திருவாலங்காடு - 0686. பொன்றாமன்று





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொன்றாமன்று (திருவாலங்காடு)

முருகா!
அடியேனை ஆட்கொண்டு திருவருள் புரிவாயாக


தந்தானந் தாத்தம் தனதன
     தந்தானந் தாத்தம் தனதன
     தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான


பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
     நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
     பொன்றானென் றாட்டம் பெருகிய ......    புவியூடே

பொங்காவெங் கூற்றம் பொதிதரு
     சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
     புன்கூடோன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல

நின்றானின் றேத்தும் படிநினை
     வுந்தானும் போச்சென் றுயர்வற
     நிந்தாகும் பேச்சென் பதுபட ......      நிகழாமுன்

நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
     விஞ்சாதென் பாற்சென் றகலிட
     நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ......     நினைவாயே

குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
     கன்றாமுன் காத்துங் குவலய
     முண்டார்கொண் டாட்டம் பெருகிய ......   மருகோனே
  
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
     மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
     கொண்டேசென் றாட்கொண் டருளென ....மொழிவோனே

அன்றாலங் காட்டண் டருமுய
     நின்றாடுங் கூத்தன் திருவருள்
     அங்காகும் பாட்டின் பயனினை ......   யருள்வாழ்வே

அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
     தம்பாவந் தீர்த்தம் புவியிடை
     அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும்
     நன்று ஆம் அன்று, ர்க்கு இன்று உறுதுணை,
     பொன் தான் என்று ஆட்டம் பெருகிய ...... புவியூடே,

பொங்கா வெம் கூற்றம் பொதிதரு
     சிங்காரம் சேர்த்தி அங்கு உயரிய
     புன்கூடு ஒன்றாய்க் கொண்டு உறைதரும் ......உயிர்கோல

நின்றான், ன்று ஏத்தும் படி நினை-
     வும் தானும் போச்சு என்று உயர்வற
     நிந்தாகும் பேச்சு என்பது பட ......     நிகழாமுன்,
  
நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை
     விஞ்சாது என் பால் சென்று அகலிட
     நின்தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர ......நினைவாயே.

குன்றால் விண் தாழ்க்கும் குடைகொடு
     கன்று ஆ முன் காத்தும், குவலயம்
     உண்டார் கொண்டாட்டம் பெருகிய ...... மருகோனே!

மொந்து ஆர் பைந்தார்த் திண் குய, குற
     மின்தாள் சிந்தாச் சிந்தையில் மயல்
     கொண்டே சென்று, ட்கொண்டு அருள் ஏன.....மொழிவோனே!

அன்று ஆலங்காட்டு அண்டரும் உய
     நின்று ஆடுங் கூத்தன் திருவருள்
     அங்கு ஆகும் பாட்டின் பயனினை ......அருள்வாழ்வே!

அன்பால் நின் தாள் கும்பிடுபவர்
     தம் பாவம் தீர்த்து, ம் புவியிடை
     அஞ்சா நெஞ்சாக்கம் தரவல ......          பெருமாளே.


பதவுரை

         குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் --- (கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவரும்,

         குவலயம் உண்டார் கொண்டாட்டம் பெருகிய மருகோனே --- பூமியை உண்டவருமான திருமால் மிகவும் கொண்டாடுகின்ற திருமருகரே!

         கொந்தார் பைந்தார்த் திண் குய குறமின் தாள் சிந்தாச் சிந்தையில் மயல் கொண்டே --- பூங்கொத்துக்கள் நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்களை உடைய குறவர்குலக் கொடியாகிய திருவடிகள் விட்டு நீங்காத மனத்தில் மயக்கம் மிகக் கொண்டு,

         சென்று ஆட்கொண்டு அருள் என மொழிவோனே ---தினைப்புனத்தில் இருந்த அகிலாண்ட நாயகியிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவரே!

         அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் --- முன்னொரு காலத்தில் திருவாலங்காட்டில் (மண்ணுலக உயிர்கள் அல்லாது) தேவர்களும் உய்தி பெறும்படியாக நின்று ஊர்த்துவத் திருநடனம் புரிந்த சிவபெருமானது

         திருவருள் அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள்வாழ்வே --- திருவருளானது அங்குப் பொருந்தும்படியான தேவாரத் திருப்பதிகங்களின் பயனைத் திருஞானசம்பந்தராக வந்து அருளிச்செய்த செல்வமே!

         அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து --- அன்பினால் தேவரீருடைய திருவடிகளை வணங்குபவரின் பாவங்களை எல்லாம் தீர்த்து,

         அம்புவி இடை அஞ்சா நெஞ்சு ஆக்கம் தரவல பெருமாளே --- இந்த உலகில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும், ஆக்கம் தருவதாகிய உலகியல் செல்வத்தையும், அருளியல் செல்வத்தையும் தரவல்ல பெருமையில் மிக்கவரே!

         பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்று ஆம் அன்று --- சபையிலே இருந்து (தனது அறிவு, ஒழுக்கங்களால்) அழிவு இல்லாத புகழைப் பெருக்கும் மக்களும் உயிருக்கு இன்பத்தைத் தரமாட்டார்கள்.

         ஆர்க்கு இன்று உறுதுணை பொன்தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே --- யார்க்கும் இந்த நாளில் உற்ற துணையாக இருப்பது பொருட்செல்வம் ஒன்றுதான் என்று கருதி அலைகின்ற இந்த உலக வாழ்க்கையில்,

         பொங்கா வெம்கூற்றம் --- பெரும் கோபத்தோடு வருகின்ற கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக உள்ளான்.

         இங்கு பொதி தரு சிங்காரம் சேர்த்து --- நிறைந்த பொருள்களோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு,

     உயரிய புன்கூடு ஒன்றாய்க் கொண்டு உறைதரும் உயிர் கோல நின்றான் --- உயர்வாகக் கருதிய புன்மையான கூடாகிய இந்த உடலை ஒருபொருளாகக் கொண்டு, அதனுள் பொருந்திய உயிரோடு இங்கே இருந்தான்,  

         இன்று ஏத்தும் படி நினைவும் தானும் போச்சு என்று --- இன்று தேவரீரைப் புகழ்ந்து போற்றுகின்ற நினைவு கூட இல்லாமல் போய்விட்டான் என்று,

         உயர்வு அற நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழாமுன் ---மேன்மை அற்ற, நிந்தனைக்கு இடமான பேச்சு உண்டாவதன் முன்,

      நெஞ்சால் --- மனத்தாலும்,

     அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட --- ஐம்புலன்களாலும் உண்டாகிப் பெருகிய வினைகள் யாவும் என்னை விட்டு நீங்க,

       நின் தாள் தந்து --- தேவரீருடைய திருவடிகளைத் தந்து,

     ஆட்கொண்டு --- அடியைனே ஆண்டுகொண்டு,

     அருள் தர நினைவாயே --- திருவருள் புரியத் திருவுள்ளம் பற்றுவாயாக.


பொழிப்புரை

     கோவர்த்தன மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவரும்,  பூமியை உண்டவருமான திருமால் மிகவும் கொண்டாடுகின்ற திருமருகரே!

      பூங்கொத்துக்கள் நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்களை உடைய குறவர்குலக் கொடியாகிய திருவடிகள் விட்டு நீங்காத மனத்தில் மயக்கம் மிகக் கொண்டு, தினைப்புனத்தில் இருந்த அகிலாண்ட நாயகியிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவரே!

      முன்னொரு காலத்தில் திருவாலங்காட்டில் (மண்ணுலக உயிர்கள் அல்லாது) தேவர்களும் உய்தி பெறும்படியாக நின்று ஊர்த்துவத் திருநடனம் புரிந்த சிவபெருமானது திருவருளானது அங்குப் பொருந்தும்படியான தேவாரத் திருப்பதிகங்களின் பயனைத் திருஞானசம்பந்தராக வந்து அருளிச்செய்த செல்வமே!

      அன்பினால் தேவரீருடைய திருவடிகளை வணங்குபவரின் பாவங்களை எல்லாம் தீர்த்து, இந்த உலகில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும், ஆக்கம் தருவதாகிய உலகியல் செல்வத்தையும், அருளியல் செல்வத்தையும் தரவல்ல பெருமையில் மிக்கவரே!

     சபையிலே இருந்து (தனது அறிவு, ஒழுக்கங்களால்) அழிவு இல்லாத புகழைப் பெருக்கும் மக்களும் உயிருக்கு இன்பத்தைத் தரமாட்டார்கள். யார்க்கும் இந்த நாளில் உற்ற துணையாக இருப்பது பொருட்செல்வம் ஒன்றுதான் என்று கருதி அலைகின்ற இந்த உலக வாழ்க்கையில், பெரும் கோபத்தோடு வருகின்ற கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக உள்ளான். நிறைந்த பொருள்களோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, உயர்வாகக் கருதிய புன்மையான கூடாகிய இந்த உடலை ஒருபொருளாகக் கொண்டு, அதனுள் பொருந்திய உயிரோடு இங்கே இருந்தான்,  இன்று தேவரீரைப் புகழ்ந்து போற்றுகின்ற நினைவு கூட இல்லாமல் போய்விட்டான் என்று, மேன்மை அற்ற, நிந்தனைக்கு இடமான பேச்சு உண்டாவதன் முன், மனத்தாலும், ஐம்புலன்களாலும் உண்டாகிப் பெருகிய வினைகள் யாவும் என்னை விட்டு நீங்க, தேவரீருடைய திருவடிகளைத் தந்து, அடியைனே ஆண்டுகொண்டு, திருவருள் புரியத் திருவுள்ளம் பற்றுவாயாக.

விரிவுரை

பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்று ஆம் அன்று ---

பொன்றா - அழியா, இறவாத, தவறாத

மன்று - அவை, கழகம், சபை, நீதிமன்றம், மரத்ததடிப் பொதுவிடம், மெய்ம்மை, உறுதி, மணம்.

நன்று - நல்லது, சிறப்பு, பெரிது, அறம், இன்பம், நல்வினை, உதவி, துறக்கம், வாழ்வின் மேன்மை.

சபையிலே இருந்துகொண்டு தான் கற்ற கல்வியாலும் அதனால் பெற்ற அறிவாலும், ஒழுக்கத்தாலும் உண்மையை நிலைநாட்டி, நீதியை நிறுவி, அதனால் அழியாப் புகழைத் தானும் பெற்று, "இவன் தந்தை என் நோற்றான் கொல்" என்னும் சொல்லை உண்டாக்கி, பெற்ற தந்தைக்குப் புகழை உண்டாக்கிய புதல்வரும் உயிருக்கு நன்மை செய்யும் பொருள் ஆகமாட்டார்கள். உயிர் உடலை விட்டுப் பிரியும்போது மனைவி மக்கள் வந்து உதவமாட்டார்கள்.

அவர்கள் யாவரும் நமது வினையின் ஈட்டத்தால், ஈட்டிய வினைகளால் ஆன இன்பத்தையோ துன்பத்தையோ கழிப்பதற்குத் துணைபுரிய இறையருளால் வந்தவர்களே. அவர்கள் மீது பற்றுக் கொள்வதால் வேதனையே மிஞ்சும்.

தந்தையார் போயினார், தாயாரும் போயினார், தாமும் போவார்,
கொந்தவேல் கொண்ட்ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார், கொண்டு போவார்,
எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால், ஏழை நெஞ்சே!
அந்தண் ஆரூர்தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.
                                                                         --- திருஞானசம்பந்தர்.

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்
வினை உளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே.       --- அப்பர்.

தந்தை யார்? தாய் யார்? உடன்பிறந்தார்
         தாரம் ஆர்? புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்தவாறு எங்ஙனே? போமாறு ஏதோ?
         மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா.
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்,
         திகழ்மதியும் வாள்அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று
         எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கல் ஆமே.

எத்தாயர்? எத்தந்தை? எச்சுற்றத்தார்?
         எம்மாடு சும்மாடாம்? ஏவர் நல்லார்?
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை,
         சிறு விறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,
சித்தாய வேடத்தாய்! நீடு பொன்னித்
         திருஆனைக்கா உடைய செல்வா! என்தன்
அத்தா! உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய்கேனே.      --- அப்பர்.

உற்றாரு ஆர் உளரோ? - உயிர்
         கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு
         உற்றார் ஆர் உளரோ?                                          --- அப்பர்.
  
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும், காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்,
கொட்டி முழக்கி அழுவார், மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ? இறைவா! கச்சி ஏகம்பனே!    --- பட்டினத்தார்.

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே,
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாம் அளவு, எள் அளவு ஆகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள, என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.  --- பட்டினத்தார்.

ஊரும் சதம் அல்ல, உற்றார் சதம் அல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதம் அல்ல, பெண்டிர் சதம் அல்ல, பிள்ளைகளும்
சீரும் சதம் அல்ல, செல்வம் சதம் அல்ல, தேசத்திலே
யாரும் சதம் அல்ல, நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே!     --- பட்டினத்தார்.

வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய்
     வேளை நமனும் வருவானேல்,
தம்பி தனயர் துணை ஆமோ?
     தனயர் மனைவி வருவாரோ?
உம்பர் பரவும் திருத்தணிகை
     உயர் மாமலைமேல் இருப்பவர்க்கு
தும்பைக் குடலை எடுக்காமல்
     துக்க உடலை எடுத்தேனே.          ---  திருவருட்பா.


ஆர்க்கு இன்று உறுதுணை பொன்தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே ---

ஆட்டம் - அசைவு, அலைவு, சஞ்சாரம், விளையாட்டு, கூத்தாட்டம், சூது, அதிகாரம், தடுமாற்றம்.

"ஆடு அலைவு பட்ட அமரர்" என்றார் திருவகுப்பில் அடிகளார். சூரபதுமனது கொடுமைகளால் தடுமாற்றமும் அலைச்சலும் பட்டனர் அமரர். சூரபதுமன் ஆணவத்திற்கு அறிகுறி.

இங்கே மனிதர்கள், ஆணவத்தால் செருக்குண்ட மனிதர்களாகிய நாம் பொருள் தான் எல்லாவற்றையும் ஆக்குவது என்று எண்ணி, அருளை மறந்து, அறிவுத் தடுமாற்றத்தையும், அலைச்சலையும் அடைந்துகொண்டு வாழுகின்றோம்.

பொருளையே பெரிதாக எண்ணி, அதனை ஈட்டுவதிலேயே வாழ்நாளைக் கழிப்பர் மனிதர்.

பொருளான் ஆம் எல்லாம் என்று, ஈயாது, இவறும்
மருளான், ஆம் மாணாப் பிறப்பு. 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

கைப்பொருள் ஒன்றால்தான் எல்லாம் உண்டாகும் என்று எண்ணி, தான் ஈட்டிய பொருளைப் பிறர்க்கு ஈயாமல் கையிறுக்கம் செய்யும் மயக்க அறிவால் இழிந்த இந்தப் பிறப்பே உண்டாகும்.

எவ்விதங்களில் எல்லாம் பொருளைச் சேர்த்து, எங்கெங்கெல்லாம் சேமித்துக் குவிக்க முடியுமோ அங்கங்கெல்லாம் சேமித்து வைத்து, அதனைத் தானும் அனுபவிக்காமல் வாழ்பவன் உயிரோடு இருந்தாலும் செத்தவனாகவே கருதப்படுவான் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்,

வைத்தான் வாய் சான்ற பெரும் பொருள், அஃது உண்ணான்,
செத்தான், செயக் கிடந்தது இல்.

இப்படித் தான் தேடக்கூடிய பொருளை இன்னும் வெகுவாகச் சேர்ப்போம் என்று எண்ணி, பொருளை ஈட்டுவதிலேயே ஈடுபட்டு, புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்வது இந்த நிலத்துக்குச் சுமையே என்கின்றார் நாயனார்,

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம், நிலக்குப் பொறை.

புகழ் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது. அது ஈட்டிய பொருளை இல்லாதார்க்குத் தந்து உதவுவது. அதனை விரும்பாமல், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகச் செல்வத்தை ஈட்டவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு பொருள் சேர்த்து, தானும் அனுபவிக்காது, பிறர்க்கும் பயன் தராது வாழ்ந்து மடிந்து போகும் மக்களை பூமி பாரமாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

ஆக இவ்வாறான பூமி பாரங்கள் பிறக்காமல் இருப்பதே அவர்களுக்கும் நல்லது. உலகமக்கள் பிறருக்கும் நல்லது. "தோன்றின் புகழொடு தோன்றுக, அஃது இல்லார், தோன்றலின் தோன்றாமை நன்று" என்று தொகுத்து நமக்கு வழங்கினார் திருவள்ளுவ நாயனார்.

நன்மைக்கு உரிய குணங்கள் இல்லாத ஒருவன் பிறத்தல் தேவையில்லை.பிறந்து விட்டால் நல்லவனாகவே வாழவேண்டும். அப்படிப்பட்டவன் தான் சிறந்த இறை அன்பனாகவும், அடியானாகவும் வாழமுடியும் என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் பின்வரும் பாடலில் காட்டினார்.

குலம்பொல்லேன், குணம்பொல்லேன், குறியும் பொல்லேன்,
குற்றமே பெரிதுஉடையேன், கோலம் ஆய
நலம்பொல்லேன், நான்பொல்லேன், ஞானி அல்லேன்,
நல்லாரோடுஇசைந்திலேன், நடுவே நின்ற
விலங்கு அல்லேன், விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்,
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்,
இலம்பொல்லேன், இரப்பதே, ஈய மாட்டேன்,
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

இதன் பொருள்....
சார்ந்த கூட்டத்தால் நான் தீயவன் ஆக உள்ளேன். குணத்தாலும் தீயவனாக உள்ளேன். குறிக்கோளாலும் தீயாவனாக உள்ளேன். குற்றமாகிய செயலே பெரிது உடையவன் நான். நலம் பயத்தற்குரிய சிவவேடத்தாலும் தீயவன். எல்லாவற்றாலும் நான் தீயவனே. நான் ஞானி அல்லேன்.  நல்லவர்களோடு கூடிப் பழகுகின்றவன் இல்லை. பாவச் செயல்களை உடைய மக்கட்கும் அது இல்லாத பிற உயிர்கட்கும் இடையிலே வைத்துக் கருதத் தக்க ஒரு சார் விலங்கும் அல்லேன். மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கு அல்லாது ஒழிந்தேனும் அல்லேன். வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றல் உடையவன். பிறப்பாலும் நான் நல்லவன் இல்லை. என் செயலால் அதுவும் பொல்லாதவனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு, என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் எப்படி வாழ்ந்து ஈடேற வேண்டும் என்ற அறிவு சிறிதளவும் இல்லாத நான் என்ன செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.

வள்ளல் பெருமானின் இதே கருத்து அமைந்து திருவருட்பாப் பாடல் ஒன்றையும் இங்கே சிந்தித்தல் நன்மை பயக்கும். திருவருட்பாப் பாடல் இதோ....

குலத்திடையும் கொடியன்,ஒரு குடித்தனத்தும் கொடியேன்,
குறிகளிலும் கொடியன்,அன்றிக் குணங்களிலும் கொடியேன்,
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்,
வன்மனத்துப் பெரும்பாவி, வஞ்சநெஞ்சப் புலையேன்,
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன், பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன், பேய்க்கும்மிக இழிந்தேன்,
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன், நின்கருத்தை அறியேன்,
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

இப்பாடலின் பொருள்....
குலம் குடித்தனங்களிலும் குறி குணங்களிலும் நேர்மையில்லாதவனாகிய யான் மலத்திற் புழுக்கும் சிறு புழுக்களினும் கடையவன். வன்மை பொருந்திய மனத்தினை உடைய பெரும்பாவி.  வஞ்சம் நிறைந்த நெஞ்சினை உடைய புலைத் தன்மை கொண்டவன். நலமாகியவற்றைச் சிறிதும் நெருங்குதல் இல்லாதவன். பொல்லாத நாயும் கண்டு நகைக்கத்தக்க கீழ்மை உற்றுள்ளேன். பேயினும் இழிக்கத் தக்க யான் இந்நிலவுலகத்தில் பிறந்த காரணம் தெரியேன். பிறப்பித்த நின் திருவுள்ளம் யாதென்று அறியேன். நிர்க்குண நடராசப் பெருமானாகிய நிபுண மணியே எனக்கு உரைத்தருள்க.

வள்ளன்மை இல்லாதான் செல்வத்தில், மற்றையோன்
நல்குரவே போலும் நனி நல்ல, கொன்னே
அருள்இலன் அன்புஇலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப்படான்.        --- நீதிநெறி விளக்கம்.

பிறருக்குக் கொடுத்து உதவவேண்டும் என்று எண்ணாதவனுடைய செல்வத்தை வி, உதவிசெய்யும் குணம் நிறைந்த வறுமையானது சிறப்பு உடையதாகும். உதவி செய்யும் எண்ணம் உடையவனைப் பார்த்து, கருமித்தனம் உடையவனைப் பழிப்பது போல், இவன் கருணையற்றவன், அன்பு இல்லாதவன், என்மையான நெஞ்சம் படைத்தவன் என்று யாரும் பழித்துக் கூற மாட்டார்கள்.


பொங்கா வெம்கூற்றம் ---

பொங்குதல் - காய்ந்து கொதித்தல், கொந்தளித்தல், கோபித்தல், விரைதல்.

பெரும் கோபத்தோடு வருகின்ற கொடிய யமன் உடலில் இருந்து உயிரைக் கொண்டு போவதற்கு உள்ளவன். அவன் காலம் பார்த்து வருவதால் காலன் எனப்பட்டான். வாழ்நாள் இறுதி எது என்பது நமக்குத் தெரியாது. நீண்ட நெடுங்காலம் வாழப் போகின்றோம் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். எல்லா நாளும் நம்முடைய நாள்கள் என்று கருதி இருக்கின்றோம்.  ஆனால், நம்முடைய நாள் என்பது வரையறை செய்யப்பட்டு விட்டது என்பதே அறிகிலோம்.

"இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம்"

என்றது நாலடியார். இன்றைக்கு வருவானோ அல்லது நாளைக்கு வருவானோ அல்லது என்று வருவானோ இயமன் என்று எண்ணிக் கவலைப் படாதீர்கள். அவன் உங்கள் பின்னாலேயே நின்றுகொண்டு இருக்கின்றான்.

மலைமிசைத் தோன்றும் மதியம்போல், யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார், அல்லால்
எஞ்சினார் இவ்வுலகத்து இல்.                 ---  நாலடியார்.

மலைமேல் தோன்றும் முழுநலவைப் போன்ற யானை மீது வெண்கொற்றக் குடை நிழற்றச் சென்ற பேரரசர்கள் எல்லாம் ஒருநாள் எப்படியாவது இறந்தனர் என்றுதான் சொல்லப்படுகின்றதே ஒழி, மரணத்தை வென்று எவரும் இந்த உலகத்தில் எஞ்சி இருந்தது இல்லை.  எல்லோரும் ஒருநாள் இறந்து போவர். இந்த உடலும் அழியும்.

உலகத்திரே! உலகத்தீரே!
நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக் கேண்மின், சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை,
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்,
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்,
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்,
எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே,
 அவற்றுள்
இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று
துன்புறு நாளும் சிலவே, ஆதலால்
பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று
இடிகரை ஒத்தது இளமை,
இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்
இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை நாளை என்பீர் ஆகில், நாளை
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்

எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்
அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான் பொருள்தரப் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்
நல்லார் என்னான் நல்குரவு அறியான்
தீயார் என்னான் செல்வர் என்றுஉன்னான்
தரியான் ஒருகணம் தறுகணாளன்
உயிர் கொடு  போவான் உடல்கொடு போகான்...       ---  கபிலர் அகவல்.

இங்கு பொதி தரு சிங்காரம் சேர்த்து, உயரிய புன்கூடு ஒன்றாய்க் கொண்டு உறைதரும் உயிர் கோல நின்றான் ---

பொதி - நிறைவு, மூட்டை, பலபண்டம், நிதி.

கோலுதல் - வளைத்தல், திரட்டி வைத்தல், அள்ளுதல், விரித்தல், தொடங்குதல், உண்டாக்குதல், அமைத்தல்.

இவ்வாறு வாழ்வியல் இருக்கவும், தேடி நிறைந்த பொருள்களோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, உயர்வாகக் கருதிய புன்மையான கூடாகிய இந்த உடலை ஒருபொருளாகக் கொண்டு, அதனுள் பொருந்திய உயிரோடு இங்கே நேற்று வரையில் இருந்தான்,

இன்று ஏத்தும் படி நினைவும் தானும் போச்சு என்று ---

இன்று தேவரீரைப் புகழ்ந்து போற்றுகின்ற நினைவு கூட இல்லாமல் போய்விட்டான் என்று உலகவர் கூறுவர். இதுதான் உலக இயற்கை.

இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர்
நன்றிருந்த வார்த்தையும் நீ நாடிலையே - ஒன்றி

உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை,
மறம்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின்

நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடுஞ்சொல்
மருவும் குறட்பா மறந்தாய்  - தெருவில் …    

இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல்
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்

பறை ஓசை அண்டம் படீர் என்று ஓலிக்க
மறை ஓசை அன்றே மறந்தாய் - இறையோன்

புலன்ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் - நிலனொன்றி

விக்குள் எழ, நீர் விடுமின் என அயலோர்
நெக்கு உருகல் அந்தோ நினைந்திலையே - மிக்க அனலில்

நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ, உயிர்பல்
மெய்விடலும் கண்டனை நீ விண்டிலையே, - செய்வினையின்

வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
நாள்கழிதற்கு அதோ நடுங்கிலையே, - கோள்கழியும்

நாழிகை ஓர் நாளாக நாடினையே, நாளை ஒரு
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே, - நாழிகைமுன்

நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்தான்
சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே, - பின்றாது

தொட்டார் உணவு, டனே தும்மினார், அம்ம! உயிர்
விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே, - தட்டாமல்

உண்டார், படுத்தார், உறங்கினார், பேருறக்கம்
கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே, - வண்தாரார்

நேற்று மணம் புரிந்தார், நீறு ஆனார் இன்று என்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே, - வீற்றுறுதேர்

ஊர்ந்தார், தெருவில் உலாப்போந்தார், வானுலகம்
சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே, - சேர்ந்தாங்கு

என்னே இருந்தார், இருமினார், ஈண்டு இறந்தார்
அன்னே! எனக்கேட்டும் ஆய்ந்திலையே, - கொன்னே

மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே, முதிராக்
கருவும் பிதிர்ந்து உதிரக் கண்டாய், - கரு ஒன்-

றொடு திங்கள் ஐயைந்தில்  ஒவ்வொன்றில் அந்தோ
கெடுகின்றது என்றதுவும் கேட்டாய், - படும் இந்

நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய், - பலனுற்றே

காவென்று வீழ்ந்து, க் கணமே பிணமாகக்
கோ என்று அழுவார் குறித்திலையோ, - நோவு இன்றிப்

பாலன் என்றே அன்னைமுலைப் பால்அருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ, - மேல்உவந்து

பெற்றார் மகிழ்வுஎய்தப் பேசி விளையாடுங்கால்
அற்று ஆவி போவது அறிந்திலையோ - கற்று ஆயப்

பள்ளி இடுங் கால் அவனைப் பார நமன்வாயில்
அள்ளி இடும் தீமை அறிந்திலையோ, - பள்ளிவிடும்

காளைப் பருவமதில் கண்டார் இரங்கிட, அவ்
ஆளைச் சமன் கொள்வது ஆய்ந்திலையோ, - வேளைமண

மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்று, வனே
சாப்பிள்ளை ஆதல் எண்ணிச் சார்ந்திலையே, - மேற்பிள்ளை

மாடையேர்ப் பெண்டு உடன் இல் வாழுங்கால், பற்பலர்தாம்
பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ, - வீடல்இஃது

இக்கணமோ, மேல் வந்திடுங்கணமோ, அன்றி மற்றை
எக்கணமோ, என்றார் நீ எண்ணிலையே....      ---  திருவருட்பா.

பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால்,
     ப்ரியம் கூர வந்து ...... கரு ஊறி, 
பிறந்தார், கிடந்தார், ருந்தார், தவழ்ந்தார்,
     நடந்தார், தளர்ந்து ...... பிணம் ஆனார்,

அருங்கான் மருங்கே எடுங்கோள், சுடுங்கோள்,
     அலங்காரம் நன்று ...... இது என மூழ்கி,
அகன்று,  ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால்
     அலந்தேனை, அஞ்சல் ...... என வேணும். --- திருப்புகழ்.

உயர்வு அற நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழாமுன்..... அருள் தர நினைவாயே ---

இவ்வாறு உயர்வு இல்லா, நிந்தனைக்கு இடமான பேச்சு உண்டாவதன் முன், மனத்தாலும், ஐம்புலன்களாலும் உண்டாகிப் பெருகிய வினைகள் யாவும் என்னை விட்டு நீங்க, முருகப் பெருமான் தனது திருவடிகளைத் தந்து, ஆண்டுகொண்டு, திருவருள் புரியத் திருவுள்ளம் பற்றவேண்டும் என்று அடிகளார் நமக்காக வேண்டுகின்றார். நாமும் அவ்வாறே வேண்டிக் கொள்வோம்.

எத்தனையோ பிறவிகளை எடுத்து எடுத்து உழன்றோம். அத்தனை பிறவிகளிலும் மனத்தாலும், வாக்காலும், செயலாலும், அறிந்தும் அறியாமலும் வினைகளைப் பெருக்கி வந்துள்ளோம். அவற்றைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றால் இறைவன் திருவருள் ஒன்றினால் தான் முடியும். நம்முடைய முயற்சி ஒன்றினால் மட்டுமே அது முடியாது.  இறைவன் திருநாமத்தை வாயில் மந்திரமாக வைத்துக் கொண்டு, அவனுடைய அருட்புகழை எப்போதும் வாயாரப் பாடி வழிபட்டு, மனத்தினால் சிந்தித்து வரவேண்டும். அவ்வாறு இருந்தால், நமது வினைகள் அனைத்தும் நெருப்பிலே பட்ட விறகு போல் சாம்பலாகி ஓழியும்.

விண்ணுற அடுக்கிய விறகின், வெவ்வழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லையாம்,
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி, நின்று அறுப்பது நமச்சிவாயவே.      --- அப்பர்.

சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாம வேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன்நல்வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்
வெந்து அறும் வினையு நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே. ---  அப்பர்.
 
மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம் ஆய் வந்து, நாம் தூமலர் தூவித்தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும், செப்பு ஏல்ஓர் எம்பாவாய்.    --- ஆண்டாள் நாச்சியார்.

கோடிய மனத்தால் வாக்கினால் செயலால்
     கொடிய ஐம்புலன்களால் அடியேன்
தேடிய பாவம் நரகமும் கொள்ளா,
     செய் தவம் புரியினும் தீரா,
வீடிய பிரமர் சிரம் எலாம் கவர்ந்த
     விழவு ஆறா வீதி வெண்காடா,
ஆடிய பாதா, அம்பலத்து ஆடும்
     ஐயனே, உய்யுமாறு அருளே.    --- பட்டினத்தார்.

குன்றால் விண் தாழ்க்கும் குடைகொடு கன்று ஆ முன் காத்தும் ---

(கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவர் திருமால்.

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த வரலாறு

ஒரு நாள் நந்தகோபர் உபநந்தர் முதலிய ஆயர் குலத் தலைவர்கள் ஆண்டுகள் தோறும் நடத்திக்கொண்டு வந்த மகேந்திர யாகத்தைச் செய்ய ஆலோசித்துத் தொடங்கினார்கள். அதனை அறிந்த கண்ணபிரான், அந்த யாக வரலாற்றை அறிந்திருந்தும் நந்தகோபரைப் பார்த்து, தந்தையே! இந்த யாகத்ததனை யாரைக் குறித்துச் செய்கிறீர்கள்! இதனால் அடையப் போகும் பயன் யாது?” என்று வினவினார்.

நந்தகோபர் “குழந்தாய்! தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் மேக வடிவாய் இருந்து உயிர்களுக்கு பிழைப்பையும் சுகத்தையும் தருகின்ற தண்ணீரைப் பொழிகின்றான். மூன்று உலகங்களுக்கும் தலைவனாகிய அந்த இந்திரனது ஆணையால் இந்த மேகங்கள் சகல ஜீவாதாரமாக உள்ள மழையை பெய்கின்றன. ஆதலால் மேகவாகனனாய் இருக்கும் இந்திரனைக் குறித்து ஆண்டுகள் தோறும் ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, தூயோமாய் இருந்து, சிறந்த பால் தயிர் அன்னம் முதலிய பொருட்களைக் கொண்டு, இந்த இந்திர யாகத்தைச் செய்து இந்திரபகவானை ஆராதிக்கின்றோம். கமலக் கண்ணா! இவ்வாறு இந்திரனைப் பூசித்தவர்கள் இந்திரனுடைய அருளால் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுகின்றார்கள்; மேலும் அந்த இந்திரன், அநேக நற்பலன்களை வழங்குகின்றான். இவ்வாறு ஆராதிக்காதவர்கள் நன்மை அடைய மாட்டார்கள்” என்றார்.

மூன்று உலகங்களுக்கும் முதல்வன் என்று செருக்குக் கொண்ட இந்திரனுடைய அகங்காரத்தை நீக்கத் திருவுளடம் கொண்ட கண்ணபிரான், தந்தையை நோக்கி “தந்தையே! உயிர்கள் வினைகளுக்கு ஈடாய்ப் பிறக்கின்றன; முற்பிறப்புக்களில் செய்த வினைகளின் வண்ணம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன. வினைகளால் தான் சுகதுக்கங்கள் வருகின்றன. இதனை அன்றி இந்திராதி உலக பாலர்கள் பலன்களைக் கொடுக்க வல்லவராக மாட்டார்கள். இந்திரனால் ஒரு பலனும் கொடுக்க முடியாது. கர்மத்தை ஒழிக்கும் ஆற்றலும் இல்லை. உயிர்கள் தாங்கள் செய்த வினைக்குத் தக்கவாறு, பசு, பறவை, புழு, விலங்கு, தேவர், மனிதர்களாகப் பிறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன
என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுகத்துக்கத்திற்குக் கர்மமே முக்கிய காரணம். நம்முடைய புண்ணியமே மேகமாக இருந்து மழை பெய்கிறது.

தந்தையே! நமக்கு ஊர்கள், தேசங்கள், வீடுகள் ஒன்றும் இல்லை. காடு மலைகளில் வசித்துக் கொண்டு காட்டுப் பிராணிகள் போல் பிழைத்து வருகின்றோம். ஆதலால் இந்த மலையையும் மலைக்கு அதி தேவதையையும், பசுக்களையும் பூசியுங்கள். இப்போது இந்திர பூசைக்காகச் சேகரித்த பொருள்களை கொண்டு இந்த மலையை ஆராதியுங்கள், பற்பல பணியாரங்கள், பாயசம், பால், நெய், பருப்பு, அப்பம் இவற்றை தயாரித்து அந்தணர் முதல் சண்டாளர் நாய் வரை எல்லாப் பிராணிகளையும் திருப்தி செய்து வையுங்கள். பசுக்களுக்குப் புல்லைக் கொடுங்கள். பிறகு நீங்கள் அனைவரும் புசித்து, சந்தனாதி வாசனைகளை அணிந்து ஆடை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, இந்த மலையை வலம் வந்து வணங்குங்கள்” என்றார்.

இதனைக் கேட்ட கோபாலர்கள் அனைவரும் அதற்கு இசைந்து, கோவர்த்தன மலைக்கு அருகில் இருந்து அம் மலையை வழிபட முயன்றார்கள். அப்போது பகவானாகிய கண்ணபிரான் தமது யோக மகிமையால் தாமே ஒரு பெரிய மலையாக நின்றார். அவ் ஆயர்களிலும் தாம் ஒருவராக இருந்து, “ஆயர்களே! இதோ இந்த மலைக்கு அதிதேவதையே நம்மைக் காக்கும் பொருட்டு இங்கு எழுந்தருளியிருக்கிறார்.  இவரை நீங்கள் அன்புடன் ஆராதனை செய்யுங்கள்?” என்றார். ஆயர்கள் அதனைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்து பயபக்தி சிரத்தையுடன் அருக்கிய பாத்திய ஆசமனீயம் தந்து, மனோபாவமாக அபிஷேகம் செய்து, சந்தன புஷ்ப மாலைகளைச் சாத்தி தூபதீபங்களைக் காட்டி, அர்ச்சித்து, வாத்தியங்களை முழக்கி - பால், நெய், பருப்பு, அன்னம், பழம், தாம்பூலம் முதலியவற்றை நிவேதித்து வழிப்பட்டார்கள். மலை வடிவாயுள்ள பகவான் அவற்றை புசித்து அருள் புரிந்தார். கண்ணபிரானும் ஆயர்களுடன் அம்மலையை வணங்கி, “நம்மவர்களே! இதோ மலைவடிவாயுள்ள தேவதை, நாம் நிவேதித்தவைகளை உண்டு நமது பூசையை ஏற்றுக்கொண்டார்; இம்மலை நம்மைக் காத்து அருள் புரியும்” என்று கூறினார். கோபாலர்கள் மகிழ்ந்து மலையை வலம் வந்து வணங்கித் துதித்து நின்றார்கள். பிறகு அம்மலை வடிவாக நின்ற பகவான் மறைந்தார். ஆயர்கள் கோவர்த்தனம் முதலிய மலைகட்கு தூபதீபம் காட்டி ஆராதித்து வணங்கி, பசுக்களை அலங்கரித்து தாங்களும் உணவு கொண்டு, அலங்கரித்துக் கொண்டு மலையை வலம் வந்து மகிழ்ந்தார்கள்.

ஆயர்கள் வழக்கமாய்ச் செய்துவந்த பூசையை மாற்றியதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபித்து, ஊழிக்கால மேகங்களை அழைத்து “மேகங்களே! இளம் பிள்ளையும் தன்னையே பெரிதாக மதித்து இருக்கின்றவனுமாகிய இந்த கிருஷ்ணனுடைய வார்த்தையைக் கேட்டு மூவுலகங்கட்கும் முதல்வனாகிய என்னை இந்த ஆயர்கள் அவமதித்தார்கள். புத்தி கெட்டு கேவலம் இந்த மலையை ஆராதித்தார்கள். ஆதலால், நீங்கள் உடனே இந்த கிருஷ்ணனையும், ஆயர்களையும், பசுக்களையும் வெள்ளத்தில் அழித்து கடலில் சேர்த்து அழியுமாறு பெருமழையை இடைவிடாது பொழியுங்கள்” என்று ஆணை தந்தான். இவ்வாறு கட்டளையிட்ட இந்திரன் தானும் ஐராவதத்தின் மேல் ஊர்ந்து, தேவர்கள் சூழ, ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சண்ட வாயுக்களை மேகங்களுக்குச் சகாயமாக ஏவினான். மேகங்கள் ஊழிக்காலமென உலகங்கள் வருந்த இடியுடன் ஆகாயத்தில் வியாபித்து, மின்னல் கல் மழையை ஆயர்பாடியின் மீது பெய்தன. அப்பெரு மழையால் எங்கும் தண்ணீர் மயமாகியது. பசுக்கூட்டங்கள் பதறியோடின. கன்றுகள் பயந்து தாய்ப் பசுக்களைச் சரண் புகுந்தன. எருதுகளும் இரிந்தன. இடையர்கள் இந்தப் பெரிய ஆபத்தைக் கண்டு பிரமாண்டம் கிழிந்து போயிற்றோ, ஊழிக்காலம் வந்துவிட்டதோ என்று நடு நடுங்கி கண்ணபிரானிடம் ஓடிவந்து “கண்ணா மணிவண்ணா!” என்று முறையிட்டு சரணாகதி அடைந்தார்கள். கண்ணபிரான் “மக்களே! கல் மழைக்கு அஞ்ச வேண்டாம். குழந்தைகளுடனும் பசுக்களுடனும், பெண்மணிகளுடனும் வாருங்கள். பகவான் காப்பாற்றுவார்” என்று சொல்லி பெரிய மலையாகிய கோவர்த்தனத்தைத் தூக்கி, ஒரு சிறு பிள்ளை மழைக்காலத்தில் உண்டாகும் காளானைப் பிடுங்கிக் குடையாகப் பிடிப்பதுபோல் ஒரு கரத்தால் பிடித்தார். வராகமூர்த்தியாகிப் பூமண்டலத்தை ஒரு கோட்டால் தாங்கிய பெருமானுக்கு இது பெரிய காரியம் அல்ல.  ஒரு யானையின் தும்பிக்கையில் ஒரு தாமரை மொக்கு இருப்பது போல், பகவான் கரத்தில் அம்மலையானது விளங்கியது. கண்ணபிரான், “நம்மவர்களே! இம்மலையின் கீழ் யாதொரு குறைவும் இன்றி நீங்கள் எல்லாரும் வந்து சுகித்து இருங்கள். இந்த மலை விழுந்துவிடுமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பிரமாண்டங்கள் இடிந்து இம்மலைமேல் விழுந்தாலும் இது விழாது” என்று அருளிச் செய்தார். அதுகண்ட ஆயர்கள் அற்புதம் அடைந்து கோவினங்களுடனும் மனைவி மக்களுடனும் அம்மலையின் கீழ் சுகமாயிருந்து மழைத் துன்பமின்றி பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு அந்த ஊழிமேகங்கள் ஏழு நாள் இரவும் பகலும் பெரு மழையைப் பெய்தும் கோபாலர்கள் துன்பமின்றி இருக்கக் கண்ட இந்திரன் கண்ணபிரானுடைய மகிமையை உணர்ந்து பயந்து, மேகங்களை அனுப்பிவிட்டு பெருமானைச் சரணமடைந்தான். மழை நின்ற பிறகு ஆயர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லுமாறு செய்து அம்மலையைப் பழையபடியே வைத்தனர்.

அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
     ஆனாயரும் ஆநிரையும் அலறி,
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப,
     இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்தமலை
தம்மைச் சரண் என்ற தம்பாவை உரைப்புனம்
     மேய்கின்ற மான் இனங் காண்மின் என்று
கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்
     கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.      ---பெரியாழ்வார்.

நிரைபரவி வர, வரை உளோர் சீத மருதினொடு
     பொரு சகடு உதை அது செய்து, மாய மழை சொரிதல்
     நிலைகுலைய, மலை குடையதாவே கொள் கரகமலன் ......மருகோனே.
                                                                  ---  (இரவியென) திருப்புகழ்.

கர குடையினில் நிரைவர, இசைதெரி
     சதுரன், விதுரன் இல் வருபவன், ளையது
     திருடி அடிபடு சிறியவன் நெடியவன், ...... மதுசூதன்,

திகிரி வளை கதை வசி தநு உடையவன்,
     எழிலி வடிவினன், அரவுபொன் முடிமிசை
     திமித திமிதிமி என நடம் இடும் அரி ...... மருகோனே!
                                                                 ---  (தகரநறுமலர்) திருப்புகழ்.


குவலயம் உண்டார் கொண்டாட்டம் பெருகிய மருகோனே ---
  
மண் உண்ட மாயவனான திருமால் மிகவும் கொண்டாடுகின்ற திருமருகரன் முருகப் பெருமான்.

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே!
குல தொல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே.   --- நம்மாழ்வார்.

வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும்
பைஇள அரவு அல்குப் பாவையொடும் உடனே
கொய் அணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.       --- சுந்தரர்.


கொந்தார் பைந்தார்த் திண் குய குறமின் தாள் சிந்தாச் சிந்தையில் மயல் கொண்டே, சென்று ஆட்கொண்டு அருளென மொழிவோனே ---

பூங்ககொத்துக்கள் நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்களை உடைய குறவர்குலக் கொடியாகிய திருவடிகள் விட்டு நீங்காத மனத்தில் மயக்கம் மிகக் கொண்டு, தினைப்புனத்தில் இருந்த அகிலாண்ட நாயகியிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவர் முருகப் பெருமான்.

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                    
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் ---

முன்னொரு காலத்தில் திருவாலங்காட்டில் (மண்ணுலக உயிர்கள் அல்லாது) தேவர்களும் உய்தி பெறும்படியாக நின்று ஊர்த்துவத் திருநடனம் புரிந்தவர் சிவபெருமான்.

திருவாலங்காட்டின் பெருமையைச் சிவபெருமான் சொல்லக் கேட்ட சுநந்த முனிவர், பெருமான் அருளிய வண்ணம் தாண்டவ அருட்கோலத்தைக் காண விழைந்து, திருவாலங்காடு சென்று தவம் புரிந்து இருந்தனர். கண்ணுதல் பெருமானது கைவிரல் அணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விடத்தைக் கக்க, பெருமான் “நம்மைக் கருதாது தருக்குடன் நீ செய்த தீமைக்காகத் திருக்கைலையினின்று நீங்குக” எனப் பணித்தனர். நாகம் நடுநடுங்கிப் பணிய, சிவமூர்த்தி, “திருவாலங்காட்டில் அநேக ஆண்டுகளாக அருந்தவம் இயற்றும் சுநந்தருடன் சண்ட தாண்டவத்தைத் தரிசித்துப் பிறகு வருதி” என்று அருளிச் செய்தனர். கார்க்கோடகன் கருடனுக்கு அஞ்ச, எம்பெருமான் “இத் தீர்த்தத்தில் முழுகி அங்குள்ள முத்தி தீர்த்தத்தில் எழுக” என்று அருள் பாலிக்க, அரவு அவ்வாறே ஆலவனம் வந்து, சுநந்தரைக் கண்டு தொழுது, தனது வரலாற்றைக் கூறி நட்புகொண்டு தவத்து இருந்தது. சுநந்தர் நெடுங்காலம் தவத்தில் இருப்ப, அவரைப் புற்று மூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்துவிட்டது. அதனால் அவர் முஞ்சிகேச முனிவர் எனப் பெயர் பெற்றனர். இது நிற்க,

நிசுபன், சும்பன் என்னும் அசுரர் இருவர் ஒப்பாரு மிக்காரும் இன்றி, பல தீமைகளைச் செய்து வந்தனர். அத் துன்பத்திற்கு அஞ்சிய தேவர்கள் உமாதேவியாரை நோக்கி அருந்தவம் செய்தனர். அகிலாண்டநாயகி அமரர் முன் தோன்றி, “உங்களைத் துன்புறுத்தும் அசுரரை அழிப்பேன்” என்று அருளிச்செய்து, மலைச்சாரலை அடைந்து, தவ வடிவத்தைக் கொண்டு உறைகையில், சண்டன் முண்டன் என்னும் அவுணர் இருவர் அம்பிகையை அடைந்து “நீ யார்? தனித்திருக்குங் காரணம் என்ன? சும்பனிடம் சேருதி” என்னலும், உமாதேவியார், “தவம் இயற்றும் யான் ஆடவர்பால் அணுகேன்” என்று கூற, அவ்வசுரர் சும்பன்பால் சென்று தேவியின் திருமேனிப் பொலிவைக் கூறி, அவனால் அனுப்பப்பட்ட படையுடன் வந்து அழைத்தும் அம்பிகை வராமையால், வலிந்து இழுக்க எண்ணுகையில் இமயவல்லி, சிறிது வெகுள, அம்மையார் தோளிலிருந்து அநேகம் சேனைகளும் ஒரு சக்தியும் தோன்றி, அவற்றால், அசுர சேனையும் சண்டனும் முண்டனும் அழிந்தனர். உமாதேவியார் “சண்டணையும் முண்டனையும் கொன்றதனால் சாமுண்டி எனப் பெயர் பெற்று உலகோர் தொழ விளங்குதி” என அச்சக்திக்கு அருள் புரிந்தனர்.

அதனை அறிந்த நிசும்பன், சும்பன் என்போர் வெகுண்டு ஆர்த்து, அளப்பற்ற அசுர சேனையுடன் வந்து, அம்பிகையை எதிர்த்துக் கணைமாரி பெய்தனர். அகில ஜக அண்டநாயகி தனது உடலினின்றும் சத்தமாதர்களையும் சிவதூதியரையும் உண்டாக்கிப் போருக்கு அனுப்பி, அவர்களால் அசுரசேனையை அழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையும் கொன்றருளினார்.

அவ்விரு நிருதர்கட்கும் தங்கையாகிய குரோதி என்பவள் பெற்ற இரத்த பீசன் என்று ஒருவன் இருந்தான். அவன் தனது உடலினின்றும் ஒரு துளி உதிரம் தரைமேல் விழுந்தால், அத்துளி தன்னைப்போல் தானவன் ஆமாறு வரம் பெற்றவன். அவன், இச்செய்தி அறிந்து இமைப் பொழுதில் எதிர்த்தனன். அந் நிருதனுடன் சத்தமாதர்கள் சமர் செய்கையில், அவன் உடம்பினின்றும் விழுந்த உதிரத் துளிகளில் இருந்து, அவனைப் போன்ற அசுரர்கள் பல ஆயிரம் பேர் தோன்றி எதிர்த்தனர். இவ்வற்புதத்தைக் கண்ட சத்த மாதர்கள் அம்பிகையிடம் ஓடிவந்து கூற, அம்பிகை வெகுள, அவர் தோளினின்றும் பெரிய உக்கிரத்துடன் காளி தோன்றினாள். “பெண்ணே; யான் இரத்த பீசனைக் கொல்லும்போது உதிரத்துளி ஒன்றும் மண்ணில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்திக் குடிக்கக் கடவாய்” என்று பணித்து, இரத்த பீசனை அம்பிகை எதிர்த்து, காளி உதிரத்தைப் பருக, இறைவியார் இரத்த பீசனை சங்கரித்து அருளினார். இமையவரைத் தத்தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, காளியை மகிழ்வித்து அவளுக்கு சாமுண்டி என்ற பெயரும் தெய்விகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில் உறைதலும் ஆகிய நலன்களைத் தந்தருளி, சத்த மாதர்கட்கும் அருள்புரிந்து மறைந்தருளினார்.

காளி, அசுரர் உதிரம் குடித்த ஆற்றலாலும், உமையிடம் பெற்ற வரத்தாலும் இறுமாந்து ஊன்களைப் புசித்து, மோகினி, இடாகினி, பூத பிசாசுகள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய், உலகம் முழுவதும், உலாவி, திருவாலங்காட்டிற்கு அருகில் வந்து அனைவருக்கும் துன்பத்தைச் செய்து வாழ்ந்திருந்தனர்.

ஒரு நாள் திருவாலங்காடு சென்ற நாரத முனிவருக்குக் காளியின் தீச்செயலை கார்கோடக முனிவர் கூற, நாரதர் கேட்டுச் செல்லுகையில் காளி விழுங்க வர, அவர் மறைந்து சென்று திருமாலிடம் கூறி முறையிட்டார். திருமால் சிவபெருமானிடஞ் சென்று, “எந்தையே! காளியின் தருக்கை அடக்கி அருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய, முக்கட்பெருமான் “இப்போதே காளியின் செருக்கை அடக்க வடாரண்யத்திற்கு வருவோம்” என்று திருவாய் மலர்ந்து, சுநந்த முனிவர் கார்க்கோடக முனிவர்கட்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு திருவாலங்காட்டிற்கு எழுந்தருளினார்.

கூற்றை உதைத்த குன்றவில்லி, வயிரவ வடிவு கொண்டனர். உடன் வந்த பூதங்களுடன் காளியின் சேனை எதிர்த்து வலி இழந்து காளியிடம் கூற, அவள் போர்க்கோலம் தாங்கி வந்து, அரனாரைக் கண்டு அஞ்சி “நிருத்த யுத்தம் செய்வோம்” எனக் கூற, கண்ணுதற்கடவுள் இசைந்து, முஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனம் தந்து திருநடனத்திற்குத் தேவருடன் வந்தருளினார். அக்காலை அமரர் அவரவர்கட்கு இசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். நவரசங்களும் அபநியமும் விளங்க வாத்தியங்களுக்கு ஒப்ப பாண்டரங்கம் ஆகிய சண்ட தாண்டவத்தைக் காளியுடன் அதி அற்புத விசித்திரமாகச் செய்தருளினார்.

இவ்வாறு நடனஞ் செய்கையில், பெருமானது திருச்செவியில் இருந்து குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் விழ, அதை இறைவரே திருவடி ஒன்றினால் எடுத்துத் தரித்து ஊர்த்துவ தாண்டவம் செய்ய, காளி செயலற்று நாணிப் பணிந்தனள். சிவபெருமான் “நீ இங்கு ஒரு சத்தியாய் இருத்தி” எனத் திருவருள் புரிந்து, இரு முனிவரும், எண்ணில்லா அடியவரும் தமது தாண்டவத் திருவருட் கோலத்தை எந்நாளும் தெரிசிக்க திருவாலங்காட்டில் எழுந்தருளியிருந்தார்.

அறுகினை முடித்தோனை, ஆதாரம் ஆனவனை,
     மழு உழை பிடித்தோனை, மாகாளி நாணமுனம்
     அவைதனில் நடித்தோனை, மாதாதையே எனவும் .....வருவோனே!
                                                                     --- (தலைவலி) திருப்புகழ்.

கொங்கை திரங்கி நரம்பு எழுந்து
         குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்
பங்கி சிவந்துஇரு பற்கள் நீண்டு
         பரடுஉயர் நீள்கணைக் கால்ஓர் பெண்பேய்
தங்கி அலறி உலறு காட்டில்
         தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
         அப்பன் இடம்,திரு ஆலங் காடே.

ஒப்பினை இல்லவன் பேய்கள் கூடி,
         ஒன்றினை ஒன்றுஅடித்து ஒக்கலித்து,
பப்பினை இட்டுப் பகண்டை பாட,
         பாடு இருந்த அந் நரி யாழ் அமைப்ப,
அப்பனை, அணி திருஆலங்காட்டு எம்
         அடிகளை, செடிதலைக் காரைக்கால் பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
         சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே.    --- காரைக்காலம்மையார்.

திருவருள் அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள்வாழ்வே ---

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர சுப்ரமணியர்களுள் ஒருவர் முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு உக்கிரப் பெருவழுதியாகத் தோன்றியது. இதனயுணராதார் முருகப் பெருமானே உக்கிரப் பெருவழுதியாகத் தோன்றினார் எனக் கூறி இடர்ப்படுவார். முருகவேள் பிறப்பில்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று போற்றி உள்ளதை அறிக.

இப்படியே, சாருபம் பெற்ற அபர சுப்ரமணிய மூர்த்திகளில் ஒன்றே திருஞானசம்பந்தராக வந்தது. இதை கூர்த்த மதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருளாகிய பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தாரன் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதை உணரவேண்டும்.

எல்லை இல்லா நீற்று நெறியைப் பரப்பி, பரசமயத் தருக்கினை அறுக்க, இறையருளால் அவதரித்தவர் திருஞானசம்பந்தப் பெருமான். மேன்மை கொள் சைவ நீதி அப் பெருமானால் உலகமெல்லாம் விளங்கியது. அற்புதமான தேவாரத் திருப்பதிகங்களை பெருமான் உலகம் உய்ய அருள் புரிந்தார். அவர் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிங்களை நாளும் ஓதுவார்க்கு நன்மைகள் பல நிகழ்வது கண்கூடு. இறைவன் திருவருள் நிரம்பும்.

அழிந்து புவனம் ஒழிந்திடினும்
     அழியாத் தோணிபுரத்தின் மறை-
யவர்கள் குலத்தின் உதித்து, அரனோடு
     அம்மை தோன்றி அளித்த வள்ளச்

செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
     சிவிகை ஏறி, மதுரையில்போய்,
செழியன் பிணியும், சமண் பகையும்,
     தேவி துயரும் தீர்த்து அருளி,

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
     மதுரம் கனிந்து, கடை துடிக்க
வடித்துத் தெளிந்த, செந்தமிழ்த் தே-
     வாரப் பாடல் சிவன் கேட்க

மொழிந்து, சிவந்த கனிவாய்ச் சண்-
     முகனே முத்தம் தருகவே!
முத்துக் குமரா! திருமலையின்
     முருகா! முத்தம் தருகவே.


அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து, அம்புவி இடை அஞ்சா நெஞ்சு ஆக்கம் தரவல பெருமாளே ---

இறைவனை உள்ளன்போடு வணங்கவேண்டும். பயன் கருதி வணங்குதல் கூடாது. எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைக்க வேண்டும். கொல்லா விரதத்தை மேற்கொண்டு ஒழுகவேண்டும். அப்படிப்பட்ட அடியவர்கள் முற்பிறவிகள் தோறும் புரிந்த தீவினைகளின் பயன் விளையாதபடி அடியோடு ஒழித்து அருள்வான் இறைவன்.

"பாதமலர் மீதலி போத மலர் தூவிப் பாடும் அவர் தோழத் தம்பிரானே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்". ஆதலால், "ஆடும் பரி, வேல், அணி சேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்" என்றார் அடிகளார் கந்தர் அனுபூதியில். முருகப் பெருமானை உள்ளத்திலே ஞான மலர்களைக் கொண்டு வழிபடுபவர்க்கு அவர் படும் துன்பங்கள் தீர, பெருமான் மயில் ஏறி வந்து அருள் புரிவான்.

புறப்பூசையை விடவும் அகப்பூசையே சிறந்தது. புறப்பூசை அகப்பூசையில் முடியவேண்டும். அரும்பு மலர் ஆகவேண்டும். மலர் காயாக வேண்டும், காய் கனி ஆகவேண்டும்.

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே 
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே.        --- தாயுமானார்.

பின் வரும் அருட்பாடல்கள் இதனைத் தெளிவு பட விளக்கும்.

ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்,
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்,
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு,
ஞானத்தாய் உனை நானும் தொழுவனே. --- அப்பர்.

பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர்ஐந்துஇட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோல்உடை ஆடைவீ ரட்டரே.   --- அப்பர்.

தேனப் போதுகள் மூன்றொடு ஓர்ஐந்துடன்
தான்அப் போதுஇடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேனல் ஆனை உரித்தவீ ரட்டரே.            --- அப்பர்.

அகப்பூசைக்கு உரிய அட்ட புட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்.

புகைஎட்டும் போக்குஎட்டும் புலன்கள் எட்டும்
         பூதலங்கள் அவைஎட்டும் பொழில்கள் எட்டும்
கலைஎட்டுங் காப்புஎட்டும் காட்சி எட்டும்
         கழற்சே வடிஅடைந்தார் களைகண் எட்டும்
நகைஎட்டும் நாள்எட்டும் நன்மை எட்டும்
         நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகைஎட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
         திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.  --- அப்பர்.

நலம் என்றது, ஞானத்தை. அது மிக்கார் உடைய உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியன ஆகும் மலர்கள் எட்டாவன, `கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன.

அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
         ஐம்புலனும் அடக்கிஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
         உள்இருக்கும் புராணர்கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
         கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
         மணம்செய்யும் மிழலையாமே.       --- திருஞானசம்பந்தர்.

         உள்ளத்தில் பொருந்திய அன்பு உடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்து இருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

மெய்ம்மையாம் உழவைச் செய்து
         விருப்புஎனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
         பொறைஎனும்  நீரைப் பாய்ச்சித்
தம்மையும்  நோக்கிக் கண்டு
         தகவுஎனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்பர் ஆகில்
         சிவகதி விளையும் அன்றே.              --- அப்பர்.

காயமே கோயில் ஆகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்று அவிக் காட்டி னோமே.  ---  அப்பர்.

உயிராவணம் இருந்து, உற்று நோக்கி
         உள்ளக் கிழியின் உருவு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத் தந்தால்,
         உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி,
அயிரா வணம் ஏறாது ஆன்ஏறு ஏறி,
         அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிரா வணமே என் அம்மா னே,நின்
         அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.   --- அப்பர்.

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன், கர்ம
                 துட்ட தேவதைகள் இல்லை,
      துரியம் நிறை சாந்த தேவதையாம் உனக்கே
                 தொழும்பன், அன்பு அபிடேக நீர்,
உள்உறையில் என் ஆவி நைவேத்தியம், ப்ராணன்
                 ஓங்கும் மதி தூபதீபம்,
      ஒருகாலம் அன்று, து சதாகால பூசையா
                 ஒப்புவித்தேன் கருணைகூர்,
தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே!
                 தெளிந்த தேனே! சீனியே!
      திவ்யரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே!
                 தெவிட்டாத ஆனந்தமே!
கள்ளன்அறிவு ஊடுமே மெள்ளமௌ வெளியாய்க்
                 கலக்க வரு நல்ல உறவே!
      கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தம் இடு
                 கருணா கரக்கடவுளே.            --- தாயுமானார்.
         

இறைவன் தன்னை வழிபட்ட அடியவர்களுக்கு அருள் புரியும் திறத்தை வள்ளல் பெருமான் பின்வருமாறு பாடி அருளினார்.

பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டுஅடிமை
வேண்டி விறகு எடுத்து விற்றனையே - ஆண்டுஒருநாள்

வாய்முடியாத் துன்பு கொண்ட வந்திக்குஓர் ஆளாகித்
தூய்முடிமேல் மண்ணும் சுமந்தனையே........ஆய்துயர

மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக்காய் குதிரைச்
சேவகன்போல் வீதிதனில் சென்றனையே-மாவிசையன்

வில்அடிக்கு நெஞ்சம் விரும்பியதுஅல்லால்ஒருவன்
கல்அடிக்கும் உள்ளம் களித்தனையே-மல்லலுறும்

வில்வக்கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே-சொல்அகலின்

நீளுகின்ற நெய்அருந்த நேர்எலியை மூவுலகம்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே-கோள்அகல

வாய்ச்சங்கு நூல்இழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட் சோழன்எனக் கொண்டனையே-ஏச்சுறுநல்

ஆறுஅடுத்த வாகீசர்க்கு ஆம் பசியைக் கண்டு, கட்டுச்
சோறு எடுத்துப் பின்னே தொடர்ந்தனையே-கூறுகின்ற

தொன்மைபெறுஞ் சுந்தரர்க்குத் தோழன்என்று பெண்பரவை
நன்மனைக்குந் தூது நடந்தனையே.... --- திருவருட்பா.

சிறந்த அடியார்க்கு அஞ்சாநெஞ்சம் உண்டாகும்.  அப்பர் பெருமானைப் போல. தன் அடியவர்களுக்கு இறைவன் உலகியல் நலங்களையும், அருளியல் நலங்களையும் வழங்குவான்.

கருத்துரை

முருகா! அடியேனை ஆட்கொண்டு திருவருள் புரிவாயாக


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...