கும்பகோணம் --- 0874. கெண்டை நேரொத்தவிழி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கெண்டை நேரொத்தவிழி (கும்பகோணம்)

முருகா!
குருவாய் வருவாய்.
மெய்ப்பொருளை உபதேசித்து அருள்வாய்.


தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
     தந்தனா தத்ததன ...... தனதான


கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
     கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங்

கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
     கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும்

மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
     வண்டனா கப்புவியி ...... லுழலாமல்

வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
     மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே

அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
     ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா

அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
     னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக்

கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
     கொந்தியா டத்தலையை ...... யரிவோனே

கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
     கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கெண்டைநேர் ஒத்த விழி மங்கை மோகக் கலவை,
     கெந்த வாசப் புழுகு ...... மணம் நாறும்

கிம்புரி ஈசக் களப கொங்கை யானை, சிறிது
     கிஞ்சு காணப் பெருகி, ...... அடியேனும்

மண்டி மோசக் கலவி கொண்டு, காமித்து, ருகி,
     வண்டன் ஆக, புவியில் ...... உழலாமல்,

வந்து, ஞானப்பொருளில் ஒன்று போதித்து, னது
     மஞ்சு தாளைத் தினமும் ...... அருள்வாயே.

அண்டர் வாழ, பிரபை சண்ட மேருக்கிரி
     இளைந்து வீழப் பொருத ...... கதிர்வேலா!

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி, தவசின்
     அன்பு உளாரைச் சிறையிடு ...... அசுரோரைக்

கொண்டுபோய், வைத்த கழு நெஞ்சில் ஏற, கழுகு
     கொந்தி ஆட, தலையை ...... அரிவோனே!

கொண்டல் சூழ, கழனி சங்கு உலாவிப் பரவு
     கும்பகோணத்தில் உறை ...... பெருமாளே.


பதவுரை

      அண்டர் வாழ --- தேவர்கள் வாழும் பொருட்டு,

     பிரபை சண்ட மேருக் கிரி --- ஒளி வீசும் வலிய மேருமலை,

     இளைந்து வீழப் பொருத கதிர்வேலா --- கலக்குண்டு விழும்படிப் போர் செய்த ஒளி பொருந்திய வேலாயுதரே!

      அஞ்சு வாயில் --- ஐந்து புலன்களும் ஒன்றி நின்று,

     பரனை நெஞ்சில் ஊறி --- பரம்பொருளை நெஞ்சிலே வைத்து வழிபட்டு,

     தவசில் அன்பு உளாரைச் சிறையிடு --- உரிய தவநிலையில் உள்ளத்தில் வைத்துள்ள அன்பு உள்ளம் கொண்ட தேவர்களை சிறையில் அடைத்துத் துன்புறுத்திய

     அசுரோரைக் கொண்டு போய் --- அசுரர்களைக் கொண்டு போய்

     வைத்த கழு நெஞ்சில் ஏற --- நாட்டி வைக்கபட்டுள்ளள கழு ஆனது நெஞ்சில் பாயும்படி ஏற வைத்து,

     கழுகு கொந்தி ஆட --- கழுகுகள் கொந்தித் தின்று விளையாடும்படி

     தலையை அரிவோனே --- அரக்கர்களுடைய தலைகளை அரிந்தவரே!

      கொண்டல் சூழ் அக்கழனி சங்கு உலாவிப் பரவு ---  மேகங்கள் பொழிந்த மழையால் உண்டான நீர் நிலைகள் சூழ்ந்துள்ள வயல்களில், சங்குகள் உலாவிப் பரந்திருக்கும்

     கும்பகோணத்தில் உறை பெருமாளே --- கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      கெண்டை நேர் ஒத்த விழி மங்கை --- கெண்டை மீனுக்கு ஒப்பான கண்களை உடைய விலைமாதர்களின் மீது வைத்த

     மோகக் கலவை கெந்த வாசப் புழுகு மணம் நாறும் --- மோகத்துடன் கலந்து, நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசுகின்,

         யானை கிம்புரி ஈசக் களபம் கொங்கை --- யானையின் தந்தம் போல் உயர்ந்து விளங்கி, சந்தனக் கலவை பூசப்பட்ட கொங்கைகளை,

     சிறிது கிஞ்சு காணப் பெருகி --- சிறிது கண்ட போதே காம உணர்வு பெருகி,

     அடியேனும் மண்டி --- அடியேனும் அவர்களிடம் நெருங்கிச்சென்று,

     மோசக் கலவி கொண்டு --- கேடு தருகின்ற கலவியை மேற்கொண்டு,

     காமித்து உருகி --- காம உணர்வால் மனமானது மிக உருகி,

      வண்டன் ஆகப் புவியில் உழலாமல் --- தீயவனாக அடியேன் இந்தப் பூமியில் உழலாமல் படிக்கு,

     வந்து --- தேவரீர் குருநாதராகத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து,

     ஞானப் பொருளில் ஒன்று போதித்து --- மெய்ஞ்ஞானப் பொருளில் ஒன்றி இருக்கும் நிலையை அடியேனுக்கு உபதேசித்து,

     உனது மஞ்சு தாளைத் தினமும் அருள்வாயே --- உயிர்களை ஆட்கொள்ளும் வல்லமை பொருந்திய திருத்தாள்களை அடியேன் தினமும் துதித்து உய்ந்திடத் திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


         தேவர்கள் வாழும் பொருட்டு, ஒளி வீசும் வலிய மேருமலை ஆனது, இளைத்து விழும்படிப் போர் செய்த ஒளி பொருந்திய வேலாயுதரே!

         ஐந்து புலன்களும் ஒன்றி நின்று, பரம்பொருளை நெஞ்சிலே வைத்து வழிபட்டு, உரிய தவநிலையில் உள்ளத்தில் வைத்துள்ள அன்பு உள்ளம் கொண்ட தேவர்களை சிறையில் அடைத்துத் துன்புறுத்திய அசுரர்களைக் கொண்டு போய், நாட்டி வைக்கபட்டுள்ளள கழு ஆனது நெஞ்சில் பாயும்படி ஏற வைத்து,  கழுகுகள் கொந்தித் தின்று விளையாடும்படி அரக்கர்களுடைய தலைகளை அரிந்தவரே!

         மேகங்கள் பொழிந்த மழையால் உண்டான நீர் நிலைகள் சூழ்ந்துள்ள வயல்களில், சங்குகள் உலாவிப் பரந்திருக்கும் கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         கெண்டை மீனுக்கு ஒப்பான கண்களை உடைய விலைமாதர்களின் மீது வைத்த மோகத்துடன் கலந்து, நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசுகின், யானையின் தந்தம் போல் உயர்ந்து விளங்கி, சந்தனக் கலவை பூசப்பட்ட கொங்கைகளை, சிறிது கண்ட போதே காம உணர்வு பெருகி, அடியேனும் அவர்களிடம் நெருங்கிச்சென்று, கேடு தருகின்ற கலவியை மேற்கொண்டு, காம உணர்வால் மனமானது மிக உருகி, தீயவனாக அடியேன் இந்தப் பூமியில் உழலாமல் படிக்கு, தேவரீர் குருநாதராகத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து, மெய்ஞ்ஞானப் பொருளில் ஒன்றி இருக்கும் நிலையை அடியேனுக்கு உபதேசித்து, உயிர்களை ஆட்கொள்ளும் வல்லமை பொருந்திய தேவரீருடைய திருத்தாள்களை அடியேன் தினமும் துதித்து உய்ந்திடத் திருவருள் புரிவீராக.


விரிவுரை

        
வண்டன் ஆகப் புவியில் உழலாமல் ---

வண்டன் --- தீயவன். பாவி.

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.                --- பட்டினத்தார்.

"வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆர்அழல் போல்ஒளிர்
கண்ட னார் உறையும் கரவீ ரத்துத்
தொண்டர் மேல்துயர் தூரமே".        --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை :தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூர விலகும்.

குறிப்புரை :அடியார்மேல் துயரம் தூரமாம் என்கின்றது. வண்டர் - தீயோர்களாகிய முப்புராதிகள். அழல்போல் ஒளிர் கண்டனார் - விடத்தைப் போல் ஒளிவிடுகின்ற கழுத்தையுடையவர். துயர் தூரமே - துன்பம் தூரவிலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.


ஞானப் பொருளில் ஒன்று போதித்து ---

மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசமாகக் கேட்டால் மட்டும் போதாது.

கேட்ட பொருளில் மனம் ஒன்றி இருத்தல் வேண்டும்.

மஞ்சு தாளைத் தினமும் அருள்வாயே ---

"மைந்து" என்னும் சொல் "மஞ்சு" என வநத்து.

மைந்து --- வல்லமை.

"உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்" என்றார் திருமுருகாற்றுப்படையில் நக்கீர தேவர்.

இறைவன் திருவடியானது, தம்மைச் சார்ந்த அடியார்களைத் தாங்கிக் காத்து அருளும், அழகும் வலிமையும் உள்ள திருவடி ஆகும்.

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி, தவசின் அன்பு
உளாரை ---

கூர்மையான வாள் ஒன்று, துப்புப் பிடிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, அது நெய் பூசப்பட்டு பளபளப்பு ஆக இருக்கின்றது. நெய்யை விரும்பிய நாயானது வாளை நக்கியது. நாயின் வாய் அறுபட்டது. இது நாற்றம் என்னும் உணர்வால் வந்த கேடு.

கொடிய விடமானது பாயசத்திலே கலக்கப்பட்டுள்ளது. அதனை அறியாமல், பாயசத்தைப் பார்த்த மனம் பதைக்கின்றது. நாவிலே சுவை ஊறுகின்றது. பாயசத்தைப் பருகினால் என்ன ஆகும்? தூண்டில் முள்ளில் உள்ள இறைச்சி மீது ஆசை கொண்ட மீன் அழிகின்றது. இது சுவை உணர்வால் வருகின்ற கேடு.

"விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்" என்பது நறுந்தொகை. விலைமகளின் அழகு போலி அழகு. அதில் மயங்கினால் என்ன ஆகும் என்பது, அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழை ஓதினாலே தெற்றென விளங்கும். கானலை நீர் என்று கருதி விரைகின்ற மானின் நிலை போன்றதே. இது பார்வை உணர்வால் வருகின்ற கேடு.

"பூத்து ஆரும் பொய்கைப்புனல் இதுவே எனக் கருதி, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே தீர்த்தாய், திகழ் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற கூத்தா' என்பது மணிவாசகம்.

அசுணப் பறவையானது யாழின் இன்னிசையைக் கேட்டே உயிர் வாழும். பறையின் வல்லோசை கேட்டால் உயிரை விடும். இது ஓசை உணர்வால் வருகின்ற கேடு.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில். யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும், என் பா அரோ. --- கம்பராமாயணம்.

ஆண் யானையைப் பிடிக்க, பெண் யானையை அனுப்புவர்.  பெண் யானையின் பரிசம் விரும்பிய ஆண் யானை கேடு அடையும். இது பரிச உணர்வால் வந்த கேடு.  

சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் எனும் இவைகளை அறிவிக்கும் புலன்கள் ஐந்தாலும் அழிவர் மக்கள்.

இவைகளை அழுந்த உணர்ந்தால் ஆக்கம் அளிக்கும் சிவநெறியில் வேட்கை சிறக்கும். அருள் நூல்களில் ஆர்வம் பிறக்கும். ஆர்வத்திற்குத் தக்க அறிவு உதிக்கும். அதற்கான செயலை நிறைக்கும். அநியாய நெறிகளில் புகுத்தித் தலைவிரி கோலமாக்கிய பழைய மனம், இந்நிலையில் ஆன்மாவில் அடங்கும். உறவும் தொடங்கும். சிவபோகம் ஒன்றையே சிந்திக்கும். வரவரச் சிந்தனை வளரும்.

இந்த ஒழுக்கத்தால் ஆன்மாவிற்கே உரித்தான இச்சை, அறிவு, செயல்களில் அருள் ஒளி சிறிது சிறிதாகப் படரும். அதற்கேற்ப விரிந்த மலஇருள் சிறிது சிறிதாக விலகும்.  உலகியல் உறவு குறையக் குறைய, சமயச் சார்பு பெருகப் பெருக, ஐம்புல வேட்கை படிப்படியாக நொடித்துவிடும்.

 'சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என் றைந்தின்
 வகைதெரிவான் கட்டே உலகு'      --- திருக்குறள்.

 ஐஞ்சு புலனின் வழியறிந் தால்பின்னை
துஞ்சுவ தில்லை உடம்பு.            --- ஔவை குறள்.


அஞ்சும்ஒன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சிஆர வந்திசெய்ய, அஞ்சல்என்னி மன்னும்ஊர்,
பஞ்சிஆரும் மெல்அடிப் பணைத்தகொங்கை நுண்இடை
அஞ்சொலார் அரங்குஎடுக்கும் அம்தண்ஆரூர் என்பதே.
                                    --- திருஞானசம்பந்தர்.

அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
         ஐம்புலனும் அடக்கிஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
         உள்இருக்கும் புராணர்கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
         கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
         மணம்செய்யும் மிழலையாமே.       --- திருஞானசம்பந்தர்.

சிவன்உறையுமு திருத்துறையூர்
     சென்று, ணைந்து, ‘தீவினையால்   
 அவநெறியில் செல்லாமே
     தடுத்து ஆண்டாய். அடியேற்குத்
தவநெறி தந்துஅருள்'ன்று
     தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகும்
     திருப்பதிகம் பாடினார்.               --- பெரியபுராணம்.

தவநெறி --- சிவபூசையில் செல்லும் வழி. புலன் வழிச் செல்லாது மனத்தை ஒன்றுவித்துச் சிவபெருமானை இடைவிடாது நினைத்தலும் பூசித்தலுமே தவநெறி ஆகும்.

புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள,  
அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்தருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன்  திருப்பாதம்,
மலர்கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன்தொண்டர்.
                                             --- பெரியபுராணம்.                  
கும்பகோணத்தில் உறை பெருமாளே ---

லக்கியத்தில் "குடமூக்கு" என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர் --- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் --- மங்களாம்பிகை.
தல மரம் --- வன்னி.

திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் --- சோமேசர் கோயில்.
   
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.


கருத்துரை

முருகா! குருவாய் வருவாய். மெய்ப்பொருளை உபதேசித்து அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...