் பாவி, ஒருவருடைய குடிப் பிறப்பை அழிக்கும். சிறப்புகளை ஒழிக்கும். கற்றவற்றையெல்லாம் கைவிடச் செய்யும். நாணவேண்டியவைகளுக்கு நாணம் கொள்ளுவது ஒருவனுக்கு அணிகலம். “அணி அன்றோ சான்றோர்க்கு நாணுடைமை” என்றார் திருவள்ளுவ நாயனார். அந்த நாணத்தை இல்லாதவாறு செய்யும்.  மாண்பைச் சீர்குலைக்கும். அப்படிப்பட்ட பசிப்பிணியைத் தீர்த்தவர்களின் புகழைச் சொல்வதற்கு என் நாவுக்கு ஆற்றல் இல்லையாதலால், அது எழாது என்கிறது “மணிமேகலை”


“குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;

நாண்அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி! அது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது”


நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலதேவ நாயனார், உயிர் அருள் மூலம் இறையருளைப் பெறுவதற்கு அருமையான வழியைக் காட்டுகின்றார்.


“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”


இதன் பொருள் ---


    மாடங்களை உடைய இயங்காக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால், அது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குச் சேராமல், படைக்கப்பட்ட இடத்திலேயே இருந்துவிடும். எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால், அது அந்த இறைவனுக்கு ஆதல் மட்டும் அல்லாது, கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்கும் போய்ச் சேர்வதாகும். மிக எளியமுறையில் இறையருளைப் பெறும் வழினையும், அதற்கான உபாயத்தையும் திருமூலதேவ நாயனார் காட்டுகிறார்.


“யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.”  – திருமந்திரம்.


    இறைவனுக்கு ஒரு பச்சிலையைக் கொண்டு வந்து சாத்தலாமே, நமக்குப் பாலைப் பொழிந்து காக்கின்ற பசுவிற்கு ஒருவாய்ப் புல்லாவது கொடுக்கலாமே என்றால், எங்களுக்கு இருக்கும் வேலையில், நாங்கள் பச்சிலையும் புல்லும் தேடிக்கொண்டு வந்து தருவது இயலாத செயல் என்று சொல்லலாம். அது இயலாத செயல் என்றால், பசித்து வருகின்றவர்க்கு ஒரு கைப்பிடி உணவாவது இடலாமே. உண்ணும் வேளையில் இடமுடியவில்லையானாலும், உண்ட பிறகாவது இடலாமே. இதுவும் முடியாது என்றால், இனிய சொல்லாவது சொல்லிப் பிறரை மகிழ்விக்கலாமே. 


    இவ்வாறு எந்த வகையிலும் பிறருக்கு உதவி புரியாமல், ஈட்டிய செல்வத்தைக் கொண்டு, உண்டு, உடுத்து, இடம்பமாக வாழுகின்றவர்களைப் பற்றியும் திருமூலதேவ நாயனார் ஒன்றைச் சொல்லுகிறார். ஈயாத உலோபியை எட்டி மரம் என்றும், அவன் படைத்த செல்வத்தை எட்டிப்பழம் என்றும் சொல்கிறார். 


“எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,

ஒட்டிய நல்அறம் செய்யாதவர் செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்,

பட்டிப் பதகர் பயன் அறியாரே” -- திருமந்திரம்.


    எட்டி மரத்திலும் பழங்கள் பழுக்கின்றன. அவற்றை யார் விரும்பி உண்பார். பழுத்துப் பழுத்து மண்ணில் உதிர வேண்டியதுதான். பொருளை ஈட்டி, உலோபியாக வாழ்ந்து, அருளைச் சேர்க்கும் உபாயத்தை அறிந்துவாழாமல், வட்டிக்கு மேல் வட்டி இட்டுப் பாவிகள் சேர்க்கும் பொருளால் யாருக்குப் பயன்?  அறத்தின் பயனை அறியாத பாவிகள் இவர்கள்.


திருமூலதேவ நாயனார் கூறும் எட்டி மரங்களைப் பற்றி, வள்ளற்பெருமான் வேறுவிதமாகப் பாடி, உலகமக்களுக்கு இம்மை மறுமைக்கு நலம் பயக்கும் நல்லுரை கூறுகின்றார்.


“கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்,

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்,

பட்டோடே பணியோடே திரிகின்றீர், தெருவில்

      பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்,

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர்,

      குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்,

எட்டோடே இரண்டுசேர்த்து எண்ணவும் அறியீர்,

      எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.”


    உலகியல் வாழ்வில் பித்துக் கொண்ட பெருமக்களே! இனத்தோடு கூடி, சாதி ஆசாரக் கட்டுப்பாட்டில் அன்பு கொண்டு, அதுதான் உங்களுக்குப் பெருந்தன்மை எனக் கருதி வாழ்கின்றீர்கள்.  ஆனால், உங்களுக்குக் கண்ணைப் போன்றும், உங்களின் கருத்திலும் உறைகின்ற இறைவனை நினைக்கின்றீர் இல்லை.  பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்கள். (இவை யாவும் இம்மை மறுமைக்குத் துணை புரிவன அல்ல) தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்கள், நீங்களும் கோலம் வந்துகொண்டு இருக்கின்றீர்கள். நற்குணங்கள் உடைய பெரியோர், நல்ல கருத்துக்களோடு கூறும் நல்ல அறிவுரைகளை நினைக்கின்றீர்கள் இல்லை.  எட்டோடு இரண்டு சேர்த்தால் பத்து என்பதும், அது இறைவன்பால் கொள்ளுகின்ற பற்று என்பதும் தெரியாதவர்களாகிய நீங்கள், எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள்?


“வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்,

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்,

பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கின்றீர், வயிற்றுப்

     பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டிஉள் இருந்தீர்,

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்,

     பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்,

எட்டிபோல் வாழ்கின்றீர், கொட்டிபோல் கிளைத்தீர்,

     எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.”


     உலக வாழ்வில் பித்து மிகுந்து உறையும் பெருமக்களே! நீங்கள் பெற்ற பணத்தைப் பெருக்குவதற்காக, வட்டி மேல் வட்டி வாங்குகின்ற நெறியில் நிற்கின்றீர்கள். இறைவனை அடையும் வட்டியைப் (வழியைப்) பெருக்கிக் கொள்கின்ற வழியை அறியாதவர்களாய் இருக்கின்றீர்கள். பெட்டி மேல் பெட்டிகளை வைத்து அடுக்கிப் பயன் கொள்ளும் வழியைத் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள். வயிற்றுப் பெட்டியை நிரப்பிக் கொண்டு அதனோடு சேர்ந்து மகிழ்ந்து இருக்கின்றீர்கள். அதே சமயத்தில் உணவு இல்லாமையால் பட்டினி கிடக்கின்றவர்களைக் கண்ணால் பார்க்கவும் விரும்புகின்றீர்கள் இல்லை. பழங்கஞ்சியையாவது கொடுத்து, அவர்களது பசித் துன்பத்தைத் தீர்க்க எண்ணுகின்றீர்கள் இல்லை.  தொட்ட இடம் எல்லாம் கசக்கும் இயல்பினை உடைய எட்டி மரம் போல் வாழ்ந்துகொண்டு, நீரில் கிளை கிளையாய்த் தழைத்து வளரும் குட்டிச் செடி போல், மக்களையும் சுற்றத்தையும் கொண்டு வாழ்கின்றீர்கள்.  இறுதி நாளில் எதனைத் துணைக் கொண்டு உய்வீர்கள்?


    பைத்தியக்காரர்களே!  பொன், பொருளை, பெண் என்னும் மூவாசை கொண்டு இன்னும் எவ்வளவு சேர்த்தால் மனநிறைவு கொள்வீர்கள்?  பொருளை அருளாக மாற்றிக் கொள்ளும் வழியை அறியாமல் இன்னும் எவ்வளவு காலம் இப்படியே வாழ்ந்து மடியப் போகிறீர்கள்? “ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் திருக்குறளைக் கற்காதவர்களா நீங்கள்? கற்று எழுதாதவர்களா நீங்கள்? மேடையில் முழங்காதவர்களா நீங்கள்? கற்றவர் சொல்லக் கேட்காதவர்களா நீங்கள்? என்று  அருளாளர்கள் கேட்கின்றார்கள். இதை நாம் யாரிடமும் கேட்டுவிட முடியாது. காரணம், நம்மிடமும் இதற்கு விடை இல்லை. 


No comments:

053. சுற்றம் தழால் - 10 உழைப் பிரிந்து

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "தன்னிடத்தில் இருந்து க...