பாக்கம் - 0690. பாற்றுக் கணங்கள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாற்றுக் கணங்கள் (பாக்கம்)

முருகா!
பேரின்ப வீட்டில் அடியேன் சுகித்து இருக்க அருள்வாய்.


தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
     தாத்தத் தனந்த தந்த ...... தனதான


பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
     நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்

பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
     ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே

வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
     கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும்

வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
     வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ

மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து
     வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப

மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து
     வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும்

பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து
     பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே

பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த
     பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை
     நோக்கிச் சுமந்து கொண்டு, ...... பதிதோறும்

பார்த்துத் திரிந்து உழன்று, ஆக்கத்தையும் தெரிந்து,
     ஏக்கற்று நின்று நின்று ...... தளராதே,

வேற்றுப் புலன்கள் ஐந்தும் ஓட்டிப் புகழ்ந்து கொண்டு,
     கீர்த்தித்து நின் பதங்கள், ...... அடியேனும்

வேட்டுக் கலந்து இருந்து, ஈட்டைக் கடந்து நின்ற
     வீட்டில் புகுந்து இருந்து ...... மகிழ்வேனோ?

மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து,
     வாய்ப்பு உற்று அமைந்த சங்கு ...... தடிசாப,

மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன், பணிந்து
     வார்க் கைத்தலங்கள் என்று ...... திரைமோதும்,

பால் சொல் தடம் புகுந்து, வேல்கண் சினம் பொருந்து,
     பாய்க்குள் துயின்றவன் தன் ...... மருகோனே!

பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த
     பாக்கத்து அமர்ந்து இருந்த ...... பெருமாளே.


பதவுரை

      மாற்று அற்ற பொன் துலங்கு வாள் --- மாற்றுக் கடந்த பொன்னால் ஆன நாந்தகம் என்னும் வாளும்,

     சக்கிரம் தெரிந்து --- சுதர்சனம் என்னும் சக்கரமும்,

     வாய்ப்பு உற்று அமைந்த சங்கு --- திருக்கரத்திலே பொருந்தியுள்ள பாஞ்சசன்னியம் என்னும் சங்கமும்,

     தடி --- கெளமோதகி என்னும் தண்டாயுதமும்,

     சாப(ம்) --- சாரங்கம் என்னும் வில்லும்,

     மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் ---  அழகிய பொன்னால் ஆன அணிகலன்களும் விளங்க வைத்துள்ள திருமால்,

         பணிந்து வார்க் கைத்தலங்கள் என்று திரை மோதும் பால் சொல் தடம் புகுந்து --- வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று சொல்லும்படியான திருப்பாற்கடலில் இடம் கொண்டு,

     வேல்கண் -- வேல் போன்ற கூரிய கண்ணையும்

     சினம் பொருந்து --- கோபத்தையும் கொண்ட

     பாய்க்குள் துயின்றவன் தன் மருகோனே --- பாயான ஆதிசேடன் என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் திருமருகரே,

         பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த பாக்கத்து அமர்ந்து இருந்த பெருமாளே --- பாக்கு மரக் குலைகளை, கரும்பையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற பாக்கம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கிச் சுமந்து கொண்டு --- பருந்துக் கூட்டங்கள் உண்டு வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து கொண்டு,

         பதிதோறும் பார்த்துத் திரிந்து உழன்று --- ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும்,

     ஆக்கத்தையும் தெரிந்து --- செல்வத்துக்கு வழியைத் தேடி,

     ஏக்கற்று --- ஆசையால் இளைத்து வாடி,

     நின்று நின்று தளராதே --- சென்ற இடங்கள் தோறும் நின்று தளராமல்,

      வேற்றுப் புலன்கள் ஐந்தும் ஓட்டி --- உயிருக்கு வேறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி

     புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து --- தேவரீரின் பெருமைகளைச் சொல்லும் திருப்புகழையே பாடிப் பாடி

     நின் பதங்கள் அடியேனும் வேட்டு --- தேவரீருடைய திருவடிகளையே அடியேன் விரும்பி,

     கலந்து இருந்து --- திருவடி இன்பத்திலேயே கலந்திருந்து

      ஈட்டைக் கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ --- ஒப்பும் உவமையும் இல்லாத பேரின்ப வீட்டில் புகுந்து இருந்து அடியேன் மகிழ்ச்சி உறுவேனோ?


பொழிப்புரை


         மாற்றுக் கடந்த பொன்னால் ஆன நாந்தகம் என்னும் வாளும், சுதர்சனம் என்னும் சக்கரமும், திருக்கரத்திலே பொருந்தியுள்ள பாஞ்சசன்னியம் என்னும் சங்கமும்,
கெளமோதகி என்னும் தண்டாயுதமும், சாரங்கம் என்னும் வில்லும், அழகிய பொன்னால் ஆன அணிகலன்களும் விளங்க வைத்துள்ள திருமால்,

         வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று சொல்லும்படியான திருப்பாற்கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதிசேடன் என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் திருமருகரே,

         பாக்கு மரக் குலைகளை, கரும்பையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற பாக்கம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         பருந்துக் கூட்டங்கள் உண்டு வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து கொண்டு, ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு வழியைத் தேடி, ஆசையால் இளைத்து வாடி, சென்ற இடங்கள் தோறும் நின்று தளராமல், உயிருக்கு வேறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி, தேவரீரின் பெருமைகளைச் சொல்லும் திருப்புகழையே பாடிப் பாடி, தேவரீருடைய திருவடிகளையே அடியேன் விரும்பி, திருவடி இன்பத்திலேயே கலந்திருந்து, ஒப்பும் உவமையும் இல்லாத பேரின்ப வீட்டில் புகுந்து இருந்து அடியேன் மகிழ்ச்சி உறுவேனோ?

விரிவுரை


         பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கிச் சுமந்து கொண்டு, பதிதோறும் பார்த்துத் திரிந்து உழன்று, ஆக்கத்தையும் தெரிந்து, ஏக்கற்று, நின்று நின்று தளராதே ---

இந்த உடலானது அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டப்பட்டு, உள்ளே புழுவும் அழுக்கும் வெளித் தெரியாதபடி, புறத்திலே தோலால் போர்க்கப்பட்டு மூடப்பட்டு உள்ளது.

உயிர் அற்ற உடலை அப்படியே விட்டுவிட்டால், காக்கைகளும், கழுகுகளும், நாய்களும், நரிகளும் வந்து தின்று போகும்.

நாள்தோறும் நாழிகை தவறாமல் மிகுந்த எச்சரிக்கையாக உணவுகளைத் தந்து வளர்த்த இந்த உடம்பு, முடிவில் பேய்க்கும், நாய்க்கும், நரிக்கும் பருந்துக்கும் இரையாகிக் கழிகின்றது.

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே..          

என்கின்றார் அப்பர் அடிகளார். இந்த யாக்கையால்,

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்..

என்று இரங்குகின்றார்.
  
சிலர் அருமையாக வீடுகட்டி சுண்ணாம்பு அடித்து வர்ணம் தடவி, தூண்களுக்கு உரைபோட்டு அழகு படுத்துவர். இந்த வீடு நமக்கே சொந்தம் என்று எண்ணி இறுமாந்திருப்பர். அதற்கு வரியும் செலுத்துவார்கள். ஆனால் அந்த வீட்டில் வாழும் பல்லி, எட்டுக்கால் பூச்சி, கரப்பான் பூச்சி முதலியவை இந்த வீடு நமக்குத் தான் சொந்தம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன. இவன் அந்த பிராணிகள் மீது வழக்குத் தொடர முடியுமா? அதுபோல், இந்த உடம்பு நமக்கே சொந்தம் என்று நாம் கருதுகின்றோம். இந்த உடம்பில் வாழும் புழுக்கள் தமக்குச் சொந்தம் என்று மகிழ்ந்திருக்கின்றன. அன்றியும் இவ் உடம்பை நெருப்பு தனக்குச் சொந்தம் என்று எண்ணியிருக்கின்றது. மயானத்தில் உள்ள பூமி இவ்வுடல் தனக்கே சொந்தம் என்று எண்ணுகின்றது. பருந்துகள் தமக்கு உரியது என்று உன்னி இருக்கின்றன. நரிகள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கின்றன; நாய் நமக்கே இது உரியது என்று எண்ணுகின்றது. இத்தனை பேர் தத்தமக்குச் சொந்தம் என்று எண்ணுகின்ற உடம்பை, நாம் எழுந்தவுடன் சிவநாமம் கூறாமலும், பல் தேய்க்காமலும் கூட, உண்டு உடுத்து வளர்க்கின்றோம்.

எரி எனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும், பருந்தோ எனக்கு எனும், தான் புசிக்க
நரி எனக்கு என்னும், புன்நாய் எனக்கு எனும், இந்நாறு உடலைப்
பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன பேறு எனக்கே.  --- பட்டினத்தார்.

காட்டிலே இயல் நாட்டிலே பயில்
     வீட்டிலே உல ...... கங்கள் ஏசக்
காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
     யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ..        (ஏட்டிலே) திருப்புகழ்.

மச்சம் மெச்சு சூத்ரம், ரத்த பித்த மூத்ரம்
     வைச்சு இறைச்ச பாத்ரம், ...... அநுபோகம்
மட்க விட்ட சேக்கை, உளு புழுத்த வாழ்க்கை,
     மண் குலப் பதார்த்தம், ...... இடிபாறை,

எய்ச்சு இளைச்ச பேய்க்கும், எய்ச்சு இளைச்ச நாய்க்கும்,
     எய்ச்சு இளைச்ச ஈக்கும் ...... இரை ஆகும்
இக் கடத்தை நீக்கி, அக் கடத்து உள் ஆக்கி,
     இப்படிக்கு மோட்சம் ...... அருள்வாயே.    ---  திருப்புகழ்.

கார்க்கு ஒத்த மேனி, கடல் போல் சுற்றம் ஆனவழி,
     காய்த்து ஒட்ட ஒணாத உரு ...... ஒருகோடி,
காக்கைக்கு, நாய், கழுகு, பேய்க்கு அக்கமான உடல்..    ---  திருப்புகழ்.

இந்த உடம்பைச் சதம் என்று எண்ணி, அது கொழுப்பதற்கும், இன்பத்தைத் துய்ப்பதற்கும் வேண்டிய பொருள்களைத் தேடி ஊர்கள் தோறும் அலைந்து திரிந்து, பொருளுக்காக ஏங்கி வாடி அலைகின்றோம். உடம்பு நிலையானது அல்ல என்பதை உணர்ந்து, உயிருக்கு ஆக்கமாக உள்ள வீடுபேற்றை அடைய முயலவில்லை. உடம்பு ஏன் வந்தது என்பதை அறியாமல், "மடம் புகு நாய்போல் மயங்குகின்றாரே" என்று திருமூல நாயனார் காட்டியது போல் வாழுகின்றோம்.
  
வேற்றுப் புலன்கள் ஐந்தும் ஓட்டி ---

உடம்பும், அதிலே பொருந்தி உள்ள ஐம்புலன்களும் உயிருக்கு வேறானவை. தான் அல்லாத உடம்பை நான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருள்களைத் தனது என்றும் அறிவு மயக்கத்தால் பிறழ உணர்ந்து, உணர வேண்டியதை உணராமல், புலன்களின் வழியே சென்று அல்லல் உறுகின்றோம். புலன்களின் வழியே நாம் செல்லாமல், அவை நமக்கு ஏவல் செய்யுமாறு பழக வேண்டும். புலன் அறிவினால் இறைவனைக் காண முடியாது. புலன்கள் ஒருமுகப் பட வேண்டும்.

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே;
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா;
எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?  ---  திருவாசகம்.

அன்பு பெருக உருகி உள்ளம்
   அலைய, அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமையினால் வணங்கி,
   முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி,
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி
   நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே
   இன்னிசை வண்டமிழ் மாலை பாட.   ---  பெரிய புராணம்.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.   ---  கந்தர் அனுபூதி.

பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம் புலன்கள் தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே. ---  பட்டினத்தார்.

பூதங்கள் அற்று, பொறி அற்று, சார் ஐம் புலன்கள் அற்று,
பேதம் குணம் அற்று, பேராசை தான் அற்று, பின்முன் அற்று,
காதம் கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதம் களைந்து இருப்பேன், இறைவா கச்சி ஏகம்பனே.   --- பட்டினத்தார்.

புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து ---

புலன்கள் தம் வசம் அழியப் பெற்று,  இன்ப நிலையிலே உயிரானது இருக்கவேண்டுமானால், இறைவன் திருப்புகழை எப்போதும் வாயாரப் பாடி, மனமார நினைந்து உருகவேண்டும்.
 
நின் பதங்கள் அடியேனும் வேட்டு ---

உலக இன்பங்கள் எல்லாம் நிலையில்லாதன. அவற்றை விரும்பாமல் நிலையான இன்பத்தைத் தருகின்ற இறைவன் திருவடி ஒன்றையே விரும்பி, அதனைப் பெற வழிபட்டு வாழ்தல் வேண்டும்.

கலந்து இருந்து ---

அந்தத் திருவடி இன்பத்தை உடம்போடு வாழ்கின்ற காலத்திலேயே பெற்று மகிழலாம்.

ஈட்டைக் கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ ---

ஈடு - ஒப்பு, உவமை.
ஒப்பும் உவமையும் இல்லாதது பேரின்ப வீடு.

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.                --- திருக்குறள்.

கருத்துரை

முருகா! பேரின்ப வீட்டில் அடியேன் சுகித்து இருக்க அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...