திருவேற்காடு - 0691. ஆலம்போல் எழுநீலம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆலம்போல் எழுநீலம்  (திருவேற்காடு)

முருகா!
எண்ணில்லாத பிறவிகளை எடுத்து உழலும்
துயரம் தீர அருள் புரிவாய்.


தானந்தா தனதான தானந்தா தனதான
     தானந்தா தனதான ...... தனதான


ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
     மாளம்போர் செயுமாய ...... விழியாலே

ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
     ஆடம்பார் குவிநேய ...... முலையாலே

சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
     வேளங்கார் துடிநீப ...... இடையாலே

சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
     காலந்தா னொழிவேது ...... உரையாயோ

பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
     மாதம்பா தருசேய ...... வயலூரா

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
     பாசந்தா திருமாலின் ...... மருகோனே

வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
     வீறங்கே யிருபாலு ...... முறவீறு

வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

ஆலம்போல் எழுநீலம் மேல் அங்கு ஆய் வரிகோல
     மாளம் போர் செயும் மாய ...... விழியாலே,

ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர வார
     ஆடம்பார் குவி நேய ...... முலையாலே,

சாலந் தாழ்வுறும் ஆல ஏல் அங்கு ஓர் பிடியாய
     வேள் அம் கார் துடி நீப ...... இடையாலே,

சாரம் சார்வு இலனாய் அநேகம் காய் யமன்மீறு
     காலந்தான் ஒழிவு ஏது ...... உரையாயோ?

பால் அம்பால் மணம் நாறு கால் அங்கே இறுஇலாத
     மாது அம்பா தரு சேய! ...... வயலூரா!

பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அரவீர
     பாசம் தா திருமாலின் ...... மருகோனே!

வேல் அம்பு ஆர் குறமாது மேலும், பார் தருமாதும்
     வீறு அங்கே இருபாலும் ...... உற, வீறு

வேத அந்தா! அபிராம! நாத அந்தா! அருள்பாவு
வேலங்காடு உறைசீல ...... பெருமாளே.


                  பதவுரை

      பால் அம்பால் மண நாறுகால் --- உலகம் முழுதும் நீரால் சூழப்பட்டு இருக்கும் காலத்திலே,

     அங்கே இறிலாத மாது --- அழிவில்லாமல் இருக்கின்ற மாதா ஆகிய

     அம்பா தரு சேயே --- அம்பிகையின் அருளால் வந்த குழந்தைவேலரே!

     வயலூரா --- வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!

      பாடு அம்பு ஆர் திரி சூல --- பெருமை வாய்ந்த முத்தலைச் சூலத்தால்,

     நீடு அந்தக அர வீர --- நெடுங்காலமாக இருந்த அந்தகன் என்னும் அசுரனைச் சங்கரித்த வீரராகிய சிவபெருமானுடைய

     பாசம் தா திருமாலின் மருகோனே --- அன்புக்கு உரியவரான திருமாலின் திருமருகரே!

       வேல் அம்பு ஆர் குற மாது --- வேலைப் போன்றும், அம்பைப் போன்றும் கண்களை உடைய குறவர்குல மகளாகிய வள்ளிநாயகியும்,

     மேல் உம்பார் தரு மாதும் --- தேவலோகத்தில் வளர்ந்தவளாகிய தெய்வயானை அம்மையும்,

      வீறு அங்கே இரு பாலும் உற --- பெருமையுடன் இருபாலும் விளங்க

     வீறு வேத அந்தா --- வீற்றிருக்கின்ற வேதத்தின் முடிவில் விளங்குபவரே!

     அபிராம  --- அழகரே!

     நாத அந்தா --- நாத முடிவாக விளங்குபவரே!

      அருள் பாவு வேலங்காடு உறை சீல --- திருவருள் பொருந்திய திருவேற்காடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தூயவரே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

     ஆலம் போல் எழு --- ஆலாகால விடத்தைப் போல் எழுந்து,

     நீலம் மேல் அங்கு ஆய் --- நீலோற்பல மலருக்கு மேலானதாக விளங்கி,

     வரி கோல --- ரேகைகள் பொருந்தி,

     மாளம் போர் செயு(ம்) மாய விழியாலே --- கண்டவர் உயிரைக் கவரும்படியாகப் போர் புரிய வல்ல மாயம் நிறைந்த கண்களாலும்,

      ஆரம் பால் தொடை சால ஆலும் --- முத்து மாலைகள் மிகவும் பொருந்தி அசைகின்,

     கோபுர ஆர ஆடம்பார் குவி --- கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள,

     நேய முலையாலே --- அன்புக்கு இடமான முலைகளாலும்,,

      சாலம் தாழ்வுறும் --- மிகவும் இளைத்து இருப்பதும்,

     மால ஏல் --- மயக்கத்தை விளைப்பதும்,

     அங்கு ஓர் பிடியாய --- ஒரு பிடி அளவினதாக இருப்பதும்,

     வேள் அங்கு ஆர் --- விருப்பத்தை விளைவிப்பதும்,

     துடி நீப இடையாலே --- உடுக்கை போன்று அமைந்துள்ள இடையாலும்,

     சாரம் சார்விலனாய் --- பயனற்றவனாய் வாழ்ந்து,

     அநேகம் காய் --- அநேகமான பிறவிகளை எடுத்து,

     யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது --- இயமனால் அழிவுறுகின்ற காலம் தான் ஒழியாதோ?

     உரையாயோ --- அதை அடியேனுக்கு அருளமாட்டீரா?


பொழிப்புரை

         உலகம் முழுதும் நீரால் சூழப்பட்டு இருக்கும் காலத்திலே,
அழிவில்லாமல் இருக்கின்ற மாதா ஆகிய அம்பிகையின் அருளால் வந்த குழந்தைவேலரே!

     வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!

         பெருமை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், நெடுங்காலமாக இருந்த அந்தகன் என்னும் அசுரனைச் சங்கரித்த வீரராகிய சிவபெருமானுடைய அன்புக்கு உரியவரான திருமாலின் திருமருகரே!

         வேலைப் போன்றும், அம்பைப் போன்றும் கண்களை உடைய குறவர்குல மகளாகிய வள்ளிநாயகியும், தேவலோகத்தில் வளர்ந்தவளாகிய தெய்வயானை அம்மையும், பெருமையுடன் இருபாலும் விளங்க வீற்றிருக்கின்ற வேதத்தின் முடிவில் விளங்குபவரே!

     அழகரே!

     நாத முடிவாக விளங்குபவரே!

         திருவருள் பொருந்திய திருவேற்காடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தூயவரே!

     பெருமையில் மிக்கவரே!

     ஆலாகால விடத்தைப் போல் எழுந்து, நீலோற்பல மலருக்கு மேலானதாக விளங்கி, ரேகைகள் பொருந்தி, கண்டவர் உயிரைக் கவரும்படியாகப் போர் புரிய வல்ல மாயம் நிறைந்த கண்களாலும், முத்து மாலைகள் மிகவும் பொருந்தி அசைகின்,
கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள, அன்புக்கு இடமான முலைகளாலும், மிகவும் இளைத்து இருப்பதும், மயக்கத்தை விளைப்பதும், ஒரு பிடி அளவினதாக இருப்பதும், விருப்பத்தை விளைவிப்பதும், உடுக்கை போன்று அமைந்துள்ள இடையாலும், பயனற்றவனாய் வாழ்ந்து, அநேகமான பிறவிகளை எடுத்து, இயமனால் அழிவுறுகின்ற காலம் தான் ஒழியாதோ? அதை அடியேனுக்கு அருளமாட்டீரா?


விரிவுரை

ஆலம் போல் எழு நீலம் மேல் அங்கு ஆய் வரி கோல, மாளம் போர் செயு(ம்) மாய விழியாலே ---

ஆலம் - ஆலகால விடம். 

விடமானது உண்டாரையே கொல்லும். 

மாளப் போர் செயும் என்பது மாளம்போர் செயும் என வந்தது.

விலைமாதர் விழியானது மண்டாரையும் கொல்லும் தன்மை வாய்ந்தது.

ஆரம் பால் தொடை சால ஆலும், கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே ---

ஆரம் - முத்து.

ஆலுதல் - அசைதல்.

முத்து மாலைகள் பொருந்தி அசைகின், கோபுரம் போல் எழுந்து குவிந்துள்ள  விலைமாதரின் முலைகள் ஆடவரை மயக்கும்.

சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய, வேள் அங்கு ஆர், துடி நீப இடையாலே ---

சாலம் - மிகவும்.

நிபம் - உண்மை, உவமை. நிபம் என்னும் சொல் நீபம் என வந்தது.

விலைமாதரின் இடையானது ஒரு பிடி அளவாகவும், உடுக்கை போன்றும் இருக்கும். அதன் அழகு ஆடவரை மயக்கி விருப்பம் கொள்ளச் செய்யும்.

சாரம் சார்விலனாய் ---

சாரம் - பயன்.

விலைமாதர் மீது கொண்ட இச்சையால் பயனற்ற வாழ்க்கையே அமையும்.

அநேகம் காய், யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது? உரையாயோ ---

பிறவியின் பயனாக அறநூல்களையும்,  அருள் நூல்களையும் பயின்று, வாலறிவன் ஆகிய இறைவன் திருவடியை அடையாமல், எண்ணில்லாத பல பிறவிகளை இந்த உயிரானது எடுத்து உழலும்.

புல்லாய்ப் பூடாகிப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்..   --- திருவாசகம்.

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்,
அருந்தின மலம் ஆம், புனைந்தன அழுக்கு ஆம்,
உவப்பன வெறுப்பு ஆம், வெறுப்பன உவப்பு ஆம்,
என்று இவை அனைத்தும் உணர்ந்தனை, அன்றியும்,
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன,
தின்றனை அனைத்தும், அனைத்தும் நினைத் தின்றன,
பெற்றனை அனைத்தும், அனைத்தும் நினைப் பெற்றன,
ஓம்பினை அனைத்தும், அனைத்தும் நினை ஓம்பின,
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை,
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை,
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை..      ---  பட்டினத்தடிகள்.

எந்தத் திகையினும், மலையினும், உவரியின்
     எந்தப் படியினும், முகடினும் உள, பல
     எந்தச் சடலமும் உயிர்இயை பிறவியின் .....உழலாதே
இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற, நளி-
     னம் பொன்கழல் இணைகளில் மருமலர் கொடு
     என் சித்தமும் மனம் உருகி நல் சுருதியின் ...முறையோடே
சந்தித்து, அரஹர சிவசிவ சரண்என
     கும்பிட்டு, ணைஅடி அவை என தலைமிசை
     தங்க, புளகிதம் எழ, இருவிழி புனல் ...... குதிபாய,
சம்பைக் கொடிஇடை விபுதையின் அழகுமுன்
     அந்தத் திருநடம் இடு சரண் அழகு உற
     சந்தச் சபைதனில் எனது உளம் உருகவும் .....வருவாயே.      --- திருப்புகழ்.

எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத பலபிறவி
எடுத்தே இளைத்து இங்கு அவை நீங்கி,
இம்மானுடத்தில் வந்து உதித்து,
மண்ணில் வாழ்க்கை மெய்யாக 
மயங்கி உழன்றால் அடியேன் உன்
மாறாக் கருணை தரும் பாத
வனசத் துணை என்று அடைவேன்.         --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

பால் அம்பால் மண நாறுகால், அங்கே இறிலாத மாது, அம்பா தரு சேயே ---

     "ஈறிலாத" என்னும் சொல் பாடல் நோக்கி, "இறிலாத" என்று வந்தது.

     ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்து இந்த உலகமானது பிரளய வெள்ளத்தால் சூழப்பட்டு இருக்கும். எல்லாம் அழிந்த பின்னும்,அழியாமல் இருப்பது பரம்பொருள் ஒன்றே ஆகும். அப்படி நித்தியப் பொருளாய் உள்ள அம்பிகையின் திருவருளால் அவதரித்தவர் முருகப் பெருமான்.

வயலூரா ---

     அவர் தனது அடியார்களுக்கு அருள் புரிதல் பொருட்டு, வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவர்.

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர ---

     பெருமை வாய்ந்த முத்தலைச் சூலத்தால் அந்தகாசூரனைச் சங்கரித்தவர் சிவபெருமான்.

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே.     --- திருமந்திரம்.

அறை ஆர் கழல் அந்தன்தனை அயின்மூஇலை அழகார்
கறை ஆர் நெடு வேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,
முறைஆயின பலசொல்லிஒண் மலர்சாந்துஅவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்று அடைவோமே.  ---  திருஞானசம்பந்தர்.

ஞாலத்தை உண்டதிரு மாலும் மற்றை
         நான்முகனும் அறியாத நெறியார், கையில்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
         தொல்உலகில் பல்உயிரைக் கொல்லும் கூற்றைக்
கால்அத்தால் உதைசெய்து காதல் செய்த
         அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்,
பால் ஓத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
         பரஞ்சுடரைக் கண்டுஅடியேன் உய்ந்த வாறே.   --- அப்பர்.

அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்
         அருமறையைத் தேர்க் குதிரை ஆக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்
         சுடுகாடு நடமாடும் இடமாக் கொண்டார்
மந்தரம்நல் பொருசிலையா வளைத்துக்கொண்டார்
         மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார்
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார்
         சமண்தீர்த்துஎன் தன்னைஆட் கொண்டார் தாமே.       ---  அப்பர்.

     அந்தகாசுர வதம் நிகழ்ந்த திருத்தலம் திருக்கோவலூர் வீரட்டம் என்பர். சிவபெருமானைத் தமது நலம் வேண்டி ஆகிலும், பிறர் நலத்தின் பொருட்டு ஆகிலும் வழிபடக் கருதும் நல்லோர், அப்பெருமானது அருள் வரலாறுகளுள் தாம் கருதிய பயனுக்கு ஏற்புடையவற்றை நினைந்து, அவனை அச்செயலைச் செய்தவனாகவும், அப்பெயரை உடையவனாகவுமே கருதி இலிங்கத்தை நிறுவி வழிபடுவர். அதனால், அவ் வரலாறுகள் நிகழ்ந்த இடம் அவையே என்று கொள்ளப்படும். இதுவே தலபுராணங்களின் உண்மை.

     சிவபெருமான் அந்தகாசுரனை மூவிலை வேலால் அழித்த வரலாற்று உண்மை, அவனது ஆணவமலத்தை இச்சா ஞானக் கிரியை வடிவாய்த் தொழில் படும் தனது சத்தியாகிய முத்தலைச் சூலத்தைக் கொண்டு சிவபெருமான் அழித்தான்  என்னும் உண்மையை விளக்கும்` என்று தெளிய வேண்டும்.

     இரணியன், (இரணிய கசிபு) இரணியாட்சன் என்னும் இருவருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்கவனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் பைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகாசுரப் படலத்தில் காணலாம்.


பாசம் தா திருமாலின் மருகோனே ---

     சிவபெருமானின் அன்புக்கு உரியவரான திருமாலின் திருமருகர் முருகப் பெருமான்.

வேல் அம்பு ஆர் குற மாது, மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இரு பாலும் உற வீறு வேத அந்தா ---

     வேலைப் போன்றும், அம்பைப் போன்றும் கண்களை உடைய குறவர்குல மகளாகிய வள்ளிநாயகியும், தேவலோகத்தில் வளர்ந்தவளாகிய தெய்வயானை அம்மையும், பெருமையுடன் இருபாலும் விளங்க வீற்றிருக்கின்ற முருகப் பெருமான் வேதத்தின் முடிவில் விளங்குபவர்.

அபிராம  ---

     அவர் அழகு மிக்கவர்.

நாத அந்தா ---

     முப்பத்தாறு தத்துவங்களில் முதலாக உள்ள நாத தத்துவத்தின் முடிவில் விளங்குபவர்.

அருள் பாவு வேலங்காடு உறை சீல ---

     திருவருள் பொருந்திய திருவேற்காடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தூயவர் முருகப் பெருமான். 

     திருவேற்காடு என்னும் திருத்தலம் தொண்டை நாட்டில், சென்னை - பூவிருந்தவல்லி சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் வேலப்பன்சாவடி என்ற இடத்தை அடைந்து, பிறகு வலது புறமாகப்  பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

     சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

     நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இஙகு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது.

     மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம்.

கருத்துரை

முருகா! எண்ணில்லாத பிறவிகளை எடுத்து உழலும் துயரம் தீர அருள் புரிவாய்.






















No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...