“அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்து,உடலம் கோடாமுன், - நெஞ்சமே!
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.”
இதன் பொருள் ---
அஞ்சனம் சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய் - மைதீட்டிய கண்களை உடைய பெண்கள் அருவருக்கும் அந்த நிலையில், குஞ்சி வெளுத்து - மயிர் நரைத்து; உடலம் கோடாமுன் - உடல் வளைந்துபடா முன்னமே; போய் காடு கூட – சுடுகாடு போய்க் கூடும் நிலை வருதலால், புலம்பாது – அந்நிலையை எண்ணி மனக் கலக்கம் கொள்ளாமல், பூம்புகார்ச் சாய்க்காடு சார்ந்து கைதொழு நீ – பூம்புகார் என்னும் நகரை அடுத்து உள்ள திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளைச் சார்ந்து கைதொழுது நீ வாழ்வாயாக.
விளக்கம் ---
அஞ்சனம் – மை. அஞ்சனம் சேர் கண்ணார் – மை தீட்டிய கண்களை உடைய பெண்கள். மனைவி முதலானவர்களைக் குறிக்கும். நோயால் வருந்தி நொடிந்து கொண்டு இருக்கும்போதே அன்பாக இருந்த உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அன்னியர் போல் ஆகிவிடுவார்கள். உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வயது முதிர்ந்தால் தலைமுடி நரைத்துப் போகும். (குஞ்சி – தலைமுடி) தோல் திரங்கிப் போகும். நாடி நரம்புகள் எல்லாம் ஒடுங்கி, பிறரை நாடியே வாழவேண்டும் என்னும் நிலை வரும்போது, எல்லோரும் வெறுக்கத்தான் செய்வார்கள். தனியாகவும், ஒன்று கூடியும் பழித்துப் பேசுவார்கள். உடல் கோடுதல் – கூன் விழுதல்.
"தமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே” --- திருப்புகழ்.
"மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக
மகளிரும் நகைக்க, தாதை ...... தமரோடும்
மனமது சலிப்ப, நாயன் உளம்அது சலிப்ப, யாரும்
வசைமொழி பிதற்றி, நாளும் ...... அடியேனை
அனைவரும் இழிப்ப, நாடு மனஇருள் மிகுத்து, நாடின்
அகம்அதை எடுத்த சேமம் ...... இதுவோ? என்று
அடியனும் நினைத்து, நாளும் உடல்உயிர் விடுத்த போதும்,
அணுகி முன் அளித்த பாதம் ...... அருள்வாயே.: --- திருப்புகழ்.
"இல்லும் இளையோரும் மெல்ல அயலாக,
வல் எருமை மாயச் ...... சமனாரும்
எள்ளி, எனது ஆவி கொள்ளை கொளும் நாளில்,
உய்ய ஒரு நீ பொன் ...... கழல்தாராய்." --- திருப்புகழ்.
"மனைவிதாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத் தானை
நினையுமா வல்லீர் ஆகில், உய்யலாம் நெஞ்சி னீரே." --- அப்பர்.
திருச்சாய்க்காடு – திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டுப் பாடி அருளிய திருத்தலம். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு அடுத்து கி.மீ. தொலைவில் உள்ளது.
சாய் என்பதற்குக் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் திருச் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் ஆறு திருத்தலங்களில் திருசாய்க்காடும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.
கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் அவதரித்து முக்தி அடைந்த திருத்தலம். “இல்லையே என்னாத இயற்பகை” என்று சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தில் வைத்துப் போற்றி உள்ளார். இவரது அன்பை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் "உமது திருத்தொண்டின் திறத்தைக் கேள்வியுற்று, ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அளிக்க, நீர் இசைவீர் ஆயின், அதனை இன்னது என்று சொல்லுவோம்" என்றார். அன்பில் சிறந்த நாயனார், "எப் பொருளாயினும் ஆக, அது என்பால் இருப்பின், அது அடியவர் உடைமை. அதை அருளிச் செய்க" என்றார். வேதியர், முன்பின் சிந்தியாது, "உமது மனைவியை வேண்டி வந்தோம்" என்றார். இயற்பகையார், "அடிகள் என்னிடம் உள்ள பொருளையே நாடியது எனது புண்ணியப் பயன்" என்று அகமகிழ்ந்து, உள்ளே விரைந்து எய்தி, இல்லக் கிழத்தியாருக்கு அடிகள் விருப்பத்தையும் தமது கருத்தையும் தெரிவித்தார். மனைவியார் சிறிது மனம் கலங்கி, உடனை தெளிந்து, நாயனார் கருத்துக்கு இணங்கி அவரைத் தொழுதார். நாயனாரும் அவரை வணங்கினார். இயற்பகையாரும் தன் மனைவியை வேதியருடன் அனுப்பி வைத்தார். "அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்" என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், "நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்குக் காவலாக வ வேண்டும்" என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவரையும் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், "நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"' என்றார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார்.
சிவபெருமான், "இவன் மனைவியை விட்டுவிட்டுத் திரும்பியும் பாராமல் செல்கின்றான். இவனுடைய அன்பின் நிலை என்னே, என்னே" என்று வியந்து, "இயற்பகை முனிவா ஓலம், ஓலம், இவ்விடம் விரைந்து வருக" என்று ஓலமிட்டார். அந்த ஓலத்தைக் கேட்ட நாயனார், "வந்தேன், வந்தேன், இன்னும் துன்பம் செய்பவர்கள் இருக்கின்றார்களா, அவர்களைத் தொலைத்து விடுகிறேன்" என்று முழங்கிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். வந்தவர் மறையவரைக் காணவில்லை, மனைவியை மட்டுமே கண்டார். அந் நிலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் விடைமேல் காட்சி தந்து, "அன்பனே, உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ்வைத் தந்தது. நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக் கடவாய்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். நாயனார் விழுந்து, விழுந்து, வணங்கி, வணங்கி, வாழ்த்தி, வாழ்த்தி, ஆனந்தக் கூத்து ஆடினார். இயற்பகை நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சிவலோகம் எய்தி, இன்ப வாழ்வைப் பெற்றனர். இறந்துபட்ட உறவினர்களும் விண்ணுலகை அடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தார்கள்.
இறைவன் திருவடியைச் சரண் புகுந்தோர் பெறும் பேறு குறித்து, இத் திருத்தலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடி உள்ளார்.
“மண்புகார், வான்புகுவர், மனம்இளையார், பசியாலும்
கண்புகார், பிணிஅறியார், கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் எனவேண்டா, வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டுஎம் தலைவன்தாள் சார்ந்தாரே.”
இதன் பொருள் ---
வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மை பொருந்திய பூம்புகாரில் விளங்கும் திருச்சாய்க்காட்டுள் எழுந்தருளிய எமது தலைவரின் திருவடிகளைச் சார்ந்து வழிபாடு செய்து, அவன் திருப்புகழைக் கற்றவரும் கேட்டவரும் நில உலகில் வந்து பிறவார். பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வு அடையமாட்டார்கள். பசியாலும் துன்பம் அடையார். நோய் அற்று வாழ்வார்கள்.
அப்படிப்பட்ட பெருவாழ்வை நமக்கு அருளுகின்ற பெருமானை நாளும் நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகின்றார். நாம் வாழ்கின்ற நாள்கள் இவ்வளவு என்றும், எப்போது சாகப் போகின்றோம் என்பதும் யாரும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று. எனவே, உயிர் உள்ளபோதை நாளும் இறைவனை வழபிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். இந்த இருபாடல்களும் நாளும் ஓதவேண்டியவை என்பதை அறிக.
“நீ நாளும், நல்நெஞ்சே! நினைகண்டாய், யார்அறிவார்
சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூநாளும் தலைசுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,
நாநாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.”
இதன் பொருள் –
நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் இறைவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்? ஆதலின், திருச்சாய்க்காட்டை அடைந்து அங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும், செவிகளால் அவன் பொருள்சேர் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரைக் கூறி வழிபட்டும் வந்தால் நல்வினைப்பயன் பெறலாம். (நாளும் வழிபட்டால், நாளும் நல்வினைப்பயனைப் பெறலாம். இருப்பும், இறப்பும் அறியாமையால், இருக்கும்போதே சிவபுண்ணியத்தைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பு)
No comments:
Post a Comment