திருப் பனந்தாள் --- 0865. கொந்தார் மைக்குழல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொந்தார் மைக்குழல் (திருப்பனந்தாள்)

முருகா!
உபதேசப் பொருளை இப்பொழுதே அருள்வாயாக.



தந்தா தத்தன தந்தா தத்தன
     தந்தா தத்தன ...... தனதான


கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
     யென்றே செப்பிய ...... மொழிமாதர்

கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
     னந்தா னித்தரை ...... மலைபோலே

வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
     னந்தா னிப்படி ...... யுழலாமல்

மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
     என்றே யிப்படி ...... அருள்வாயே

இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
     மண்டா நற்றவர் ...... குடியோட

எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
     யென்றே திக்கென ...... வருசூரைப்

பந்தா டித்தலை விண்டோ டக்களம்
     வந்தோ ரைச்சில ...... ரணகாளிப்

பங்கா கத்தரு கந்தா மிக்கப
     னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கொந்து ஆர் மைக்குழல், ந்து ஆர் சர்க்கரை
     என்றே செப்பிய ...... மொழிமாதர்,

கொங்கு ஆர் முத்து வடந்தான் இட்ட
     தனந்தான் இத் தரை ...... மலைபோலே

வந்தே, சுற்றி வளைந்தால், அற்ப
     மனந்தான் இப்படி ...... உழலாமல்,

மங்கா நற்பொருள் இந்தா, அற்புதம்
     என்றே இப்படி ...... அருள்வாயே.

இந்தோடு அக்கதிர் கண்டு ஓடக் கடம்
     மண்டா நல் தவர் ...... குடியோட,

எங்கே அக்கிரி எங்கே இக்கிரி
     என்றே திக்கு என ...... வருசூரைப்

பந்தாடி, தலை விண்டு ஓட, களம்
     வந்தோரைச் சில ...... ரணகாளிப்

பங்காகத் தரு கந்தா! மிக்க
     பனந்தாள் உற்று அருள் ...... பெருமாளே.


பதவுரை

      இந்து ஓ, அக் கதிர் கண்டு ஓட --- சந்திரன் ஓ, அதைக் கண்டு சூரியனும் ஓ,

     கடம் மண்டா நல்தவர் குடி ஓட --- காட்டில் நிறைந்து இருந்த நல்ல தவசிகள் கூட்டத்துடன் அஞ்சி ஓடவும்,

      எங்கே அக்கிரி எங்கே இக்கிரி என்றே --- அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள் எங்கே? எங்கே இந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள் என்று தேடி,

     திக்கென வருசூரை --- திடுக்கிடும்படியாக வந்த சூரபதுமனை

      பந்தாடித் தலை விண்டு ஓட --- பந்தடிப்பது போல அடித்து, தலை அற்றுப் போய்ச் சிதறி விழவும்,

      களம் வந்தோரைச் சில ரண காளி பங்காகத் தரு கந்தா --- போர்க்களத்துக்கு வந்த அசுரர்களைக் கொன்று (அவர்களது உடல்களை) சில ரண தேவதைகளுக்குப் பங்கிட்டுத் தந்த கந்தப் பெருமானே!

      மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே --- சிறந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பெருமையில் மிக்கவரே!

      கொந்து ஆர் மைக் குழல் --- மலர்க்கொத்துகள் நிறைந்துள்ள கரிய கூந்தலையும்,

     இந்து --- சந்திரனை ஒத்த முகத்தையும்,

     ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் --- நிறைந்த சருக்கரை என்று சொல்லும்படியான பேச்சும் உடைய விலைமாதர்களின்,

      கொங்கு ஆர் --- மணம் நிறைந்ததும்,

     முத்து வடம் தான் இட்ட தனம் தான் --- முத்துமாலைகளைப் அணிந்திருந்ததுமான மார்பகமானது,

     இத்தரை மலை போலே வந்தே சுற்றி வளைந்தால் ---
இந்தப் பூமியில் உள்ள மலை போல் உயர்ந்து எதிர் வந்து தோன்றி,  எனது மனத்தைக் கவர்ந்து, சூழ்ந்து பற்றினால்,

      அற்ப மனம் தான் இப்படி உழலாமல் --- அதனால், இந்த ஏழையின் மனமானது இப்படியே நிலைகெட்டுப் போகாமல்,

       மங்கா நற்பொருள் --- அழிவில்லாத சிறந்த உபதேசப் பொருளை,

     இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே ---
அற்புதம் வாய்ந்த இதனைப் பெற்றுக் கொள்வாயாக என்று உபதேசித்து அருள்வாயாக.


பொழிப்புரை

     சந்திரன் ஓ, அதைக் கண்டு சூரியனும் ஓ, காட்டில் நிறைந்து இருந்த நல்ல தவசிகள் கூட்டத்துடன் அஞ்சி ஓடவும், அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள் எங்கே? எங்கே இந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள் என்று தேடி, திடுக்கிடும்படியாக வந்த சூரபதுமனை, பந்தடிப்பது போல அடித்து, தலை அற்றுப் போய்ச் சிதறி விழவும்,  போர்க்களத்துக்கு வந்த அசுரர்களைக் கொன்று, வர்களது உடல்களை, சில ரண தேவதைகளுக்குப் பங்கிட்டுத் தந்த கந்தப் பெருமானே!

         சிறந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பெருமையில் மிக்கவரே!

         மலர்க்கொத்துகள் நிறைந்துள்ள கரிய கூந்தலையும், சந்திரனை ஒத்த முகத்தையும், நிறைந்த சருக்கரை என்று சொல்லும்படியான பேச்சும் உடைய விலைமாதர்களின் மணம் நிறைந்ததும், முத்துமாலைகளைப் அணிந்திருந்ததுமான மார்பகமானது, இந்தப் பூமியில் உள்ள மலை போல் உயர்ந்து எதிர் வந்து தோன்றி,  எனது மனத்தைக் கவர்ந்து, சூழ்ந்து பற்ற,  அதனால், இந்த ஏழையின் மனமானது இப்படியே நிலைகெட்டுப் போகாமல், அழிவில்லாத சிறந்த உபதேசப் பொருளை, அற்புதம் வாய்ந்த இதனைப் பெற்றுக் கொள்வாயாக என்று உபதேசித்து அருள்வாயாக.


விரிவுரை

கொந்து ஆர் மைக் குழல் ---

கொந்து --- பூங்கொத்துக்கள், மலர்க் கொத்துக்கள்,

ஆர் --- நிறைந்,

மைக் குழல் --- கரிய நிறம் உள்ள கூந்தல்,

இந்து ---

இந்து --- சந்திரன். "மதி முகத்தியர்" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளது காண்க.
    
கொங்கு ---

கொங்கு --- மணம். மணப் பொருளக்ளால் ஆன கலவையைப் பெண்கள் தமது மார்பகத்தில் பூசிக் கொள்வார்கள். இது தொய்யில் எழுதுதல் எனப்படும்.

முத்து வடம் தான் இட்ட தனம் தான் இத்தரை மலை போலே வந்தே சுற்றி வளைந்தால் ---

முத்து --- உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவது.

முத்துமாலைகளைத் தமது மார்பில் அணிந்து கொள்வார்கள்.

மலை என்று சொல்லும்படியாகப் பருத்து உள்ள மார்பகங்கள். "மலை முலைச்சியர்" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் அருளியது காண்க.

"பருத் தந்தத்தினைத் தந்திட்டு, இருக்கும் கச்சு அடர்த்து, ந்திப்
பருக்கும் பொன் ப்ரபைக் குன்றத் தன மானார்" என்றும் பிறிதொரு திபுக்கழில் அடிகளார் அருளி உள்ளது அறிக.


அற்ப மனம் தான் இப்படி உழலாமல் ---

அற்பம் --- சிறுமை, கீழ்மை.

இப்படி, படி - உலகம். இந்த உலகத்தில் உழலாமல்.

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய் எனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல்  
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்(து)

ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி, அருள்விளக்கு ஏற்றி,
துன்ப இருளைத் துரந்து, முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து, நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தை"

என்று திருக்கழுமல மும்மணிக் கோவையில் பட்டினத்தடிகள் அருளி உள்ளது போல், கருவுற்ற நாள் முதலாகவே கீழ்மையில் தொடர்ந்து கிடப்பது மனம்.

மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே ---

கங்கா நற்பொருள் --- உயிரை மங்குதல் இல்லாத உயர்நிலையில் வைப்பது உபதேசப் பொருள்.

"உபதேச மந்திரப் பொருள்" என்று அடிகளார் அருளி உள்ளது அறிக.

இப்படி --- இப்பொழுதே.

"துணைச் செம்பொன் பதத்து இன்புற்று, எனக்கு என்று அப் பொருள் தங்கத் தொடுக்கும் சொல் தமிழ்த் தந்து இப்படி ஆள்வாய்" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருளி உள்ளார்.  

மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே ---

திருப் பனந்தாள் என்பது சோழ நாட்டு காவிரி வடகரையில் உள்ள திருத்தலம். கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

இறைவர் : செஞ்சடையப்பர், தாலவனேசுவரர், ஜடாதரர், அருணஜடேசுவரர்.
இறைவியார் : பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேசுவரி.
தல மரம் : பனை.
தீர்த்தம்     : பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை  தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள்.

பனையின் தாளில் (அடியில்) இறைவன் எழுந்தருளி இருத்தலாலும், பனைமரம் தலமரமாதலாலும் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீசுவரம் - தாடகேச்சுரம் என்று பெயர். தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

    தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி இத்திருத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த சுவாமியின் திருமுடியைப் பின்னால் குங்குலிய நாயனார் மாற்றினார்.

இத்தலத்திற்கு தாலவனம் (தாலம் - பனை) என்றும் பெயருண்டு. பிராகாரத்தில் இரண்டு ஆண் பனைமரங்கள் உள்ளன.

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

குமரகுருபர சுவாமிகள் நிறுவிய காசிமடம் இத் திருத்தலத்தில் உள்ளது.

இக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில், மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

கருத்துரை

முருகா! உபதேசப் பொருளை இப்பொழுதே அருள்வாயாக.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...