கும்பகோணம் --- 0873. கறுத்த குஞ்சியும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கறுத்த குஞ்சியும் (கும்பகோணம்)

முருகா!
பங்கப் பிறவி அற அருள்வாய்


தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான


கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
     துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
     கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற்

கலக்க முண்டல மலமுற வெண்டிப்
     பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
     கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ......கொழுமேனி

அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
     பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
     தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி

அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
     பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
     டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ......றிடுவேனோ

புறத்த லம்பொடி படமிக வுங்கட்
     டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
     புகட்ட ரங்கிய விரக துரங்கத் ......        திறல்வீரா

பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
     டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
     புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா

சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
     சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
     தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ......கிரிமேவிச்

செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
     பரிச்சு மந்திடு குமர கடம்பத்
     திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ......   பெருமாளே.


பதம் பிரித்தல்


கறுத்த குஞ்சியும் வெளிறி, எழும் கொத்து
     உருத்த வெண்பலும் அடைய விழுந்து,ள்
     கருத்துடன் திகழ் மதியும் மருண்டு, ...... சுருள்நோயால்

கலக்கம்உண்டு அலம் அலம் உற, வெண்டிப்
     பழுத்து எழும்பிய முதுகு முடங்க,
     கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க, ......கொழுமேனி

அறத் திரங்கி, ஒர் தடி கை நடுங்கப்
     பிடித்து, இடும்பு உறு மனைவியும் நிந்தித்து,
     அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப, ...... சடமாகி

அழுக்மு அடைந்து,டர் படும்உடல், பங்கப்
     பிறப்பு எனும் கடல்அழியல் ஒழிந்திட்டு,
     அடுத்து இரும் திருவடிதனை என்றுஉற் ......றிடுவேனோ?

புறத் தலம் பொடி பட, மிகவும்.கட்டு
     அறப், பெருங்கடல் வயிறு குழம்பப்,
     புகட்டு அரங்கிய விரக துரங்கத் ......      திறல்வீரா!

பொருப்பு உரம் படர் கிழிபட வென்று,ட்டு
     அரக்கர் வன்தலை நெரிய, நெருங்கிப்
     புதைக்கு உறும் தசை குருதிகள் பொங்கப் ....பொரும்வேலா!

சிறுத்த தண்டைய! மதலையொர் அஞ்ச,
     சினத்து மிஞ்சு அரி திரிதரு குன்றத்
     தினைப் புனம் திகழ் குறமகள் கொங்கைக் ......கிரிமேவி,

செருக்கும் நெஞ்சுஉடை முருக! சிகண்டிப்
     பரிச் சுமந்திடு குமர! கடம்ப!
     திருக் குடந்தையில் உறைதரு கந்த! ...... பெருமாளே.


பதவுரை

         புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு அற --- வெளி இடங்கள் எல்லாம் பொடிபட்டு மிகவும் நிலை கலங்கவும்,

         பெரும் கடல் வயிறு குழம்ப --- பெரும் கடலும் அதன் உட்புறமெல்லாம் குழம்பவும்,

         புகட்டு அரங்கிய விரக துரங்கத் திறல் வீரா --- (அசுரர்கள் மீது வேலாயுதத்தை) புகவிட்டு அவர்களைத் தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுள்ள குதிரையாகிய மயிலேறும் வலிமை வாய்ந்த வீரரே!

         பொருப்பு உரம் படர் கிழி பட வென்று --- கிரெளஞ்ச மலையின் வலிமை பிளவுபடும்படியாக வெற்றிகொண்டு,

         அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி --- பகைவரைக் கொன்று அசுரர்களுடைய வலிய தலைகள் நெரிபட்டு அழியுமாறு நெருக்கி,

         புதைக்குறும் தசை குருதிகள் பொங்கப் பொரும் வேலா ---உள்ளடங்கியுள்ள சதைகள், இரத்தம் எல்லாம் மேல் எழும்படியாகப் போர் புரிந்த வேலாயுதரே!

         சிறுத்த தண்டைய --- சிறிய தண்டைகளைத் திருவடிகளில் அணிந்தவரே!

         மதலையொர் அஞ்ச --- சிறு பிள்ளைகள் அஞ்சும்படியா,

       சினத்து மிஞ்சு அரி திரிதரு குன்ற --- சினத்தில் மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளி மலையில்,

         தினைப்புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி --- தினைப்புனத்தில் இருந்த குறமகளாகிய வள்ளிநாயகியின் மலை பொன்ற மார்பகங்களைத் தழுவி,

        செருக்கு நெஞ்சு உடை முருக --- புளகாங்கிதம் கொண்ட மனத்தை உடைய முருகப் பெருமானே!

         சிகண்டி பரி சுமந்திடு குமர --- மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமாரக் கடவுளே!

        கடம்ப --- கடப்ப மலர் மாலை அணிந்தவரே!

         திருக்குடந்தையில் உறைதரு கந்த --- கும்பகோணத்தில் வீற்றிருக்கும் கந்த சுவாமியே!

       பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

         கறுத்த குஞ்சியும் வெளிறி --- கருத்த மயிரும் வெளுத்துப் போய்,

         எழும் கொத்து உருத்த வெண் பல்லும் அடைய விழுந்து --- எழுந்து வரிசையாக உருவு கொண்டிருந்த வெண்மை நிறமான பற்களும் எல்லாம் விழுந்து போய்,

         உள் கருத்துடன் திகழ் மதியும் மருண்டு --- உள்ளே கருத்துக்களுடன் விளங்கியிருந்த புத்தியும் மருட்சி அடைந்து, 

         சுருள் நோயால் கலக்கமுண்டு அலம் அலம் உற --- உடலைச் சுருட்டி மடக்கும் நோயால் கலக்கம் அடைந்து (இவ்வாழ்க்கை) போதும் போதும் என்னும் மன நிலை வர,

         வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க --- நீர் வற்றிப் பழுத்த பழமாய், நிமிர்ந்து ஓங்கி இருந்த முதுகும் வளைந்துபோ,

         கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க --- கண்டத்தில் வந்து கோழையும், இருமலும் ஒதுங்கி நிற்க,

         கொழுமேனி அறத் திரங்கி --- கொழுத்திருந்த உடலானது மிகவும் வற்றிச் சுருங்கி,

        ஒர் தடி கை நடுங்கப் பிடித்து --- ஒரு தடியைக் கையில் நடுக்கத்துடன் பிடித்துக் கொள்ள,

         இடும்பு உறு மனைவியும் நிந்தித்து --- அகந்தை கொண்ட மனைவியும் என்னை நிந்தனை புரிய,

         அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப --- அடுத்துள்ள பிள்ளைகளும் வசைச் சொற்களைச் சொல்ல

         சடமாகி --- அறிவில்லாத பொருள் போல ஆகி,

       அழுக்கு அடைந்து --- உடலெல்லாம் அழுக்கு சேர,

         இடர்ப் படும் உடல் --- வேதனை அடையும் உடலுக்கு இடமான

     பங்கப் பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு --- சேறு போன்ற பிறவி என்கின்ற கடலில் அழிந்து போவது ஒழிந்து,

         அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ --- பெருமை வாய்ந்த உனது திருவடிகளைச் சரணம் அடைந்து என்று நான் பொருந்தி இருப்பேனோ?


பொழிப்புரை


         வெளி இடங்கள் எல்லாம் பொடிபட்டு மிகவும் நிலை கலங்கவும், பெரும் கடலும் அதன் உட்புறமெல்லாம் குழம்பவும், அசுரர்கள் மீது வேலாயுதத்தைப் புகவிட்டு, அவர்களைத் தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுள்ள குதிரையாகிய மயிலேறும் வலிமை வாய்ந்த வீரரே!

         கிரெளஞ்ச மலையின் வலிமை குன்றிப் பிளவுபடும்படியாக வெற்றி அடைந்து, பகைவரைக் கொன்று அசுரர்களுடைய வலிய தலைகள் நெரிபட்டு அழியுமாறு நெருக்கி, உள்ளடங்கியுள்ள சதைகள், இரத்தம் எல்லாம் மேல் எழும்படியாக சண்டை செய்யும் வேலவரே!

         சிறிய தண்டைகளைத் திருவடிகளில் அணிந்தவரே!
        
     சிறுபிள்ளைகள் அஞ்சும்படியாக சினம் மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளி மலையில், தினைப்புனத்தில் விளங்கியிருந்த குறப் பெண்ணாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற மார்பகங்களைத் தழுவி, புளகாங்கிதம் கொண்ட மனத்தை உடைய முருகப் பெருமானே!

         மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமாரக் கடவுளே!

     கடப்ப மலர் மாலை அணிந்தவரே!

         அழகிய கும்பகோணத்தில் வீற்றிருக்கும் கந்த சுவாமியே!

     பெருமையில் மிக்கவரே!

         கருத்த மயிரும் வெளுத்து, எழுந்து வரிசையாக இருந்த வெண்மை நிறமான பற்களும் எல்லாம் விழுந்து போய், உள்ளே கருத்துக்களுடன் விளங்கியிருந்த புத்தியும் மருட்சி அடைந்து,   உடலைச் சுருட்டி மடக்கும் நோயால் கலக்கம் அடைந்து (இவ்வாழ்க்கை) போதும் போதும் என்னும் மன நிலை வர, நீர் வற்றிப் பழுத்த பழமாய், நிமிர்ந்து ஓங்கி நின்ற முதுகும் வளைவுற, கண்டத்தில் வந்து கோழையும், இருமலும் ஒதுங்கி நிற்க, கொழுத்திருந்த உடலானது மிகவும் வற்றிச் சுருங்கி,  ஒரு தடியைக் கையில் நடுக்கத்துடன் பிடித்துக் கொள்ள, அகந்தை கொண்ட மனைவியும் என்னை நிந்தனை புரி, அடுத்துள்ள பிள்ளைகளும் வசைச் சொற்களைச் சொல்ல, அறிவில்லாத பொருள்போல் ஆகி, உடலெல்லாம் அழுக்கு சேர, வேதனை அடையும் உடலுக்கு இடமான இந்தப் பங்கப் பிறப்பு எனும் கடல் அழிவதை ஒழிந்திட்டு, பெருமை வாய்ந்த உனது திருவடிகளைச் சரணம் அடைந்து என்று நான் பொருந்தி இருப்பேனோ?

விரிவுரை

கறுத்த குஞ்சியும் வெளிறி ---

குஞ்சி --- மயிர். கருநிறம் கொண்டிருந்த தலைமயிரானது, நரைத்து வெளுத்துப் போனது.

இளமையில் கருத்து இருந்த தலைமயிர் முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" என்ற நாமத்தை உடையவன் ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும்.

சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருந்தவும் செய்கின்றனர்.  சிலர் வெட்கப்படுகின்றனர். "வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றது?  இதற்குள் நரைத்து விட்டதே? தேன் பட்டுவிட்டது போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால் நிகழ்கின்றன என்பதை அவர் அறியார்.

"அவனன்றி ஓரணுவும் அசையாது", "அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது",  "எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது" என்ற ஆன்றோர்களது திருவாக்குகளின்படி, உயர்ந்த பிறவியாகிய இம் மனிதப் பிறவிக்கு நரையை ஏன் ஆண்டவன் தந்தான்?  மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி ஏன் அமைக்கக் கூடாது? அது ஆண்டவனுக்கு அருமையும் அல்ல. அதானல் நட்டமும் இல்லை.  சிலர் வெளுத்த மயிரைக் கருக்க வைக்கப் பெரிதும் முயல்கின்றனர். அதற்காகவும் தமது அரிய நேரத்தைச் செலவழிக்கின்றனர். அன்பர்கட்கு இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

மனிதனைத் தவிர ஏனைய பிறப்புக்கள் எல்லாம் பகுத்தறிவு இன்றி உண்டு உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிப்பதற்கு மட்டும் உரியனவாம். மனிதப் பிறவி அதுபோன்றது அன்று.  எத்தனையோ காலம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும் புண்ணியத்தால் இப் பிறவி கிடைத்தது.

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கரிய பிரான்அடி பேணார்

என்பார் திருமூலர்.

இத்தகைய அருமையினும் அருமையாகிய பிறவியைப் பெற்று, பிறவியின் பயனாகிய பிறவாமையைப் பெறுதற்குரிய சாதனங்களை மறந்து, அவநெறியில் சென்று அலைந்து உழலாவண்ணம், இவ் உடம்பு ஒரு படித்தாக இராது என்றும், முதுமையும் மரணமும் விரைந்து நெருங்கி வந்துகொண்டு இருக்கின்றன என்றும் நினைவு கூர்தல் பொருட்டு இறைவன் நமக்கு நரையைத் தந்து இருக்கின்றான். நரை ஒரு பெரிய பரோபகாரமான சின்னமாகும். நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும்.  மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்து, சன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "ஐயனே நரை வந்து விட்டதே? இனி விரைந்து முதுமையும் மரணமும் வருமே? கூற்றுவன் பாசக் கயிறும் வருமே? இதுகாறும் என் ஆவி ஈடேற்றத்திற்குரிய சிந்தனையை ஏழையேன் செய்தேனில்லை. இதுகாறும் உன்னை அடையும் நெறியை அறிந்தேனில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

நரை வந்தும் நல்லுணர்வு இன்றி அலையும் மனிதர் மிகவும் கீழ்மக்கள் ஆவர். இதுபற்றி, சங்க காலத்துப் புலவராகிய நரிவெரூஉத்தலையார் கூறுகின்றார்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பில் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ?
நல்லது செய்தலு ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தலு ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, ன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியும் ஆர்அதுவே. ---  புறநானூறு.

இதன் பொருள் ---

பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! மீன் முள்போல நரைத்து திரைத்த தாடையுடன் கூடி ஒரு பயனும் இல்லாமல் மூத்துக் கிடக்கும் பலராகிய மூத்தோர்களே.
  
மழுவாகிய கூர்மையான படையைத் தாங்கிய ஒருவன் (கூற்றுவன்) இனி விரைவில் வருவான். உங்கள் உழிரைப் பற்றி இழுத்துக் கொண்டு போகும்போது நீங்கள் வருந்துவீர்கள், வீணே அழுது புலம்புவீர்கள்.

நல்லது செய்தல் இனி உங்கள் தளர்ந்த வயதில் முடியாமல் இருக்கலாம். ஆயினும் நல்லது அல்லாதாவது செய்யாமல் இருக்க முயலுங்கள். அதுதான் இனி எல்லோரும் மகிழக் கூடியது. அந்தப் பழக்கம் ஒருகால் உங்களை நல்லது செய்யும் நன்னெறியில் விட்டாலும் விடும்.

கருமை நிறம், அழுந்தல் குணம் என்னும் தாமதகுணத்தைக் குறிக்கும். வெண்மை நிறம் அமைதிக் குணம் என்னும் சத்துவகுணத்தைக் குறிக்கும். வயது ஏற ஏற, சத்துவகுணம் அடைய வேண்டும் என்ற குறிப்பை உணர்த்தவும் இறைவன் நமக்கு நரையைத் தந்து அருளினான்.

தாமதகுணம் மிகுந்து இருந்தால், அத் தாமதகுணத்தின் அடையாளமான எருமையின் மீது வந்து, உடம்பில் இருந்து உயிரைக் கூறுபடுத்தி, இயமன் கொண்டு போவான்.

சத்துவகுணம் மிகுந்து இருந்தால், வெண்மை நிறமுடையதும், இரண்டாயிரம் தந்தங்களை உடையதும் ஆகிய, அயிராவணம் என்னும் வெள்ளை யானையுடன் வந்து, சிவகணங்கள், நமது உயிரை, உடம்பில் இருந்து கூறுபடுத்தி, சிவலோகத்துக்கு வெள்ளையானையின் மேல் அமரச் செய்து அழைத்துச் செல்வார்கள்.

ஒரே நாளில் திடீர் என்று எல்லா மயிர்களும் ஒன்றாக நரைத்து விடுவது இல்லை. ஒவ்வொன்றாக நரைக்கின்றது. அங்ஙனம் நரைக்கும் தோறும் நல்லுணர்வு பெறவேண்டும். ஒவ்வொரு மயிர் நரைக்கும்தோறும் நம்மிடம் உள்ள ஒவ்வொரு தீக்குணத்தையும் விடவேண்டும்.

"நத்துப் புரை முடியீர்! நல்லுணர்வு சற்றுமிலீர்!" என்று கிழவடிவில் வந்து தன்னை விரும்பிய முருகவேளைக் குறித்து, வள்ளியம்மையார் கூறினார்.

இவற்றை எல்லாம் நுனித்துணர சுவாமிகள், "கறுத்த குஞ்சியும் வெளிறி" என்று அருளிச் செய்தனர். "தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து" என்றும் அருளினார் சுவாமிகள்.


எழும் கொத்து உருத்த வெண் பல்லும் அடைய விழுந்து ---

உருத்தல் --- முளைத்தல், முதிர்தல்.

அடைய --- முழுவதும்.

வரிசையாக முளைத்து முதிர்ந்திருந்த பற்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து, முடிவில் இல்லாமல் போகும்.

சுருள் நோயால் கலக்கமுண்டு அலம் அலம் உற ---

சுருள் நோய் --- முடக்கு வாதம்.

அலம் --- துன்பம்.  போதும்.

துன்பம் படமுடியாது. முதுமையில் போதும் போதும் என்று வந்து சேரும். துன்பத்தைத் தள்ள முடியாது என்பதால், தள்ளாத வயது ஆயிற்று.

வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க ---

வெண்டுதல் --- உள்துளை. மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை.

பட்டமரம் போல் ஆகும் உடல்.


கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க ---

ஈளை --- கோழை, இளைப்பு.

"ஈளை" என்னும் சொல் "இளை" என்று வந்தது.

விக்கல் வருகின்றது என்றால், அதை நமது உடம்பில் உள்ள ஒரு வாயு செயல்பட்டுப் போக்கும். விக்கலை உடனடியாகப் போக்கிக் கொள்ளலாம்.

இந்த கொட்டாவி, ஏப்பம், விக்கல் ஆகியவற்றால் பிறருக்கு எவ்வித பாதகமும் விளைவது இல்லை.

ஆனால், தும்மல், இருமல் வருகின்றது என்றால் அதைப் போக்க வழியில்லை.

நாக்கில் கசிவு, நாசியில் கசிவு உண்டு பண்ணும்.  பசி வர வைக்கும். தும்மல் இருமலை உண்டு பண்ண. கோபம் வருகிறது. ஓடினால் இரைக்கிறது. தும்முகிறோம். இந்தச் செய்கைகளுக்கு மூலமாக இருக்கும் வாயுவுக்குக் "கிருகரன்" என்று பெயர்.

இதை "தும்மல் காற்று" என்பர். கிருகரன் என்னும் இந்தக் காற்றானது, சுவாசப் பாதைக்குள், அதாவது மூச்சுக் குழலுக்குள் ஏதாவது வெளிப் பொருளானது புகுந்துவிட்டால், அல்லது தொண்டைப் பகுதிக்கு வந்து விட்டால், அதனை உடனடியாக வெளியேற்ற ஒரு தும்மலையோ அல்லது இருமலையோ ஏற்படுத்திவிடுகிற வேலையை வெகுவேகமாக செய்து காப்பாற்றி விடுகிறது.

ஆக, தும்மல் இருமல் வெளிப் பொருள்களாலும் வரும். இதைத்தான் தொற்று என்கின்றோம். தும்மல் இருமலை அடக்கிக் கொள்ள முடியாது. அது வெளிவந்துதான் ஆகவேண்டும். அதனால்தான், தும்மல், இருமல் வரும்போது, கைகளாலோ, துணியாலோ அல்லது வேறு எந்த விதத்தினாலோ மறைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர்.

இதுவரையில் வந்துள்ள தொற்று நோய்கள் எல்லாம், சளி, ஜலதோஷம் வாயிலாக வரும் தும்மல், இருமல் ஆகியவற்றால் தான் வந்துள்ளன என்பதையும், இப்போது வந்துள்ள கொரோனாவும் அப்படித்தான்.

ஆக, தும்மல், இருமல் என்பவை, அதனால் பாதிக்கப்பட்டவரோடு, பிறருக்கும் கேடு விளைவிப்பது ஆகும் என்பதால் இது கொடியது எனப்பட்டது. இதனால், தனக்கும், பிறருக்கும் கேடு வருவது நிச்சயம்.

எனவே தான், இந்த இருவகையான பாதிப்புகளைச் சுட்டிக் காட்டி, அருளாளர்கள் பாடிவைத்தனர்.

"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே"

என்றும்,

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடி அ(ல்)லால் அரற்றாது என்நா,
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே!

என்றும்,

கனைகொள் இருமல் சூலைநோய்
  கம்பதாளி குன்மமும்
இனைய பலவும் மூப்பினோடு
  எய்திவந்து நலியாமுன்
பனைகள் உலவு பைம்பொழில்
  பழனம் சூழ்ந்த கோவலூர்
வினையை வென்ற வேடத்தான்
  வீரட்டானம் சேர்துமே.

என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் பாடினார்.

இந்த இருமல் என்பது எப்போது ஒருவருக்கு மிகத் துன்பத்தைக் கொடுக்கும் என்றால், இரவு நேரத்தில் படுக்கைக்குச் சென்ற பிறகுதான். கண்டத்தில் கோழை மிகுந்து, மூச்சு விடமுடியாமல் அடைப்பு உண்டாகும்போது, இருமல் தொடர்ந்து வந்து துன்றுபுறுத்தும்.

எனவேதான், "உறக்கம் வரும் அளவில், எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி, உரத்த கன குரலும் நெரிந்து" என்று அருணகிரிநாதப் பெருமான் பிறிதொரு திருப்புகழில் பாடினார்.


இடும்பு உறு மனைவியும் நிந்தித்து, அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப ---

இடும்பு --- அகந்தை, கொடுஞ்செயல்.

இளமையில் விரும்பி அன்பு செய்த தாயும், மனைவியும், மக்களும், சுற்றமும், பிறரும் பல்வகையான வசைச் சொற்களைக் கூறி எள்ளி நகையாடுவார்கள்.

"கிழத்திற்கு வெந்நீர் வேணுமாம்; கிழக்கட்டைக்கு இன்னும் சுகம் வேண்டுமோ? இதன் ஓலை எங்கு கிழிந்து விட்டதோ? ஏன் பூமிக்குப் பாரமாக இது இன்னும் இருக்கின்றதோ? கிழப்பிணம்" என்றெல்லாம் கூறி இகழ்வர்.

"மாதர் சீயெனா வாலர் சியெனா" என்பார் திருவிடைமருதூர்த் திருப்பகழில். "மனையவள் நகைக்க" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

இந்த இடத்தை நன்றாகச் சிந்தித்து, பட்டினத்தடிகள் தம் உடம்பை நோக்கி மிக மிக அழகாகக் கூறுகின்றனர்.

"தாயாரும் சுற்றமும் பெண்டீரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்
"நீயாரு? நான்ஆர்?" எனப் பகர்வார், அந்த நேரத்திலே
நோயாரும் வந்து குடிகொள்வரே, கொண்ட நோயும்,ஒரு
பாயாரும், நீயும் அல்லால் பின்னை ஏது நட்பாம் உடலே".

"நட்புநார் அற்றன, நல்லாரும் அஃகினார்,
அற்புத் தளையும் அவிழ்ந்தன, --- உட்காணாய்
வாழ்தலின் ஊதியம் என்உண்டாம், வந்ததே
ஆழ்கலத்து அன்ன கலுழ்".                    --- நாலடியார்.


இடர்ப் படும் உடல் பங்கப் பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு ---


பங்கம் --- விகாரம், கேடு, அவமானம், சிறுமை அடைதல்.

முன் பிறவியில் இழைக்கப்பட்ட வினைகளால், இப் பிறவியும், இப் பிறவியில் இழைக்கப்போகும் வினைகளால், இனி வரும் பிறவியும் ஆக, தொன்று தொட்டு, காரண காரியத் தொடர்ச்சி உடையதாய், பிறவியானது முடிவில்லாமல் வருவதால், அது "பிறவிப் பெருங்கடல்" எனப்பட்டது.

உழிருக்குப் பங்கத்தை உண்டுபண்ணுவதால், "பங்கப் பிறப்பு எனும் கடல்" என்றார்.


புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப, புகட்டு அரங்கிய விரக துரங்கத் திறல் வீரா ---

அரங்குதல் --- தைத்தல், அழித்தல், வருத்துதல், உருகுதல்.

புகட்டுதல் --- உள் புகுத்துதல்,

துரங்கம் --- குதிரை, மனம்.

விரகு --- திறமை, வல்லமை.

துரங்கம் என்பதற்கு மனம் என்று பொருள் கொண்டால், உயிர்களின் மனம் என்னும் குதிரையைத் தனது வாகனமாகக் கொண்டு, அதைத் தனது திருவருள் இச்சையின்படிக்கு ஒழுங்காகச் செலுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.


பொருப்பு உரம் படர் கிழி பட வென்று ---

பொருப்பு --- மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது.

உரம் --- வலிமை. மார்பு.

மார்பு என்று பொருள் கொண்டால், "படர் மார்பு" என்பதற்கு, படர்ந்த மார்பு என்றும் பொருள் கொள்ளலாம்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன
வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலால் இச்செய்தி இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

பின்வரும் பிரமாணங்களால் கிரவுஞ்ச மலையானது பொன்மயமானது என்பதை அறியலாம்.

"சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தை உற்று,
நின்னை உணர்ந்து உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்து இருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே".
                                                          --- கந்தர் அலங்காரம்.         
இதன் பொருள் ---

பொன்னிறமான கிரவுஞ்சமலையை ஊடுருவித் தொளை செய்த கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே! நறுமணம் மிக்க கடப்பமலர் மாலையைச் சூடிக்கொண்டு உள்ள திருமார்பினை உடையவரே! ஞானத்திற்கெல்லாம் வரம்பாக விளங்கும் மௌன நிலையை அடைந்து, தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து ஜீவனாகிய அடியேனையும் மறந்து உம்மை நினைந்து நிலைத்து இருந்தேன். இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய்விட்டது.

"பங்கேருகன் எனைப் பட்டுஓலையில் இட, பண்டு தளை
தம் காலில் இட்டது அறிந்திலனோ? தனிவேல் எடுத்துப்
பொங்குஓதம் வாய்விட, பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எம்கோன் அறியின்,  இனி நான்முகனுக்கு இருவிலங்கே". ---  கந்தர் அலங்காரம். 
 
இதன் பொருள் ---

தாமரை மலரில் வாழும் பிரம்மதேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும் பொன் உருவான கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்மதேவனுக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்படும்!


சிகண்டி பரி சுமந்திடு குமர ---

சிகண்டி --- மயில்

பரி --- குதிரை.

வேகமாகச் செல்லும் குதிரையைப் போன்ற மயில் வாகனம். "ஆடும்பரி" என்றார் கந்தர் அனுபூதியில்.

திருக்குடந்தையில் உறைதரு கந்த ---

லக்கியத்தில் "குடமூக்கு" என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர் --- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் --- மங்களாம்பிகை.
தல மரம் --- வன்னி.

திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் --- சோமேசர் கோயில்.
   
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

கருத்துரை

முருகா! பங்கப் பிறவி அற அருள்வாய்



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...