திரு இரும்பூளை





திரு இரும்பூளை
(ஆலங்குடி)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     ஆலங்குடி என்று வழங்கப் பெறுகின்றது.

         கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரகத் தலங்களில் குரு தலமாக விளங்குகிறது.


இறைவர்              : காசியாரண்யேசுவரர், ஆபத்சகாயர்

இறைவியார்           : ஏலவார் குழலி

தல மரம்                : பூளைச்செடி

தீர்த்தம்                  : அமிர்த புஷ்கர்ணி

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - சீரார் கழலே.

         குரு பரிகாரத் தலமாகக் கருதப்படும் திருத்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும் இத்தலம் பஞ்ச ஆரணியத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் மாலைக்கால பூஜை வேளையில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இக்கோவில் திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினான். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான் என்பது வரலாறு. மற்றுமொரு புராணச் செய்தியின் படி தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடையும் போது உண்டான ஆலகால விடத்தை சிவபெருமான் உண்ட தலம் இதுவாகும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால் இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றதாம். இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

         திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்கு 9 பரிவாரத் தலங்கள் உள்ளன. அவற்றில்

ஆலங்குடி தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது.

 மற்ற பரிவாரத் தலங்கள் முறையே

1) திருவலஞ்சுழி (விநாயகர்),
2) சுவாமிமலை (முருகன்),
3) திருவாவடுதுறை (நந்திகேஸ்வரர்),
4) சூரியனார்கோவில் (நவக்கிரகம்),
5) திருவாப்பாடி (சண்டிகேஸ்வரர்),
6) சிதம்பரம் (நடராஜர்),
7)சீர்காழீ (பைரவர்), மற்றும்
8) திருவாரூர் (சோமஸ்கந்தர்).

         நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. இத்தல விநாயகர் கலங்காமற் காத்த விநாயகர் என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விடத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிரகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருக்கிறது. அடுத்து வரும் உள் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்த திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் இருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேசுவரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்து கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.

         இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி தான் பிரபலமானவர். வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் சிறப்பு. மகாலட்சுமி தட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள் என்றும் சொல்லப்படுகின்றது. ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ் பாடிய மகாவிஷ்ணுவும் சீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோவில் கொண்டார். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுவதாக நம்புகின்றனர்.

         தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.

         சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "வாய்த்த பெரும் பூகம் தெங்கில் பிறங்க வளம் கொள்ளும் இரும்பூளை மேவி இருந்தோய்" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 399
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்
செப்ப அருஞ்சீர்த் திருஆறை வடதளியில் சென்றுஇறைஞ்சி
ஒப்புஅரிய தமிழ்பாடி உடன்அமரும் தொண்டர்உடன்
எப்பொருளும் ஆய்நின்றார் இரும்பூளை எய்தினார்.

         பொழிப்புரை : பட்டீச்சுரம் என்னும் அப்பதியில் விரும்பி எழுந்தருளிய ஆளுடைய பிள்ளையார் சொலற்கரிய சிறப்பினையுடைய பழையாறைவடதளியில் சென்று வணங்கி, ஒப்பில்லாத தமிழ்ப் பதிகத்தைப் பாடித் தாம் உடனாய் விரும்பிய தொண்டர்களுடனே எல்லாப் பொருள்களுமாய் நின்ற சிவபெருமானின் `திரு இரும்பூளையினை' அடைந்தார்.

         குறிப்புரை : பழையாறை வடதளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.
  
பெ. பு. பாடல் எண் : 400
தேவர்பிரான் அமர்ந்ததிரு இரும்பூளை சென்று எய்த,
காவணம் நீள் தோரணங்கள் நாட்டி, உடன் களிசிறப்பப்
பூவண மாலைகள் நாற்றி, பூரணபொற் குடம் நிரைத்து, அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத் திருத்தொண்டர்  எதிர்கெண்டார்.

         பொழிப்புரை : பிள்ளையார், தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருவிரும்பூளையினைச் சென்றடையப் பந்தல்களைத் தோரணங்களுடன் நிறுத்திப் பெருகிய மகிழ்ச்சி ஓங்குதலால் நிறம்பொருந்திய மலர்களால் அமைந்த அழகிய பெரிய மாலைகளைத் தொங்கவிட்டு, நீர்நிறைந்த குடங்களை நிரல்பட அமைத்து, அனைவரும் போற்றத் தொண்டர்கள் அங்கு எதிர் கொண்டனர்.


பெ. பு. பாடல் எண் : 401
வண்தமிழின் மொழிவிரகர்
         மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத்து எதிர்இழிந்துஅங்கு
         அவர்தொழத்தா மும்தொழுதே,
அண்டர்பிரான் கோயிலினை
         அணைந்து, இறைஞ்சி, முன்நின்று,
பண்தரும்இன் இசைப்பதிகம்
         பரம்பொருளைப் பாடுவார்.

         பொழிப்புரை : வளம் பொருந்திய தேவாரத் தமிழையருளும், முகனமர்ந்து இன்சொற்களைப் பேசும் தலைவரான பிள்ளையார், அழகிய முத்துச் சிவிகையினின்றும் தம்மை எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர் கூட்டத்தின் எதிரே இறங்கி, அவர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, தேவர் தலைவரின் திருக்கோயிலை அடைந்து, வணங்கித் திருமுன் நின்று, பண்ணிசையை வெளிப்படுத் தும் இனிய இசையுடைய திருப்பதிகத்தால், மேலாய பொருளான இறைவரைப் பாடுவாராய்,


பெ. பு. பாடல் எண் : 402
நிகர்இலா மேருவரை அணுவாக நீண்டானை,
நுகர்கின்ற தொண்டர்தமக்கு அமுதாகி நொய்யானை,
தகவுஒன்ற அடியார்கள் தமைவினவி, தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்விரியப் பாடினார்.

         பொழிப்புரை : ஒப்பற்ற பெரிய மேருமலையும் ஓர் அணுவாகு மாறு நீண்ட பெருமையுடையவராகியும், துய்ப்பனவும், உய்ப்பனவும் எல்லாம் தாமேயாகத் துய்க்கின்ற தொண்டர்களுக்கு அமுதமாயும் எளியராயும் விளங்கி நிற்கும் அம்மேலாய பொருளைத் தகுதி மிக்க அடியவரை வினவும் தன்மையில், தமிழ் வல்லுநரான பிள்ளையார், சொல்லப்படுகின்ற அரிய மறைகளின் உட்பொருள் விளங்கப் பாடினர்.

         குறிப்புரை : திருஇரும்பூளையில் பாடியருளிய பதிகம் `சீரார் கழலே' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுவதும் அடியவர்களிடம் பலபட அமைந்த வினாக்களைக் கேட்டு மகிழும் வினவுரைப் பதிகமாக அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


2.036 திருஇரும்பூளை                   பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சீர்ஆர் கழலே தொழுவீர் இதுசெப்பீர்,
வார்ஆர் முலைமங் கையொடும் உடன்ஆகி
ஏர்ஆர் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
கார்ஆர் கடல்நஞ்சு அமுதுஉண் டகருத்தே.

         பொழிப்புரை :சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக.


பாடல் எண் : 2
தொழல்ஆர் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்,
குழல்ஆர் மொழிக்கோல் வளையோடு உடன்ஆகி
எழில்ஆர் இரும்பூ ளைஇடங் கொண்டஈசன்
கழல்தான் கரிகான் இடை ஆடுகருத்தே.

         பொழிப்புரை :வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 3
அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே,
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
பொன்போல் சடையில் புனல்வைத்த பொருளே.

         பொழிப்புரை :அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!


பாடல் எண் : 4
நச்சித் தொழுவீர் கள்நமக்கு இதுசொல்லீர்,
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி
இச்சித்து இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
உச்சித் தலையில் பலிகொண்டு உழல்ஊணே.

         பொழிப்புரை :சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சிமாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக.


பாடல் எண் : 5
சுற்றுஆர்ந்து அடியே தொழுவீர் இதுசொல்லீர்,
நல்தாழ் குழல்நங் கையொடும் உடன்ஆகி
எற்றே இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
புற்றுஆடு அரவோடு என்புபூண் டபொருளே.

         பொழிப்புரை :சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 6
தோடுஆர் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்,
சேடுஆர் குழற்சே யிழையோடு உடன்ஆகி
ஈடாய் இரும்பூ ளைிடம் கொண்டஈசன்
காடுஆர் கடுவே டுவன் ஆனகருத்தே.

         பொழிப்புரை :இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 7
* * * * *

பாடல் எண் : 8
ஒருக்கும் மனத்துஅன் பர்உள்ளீர் இதுசொல்லீர்,
பருக்கை மதவே ழம்உரித் துஉமையோடும்
இருக்கை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
அரக்கன் உரம்தீர்த்து அருள்ஆக் கியவாறே.

         பொழிப்புரை :ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 9
துயர் ஆயினநீங் கித்தொழும் தொண்டர்சொல்லீர்,
கயல்ஆர் கருங்கண் ணியொடும் உடன்ஆகி
இயல்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகியமொய்ம்பே.

         பொழிப்புரை :துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக.


பாடல் எண் : 10
துணைநன் மலர்தூய்த் தொழும்தொண் டர்கள்சொல்லீர்,
பணைமென் முலைப்பார்ப் பதியோடு உடன்ஆகி
இணைஇல் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
அணைவுஇல் சமண்சாக் கியம்ஆக் கியவாறே.

         பொழிப்புரை :திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதிதேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமண பௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக.


பாடல் எண் : 11
எந்தை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
சந்தம் பயில்சண் பையுள்ஞா னசம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத்து இவைவல்லார்
பந்தம் ஆறுத்துஓங் குவர்பான் மையினாலே.

         பொழிப்புரை :எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வேதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...