திருவாலங்காடு - 0685. புவிபுனல் காலும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புவிபுனல் காலும் (திருவாலங்காடு)

முருகா!
பத்தி எனக்கு அருளி, முத்தியை அளிப்பாயாக.


தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான


புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
     புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே

பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
     புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்

பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
     பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்

படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
     பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே

சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
     திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே

திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
     ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்

குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
     குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா

குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புவிபுனல் காலும் காட்டி, சிகியொடு வானும் சேர்த்தி,
     புதுமன மானும் பூட்டி, ...... இடையூடே

பொறி புலன் ஈர் ஐந்து ஆக்கி, கருவிகள் நாலும் காட்டி,
     புகல்வழி நால் ஐந்து ஆக்கி, ...... வருகாயம்

பவவினை நூறும் காட்டி, சுவமதி தானும் சூட்டி,
     பசுபதி பாசம் காட்டி, ...... புலமாயப்

படிமிசை போ என்று ஓட்டி, அடிமையை நீ வந்து ஏத்தி,
     பரகதி தானும் காட்டி ...... அருள்வாயே.

சிவமய ஞானம் கேட்க, தவ முநிவோரும் பார்க்க,
     திருநடம் ஆடும் கூத்தர் ...... முருகோனே!

திருவளர் மார்பன் போற்ற, திசைமுகன் நாளும் போற்ற,
     ஜெகமொடு வானம் காக்க, ...... மயிலேறிக்

குவடொடு சூரன் தோற்க, எழுகடல் சூதம் தாக்கி,
     குதர்வடி வேல் அங்கு ஓட்டு ...... குமரஈசா!

குவலயம் யாவும் போற்ற, பழனையில் ஆலங்காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.


பதவுரை

         சிவமய ஞானம் கேட்க --- சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும்,

         தவ முநிவோரும் பார்க்க --- தவம் நிறைந்த முநிவர்கள் கண்டு மகிழவும்,

         திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே --- ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானுடைய அருளால் அவதரித்த முருகப் பெருமானே!

         திருவளர் மார்பன் போற்ற --- திருமகளைத் தனது வலமார்பில் வைத்துள்ள திருமால் போற்றவும்,

         திசைமுகன் நாளும் போற்ற --- பிரமதேவன் நாள்தோறும் போற்றவும்,

         ஜெகமொடு வானம் காக்க மயிலேறி --- மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் காக்கும் பொருட்டு மயில் வாகனத்தில் ஊர்ந்து,

         குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதம் தாக்கி --- கிரெளஞ்ச மலை அழிந்ததோடு, தோற்றுப் போய், கடலிலே மாமரமாக எழுந்த சூரபதுமனையும் தாக்கி,

         குதர் வடிவேல் அங்கு ஓட்டு குமர ஈசா --- அடியோடு அழிக்க, கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய குமாரக் கடவுளே!

         குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் --- உலகம் யாவும் போற்றும்படியாக பழையனூரைத் தன்னகத்தே கொண்ட திருவாலங்காடு என்னும் திருத்தலத்தில்,

         குறமகள் பாதம் போற்று பெருமாளே --- குறமகளாகிய வள்ளிநாயகியார் தேவரீரது திருவடிகளைப் போற்ற எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         புவிபுனல் காலும் காட்டி --- மண், நீர், காற்று என்னும் பூதங்களோடு,

         சிகியொடு வானும் சேர்த்தி --- நெருப்பு, வான் என்னும் இரண்டு பூதங்க்ளையும் சேர்த்து (உயிரை அதனுள் வைத்து),

         புதுமன மானும் பூட்டி --- புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டி,

         இடையூடே பொறிபுலன் ஈர் ஐந்து ஆக்கி --- அவைகளுக்கு இடையே ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள் என்ற பத்தையும் இணைத்து,  

         கருவிகள் நாலும் காட்டி --- மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற அந்தக் கரணங்கள் என்னும் நான்கு அகக் கருவிகளைப் பிணைத்து,

         புகல் வழி நால் ஐந்து ஆக்கி --- சொல்லப்படுகின்ற வழிகளாக ஒன்பது வாயில்களை வைத்து,

         வரு காயம் --- உண்டாவதான இந்த உடம்பினை எடுத்து,

         பவ வினை நூறும் காட்டி --- பிறப்பதற்குக் காரணமான வினைகள் பொடிபட்டு அழிதலைக் காட்டி,

         சுவமதி தானும் சூட்டி --- நல்ல அறிவை எனது உயிரிலே பொருந்த வைத்து,

         பசு பதி பாசம் காட்டி --- பசு என்னும் உயிர், பதி என்னும் இறைவன், பாசம் என்னும் தளை எனப்படும் முப்பொருள்களின் உண்மையை (குருநாதனாக எழுந்தருளி) அடியேனுக்கு விளங்க வைத்து,

         புலம் மாயப் படிமிசை போ என்று ஓட்டி --- தற்போதம் மாய்ந்து, சிவபோதம் ஓங்கும்படியாக இந்தப் பூமிக்குப் போ என்று என்னை அனுப்பிய,

     அடிமையை நீ வந்து ஏத்தி --- உன் அடிமையாகிய என்னை இப்போது உயர்நிலையில் வைத்து,  

         பரகதி தானும் காட்டி அருள்வாயே --- மேலான கதியாகிய வீட்டின்பத்தை அடையத்தக்க முத்திநெறியைக் காட்டி அருள்வாயாக.


பொழிப்புரை


         சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவம் நிறைந்த முநிவர்கள் கண்டு மகிழவும், ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானுடைய அருளால் அவதரித்த முருகப் பெருமானே!

         திருமகளைத் தனது வலமார்பில் வைத்துள்ள திருமால் போற்றவும், பிரமதேவன் நாள்தோறும் போற்றவும், மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் காக்கும் பொருட்டு மயில் வாகனத்தில் ஊர்ந்து, கிரெளஞ்ச மலை அழிந்ததோடு, போரிலே தோற்றுப் போய், கடலில் மாமரமாக எழுந்த சூரபதுமனையும் தாக்கி, அடியோடு அழிக்க, கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய குமாரக் கடவுளே!

     உலகம் யாவும் போற்றும்படியாக பழையனூரைத் தன்னகத்தே கொண்ட திருவாலங்காடு என்னும் திருத்தலத்தில், குறமகளாகிய வள்ளிநாயகியார் தேவரீரது திருவடிகளைப் போற்ற எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         மண், நீர், காற்று என்னும் பூதங்களோடு, நெருப்பு, வான் என்னும் இரண்டு பூதங்களையும் சேர்த்து, புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டி, அவைகளுக்கு இடையே ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள் என்ற பத்தையும் இணைத்துமனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற அந்தக் கரணங்கள் என்னும் நான்கு அகக்   கருவிகளைப் பிணைத்து, சொல்லப்படுகின்ற வழிகளாக ஒன்பது வாயில்களை வைத்து,  உண்டாவதான இந்த உடம்பினை எடுத்து, பிறப்பதற்குக் காரணமான வினைகள் பொடிபட்டு அழிதலைக் காட்டி, நல்ல அறிவை எனது உயிரிலே பொருந்த வைத்து, பசு என்னும் உயிர், பதி என்னும் இறைவன், பாசம் என்னும் தளை எனப்படும் முப்பொருள்களின் உண்மையை (குருநாதனாக எழுந்தருளி) அடியேனுக்கு விளங்க வைத்து, தற்போதம் மாய்ந்து, சிவபோதம் ஓங்கும்படியாக இந்தப் பூமிக்குப் போ என்று என்னை அனுப்பிய, உன் அடிமையாகிய என்னை இப்போது உயர்நிலையில் வைத்து,   மேலான கதியாகிய வீட்டின்பத்தை அடையத்தக்க முத்திநெறியைக் காட்டி அருள்வாயாக.


விரிவுரை

புவிபுனல் காலும் காட்டி, சிகியொடு வானும் சேர்த்தி ---

சிகி --- நெருப்பு.

மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூங்களின் சேர்க்கையால் ஆனது இந்த உடம்பு. "ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்து, அதனுள் அசரசர பேதம் ஆன யாவையும் வகுத்து" என்ற தாயுமான அடிகளார், "ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை, நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது" என்கின்றார்.

புதுமன மானும் பூட்டி ---

ஒர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிர்களுக்கு உள்ளவை புலன் அறிவு ஆகும்.

அந்த அறிவானது தனது தேவையை அறிந்து உயிர் வாழத் தகுந்ததாகவே அமைந்தது.

உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது, பார்த்து அறிவது, கேட்டு அறிவது ஆகியவை ஐந்து அறிவுகள்.

ஒன்று அறிவு அதுவே உற்று அறிவதுவே,
இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே,
மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே,
நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே,
ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே,
ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனனே,
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே....

புல்லும் மரனும் ஓர் அறிவினவே,
நந்தும் முரலும் ஈர் அறிவினவே,
சிதலும் எறும்பும் மூ அறிவினவே,
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே,
மாவும் மாக்களும் ஐ அறிவினவே,
மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே....

என்றது தொல்காப்பியம்.

புல், செடி, கொடி, மரம், மலை முதலியவை உற்று அறிவது ஆகிய ஓர் அறிவினை உடையவை.

சங்கு, சிப்பி, நத்தை முதலியவை உற்று அறியும் அறிவோடு, சுவைத்து அறிவது ஆகிய இரண்டு அறிவுகளை உடையவை.

செல், எறும்பு முதலியவை உற்று அறியும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு ஆகிய இரண்டோடு, மோந்து அறிவது என மூன்று அறிவுகளை உடையவை.

நண்டு, தும்பி முதலியவை உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது என்னும் மூன்று அறிவுகளோடு, கண்டு அறிவது என்னும் நான்காவது அறிவையும் உடையவை.

விலங்குகளும், மக்களில் பகுத்தறிவு இல்லாதவரும், உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது, கண்டு அறிவது என்னும் நான்கு அறிவுகளோடு கேட்டு அறிவது என்னும் ஐந்தாவது அறிவையும் உடையவை.

மாக்கள் என்பது, மனித உடம்பை எடுத்து, மன அறிவாகிய பகுத்துணர்வு இல்லாமல் விலங்குபோல் தமது தேவைக்காக மட்டுமே வாழ்பவர்கள்.

தக்கது இது, தகாதது இது என்று பகுத்து அறிந்து, தனக்குத் தக்கதைப் பிறர்க்கும் புரிந்து, தனக்குத் தகாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமல் விடுத்தல் மன அறிவு என்னும் ஆறாவது அறிவு ஆகும்.

அந்த ஆறாவது அறிவினை உடைய மனம் என்னும் குதிரையை இந்த மனித உடம்பிலே வைத்து இருக்கின்றான் இறைவன். இதனை முதலில் தெளிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு என்று எதை எதையோ கருதிக் கொள்கின்றோம். கருத வைக்கப் படுகின்றோம்.

கருவிகள் நாலும் காட்டி ---

மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற அந்தக் கரணங்கள் என்னும் நான்கு அகக் கருவிகளை இறைவன் படைத்தான்.

மூலப் பிரகிருதி என்னும் பிரகிருதி மாயையிலிருந்து ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும், அந்தக்கரணங்கள் நான்கும் தோன்றும்.

உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக் கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே. அவை தோன்றும் முறையைச் சிந்திப்போம்.

சித்தம்

சத்துவம், இராஜசம், தாமதம் என்னும் முக்குணங்களும் வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதியானது, பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். வெளிப்பட்டதனை வியத்தம் என்றும் வெளிப்படாது நிற்பதனை அவ்வியத்தம் என்றும் கூறுவர். பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்ற மறு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம் என்பது ஆன்மா எதனையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.

புத்தி

முக்குணங்களும் சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப் பரிணாமம் அடைகிறது என்பது கருத்து. பரிணாமமாவது மாற்றம் அடைதல் ஆகும். அதாவது குண தத்துவத்திலிருந்து புத்தி தோன்றும். பரிணாமத்தில் இரண்டு வகையுண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுகிறது. இம்மாற்றம் முழுப் பரிணாமம் எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத் தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம் ஏகதேச பரிணாமம் எனப்படும். பிரகிருதியிலிருந்து காரியங்கள் தோன்றுவது பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அல்ல. வெண்ணெயில் புழுத் தோன்றுவது போல ஏகதேச பரிணாமமே. ஆகையால் ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப் பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடைஇல்லை. இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும்.

முக்குணங்களும் அறவே தோன்றாத நிலை பிரகிருதி. முக்குணங்களும் சமமாய்த் தோன்றிய நிலை குண தத்துவம். அதன்பின், முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும் ஏனையவை குறைந்தும் உள்ள நிலை புத்தி தத்துவம். இனி வரும் காரியங்களிலெல்லாம் இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்து இருக்கும். ஏனையவை குறைந்திருக்கும்.

இக்குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.

இராசத குணம் வன்மை. செயலூக்கம், கொடுமை முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.

தாமத குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும்.

சாத்துவிக குணம் இன்பத்திற்கும் இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும்.

குண தத்துவத்தில் புத்தி தோன்றும். இவ்வந்தக்கரணமே ஆன்மா எதனையும் து இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவி ஆகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்கு உடையதாய் இருக்கும்.

அகங்காரம்

புத்தி தத்துவத்தில் இருந்து, அகங்காரம் என்னும் அந்தக் கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். நான் இதனை அறிவேன். நான் இதனைச் செய்வேன். நான் இதனை நுகர்வேன் என்றாற் போல எச் செயலிலும் ஆன்மா முனைத்து எழுவதற்கு அகங்காரமே கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்குடையதாயிருத்தல் காணலாம். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருத்தலால், இனித் தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய் நிற்கிறது.

அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும். அவை சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக்கூறு என்பன. சாத்துவிக குணக் கூறு தைசத அகங்காரம் என்றும், இராசத குணக்கூறு வைகாரிக அகங்காரம் என்றும், தாமத குணக்கூறு பூதாதி அகங்காரம் என்றும் பெயர் பெறும்.

மனம்

அவற்றுள், சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தில் இருந்து முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றம். இவ்வந்தக்கரணம் புறத்தே உள்ள பொருளைச் சென்று பற்றுவதாகும். முன்னே கூறிய சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றோடு, இந்த மனமும் சேர, அந்தக்கரணங்கள் நானுக் ஆயின.


இடையூடே பொறிபுலன் ஈர் ஐந்து ஆக்கி ---

அகக் கருவிகளாகிய இவைகளின் பின்னர்ப் புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும்,

ஞானேந்திரியங்கள்

தைசத அகங்காரத்தினின்றும் மனம் தோன்றும். அந்த அகங்காரத்தில் இருந்து, மனத்தின் பின்னர் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை இம்முறையிலே ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றும். இவை புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் என்னும் புலன்களை ஆன்மா அறிதற்குக் கருவிகள் என்பதால் ஞானேந்திரியங்கள் எனப்பட்டன. தமிழில் அறிகருவிகள் என்றும், ஐம்பொறிகள் என்றும் கூறப்படும்.

செவி முதலிய ஞானேந்திரியங்களை வாயிலாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களைச் சென்று பற்றுவது மனமே ஆகும். அகக் கருவியாகிய மனம் இவ்வாறு புறத்தேயும் சென்று புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கவர்ந்து, வெளிப் புலன்களை மனமானது பற்றி அகத்தே உள்ள புத்திக்குத் தருகிறது. இவ்வாறு மனம் ஏனைய அகக் கருவிகளுக்கும் ஞானேந்திரியங்களாகிய புறக் கருவிகளுக்கும் இடையே நின்று அகம் புறம் ஆகிய இரண்டிடத்தும் விரைந்து செல்வதாய் உள்ளது. இதனால், ஏனைய அகக் கருவிகளைப் போல் அல்லாமல், மனமானது புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களோடும் இயைந்து நிற்கும் என்பது விளங்கும். இவ்வியைபு பற்றி, மனமும் ஞானேந்திரியங்களும் ஆகிய இவையிரண்டும் தைசத அகங்காரமாகிய ஓரிடத்தே தோன்றின.

சாத்துவிக குணம் பிரகாசம் உடையது. ஆதலால் குண தத்துவத்தில் சாத்துவிக குணம் மிகுந்து போது, நிச்சயித்தல் ஆகிய அறிவுத்தொழிலைச் செய்யும் புத்தி தோன்றிந்து எனப் பார்த்தோம். அது போலவே, பிரகாசம் உடைய சாத்துவிகக் கூறிலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் தோன்றியுள்ளன.

ஞானேந்திரியங்களாவன செவி, தோல், கண், நாக்கு, மூக்கு. இப்பெயர்கள் உறுப்புக்களின் பெயர்களாய் இருப்பினும் அவ்வுறுப்புக்கள் ஞானேந்திரியங்கள் அல்ல. அவ்வுறுப்புக்களில் நின்று அவ்வப்புலன்களை அறிவனவாகிய ஆற்றல்களே ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன.

எனவே, செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவி இந்திரியம் ஆகும்.

கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண் இந்திரியம் ஆகும்.

இவ்வாறே பிற இந்திரியங்களையும் கொள்ள வேண்டும்.

செவியாகிய உறுப்பு இருந்தும் ஓசையை அறிகின்ற ஆற்றல் அவ்விடத்தே இல்லாத போது கேட்டல் நிகழ்வதில்லை. இவ்வாறே பிற உறுப்புக்களிலும் அந்த அந்த ஆற்றல் இல்லாவிடில் அவ்வவ்வறிவு நிகழாமை கண்கூடு. இதனால் உறுப்பு என்பது வேறு. இந்திரியம் என்பது வேறு என்பதும். இந்திரியம் தங்கி நின்று அறிவதற்கு உறுப்பு இடமாகவுள்ளது என்பதும் தெளிவாகும்.

கன்மேந்திரியங்கள்  

தைசத அகங்காரத்தில் இருந்து மனமும், ஞானேந்திரியங்களும் தோன்றிய பின்னர், வைகரி அகங்காரத்தில் இருந்து, கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை வாய், கால், கை, எருவாய், கருவாய் என்பன இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். இவை பேசுதல், நடத்தல் முதலிய தொழில்களைச் செய்தற்குக் கருவியாகலின் கன்மேந்திரியங்கள் எனப் பெயர் பெற்றன. தமிழில் தொழிற்கருவிகள் எனவும், செயற்பொறிகள் எனவும் கூறலாம். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன. கை இடுதல் ஏற்றல்களைச் செய்வதாகக் கூறினாலும் உடம்பில் உள்ள எந்த உறுப்பின் இயக்கமும் கையின் செயலாகவே கொள்ளப்படும். அதாவது காலை நீட்டுதல், மடக்குதல், தலையை அசைத்தல், புருவத்தை நெரித்தல், கண்களை இமைத்தல், வாயை அசைத்தல் முதலியவையெல்லாம் கையிந்திரியத்தின் தொழில்களாகவே கொள்ள வேண்டும். எருவாய் என மலக்கழிவு வாயினையே கூறினாலும், அது உடம்பில் உள்ள பிற கழிவு மண்டலம் முழுவதையும் குறிக்கும். எனவே மலசலம் கழித்தல், எச்சில் உமிழ்தல், உண்டதைக் கக்குதல், மூக்கு நீர் சிந்துதல், வியர்வையை வெளிப்படுத்தல் முதலியவையெல்லாம் எருவாயின் தொழில்களாகவே கொள்ளப்படும்.
எருவாயின் செயலை அடக்கினால் அது உடலுக்குத் தீங்கு பயக்கும். ஆனால் கருவாயின் செயலை அடக்கினால் அது உடலை நன்றாக வைக்கும். உயிருக்கும் நலம் தரும். இவ் வேறுபாட்டினால் எருவாயும் கருவாயும் வெவ்வேறு இந்திரியங்கள் என்பது விளங்கும். மேலும் கருவாயின் செயலால் இனப்பெருக்கம் உண்டாதலாகிய வேறுபாடும் குறிப்பிடத்தக்கது.

ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறும்போது உறுப்புக்கள் இந்திரியமல்ல. அவற்றை இடமாகக் கொண்டு நிற்கும் ஆற்றல்களே இந்திரியங்கள்.

கன்மேந்திரியங்களுக்கும் இது பொருந்தும். வாய், கால் முதலிய இடங்களில் நின்று பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங்களாகும். கன்மேந்திரியங்கள் தொழில் செய்யும் கருவிகளாதலின், ஊக்கத்தைத் தரும் இராசத குணக் கூறாகிய வைகாரிக அகங்காரத்தினின்றும் அவை தோன்றின என்றது பொருத்தம் உடையதாகும்.

தன்மாத்திரைகள்   

இனி, கன்மேந்திரியங்களுக்குப் பின்னர் மூன்றாவது கூறாகிய பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளில் இருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. ஆயின் இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்குமபூதம் எனவும். பூதங்களைத் தூலபூதம், மகாபூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூலபூதத்தையே குறிக்கும்.


தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். அதனளவில் நிற்றல் என்றால் என்ன? பின்வருமாறு அதனை விளக்கலாம். ஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோமேயன்றி, அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே.

ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அஃதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும் அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.

 
தன்மாத்திரைகளும் புலன்களும்

ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது, அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும்.

இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.

பூதங்கள்
        
தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் எனக் குறிப்பிட்டோம். அப்பூதங்கள் தோன்றும் முறையை இனிக் காண்போம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.
  
பூதங்களின் குணங்கள்

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும்.

இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும்.

ஊறு காற்றின் குணமாய் நிற்கும்.

ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும்.

சுவை நீரின் குணமாய் நிற்கும்.

நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும்.

சத்த தன்மாத்திரை என்பது வானின் சிறப்புக் குணமாகிய சத்தம் ஒன்றேயாய் நிற்கும்.

பரிச தன்மாத்திரை காற்றின் சிறப்புக் குணமாகிய பரிசமும், வானின் சேர்க்கையால் தோன்றிய பொதுக்குணமாகிய சத்தமும், ஆக இரண்டையும் உடையதாய் நிற்கும்.

உருவ தன்மாத்திரை என்பது, தீயின் சிறப்புக் குணமாகிய ஒளியும், காற்று, வான் என்பவற்றின் சேர்க்கையால் தோன்றிய  பொதுக்குணமாகிய பரிசமும் சத்தமும் ஆகிய இரண்டோடு சேர்த்து, மூன்று குணங்களை உடையதாய் நிற்கும்.

இரச தன்மாத்திரை என்பது, நீரின் சிறப்புக் குணமாகிய சுவையும், நெருப்பு, காற்று, வான் என்பவற்றின் சேர்க்கையால் தோன்றிய  உருவம், பரிசம், ஓசை என்னும் மூன்றோடு, நான்கு குணங்களை
உடையதாய் நிற்கும்.

கந்த தன்மாத்திரை என்பது நிலத்தின் சிறப்புக் குணமாகிய நாற்றமும், நீர், நெருப்பு, காற்று, வான் என்பவற்றின் சேர்க்கையால் தோன்றிய சுவை, ஒளி, பரிசம், ஓசை என்னும் நான்கோடு, ஐந்து குணங்களை உடையதாய் நிற்கும்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி..--- திருவாசகம்.

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாய் இருக்கும்.

அதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும்.

காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும்.

நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும்.

நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும்.

நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும்.

இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.

பூதங்கள் இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. அவைகளைப் பற்றிச் செய்யுள் 9- இல் நாம் பார்க்க விருக்கிறோம். பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்திற் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவிற் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும் தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

ஆக, இவ்வாறு, பொறிகள் ஐந்தும், புலன்கள் ஐந்தும் இறைவனால் படைக்கப்பட்டன.
  
புகல் வழி நால் ஐந்து ஆக்கி வரு காயம் ---

ஒன்பது வாயில்கள் என்னும் தொளைகளை இந்த உடம்பில் வைத்தவன் இறைவன்.

புற்புதக் குரம்பை, துச்சில் ஒதுக்கிடம்
என்ன நின்று இயங்கும் இருவினைகை் கூட்டை
கல்லினும் வலிதாக் கருதினை, இதன் உள்
பீளையும் நீரும் புறப்படும் ஒரு பொறி,
மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி,
சளியும் நீரும் தவழும் ஒரு பொறி,
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி,
வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி,
சலமும் சீயும் சரியும் ஒரு வழி,
உள் உறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம், முடிவில் சுட்டு எலும்பு ஆகும்,...

என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்" என்றார் அப்பர் அடிகள்.

நிணமொடு, குருதி, நரம்பு, மாறிய
     தசை, குடல், மிடையும் எலும்பு, தோல் இவை
     நிரைநிரை செறியும் உடம்பு, நோய்படு ...... முதுகாயம்,
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது,
     நவதொளை உடைய குரம்பை ஆம் இதில்,
     நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவம் ......உய ஓரும்

உணர்வுஇலி, செபமுதல் ஒன்று தான்இலி,
     நிறைஇலி, முறைஇலி, அன்பு தான்இலி,
     உயர்வு இலி, எனினும், என்நெஞ்சு தான்நினைவு.....ழியாமுன்,

ஒருதிரு மரகத துங்க மாமிசை
     அறுமுகம் ஒளிவிட வந்து, நான்மறை
     உபநிடம் அதனை விளங்க, நீ அருள் ...... புரிவாயே.       ---திருப்புகழ்.

பவ வினை நூறும் காட்டி ---

வினையின் காரியமே இந்த உடம்பு. "வினையின் வந்தது, வினைக்கு விளைவு ஆயது" என்பார் மணிமேகலை ஆசிரியர். "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போது அளவும் நில்லாது" என்றார் பட்டினத்து அடிகள்.

பிறவிக் கடலில் விழுந்து துன்புறுவதற்குக் காரணமான வினைகள் அழிந்து போகவேண்டும். அதற்காகவே இந்த உடம்பு இறைவனால் நமக்குப் படைக்கப்பட்டது.
        

சுவமதி தானும் சூட்டி ---

சுவம் - உண்மை. மதி - அறிவு. உண்மை அறிவு என்னும் மெய்யறிவு விளங்க வேண்டும்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள்
மெய்த்தன்மை காண்பது அறிவு.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்றார் திருவள்ளுவ நாயனார்.

உயிர்கள் யாவும் அறிவின் அடிப்படையிலேயே படைக்கப்படுகின்றன. மனிதப் பிறவி எடுத்த பின்னரே ஆகாமியம் வந்து சேருகின்றது. நல்லது தீயது பகுத்து அறியும் அறிவுடைய பிறவியை எடுத்து வந்து, நன்மை எது தீமை எது என்பதை அறியாமல் மனம் போன போக்கில் விலங்குகளைப் போல் வாழ்வதால் தீவினைகள் சேருகின்றன. இலங்கு நூல்களைக் கல்லாது, உலக நூல்களையே ஓதி, அவையே உண்மை எனக் கருதி, தீவினைகளைப் பெருக்குகின்றோம். அன்பை விளைத்தால், தீவினைகள் சேராது. அன்பை விதைக்காமல், பிழையையே பெருக்குகின்றோம். "பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பு" என்றார் மணிவாசகனார். நல்லறிவு விளங்க வேண்டும். அறிவு விளக்கம் பெறவேண்டும்.

பசு பதி பாசம் காட்டி ---

ஆன்மா அறிவு விளக்கம் பெறவேண்டுமானால், பசு என்னும் உயிர், பதி என்னும் இறைவன், பாசம் என்னும் தளை எனப்படும் முப்பொருள்களின் உண்மையைத் தெளிய வேண்டும்.

கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு
     கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனும்,
கதிபெற, ஈடு அறாதன பதிபசு பாசம் ஆனவை
     கசடு அற, வேறு வேறு செய்து ...... அருள்வாயே.   ---  (இருகுழை மீது) திருப்புகழ்.

"எழை, நான் உன் பதிபசு பாச உபதேசம் பெறவேணும்." என்றார் அடிகளார் வயலூர்த் திருப்புகழில்.

ஆன்மாவுக்கு உள்ள நிலையற்ற உணர்வுகளாகிய பாசஞான, பசு ஞானங்களை நீக்கி, அவற்றின் நீங்கி நிற்கும் அறிவில் பதிஞானமாகிய திருவருள் ஒளியை விளங்கச் செய்து. அவ்வருளுக்கு முதலாகிய பேரின்ப மயமான மெய்ப் பொருளாகிய சிவத்தை அனுபவமாக உணரும் பக்குவ நிலையை இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி அருள்வான்.

பாச ஞானம்

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். அங்ஙனம் கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறியுமிடத்து, அவ்வறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறிதற் கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையிலிருந்து தோன்றிய காரியங்களே ஆகும். எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் பாசஞானம் எனப்படுவதாயிற்று. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானமாக மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மை இயல்பை அறியாது போகிறது.

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்
தன்னை மறைத்தது தன் கரணங்கள் ஆம்
தன்னின் மறைந்தது தன் கரணங்களே.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே .   ---  திருமந்திரம்.
  
பசு ஞானம்

ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்ற காலத்திலேதான் ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று, அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மையியல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில், அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாக உள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும்.

மேக படலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேகபடலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மை இயல்பு.

நாம் அல்ல இந்திரியம், நம்வழியின் அல்ல,வழி
நாம் அல்ல, நாமும் அரன் உடைமை, - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்க் இல்லைவினை
முற்செய் வினையும் தருவான் முன்.

இவ்வாறு கருவியறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரியவொளி ஆன்மாவின் கண்ணுடன் கலந்து அதனை விளக்கி நிற்பதே ஆகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

பதிஞானம்

முதல்வனது அருளின் உண்மையை அவ்வான்மா உளங்கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆகமாட்டாய்.  பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கிய போது, தன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின். அவ்வருளுக்கு முதலாகிய சிவம் பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்,
பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு அறும் வேலவனே. ---  கந்தர் அனுபூதி.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன. ஆதலின் பொய் எனப்படும்.

இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும்.

இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறியவாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறியவொண்ணாது. அத்தகைய பதிஞானத்தை ஆன்மவுணர்வில் விளங்கச் செய்து, பதியாகிய சிவத்தைக் காட்டுபவரே ஞானகுரு ஆவார்.

புலம் மாயப் படிமிசை போ என்று ஓட்டி ---

தற்போதம் என்னும் ஆன்ம அறிவு அல்லது பசுஞானம் ஒழிந்து, பதிஞானம் வாய்க்கும் வரையில் இந்த உடம்பு ஆன்மாவுக்கு வந்துகொண்டு இருக்கும்.

அடிமையை நீ வந்து ஏத்தி ---

அது நீங், இறைவன் குருநாதனாக மானிடச் சட்டை தாங்கி எழுந்தருளி வந்து, ஆன்மாவை உயர்நிலைக்கு ஏற்றுவான். இறைவன் ஆண்டவன். உயிர்கள் அவனுக்கு அடிமை. இந்த ஆண்டான் அடிமை என்னும் நிலையை அறிய உயிரில் பக்குவம் நிகழவேண்டும். அதை நிகழ வைப்பவன் உண்மைக் குருநாதனாகிய இறைவனே.

பரகதி தானும் காட்டி அருள்வாயே ---

மேலான கதியாகிய வீட்டின்பத்தை அடையத்தக்க முத்திநெறியைக் காட்டி அருள் புரிபவன் இறைவன்.

சிவமய ஞானம் கேட்க, தவ முநிவோரும் பார்க்க, திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே ---

சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவம் நிறைந்த முநிவர்கள் கண்டு மகிழவும், ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானுடைய அருளால் அவதரித்த முருகப் பெருமான்.

திருச்சிற்றம்பலம் என்னும் ஞானாகாயத்தில் இறைவன் புரிவது உயிர்களுக்கு உள்ள ஊனமாகிய மல இருளை நீக்கி, அருள் ஒளியை நிரப்பி, என்றும் இறவாத இன்பத்தில் வைக்கின்ற ஆனந்தத் திருநடனம். அந்தத் திருநடனத்தை பதஞ்சலி முனிவரும், வியாக்கிர பாத முனிவரும் கண்டு மகிழ்கின்றார்கள். 

திருவளர் மார்பன் போற்ற ---

திருமகளைத் தனது வலமார்பில் வைத்துள்ள திருமால் சிவபெருமானை வழிபட்டார். அந்தத் திருமாலின் வேண்டுகோளின் படியும்,

திசைமுகன் நாளும் போற்ற ---

திசைக்கு ஒரு முகமாக நான்கு முகங்களை உடையதால் பிரமதேவன் திசைமுகன் எனப்பட்டார். அந்த பிரமதேவன் நாள்தோறும் இறைவழிபாடு செய்கின்றார். அந்த பிரமதேவனின் வேண்டுகோளுக்கு இணங்கவும்,

ஜெகமொடு வானம் காக்க மயிலேறி....... குதர் வடிவேல் அங்கு ஓட்டு குமர ஈசா ---

சூரபதுமனால் அளப்பரிய துன்பங்களை அனுபவித்து வந்த மண்ணுலக உயிர்களையும், விண்ணுலக தேர்களையும் காக்கும் பொருட்டு முருகப்பெருமான் மயில் வாகனத்தில் ஊர்ந்து அருளினார். கிரெளஞ்ச மலையா அழித்ததோடு, தோற்றுப் போய், கடலிலே மாமரமாக எழுந்த சூரபதுமனையும் தாக்கி, அடியோடு அழிக்க, கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளியவர் குமாரக் கடவுள்.

அஞ்ஞானமாகிய இருளிலே முழுகி உயிர்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றன. "இருளாய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ" என்றார் அடிகளார் திருச்செந்தூர்த் திருப்புகழில். பொருளை இன்னதென்று அறியவிடாது மயக்கி இடர்ப் படுத்துவது ஆணவ மலமாகிய இருள். "காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவு அற்ற, கண் இல்லாக் குழுவி போலக் கட்டுண்டு இருந்த" என்றார் தாயுமானார். இருளில் கிடப்பவரால் ஒரு செயலும் செய்ய முடியாது. பெரும் வேதனை மிகும். அதுபோல ஆசையால் வரும் மயக்க இருளும், நல்வினை தீவினை என்ற விளக்கத்தை மறைக்கும். புண்ணியச் செயல் கசக்குமாறும், பாவச்செயல் இனிக்குமாறும் செய்யும். அதனால் பெருந் துன்பம் நேரும்.

சூரபதுமன் ஆணவமலம். தாரகாசூரன் மாயாமலம். சிங்கமுகன் கன்மமலம். கிரவுஞ்ச மலை உயிர்களின் வினைத்தொகுதி. கடல் என்பது பிறவித்துன்பம். வேல் என்பது பதிஞானம். வினைத் தொகுதியாகிய கிரவுஞ்ச மலையை,  முருகப்பெருமானின் வேல் என்னும் பதிஞானம் அழித்து அருளியது. "உருகும் அடியவர் உருவினை இருள் பொரும் உதய தினகர" என்றார் பிறிதொரு திருப்புகழில். முருகப் பெருமானுடைய வேலாயுதம் உயிர்களின் வினைத் தொகுதியாகிய கிரவுஞ்ச மலையைப் பிளந்து அழித்ததோடு, மாயையில் வல்லவனான தாரகனை வதைத்தது. கன்மமலம் என்னும் சிங்கமுகனை அழித்தது. இறுதியில், மூலமலமான ஆணவம் ஆகிய சூரபதுமனை அழித்தது. இதனால்,  மண்ணுலக உயிர்களும், விண்ணுலக உயிர்களும் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட்டன என்பதே கருத்து.

இதன் உண்மைப் பொருளைத் தக்கார்பால் விரிவாகக் கேட்டுத் தெளிந்து கொள்ளவும்.  

இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய் நெடும் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்

எனவரும் திருமுருகாற்றுப்படை வெண்பாவின் உட்கருத்தை உள்ளத்தில் கொள்க. "குன்று எறிந்த தாடாளனே! தென்தணிகைக் குமரா!" என்று அருணகிரிநாதப் பெருமான் காட்டியதன் கருத்தையும் உன்னுக.

குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்று பெருமாளே ---

உலகம் யாவும் போற்றும்படியாக பழையனூரைத் தன்னகத்தே கொண்ட திருவாலங்காட்டில், குறமகளாகிய வள்ளிநாயகியார் தனது திருவடிகளைப் போற்ற எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.       --- திருஞானசம்பந்தர்.

வெள்ளநீர்ச் சடையர் போலும், விரும்புவார்க்கு எளியர் போலும்,
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்,
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்,
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.   --- அப்பர்.

என வரும் திருமுறைப் பாடல்களால் பழனை என்னும் பழையனூர் திருவாலங்காட்டில் உள்ளது ஓர் ஊர் என்பது தெரியவரும்.

பழையனூரின் சிறப்பு, பின் வரும் வரலாற்றால் விளங்கும்.

ஒருகாலத்துப் பரத்தை வலைப்பட்ட ஒரு வணிகன் தன்னைத் திருத்த முயன்ற தன் மனைவியைத் தனிவழிப்படும்போது கொன்றுவிட, அப்பழியானது நீலி என்னும் பேயாகி அவனை அலைத்து வந்தது. அதில் இருந்து மீளும்பொருட்டு, அவன், ஒரு பெரியார் தந்த மந்திர வாளினை ஏந்திக் கொண்டே திரிந்து வந்தான். அப்பழியும் அவளைக் கொல்வதற்குச் சமயம் பார்த்துப் பின் தொடர்ந்து கொண்டே வந்தது. அவன் ஒருநாள் பழயனூருக்கு வந்தான். நீலியும் ஒரு பெண் வடிவம் பூண்டு, கள்ளிக்கொம்பு ஒன்றை முரித்து, அதனைக் குழந்தை வடிவமாக்கி, இடையில் ஏந்திக்கொண்டு வணிகனைப் பின் தொடர்ந்து வந்தது. வணிகன் அவ்வூரில் வேளாளர் பெருமக்கள் எழுபதுபேர் இருந்த சபையின் முன்வந்து தன்னை நீலி கொல்ல வருகின்றமையால் காக்க வேண்டுமென்று அடைக்கலம் புகுந்தான். நீலியும் அச்சபையின் முன் வந்து "இவன் என் நாயகன். இது எங்கள் குழந்தை. இவன் பரத்தை வயப்பட்டு எங்களை வெறுத்துக் கைவிட்டு ஓடி வந்துவிட்டான். எங்களை ஒன்றுபடுத்தி வாழவைக்க வேண்டும்" என்று ஓலமிட்டது. வணிகன் மறுத்து "இது பெண் அல்ல; நீலி என்ற பேய்" என்று சொல்ல, நீலி அக்கள்ளிக் குழந்தையைக் கீழே விட, அது வணிகனிடம் அப்பா என்று சென்று சேர்ந்தது. இதன் உண்மை புலப்படவாராமையின், "நாளைத் தீர்ப்போம். இன்றிரவு நீங்கள் ஒன்று கூடி இங்கே இருங்கள்" என்று சபையினர் கூறினர். வணிகன் கையில் வாள் இருந்தபடியால் அதனால் அவன் தன்னை வெட்டி விடுவானாதலின், அந்த வாளை அவனிடத்தில் இருந்து போக்கவேண்டும் என்றது நீலிப்பேய். வணிகனோ இந்த வாள் இல்லையானால் நீலிப்பேய் தன்னைக் கிழித்துக் கொன்றுவிடும் என்றான். இவ்விருவர்களுக்கும் இடையில் குழந்தையின் செய்கையால் ஏமாந்த வேளாளர்கள் வாளினை நீக்கிவிட்டு அவளுடன் தங்கும்படி வணிகனை ஏவினதோடு அதனால் அவனுயிர்க்குக் கேடுவருமாயின் தங்கள் எழுபது பேர்களின் உயிரையும் அதற்கு ஈடாகத் தருவதாக வாக்குறுதியும் செய்தனர். அன்றிரவு நீலி வணிகனைக் கிழித்துக் கொன்று பழிதீர்த்துப் போய்விட்டது. இதனை றிந்த வேளாளர்கள் தாங்கள் வணிகனுக்குச் சொல்லிய சொல்லே தமது உயிரினும் சிறந்தது எனக் கொண்டு, தீ வளர்த்து, அதில் எழுபது பேரும் மூழ்கித் திருவாலங்காட்டு இறைவரது திருவடியில் சேர்ந்தனர்.

மிகப்பழைய உண்மைச் சரித்திரமாகிய இதனை ஆளுடைய பிள்ளையார் திருவாலங்காட்டுத் தேவாரத்துள் "முனநட்பாய், வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு அஞ்சும் பழையனூர்" என்று எடுத்துக் கூறியருளினர். இச்சிறப்பினை "துஞ்ச வருவார்"என்றே எடுத்த ஓசைச் சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல், எஞ்சல் இலா வகை, முறையே பழையனூரார் இயம்பும் மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி" எனப் பெரியபுராணத்தில் பாடிக் காட்டினார்.

தெய்வச் சேக்கிழார் சுவாமிகளது புராணம் கூறவந்த போது அவரது மரபுச் சிறப்பு உரைக்கும் வகையால் இச் சரிதத்தினையே "மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிர் இறப்பத் தாங்கள், கூறிய சொல் பிழையாது துணிந்து செந்தீக் குழியில் எழுபது பேரும் முழுகிக் கங்கை ஆறு அணி செஞ்சடைத் திருவாலங்காட்டு அப்பர் அண்டம் உற நிமிர்ந்து ஆடும் அடியின் கீழ், மெய்ப்பேறு பெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரித்து அளவிட்டு இவ்வளவு எனப் பேசலாமோ?" (திருத்தொண்டர் புராண வரலாற்றில் உமாபதி சிவாசாரியார் வாயார வாழ்த்திப் பாடி அருளினார். வேளாளர் தீக்குளித்த குழி இப்போது (நீலிகுளம் என வழங்கும்) ஒருகுளமாக உள்ளது. அதன் கரையில் அந்த வேளாளர் எழுபதின்மரின் திருவுருவமும் நீலியின் உருவமும் ஒருகோயிலில் உள்ளன. கோயிலும் குளமும் இப்போதும் உள்ளன. பழையனூர்த் திருவாலங்காட்டப்பரின் சீர்பாதந் தாங்கும் சிறந்த தொண்டர்களாய் அந்த வேளான மரபினர் இன்றைக்கும் விளங்குவதும், அவ்வாய்மைச் சிறப்பின் மணம் இன்றளவும் வீசும் சிறப்பும் தொண்டைத் திருருநாட்டுக்கு உரியமையாவதும் இதனால் விளங்கும்.


கருத்துரை

முருகா! பத்தி எனக்கு அருளி, முத்தியை அளிப்பாயாக.










No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...