விநாயகர் அருள்




வருகின்றது விநாயகர் சதுர்த்தி
---------

விநாயகர் திருமேனியை வைத்து, 21 மலர்களால் அருச்சிக்கவேண்டும். அவருக்கு உகந்த பலகாரங்களை வைத்து நிவேதிக்கவேண்டும் என்றெல்லாம் பெரியோர்கள் சில முறைகளை வகுத்து வைத்தார்கள்.

"இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன், நெய்,
     எள்,பொரி, அவல், துவரை ...... இளநீர், வண்டு
எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி, பிட்டு, வெள்ள-
     ரிப்பழம், இடிப் பல்வகை, ...... தனிமூலம்,
மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக்கொள், ஒரு
     விக்கின சமர்த்தன் எனும் அருள் ஆழி"

என்று, அருணகிரிநாதர் தாம் பாடியருளிய திருப்புகழில், விநாயகப் பெருமானுக்கு உகந்த பொருள்களை வகுத்துக் காட்டினார்...

இதன் பொருள் வருமாறு ---

இக்கு --- கரும்பையும்,

அவரை --- அவரையையும்,

நல் கனிகள் --- நல்ல பழ வர்க்கங்களையும்,

சர்க்கரை --- சர்க்கரையையும்,

பருப்புடன் நெய் --- பருப்போடு நெய்யினையும்,

எள் --- எள்ளையும்,

பொரி --- பொரியையும்,

அவல் --- அவலையும்,

துவரை --- துவரையையும்,

இளநீர் --- இளநீரையும்,

வண்டு எச்சில் --- தேனையும்,

பயறு --- பயறையும்,

அப்ப வகை --- பலவகையான அப்பங்களையும்,

பச்சரிசி --- பச்சரிசியையும்,

பிட்டு --- பிட்டையும்,

வெள்ளரிப் பழம் --- வெள்ளரிப் பழத்தையும்,

இடி பல்வகை --- இடித்துச் செய்கின்ற பலவகையான சிற்றுண்டிகளையும்,

தனி மூலம் --- ஒப்பற்ற கிழங்குகளையும்,

மிக்க அடிசில் --- மிகுந்த அன்னத்தையும்,

கடலை --- கடலையையும்,

பட்சணம் என கொள் --- (அடியார்களால்) அன்புடன் நிவேதிக்கப்படும் இவை முதலான சத்துவ குண ஆகாரங்களை உணவாகக் கொள்ளும்,

ஒரு விக்கின சமர்த்தன் எனும் --- ஒப்பற்றவரும், விக்கினத்தை உண்டு பண்ணவும் நீக்கவும் வல்லவருமாகிய,

அருள் ஆழி --- கிருபா சமுத்திரமே!


இந்த நிவேதனப் பொருள்களை நம்மால் முடிந்த வரையில் தேடிக் கொள்ள முடியும். தேட முடியாதவற்றை, நமது சிந்தையால் நிரப்பிக் கொள்ளவேண்டும். இல்லையே என்ற கவலையோ, வருத்தமோ கொள்ளுதல் அவசியமற்றது. நாம் இப்போது இருக்கின்ற சூழலில் நம்மால் எல்லாவற்றையும் செய்தல் சாத்தியப்படாது.

நாம் உள்ளத்தில் அன்பு வைத்து, பத்தி சிரத்தையுடன் எதைப் படைக்கின்றோமோ, அதை ஏற்று அருள் புரிவான், மூத்தபிள்ளையார் என்று சொல்லப்படும் விக்கின விநாயகப் பெருமான்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...