பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உற்பாதப் பூதக் காயத்தே (பொது)


முருகா! 

மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


உற்பா தப்பூ தக்கா யத்தே

     யொத்தோ டித்தத் ...... தியல்காலை


உட்பூ ரித்தே சற்றே சற்றே

     யுக்கா ரித்தற் ...... புதனேரும்


அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ

     லப்பா வித்துத் ...... திரிவேனுக்


கப்பா சத்தா லெட்டா அப்பா

     லைப்போ தத்தைப் ...... புரிவாயே


பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா

     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்


புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்

     பொட்டா கக்குத் ...... தியவேலா


முற்பா டப்பா டற்றா ருக்கோர்

     முட்கா டற்கப் ...... பொருளீவாய்


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உற்பாதப் பூதக் காயத்தே

     ஒத்து ஓடித் தத்து, ...... இயல் காலை


உள் பூரித்தே, சற்றே, சற்றே,

     உக்காரித்து அற் ...... புதன் நெரும்


அற்பாய் இல் தாய், நிற்பாரைப் போ-

     லப் பாவித்துத் ...... திரிவேனுக்கு,


அப் பாசத்தால் எட்டா அப்பா-

     லைப் போதத்தைப் ...... புரிவாயே.


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்கா-

     கப் போய் முட்டிக் ...... கிரிசாடி,


புக்கு ஆழிச் சூழ் கிட்டாகிச் சூர்

     பொட்டாகக் குத் ...... திய வேலா!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஒர்

     முள் காடு அற்கப் ...... பொருள் ஈவாய்!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக் கிரி சாடி --- அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, 


புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா ---கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!


        முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        சுத்தா --- தூயவரே!


        முத்தா --- பற்று அற்றவரே!


        முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


உற்பாதம் பூதக் காயத்தே ஒத்து --- பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து,


        ஓடி --- பொருளை ஒடித் தேடி வைத்து,


        தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, 


அற்புதன் நேரும் அற்பாய் --- கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு,


        இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு, 


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---அந்தப் பாசங்களால் எட்ட முடியாது, அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


பொழிப்புரை


        அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்துக் கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தி நிலைக்கு அதிபரே!


        ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        தூயவரே!


        பற்று அற்றவரே!


        உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து, பொருளை ஒடித் தேடி வைத்து, மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு, இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு,  அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல், அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


விரிவுரை


உற்பாதம் பூதக் காயத்தே --- 


உற்பாதம் – கொடுமை, தீ நிமித்தம், பின்வரும் தீமைகளை முன் அறிவிக்கும் குறி.

பூதக் காயம் – ஐந்து பூதங்களின் கூட்டுறவால் உண்டானது இந்த உடம்பு.

ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்

          ஆகின்ற ஆக்கை, நீர் மேல்

அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்

          அறியாத காலம் எல்லாம்

புந்திமகிழுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே

          போந்த நெறி என்று இருந்தேன்,

பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை

          போனவழி தெரியவில்லை..         --- தாயுமானார்.


“இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி

உருவம் அலால், உடல் ஒன்று எனல் ஆமே?” -- திருமந்திரம்.

    சோற்றின் சத்து, இரத்தம், மாமிசம், தோல், கொழுப்பு, பொருந்திய எலும்பு, நிணம், மூளை, பரவிய இந்திரியம் ஆகிய இவற்றின் காரியத்தினுல் அமைந்தது. உடம்பின் உருவம் இவற்றைத் தவிர்த்து வேறு என்அ கூறமுடியுமோ? முடியாது.  நிலையாய் இராமல் நிலை அழிந்து ஒழிந்து போவன ஆகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாகிய பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும் என்கின்றார் திருமூல நாயனார்.

    இவ்வாறு பஞ்சபூதங்களின் கூட்டால் ஆன உடம்பில் பொருந்தி இருப்பது உயிர்.  அந்த உயிர் அறிவு விளக்கம் பெறுவதற்காக இறைவன் தனது பெருங்கருணையால் வைத்தவையே அந்தக் கரணங்கள் என்னும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை ஆகும்.

    இந்த உடம்பு “வேற்று விகார விடக்கு உடம்பு” என்கிறார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பு ஆன்மாவின் வேறு. இந்த உட்முபே ஆன்மா அல்ல. ஆன்மா குடியிருப்பதற்கு இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது. எனவே, “வேற்று உடம்பு”. இந்த உடம்பு தோன்றியபோது இருந்தபடியே இராது. மாற்றத்தை அடைந்துகொண்டே இருக்கும். எனவே, இதை “விகார உடம்பு” என்றார். விடக்கு – ஊன். இது ஊன் உடம்பு. இந்த உடம்பு விகாரம் அடைந்து அடைந்து பின்னர் அழியக் கூடியது. இந்த உற்பாதத்தை உடம்பில் உண்டாகும் விகாரங்கள் அறிவிக்கும்.


தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- 

தத்து – சாதகத்தின்படி நேரும் ஆபத்து, மனக்கவலை.

பூரித்தல் - நிறைவு அடைதல். களித்தல்.

    ஒருகால் உள்ள நிறைவும், பூரிப்பும், ஒருகால் மனக்கவலையும் நிறைந்ததே இந்த வாழ்க்கை ஆகும். சற்றே சற்றே பூரிக்கும் சற்றே சற்றே உக்காரிக்கும்.  இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளைநிலமாகவும் உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டும். முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.


“வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,

புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,

மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    

பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் யாக்கை இது என உணர்ந்து         

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்.”



“சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர்

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி

          சற்று ஏறப் பார்த்து,சிலபணி ...... விடை ஏவி,

 சில் தாபத்து ஆக்கைப் பொருள்கொடு

     பித்துஏறி,கூப்பிட்ட அவர் பரிசு

          எட்டாமல்,தூர்த்தத்து அலைபடு ...... சிறுகாலை,

 

உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு

     பற்று ஆயப் பூட்டுக் கயிறுகொடு,

          உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு ...... தடுமாறி,

 உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி,

     காய் அத் தீப் பட்டு எரி உடல்

          உக்கேன், மெய்க் காட்டைத் தவிர்வதும் ......ஒருநாளே?”   --திருப்புகழ்.



அற்புதன் நேரும் அற்பாய் --- 

அற்புதன் – இறைவன். “அற்புதன் காண்க, அநேகன் காண்க” என்கிறது மணிவாசகம்.

அற்பு – அன்பு. அன்பு என்பது உயிருக்கு உள்ள பண்பு. “அன்பின் வழியது உயிர்நிலை” என்பது பொய்யாமொழி.


இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- 

இல் - இல்லறம்.

தாய் - பொருந்தி இருத்தல்.

உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல், அன்பு உடையவனைப் போலப் பாவித்து, இல்லறத்தில் பொருந்தி இருத்தல் கூடாது. தன்னைச் சார்ந்தவர்களிடத்திலேயே அன்பைக் காட்டாத வன்மனம் படைத்தவன், இறைவனிடத்து அன்பைக் காட்டுவது பாவனையாகத் தான் இருக்க முடியும்.


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---

பாசம் – ஆசை, அன்பு, கயிறு, தளை, மும்மலம், ஆணவமலம், பற்று. 

பாசமாகிய பற்று நம்மிடத்தே குடிகொண்டு உள்ளது. அந்தப் பாசமாகிய பற்றை அறுக்கத் துணை புரிவது இறைவன் திருவருளே. “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்பது மணிவாசகம்.

உண்மை அறிவு என்னும் மெய்யறிவு விளங்கினால், அப்பாலைக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அடையலாம். பாச அறிவினால் அடைய முடியாது. அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அறியும் உண்மை அறிவைப் “போதம்” என்றார். அதனை இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து அருள்புரிய வேண்டுகிறார்.


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- 

இந்த வரலாறு பொய்யாமொழிப் புலவருக்கு வேடன் வடிவில் வந்து முருகப் பெருமான் திருவருள் புரிந்தததைக் குறிக்கும்.

பொய்யாமொழிப் புலவர் வரலாறு 

      சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருந்தார்.  அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து பொய்யாமொழிப் புலவர் தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.

       பொய்யாமொழிப் புலவர்  தொண்டை மண்டலத்தில் சைவவேளாளர் குடியில் தோன்றியவர். இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியரிடம் கல்வி பயின்று வந்தார். காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாடல்களைப் புனையும் திறனும் கைவரப் பெற்றார்.  

      ஒருநாள் முருகப் பெருமான் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர் "கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ"  என்று மறுத்தார். வேற்று உருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார். பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்று வர எண்ணி, மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. கல்லும் வேலமுள்ளும் படர்ந்த கொடிய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக சென்று கொண்டிருந்தார். முருகப் பெருமான் அங்கே ஒரு  வேட்டுவச் சிறுவன் போல் உருவங்கொண்டு அவர் முன் தோன்றி, ‘இவ்வழியாக இக்காட்டில் நீர் செல்வது கூடாது,‘ எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்றுஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்'  என்று கருதி அஞ்சி நின்றார் பொய்யாமொழிப் புலவர். அப்போது, ‘நீர் யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன்  "உமக்குப் பாடத் தெரியுமோ?" என்று வினவினார் வேடனாக வந்த முருகவேள். "தெரியும்" என்றார் புலவர்.   முருகவேடன்,  "என் மீது ஒரு பாடல் பாடுக"  என்று கூறினார். புலவர் உன் பெயர் யாது எனக் கேட்டார். அப்போது முன், "கோழியைப் பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனோ"  என்று புலவர் மொழிந்ததை நினைவில் கொண்டு முருகவேள், "என் பெயர் முட்டை"  என்றார்.  இந்தப் பாலையைப் சிறப்பித்து “நல் தாய் இரங்கல்” என்ற துறையாக, என் பேர் முட்டை, என் பேரையும் அமைத்துப் பாடுக என்றார் வேடனாக வந்த வேலவர். அப்போது புலவர்,

 

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே --- மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறுஆய தெவ்வர்போம்

கானவேல் முள் தைக்குங் காடு"


என்னும் பாடலைப் பாடினார் பொய்யாமொழிப் புலவர்.

 

     இப் பாடலைக் கேட்ட முருகவேடன்,   "இச் செய்யுளில் பொருள் குற்றம் உள்ளது. அதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேலமுட்கள் வெந்து எரிந்து  போகாமல் கிடப்பது எப்படி?" என்று நகைத்தார். "வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்க இயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடலைப் புலவர் பாடுவரோ?  நான் பாடுகிறேன். கேட்டிடுக" என்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேம்என்றும் வீழின்

எழுந்து சுடர்சுடும்என்று ஏங்கிச் --- செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்"

 

என்னும் வெண்பாவைப் பாடினார்.  

 

      அப்பால் "நீர் முன் குஞ்சைப் பாடேன் என்று கூறிய வாயால்  இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே"  என்று கூறினார். அப்போது புலவர்,  வேட உருவில் வந்துள்ளது  கந்தக் கடவுளே எனத் துணிந்து, தமது பிழையைப்  பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலத்தைக் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.

 

“முற்பட்ட முரட்டுப் புலவனை

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே”     --- (பத்தித்தரள) திருப்புகழ்.

                                                                              

"பொய்யா மொழிப்புலவர் மதுரையில் சங்கம்

     புரக்கா எழுநாள்,மறவனாய்ப்

புறவுற அணைத்து, எனது பெயர் முட்டை பாடுஎனப்

     பொன்போலும் என்றுபாட,

வெய்யான பாலைக்கு இதுஏலாது,நம்பெயர்

     விளம்புஎன விளம்ப, அவர்மேல்

விழுந்த துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்

     வேல்கொடுத்து பொறித்த சதுரா”            --- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.


கருத்துரை


முருகா! மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


No comments:

பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...