105. இல்லது வாராது - உள்ளது போகாது

 


“வல்லமையால் முடிவதுண்டோ? தலைகீழாய்

     நின்றாலும் வருவ துண்டோ?

அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்

     தன்செயலால் ஆவதுண்டோ?

புல்லறிவால் மயங்காமல், தண்டலையார்

     அடிபணிந்து, புத்தி உண்டாய்,

இல்லது வாராது! நமக் குள்ளதுபோ

     காதெனவே இருக்க லாமே.”


இதன் பொருள் ---

        வல்லமையால் முடிவது உண்டோ - நமது ஆற்றலாலே எந்த செயலும் முடியுமா? தலைகீழாய் நின்றாலும் வருவது உண்டோ - எவ்வளவு முயன்றாலும் நமக்கு வாராதது வருமா?, அல்லது - மேலும், அவன் செயலே அல்லாமல் தன் செயலால் ஆவது உண்டோ - இறைவன் ஆணைப்படியே நடக்குமன்றி ஒருவன் முயற்சியால் மட்டும் ஏதாவது முற்றுப் பெறுமா? (ஆகையால்), புல்லறிவால் மயங்காமல் - சிற்றறிவினாலே சிந்தை கலங்காமல், தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, புத்தி உண்டாய் – நல்லறிவு உண்டாகப் பெற்று, நமக்கு இல்லது வாராது - நமக்கு (ஊழினாலே) வரத் தகாதது கிடைக்காது, உள்ளது போகாது - (ஊழினாலே) வரக் கூடியது வீணாகாது, என இருக்கலாம் - என்று முயற்சியுடன் மட்டும் இருத்தல் நலம்.


    ‘ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று - சூழினும் தான்முந் துறும்' என்ற திருவள்ளுவ நாயனார், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' என்றும் அருளிச் செய்துள்ளதால், முயற்சியை வலியுறுத்திக் கூறப்பட்டது. ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதனாலே பயனை எதிர்பாராமல் முயற்சியைச் செய்க என்பதே கருத்தாகக் கொள்ளல் வேண்டும். ‘இல்லாதது வராது உள்ளது போகாது' என்பது சத்காரிய வாதம். 

இக் கருத்து திருவள்ளுவ நாயனாரால் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. திருக்குறளில் அறுத்துப்பாலில் ஊழ் என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஊழ் வசத்தால் தமக்கு உரியவை அல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாது போகும். ஊழ்வசத்தால் தமது உடைமையாக வேண்டிய பொருள்களை வெளியில் கொண்டு போய்ப் போட்டாலும், அவை தம்மை விட்டுப் போகமாட்டா" என்கின்றார் நாயனார். அனுபவிக்கும் ஊழ் உள்ளவன் பொருளைக் காப்பாற்ற வேண்டுவது இல்லை, அது அவனை விட்டு நீங்காமல் இருக்கும். அனுபவிக்கும் ஊழ் இல்லாதவன், எவ்வளவுதான் வருந்திக் காத்தாலும், பொருளானது அனுபவிப்பதற்கு இல்லாமல் போய்விடும்.

“பரியினும் ஆகாவாம் பால் அல்ல, உய்த்துச்

சொரியினும் போகா தம.” -- திருக்குறள்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

“வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண் ஆக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.” --- நல்வழி.

இதன் பொருள்  ---

ஊழால் வரக் கூடாதவைகள், பரிந்து அழைப்பினும் வாராவாம். ஊழால் வரக் கூடியவை, போயிடுங்கள் என வெறுப்பினும், போகாவாம். இவ்வுண்மை அறியாமல் இருந்து ஏக்கமுற்று, மனம் புண்ணாகும்படி அவற்றைத் தாம் நெடுந்தூரம் சிந்தித்து, மாண்டு போவதே மனிதர் தொழிலாக உள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கது அன்று.

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினை உலந்தக் கால். “ --- நாலடியார்.

இதன் பொருள் ---

        பொருளானது, பிறர்க்குக் கொடுத்துத் தானும்  நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலும்மேலும் திரளும், நல்வினை முடிந்துவிட்டபோது, அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும்,  இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.


“வளம்பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் ;

விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்

கார்எனச் செய்தாரும் இல்.” ---  நாலடியார்.

இதன் பொருள்  ---

செழுமையாக வாழ விரும்பாதவர் உலகில் ஒருவரும் இல்லை. ஆனால் இன்ப நுகர்வு என்பது அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளது.  விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல.


“ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது.” ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

        மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தரும் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே,  மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாது ஒழிதல் இல்லை. (இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும் என்பது கருத்து)


“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்,

போகும் பொறியார் புரிவும் பயன் இன்றே,

ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்

ஆகாதார்க்கு ஆகுவது இல். ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

உயர்ச்சியை உடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்து எய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு, செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வம் போக்கும் போகூழ் வந்து எய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை.  எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும், செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவது ஒன்றில்லை.


“கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேல் சென்றதனால் - விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது." ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகால் சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டு வந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாது ஒழியினும், அடைதற்கு உரியவாய் நின்ற நன்மைகள் ஒருவனை அடையாது நிற்றல் இல்லை.

கழுமலம் : இது சோழநாட்டு உள்ளது ஓர் ஊர். கருவூர் : இது சேரநாட்டு உள்ளதோர் ஊர். இவ்விரண்டும் வெகு தொலைவில் இருந்தாலும், ஊழ் கருவூரில் உள்ளவனை அரசனாக்கியது. 

கரிகாலன் நெடுந்தொலைவின்கண் இருந்து விரும்பாது இருப்பினும் ஊழ் விழுமிய பயனை அடைவித்தது. சீகாழியை ஆட்சிசெய்தான் இறந்து படவே, அவன் வழியில் யாரும் அவ்வரசாட்சியை ஏற்க இன்மையால் அமைச்சர்கள் பட்டத்து யானையை விட்டு அவ்யானை யாரைக் கொண்டு வருகின்றதோ அவனுக்கே முடிசூட்டுவது என்று உறுதிசெய்து யானையை விட்டனர். அவ் யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொண்டு வந்து முடிசூடுமாறு செய்தது என்பதாம்.


'ஆகுவது ஆகும், காலத்து அழிவதும், அழிந்து சிந்திப்

போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 

                            ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம்.

 இதன் பொருள் ---

எக்காலத்தும் அழியாது வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது  ஆகியே  தீரும். அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும்.  அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து  போயே தீரும். குற்றமற அதை உணர்ந்து தெளிந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யாவர் உலகில் உளர்? துன்பப்படாமல் எம்மைக் குறித்து இரங்கலையாய்ச் செல்வாய்.

நடப்பதை ஏற்கும் பக்குவம் பெற்ற மனிதனாக கும்பகருணன் விளங்குகிறான். நடைமுறை உலகில் வாழ்பவர்க்கு இத்தகைய மனநிலை துன்ப  நீக்கத்துக்கு உறுதுணையாக அமையும் என்பது குறிக்கத்தக்கது. 


No comments:

45. ஆபத்து வரும்போது செல்வமும் தொலையும்

“ஆபத்து வந்தால் அரும்பொருள் தான்வேண்டுமே, ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால்! - ஆபத்து வந்தால், அவளும் மருவாமல் எப்பொருளும் அந்தோ உடன்போம் அற...