திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியது





திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய வரலாறு
                                                                 -----

ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் நெருப்புப் பிழம்பாய் காட்சி அளித்தார். நானே கடவுள்நானே கடவுள்என்று வாதுப் போர் புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச் சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

"பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்
பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ"         ---  திருவாசகம்.

திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

பிரமனோ, கல்வியில் மிகுந்தவன் அல்லவா? அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இசையவில்லை. காரணம் கல்விச் செருக்கு. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதாக  பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,
முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே"    --- திருமந்திரம்.

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம், அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்தார்.  பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், இருவரின் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார்.

திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு....

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     இறைவன் திருவடி - தாமரை. திருமுடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய கலைவாணிக்கு நாயகன். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணமுடியும். "பத்தியால் யான் உனைப் பலகாலும் பற்றியே" என்றார் அருணகிரிநாதர்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தில் தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து". "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணகிரிநாதர்.

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலையினை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் --- வாக்கு.  திருமால் --- மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான்.

(8)   பிரமன் --- நினைப்பு. திருமால் --- மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே” என்றார் அருணகிரிநாதர்.


இறுதியாக ஒரு கருத்து ---- திருமால் அளவுக்கு செல்வத்தில் மிகுந்தவர் நம்மில் யாரும் இல்லை. பிரமன் அளவுக்கு வேதத்தில் வல்லவரும் நம்மில் யாரும் இல்லை. அப்படி இருக்க, நம்மால் எப்படி இறைவனைக் காணமுடியும்?

செல்வம்,கல்வி, அதிகாரம் ஆகிய இன்ன பிறவற்றால் உண்டாகும் செருக்கை விட்டுப் பணிவுடன், கடமையைச் செவ்வனே செய்து வந்தால் காணலாம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...