அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மருவும் அஞ்சு பூதம்
(விரிஞ்சிபுரம்)
முருகா!
உடல் பற்று நீங்கி, அத்துவிதப்
பெருவாழ்வு பெற அருள்புரிவீர்.
தனன
தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான ...... தனதான
மருவு
மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட ...... அறியாது
மயல்கொ
ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத ...... அடியேனும்
உருகி
யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேச ......அறியாத
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாத ...... மருள்வாயே
அரிவி
ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி ...... கடையூடே
அருளு
கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி ...... குருநாதா
திரியு
மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலை ...... விடுவோனே
செயல
மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மருவும்
அஞ்சு பூதம் உரிமை வந்திடாது,
மலம் இது என்று போட ...... அறியாது,
மயல்கொள்
இந்த வாழ்வு அமையும் எந்த நாளும்
வகையில் வந்து இராத ...... அடியேனும்,
உருகி
அன்பினோடு உனை நினைந்து, நாளும்
உலகம் என்று பேச ......அறியாத,
உருவம்
ஒன்று இலாத பருவம் வந்து சேர,
உபய துங்க பாதம் ...... அருள்வாயே.
அரி
விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
அடி பணிந்து பேசி, ...... கடை ஊடே
அருளுக
என்ற போது, பொருள் இது என்று
காண
அருளும் மைந்த! ஆதி ...... குருநாதா!
திரியும்
உம்பர் நீடு கிரி பிளந்து, சூரர்
செரு அடங்க வேலை ...... விடுவோனே!
செயல்
அமைந்த வேத தொனி முழங்கு வீதி
திரு விரிஞ்சை மேவு ...... பெருமாளே.
பதவுரை
அரி விரிஞ்சர் தேட
அரிய தம்பிரானும் --- திருமாலும் பிரமதேவனும் அடிமுடியைத் தேடிக்
காணமுடியாதவராகிய தனிப்பெரும் தலைவராகிய சிவபெருமானும்,
அடி பணிந்து பேசி
கடையூடே "அருளுக" என்ற போது --- தேவரீரது திருவடிகளில் பணிந்து
துதி செய்து, பிரணவத்தின் முடிவான
உட்பொருளை அருள் புரிவீர் என்று கேட்டபோது
"பொருள் இது"
என்று காண அருளும் மைந்த --- உண்மைப் பொருள் இதுதான் என்று அவர்
உணரும்படியாக உபதேசித்து அருளிய திருக்குமாரரே!
ஆதி குருநாதா --- ஆதிசிவனுக்கும்
குருநாதராக விளங்குபவரே!
திரியும் உம்பர் நீடு
கிரி பிளந்து
--- மாயையினால் சுழல்கின்ற, விண்ணுலகம் வரை நீண்ட
கிரவுஞ்ச மலையைப் பிளந்து,
சூரர் செரு அடங்க
வேலை விடுவோனே --- சூராதி அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தை
விடுத்தருளியவரே!
செயல் அமைந்த வேத
தொனி முழங்கு வீதி --- ஒழுக்கம் வாய்க்கப் பெற்றதும், மறையொலி முழங்க விளங்குவதும் ஆகிய
திருவீதிகளுடன் கூடிய
திருவிரிஞ்சை மேவு
பெருமாளே
--- திருவிரிஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமையின்
மிக்கவரே!
மருவும் அஞ்சு பூதம்
உரிமை வந்திடாது --- பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களும் எனக்கு
உரிமையாக ஆகாமல் படிக்கும்
மலம் இது என்று போட
அறியாது
--- இந்த உடம்பு மலக்கூடு என்று அறிந்து, இதனை
வெறுத்துத் தள்ள அறியாமலும்,
மயல்கொள் இந்த
வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் --- மயக்கம் நிறைந்த
இந்த உலக வாழ்வு போதுமே என்று எந்த நாளிலும் ஒழுங்கு முறையில் வந்து நிலைத்திராத
அடியேனும்
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் --- அன்பினோடு உருகி
தேவரீரை இடையறாது தியானம் செய்து,
உலகம் என்று பேச அறியாத --- உலக விஷயங்களை
ஒரு பொருளாக வைத்துப் பேச அறியாததும்,
உருவம் ஒன்று இலாத
பருவம் வந்து சேர --- இவ்வடிவம் தான் இது என்ற கூற இயலாததும் ஆகிய ஐக்கிய
நிலையாகிய பருவத்தை அடியேன் சேருமாறு
உபய துங்க பாதம்
அருள்வாயே ---
தேவரீருடைய தூய்மையான இரண்டு திருவடிகளையும் எனக்குத் தந்து அருள்புரிவீர்.
பொழிப்புரை
திருமாலும் பிரமதேவனும் அடிமுடியைத்
தேடிக் காணமுடியாதவராகிய தனிப்பெரும் தலைவராகிய சிவபெருமானும், உனது திருவடிகளில் பணிந்து துதி செய்து, அந்தப் பிரணவத்தின்
முடிவான உட்பொருளை அருள் புரிவீர் என்று கேட்டபோது உண்மைப் பொருள் இதுதான் என்று
அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய திருக்குமரரே!
ஆதிபரம் பொருளாகிய சிவனுக்கும்
குருநாதராக விளங்குபவரே!
மாயையினால் சுழல்கின்ற, விண்ணுலகம் வரை நீண்ட கிரவுஞ்ச மலையைப்
பிளந்து, சூராதி அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
ஒழுக்கம் வாய்க்கப் பெற்றதும், மறையொலி முழங்க விளங்குவதும் ஆகிய
திருவீதிகளுடன் கூடிய திரிவிரிஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமையின் மிக்கவரே!
பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களும் எனக்கு
உரிமையாக ஆகாமல்படிக்கும், இந்த உடம்பு மலக்கூடு
என்று அறிந்து, இதனை வெறுத்துத் தள்ள
அறியாமலும், மயக்கம் நிறைந்த இந்த
உலக வாழ்வு போதுமே என்று எந்த நாளிலும் ஒழுங்கு முறையில் வந்து நிலைத்திராத
அடியேனும், அன்பினோடு உருகி தேவரீரை
இடையறாது தியானம் செய்து, உலக விஷயங்களை ஒரு
பொருளாக வைத்துப் பேச அறியாததும்,
இவ்வடிவம்தான்
இது என்ற கூற இயலாததும் ஆகிய ஐக்கிய நிலையாகிய பருவத்தை அடியேன் சேருமாறு
தேவரீருடைய தூய்மையான இரண்டு திருவடிகளையும் எனக்குத் தந்து அருள்புரிவீர்.
விரிவுரை
மருவும்
அஞ்சு பூதம் உரிமை வந்திடாதும் ---
இந்த
உடம்பும் உலகமும் ஐம்பெரும் பூதங்களால் ஆகியவை. மண், நீர், தீ, கனல், காற்று, வெளி என்ற இந்த ஐந்து பூதங்களின் வசம்
நாம் ஒழுகுகின்றோம். அவைகள் நமக்கு வசப்படவில்லை. புலன்கள் சென்ற வழியில் நாம்
செல்லுகின்றோம். உடம்பு நம் வசத்தில் இல்லை. இதனை மாற்றி, உடம்பையும் உலகத்தையும் நம் வசம் ஆக்கி, அவைகளை உரிமையாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறு
கொண்டால், மழை பொழி என்றால்
பொழியும். வீசு என்றால் காற்று வீசும். ஒரு பார்வையால் எரி மூளும். மற்றொரு
பார்வையால் எரி அணையும். கரையின்றி விளங்கும் கடல் கையால் மொண்டு குடிக்கும்
அளவில் சுருங்கும். அகத்திய முனிவர் கடலைப் பருகினர் என்ற வரலாற்றையும் உன்னுக. சுந்தரமூர்த்தி
சுவாமிகட்கு காவிரி வழி விட்டதும்,
திருநாவுக்கரசு
சுவாமிகட்கு நீற்றறை அனல் சந்தனம் போல் குளிர்ந்து இருந்ததும், பிறவும் இங்கு நினைவு கூரத் தக்கன. எல்லாமாய்
நின்ற இறைவனை உற்றவர்க்கு எல்லாம் உரிமையாகின்றன.
மலம்
இது என்று போட அறியாதும் ---
இந்த
உடம்பு மலக்கூடு. நவ தொளைகளிலும் மலம் வெளிப்படுகின்றது. "மலம் சோரும் ஒன்பது
வாயில் குடிலை" என்பார் மணிவாசகப் பெருமான். "வருகணத்து வாழ்ந்திடுமோ
விழுந்திடுமோ இந்த மலக்கூடு" என்பார் வடலூர் வள்ளலார்.
இந்த
உடம்பு இறைவனை அறிவதற்குக் கருவியாக அமைந்தது.
இதனைப் பேணுவது அவசியம் தான். ஆனால் உடம்பையே பேணிக்கொண்டு இருந்தால், உடம்பினால் ஆய பயனைப் பெறுவதுதான்
எக்காலம்? வீடு அவசியம் வேண்டியதுதான். ஆனால்
ஆயுள் முடிகின்ற வரை வீட்டையே கட்டிக்கொண்டும், வீட்டை அலங்கரிப்பதுமாகவே இருக்கக்
கூடாதல்லவா? ஆன படியினால், உடம்பைப் பெரிதென்று கருதி உடம்பைப்
பேணுவதிலேயே வாழ்நாள் முழுவதும் கழிந்துவிட்டால், ஆவி உய்வது எங்ஙனம்? எனவே, இந்த உடம்பு நிலையில்லாதது. இது மாலினால் எடுத்த கந்தல். சோறினால் வளர்த்த பொந்தி. நோய்களுக்கு இருப்பிடமானது. அருவருப்பானது. மலபாண்டம். புழுக்கூடு என்று எண்ணி இந்த உடம்பை
வெறுத்து, உடம்புக்குள் உறையும்
உத்தமனைக் கண்டு பற்றற்று இருக்கவேண்டும்.
ஊற்றைச்
சரீரத்தை, ஆபாசக் கொட்டிலை, ஊன்பொதிந்த
பீற்றல்
துருத்தியை, சோறுஇடும் தோல்பையை, பேசரிய
காற்றில்
பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத்
திரிந்துவிட்டேன், இறைவா, கச்சி ஏகம்பனே.
காதுஅளவு
ஓடிய கலகப் பாதகக்
கண்ணியர்
மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும்
கருத்தும் அல்லால், நின் இருதாள்
பங்கயம்
சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம்
கூர்ந்த தமியேன் பாங்கு இருந்து,
அங்கோடு
இங்கோடு அலமரும் கள்வர்
ஐவர்
கலகமிட்டு அலைக்கும் கானகம்;
சலமலப்
பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம்
கோழை குடிபுகும் சீறூர்;
ஊத்தைப்
புன்தோல் உதிரக் கட்டளை;
நாற்றப்
பாண்டம்; நால் முழத்து ஒன்பது
பீற்றல்
துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப்
பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக்
கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா
நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;
மாயா
விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத்
துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில்
பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித்
தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப்
பாணன் தைக்குஞ் சட்டை;
ஈமக்
கனலில் இடுசில விருந்து;
காமக்
கனலில் கருகும் சருகு;
கிருமி
கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து
ஏறும் கவைக் கொழுகொம்பு;
மணமாய்
நடக்கும், வடிவின் முடிவில்
பிணமாய்க்
கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில்
கிடக்க ஒட்டா உபாதி;
கால்
எதிர் குவித்த பூளை; காலைக்
கதிர்
எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து
இயங்கும் இந்திர சாபம்;
அதிரும்
மேகத்து உருவின் அருநிழல்;
நீரில்
குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில்
கனவில் கண்ட காட்சி;
அதனினும்
அமையும் பிரானே! அமையும்;
இமைய
வல்லி வாழிஎன்று ஏத்த
ஆனந்தத்
தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டு
அருள்கை நின் அருளினுக்கு அழகே!
என்று
வருந்தி வேண்டுகின்றனர் பற்றற்ற பரமஞானியாகிய பட்டினத்துச் சுவாமிகள்.
இவ்வுடம்பைப் பற்றி தவசீலராகிய தாயுமானார் கூறுமாறும் காண்க..
காக
மோடுகழுகு அலகை நாய்நரிகள்
சுற்று சோறு இடு துருத்தியை,
கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலையை,
போகஆசைமுறி
இட்ட பெட்டியை, மும்
மலம் மிகுந்து ஒழுகு கேணியை,
மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,
முடங்கல் ஆர் கிடை சரக்கினை,
மாக
இந்த்ர தனு மின்னை ஒத்து இலக
வேதம் ஓதியகு லாலனார்
வனைய, வெய்ய தடிகாரன் ஆன யமன்
வந்து அடிக்கும் ஒரு மட்கலத்
தேகம்
ஆன பொய்யை, மெய் எனக் கருதி
ஐய! வையமிசை
வாடவோ?
தெரிவதற்கு
அரிய பிரமமே! அமல
சிற்சு கோதய விலாசமே.
மயல்
கொள் இந்த வாழ்வு அமையும் ---
இன்பம்
இல்லாதவற்றை இன்பமான பொருள்களாகவும், அவல
நெறியை நன்னெறியாகவும் பிறழ உணர்ந்து மயங்கித் திரியும் இந்த வாழ்வு போதும்
என்கின்றார்.
அமைதல்
- போதும் என்று அமைந்து நிற்றல்.
வாழ்வு
அனைத்தும் பொய் எனவே தேர்ந்தேன்,
தேர்ந்த-
வாறே
நான் அப்பால் ஓர் வழி பாராமல்
தாழ்வு
பெற்று இங்கு இருந்தேன், ஈதுஎன்ன மாயம்..
--- தாயுமானார்.
அரியபெண்கள்
நட்பைப் புணர்ந்து
பிணி உழன்று சுற்றித் திரிந்தது
அமையும், உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ.
---
(கருவடைந்து)
திருப்புகழ்.
உருகி
அன்பினோடும் உனை நினைந்து ---
இறைவனுடைய
அளவில் சீர் பொருந்திய அருட்பெரும் குணங்களையும், அதனை அறியாது அவமே உழலும் நமது
அவகுணங்களின் சிறுமையையும் நினைந்து, கருங்கல்
போல் கெட்டியாகவுள்ள இந்த மனதை அழலிடைப்பட்ட மெழுகுபோல் உருகுமாறு செய்து, முதிர்ந்த அன்புடன் எம்பெருமானை
நினைக்கவேண்டும்.
காலம்
கழிந்துகொண்டே இருக்கின்றது. இளமை நலம் சிதைந்து விட்டது. மரணம் எதிரே
நிற்கின்றது. என்று இவைகளை எண்ணினால் எந்தக் கருங்கல் மனம் தான் உருகாது? இறைவனை நினைந்து
உருகி, இறைவனது திருநாமங்களை
எண்ணால் கற்கும் கலைகள் எல்லாம் வீண்.
சென்றது
காலம், சிதைந்தது இளமை நலம்,
நின்றது
சாவு என்று நினைந்து உருகி --- மன்றில்
நடிக்கின்ற
பால்வண்ணர் நாமம் எண்ணா மாந்தர்
படிக்கின்ற
நூல் எல்லாம் பாழ். --- அதிவீரராம
பாண்டியர்.
உருவம்
ஒன்று இலாத பருவம் ---
உருவத்துடன்
கூடி உள்ளவரை துன்பம் தான். உடல் உள்ள வரையில் துன்பமை மிகும். இன்பம் என்று
அனுபவிப்பது சிற்றின்பமே. சீவன் சிவத்துடன் இரண்டறக் கலந்துகொள்ளும் ஐக்கிய பதம்
உண்டானபோது தான் முழு இன்பம் உண்டாகின்றது.
தீதும்
பிடித்தவினை ஏதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருபம் ...... எனதேறி
நான்என்பது
அற்று,உயிரொடு ஊன்என்பது அற்றுவெளி
நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ்
சுரப்ப, மகிழ் ஆநந்த
சித்தியொடெ
நாளும் களிக்க பதம் ...... அருள்வாயே. --- (தேனுந்து) திருப்புகழ்.
ஐக்கிய
நிலையே மேலும் சுவாமிகள் இவ்வாறு வேண்டுகின்றார்.
கற்பூரமானது
கரியும் சாம்பலும் இன்றிக் கரைந்து விடுவது போல், ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும்.
தீது
அணையாக் கற்பூர தீபம் என, நான்கண்ட
ஜோதியுடன்
ஒன்றித் துரிசு அறுப்பது எந்நாளோ..--- தாயுமானார்.
இருவினை
முமலமும் அற, இறவியொடு பிறவிஅற,
ஏகபோகமாய், நீயும் நானுமாய்,
இறுகுகம்
வகை பரமசுகம் அதனை அருள்.... ---
(அறுகுநுனி)
திருப்புகழ்.
உபய
துங்க பாதம்
---
இறைவனது
திருவடிகள் ஞானமும் கிரியையும் ஆகும். யான் எனது என்று அற்ற இடத்தில் அவைகள்
விளங்கும். தூய்மையானது. "யான் எனது
என்று அற்ற இடமே திருவடி" என்றார் குமரகுருபர அடிகள். தூய்மாயானவர்க்கே
தூயபதம் பெறமுடியும்.
அரி
விரிஞ்சர் தேட அரிய தம்பிரான் ---
மால்
அயன் அடிமுடி தேடிய வரலாறு. அதன் உட்பொருள்.
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல்
நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே
இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து
சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு.
தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி
பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும்
அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு
மாறாக முயன்றதால், அடிமுடி
காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன்.
இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு
நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது.
பத்தி ஒன்றாலேயே காணலாம்.
(4) "நான்" என்னும்
ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது"
என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே
இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன்
ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும்.
ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில்
"செத்திலாப்பத்து".
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக்
காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால்
பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்"
என்றார் திருமூலர்.
(7) பிரமன் - வாக்கு. திருமால் - மனம். வாக்கு மனம் என்ற
இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்"
அவன்.
(8) பிரமன்
- நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல்
இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம்
அருள்வாயே”.
அடி
பணிந்து அருளுக என்ற போது ---
தனக்குத்
தானே மகனாகிய தற்பரன் சீடபாவனையை விளக்கும்பொருட்டு, திருவடிகளில் பணிந்து "நாதா குமரா
நம: ஓம் என்னும் குடிலையின் உட்பொருளை ஓதி அருளும்" என்று வேண்டிக் கேட்டனர்.
நிருப
குருபர குமர என்றுஎன்று பத்திகொடு
பரவஅருளிய
மவுன மந்த்ரந்தனைப் பழைய
நினது
வழிஅடிமையும் விளங்கும்படிக்கு இனிதுஉணர்த்தி அருள்வாயே.
--- (அகரமுதலென) திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு
அருள் நாடகம் இது.
உண்மையிலே
சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத்
தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான், தழங்கி
நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின்
இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை
ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக்
கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப்
பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும்
திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும்
முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு
நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது
சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன
போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான்
மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில்
சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள்
தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால்
தகப்பன் என்றும், சிவமும் சத்தியும்
சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார்.
இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த
நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள்
அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த
யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு
ஆர்குழல் தூமொழியே.
என
வருவதும் அறிக.
`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம்
தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,
சத்தி
தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும்
மனமும் கடந்த மனோன்மனி
பேயும்
கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும்
அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும்
மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம்
ஆர் கவின்செய் மன்றில்
அனக
நாடகற்கு எம் அன்னை
மனைவி
தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே
புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே
உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. ---
அபிராமி அந்தாதி.
தவளே
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே
அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன்
இனி, ஒருதெய்வம் உண்டாக மெய்த்தொண்டு
செய்தே. ---
அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி
தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை
ஈன்றும்,
உவந்து
இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன்
பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம்
தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.--- சிவஞான
சித்தியார்.
பொருள்
இது என்று காண அருளும் மைந்த ---
ஓம்
என்ற மறைமுதல் எழுத்து, நட்சத்திர வடிவம், தண்ட வடிவம், குண்டல வடிவம், பிறைவடிவம், வட்ட வடிவம் என்ற ஐந்து வடிவங்களைத்
தாங்கி விளங்குகின்றது.
பிரணவம்
சமஷ்டிப் பிரணவம் எனவும், வியஷ்டிப் பிரணவம்
எனவும் இருவகைப்படும்.
சமஷ்டி
தொகுத்துக் கூறுவது. "ஓம்" என்பதாகும்.
வியஷ்டி
வகுத்துக் கூறுவது. அ உ ம என்பதாகும்.
இந்த
வியஷ்டிப் பிரணவமாகிய அகர உகர மகரம் மூன்றும் முறையே சத்துவம், ராஜசம், தாமதம் என்று மூன்று குணங்களையும், அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும், காருகபத்தியம், தாக்ஷிணாக்கியம், ஆகவனீயம் என்ற மூன்று அக்கினிகளையும், ருக், யஜுர் சாமம் என்னும் மூன்று
வேதங்களையும், பூமி அந்தரிக்ஷம்
சுவர்க்கம் என்னும் மூன்று உலகங்களையும், காயத்திரி, திருஷ்டுப், ஜகதீ என்ற மூன்று சந்தங்களையும்
உண்டாக்கி, அவைகட்குக் காரணமாக
விளங்கும் என்று அறிக.
அகரம்
வாய் திறத்தலினால் படைப்பையும்
உகரம்
இதழ் குவிவதினால் காத்தலையும்
மகரம்
வாய் மூடுதலினால் அழித்தலையும்
குறிப்பிக்கின்றமையால், சொல் பிரபஞ்சம், பொருள் பிரபஞ்சம் என்ற இருவகைப் பிரபஞ்சங்களும்
இப் பிரணவத்திலே தோன்றி நின்று ஒடுங்கும்.
"ஓம்"
என்னும் சமஷ்டிப் பிரணவம் எதைக் குறிக்குமெனில், மேற்சொன்ன அகர உகர மகரம் என்னும்
பாதங்கள் மூன்று மாத்திரையைக் குறிக்க, நான்காவதாக
உள்ள இந்த ஓங்காரம் என்னும் பாதம் அர்த்த மாத்திரையாகும். அது மிகவும் சூக்குமமான
நாத ரூபம்.
எனவே, ஓங்கராமானது, அ, உ, ம, நாதம், விந்து, கலை என்ற ஆறெழுத்தும் தன்னகத்தே
விளங்கும் மகாமநுவாகவும், எல்லாத் தேவர்கட்கும்
பிறப்பிடமாகவும், தன்னை
உச்சரிப்பார்க்கு பிறப்பு இறப்பைப் போக்க வல்லதாகவும் திகழ்கின்றது.
அத்தகைய
"பிரணவப் பொருள் யாமே" என்றும், "அறிவை அறிவது பொருள்" என்றும், தமக்குத் தாமே குருவாகிய தற்பரன்
உபதேசித்து அருளினார்.
அரவு
புனைதரு புனிதரும் வழிபட
மழலை
மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை
அறிவது பொருள்என அருளிய பெருமாளே. ---
(குமரகுருபர)
திருப்புகழ்.
ஓதுவித்த
நாதர் கற்க ஓதுவித்த முனிநாண
ஓர்எழுத்தில்
ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே. --- (வேதவெற்பிலே) திருப்புகழ்.
பிரணவத்தின்
உட்பொருளை முருகவேளை அன்றி யாரே பகர வல்லார்? வேதத்திற்கு முதலும் முடிவுமாக
விளங்கும் அத் தனிமந்திரத்தின் பொருளை வேதங்களை நன்கு ஓதிய பிரமதேவரே கூறமாட்டாது
குட்டுண்டனர் என்றால், நாம் அறிந்தது போல்
கூறுவது மிகை என்பதோடு, நகைப்புக்கு இடமும் ஆகும்..
தூமறைக்கு
எலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓம்
எனப்படும் ஓர்எழுத்து உண்மையை உணரான்,
மாமலர்ப்
பெருங் கடவுளும் மயங்கினன் என்றால்,
நாம்
இனிச் சில அறிந்தனம் என்பது நகையே. --- கந்தபுராணம்.
ஆதி
குருநாதா
---
சனகாதிகளாகிய
நால்வர்க்குக் கல்லாலின் புடை அமர்ந்து, எல்லாமாய்
அல்லதுமாய் இருந்த தனை இருந்தபடி இருந்து, சின்முத்திரையால் காட்டி, சொல்லாமல் சொன்ன தட்சிணாமூர்த்தியே
குருமூர்த்தம் ஆவார். அவர்க்கும் முருகவேள் குருமூர்த்தமாகி உபதேசித்தபடியால்
ஆதிகுருநாதன் என்றார்.
ஆதிகுருப்
புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் போற்றும்
திருப்புகழைக்
கேளீர் தினம். --- சிறப்புப் பாயிரம்.
குருவாய்
அரற்கும் உபதேசம் வைத்த
குகனே
குறத்தி மணவாளா... --- (மருவேசெறித்த) திருப்புகழ்.
எவர்தமக்கும்
ஞானகுரு ஏகாம்ப ரேசர்,
அவர்தமக்கு
ஞானகுரு யாரோ --- உவரியணை
கட்டினோன்
பார்த்திருக்கக் காதலவன் தன்தலையில்
குட்டினோன்
தானே குரு. --- காளமேகப்
புலவர்.
இனித்த
அலர் முடித்த சுரர் எவர்க்கும்
அருட்குருவாய் இருந்தாய் அன்றி,
உனக்கு
ஒருவர் இருக்க இருந்திலை,
ஆதலால் நின்அடி உளமேகொண்ட
கனத்த
அடியவருடைய கழல்கமலம்
உன்னுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும்
மரிப்பதுவும் ஒழிந்திடுமே
குறக்கொடியைச் சேர்ந்திட்டோனே. --- பாம்பன் சுவாமிகள்.
திருவிரிஞ்சை ---
விரிஞ்சன்
- பிரமன். பிரமதேவனால் பூசிக்கப் பெற்ற திருத்தலம். மிகவும் அருமையான திருத்தலம். பாலாற்றின்
கரையில் இருக்கின்றது. காட்பாடி, வேலூருக்கு மேற்கே 8 கல் தொலைவில் உள்ளது. புகைவண்டி
நிலையம் உண்டு. வரகவி மார்க்கசகாய தேவர் பாடியருளிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்
தமிழ் என்று ஒரு அருமையான நூல் இத் திருத்தலத்திற்கு உண்டு. தலபுராணமும் உண்டு.
மிகவும் அழகிய திருக்கோயில். இத் திருத்தலத்தினை அன்பர்கள் அவசியம் தெரிசிக்க
வேண்டும். இறைவர் திருநாமம் வழித்துணைவர். (மார்க்கசகாயர்)
கருத்துரை
பரசிவ
குருவே! வேல் வீரரே, திருவிரிஞ்சை மேவும் தேவ தேவே! உடல் பற்று நீங்கி, அத்துவிதப் பெருவாழ்வு பெற
அருள்புரிவீர்.
No comments:
Post a Comment