விரிஞ்சிபுரம் - 0681. நிகரில் பஞ்சபூதமும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிகரில் பஞ்ச (விரிஞ்சிபுரம்)

முருகா!
திருவடித் தாமரையைத் தந்து அருள்வாயாக.


தனன தந்த தானன தனன தந்த தானன
     தனன தந்த தானன ...... தனதான


நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
     நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
     நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம்

சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதக ...... ரறியாத

தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்ட ரீகம ...... தருள்வாயே

மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
     மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான

வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
     மடிய இந்தி ராதியர் ...... குடியேறச்

சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
     சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே

திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
     திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

நிகர் இல் பஞ்ச பூதமும், நினையும் நெஞ்சும் ஆவியும்,
     நெகிழ வந்து நேர் படும் ...... அவிரோதம்,

நிகழ் தரும் ப்ரபாகர! நிர் அவயம், பராபர!
     நிருப! அம் குமாரவெள், ...... என வேதம்,

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்,
     சமய பஞ்ச பாதகர் ...... அறியாத,

தனிமை கண்டது ஆன, கிண் கிணிய தண்டை சூழ்வன,
     சரண புண்டரீகம் ...... அது அருள்வாயே.

மகர, விம்ப, சீகர, முகர, வங்க வாரிதி,
     மறுகி வெந்து வாய்விட, ...... நெடு வான

வழி திறந்து, சேனையும், திர் மலைந்த சூரனும்
     மடிய, இந்திர ஆதியர் ...... குடி ஏற,

சிகர துங்க மால்வரை தகர, வென்றி வேல்விடு
     சிறுவ! சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே!

திசை தொறும் ப்ர பூபதி, திசைமுகன் பராவிய
     திருவிரிஞ்சை மேவிய ...... பெருமாளே.


பதவுரை


         மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி --- மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கலங்கள் செல்வதுமான கடல்

         மறுகி வெந்து வாய் விட --- கலக்கம் உற்று, மனம் வெந்து கொந்தளிக்கவும்,

         நெடு வானவழி திறந்து --- பெரிய வான முகட்டைக் கிழித்துக் கொண்டு

         சேனையும், எதிர் மலைந்த சூரனும் மடிய --- எதிர்த்துப் போர் செய்ய வந்த சேனைகளும், சூரபதுமனும் மாண்டு போக,

         இந்திராதியர் குடியேற --- இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற,

         சிகர துங்க மால்வரை தகர --- சிகரங்களை உடைய உயர்ந்த மாயை வடிவான கிரெளஞ்சமலை தகரும்படியாக

         வென்றி வேல்விடு சிறுவ --- வெற்றி பொருந்திய வேலாயுதத்தை விடுத்தருளிய குழந்தை வேலரே!

         சந்த்ர சேகரர் பெருவாழ்வே --- சந்திரனைச் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே!

         திசைதொறும் ப்ரபூபதி திசைமுகன் பராவிய --- திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த அரசர்களும்,  நான்முகனும் பரவிப் போற்றிய

         திருவிரிஞ்சை மேவிய பெருமாளே --- திருவிரிஞ்சைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
        
         நிகரில் பஞ்ச பூதமும் --- ஒப்பில்லாத ஐந்து பூதங்களும்,

        நினையும் நெஞ்சும் --- நினைக்கின்ற நெஞ்சும்,

        ஆவியும் --- உயிரும்,

         நெகிழ வந்து நேர் படும் அவிரோதம் --- நெகிழும்படியாக வந்து கூடுகின்ற விரோதமின்மை என்னும் ஞானஒளியை

         நிகழ் தரும் ப்ரபாகர --- நிகழ்த்தித் தரும் ஞானபானுவே,

         நிரவயம் பராபர நிருப அம் குமாரவெள் --- அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய குமார வேளே,

         என வேதம் --- என்று வேதங்கள் முழங்குவதும்,

       சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் --- சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான கடலைப் போல, பெருத்த ஆரவாரத்துடன் வாதம் செய்கின்றவராகிய

         சமய பஞ்ச பாதகர் அறியாத --- சமயவாதிகளான பஞ்ச மாபாதகர்களால் அறியப்படாததும்,

         தனிமை கண்டதான --- ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும்,  

         கிண் கிணிய தண்டை சூழ்வன --- கிண்கிணியும் தண்டையும் அணிந்துள்ளதுமான

         சரண புண்டரீகம் அது அருள்வாயே --- திருவடித் தாமரைதனைத் தந்து அருள்வாயாக.


பொழிப்புரை


         மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கலங்கள் செல்வதுமான கடல் கலக்கம் உற்று, மனம் வெந்து கொந்தளிக்கவும், பெரிய வான முகட்டைக் கிழித்துக் கொண்டு எதிர்த்துப் போர் செய்ய வந்த சேனைகளும், சூரபதுமனும் மாண்டு போக, இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற, சிகரங்களை உடைய உயர்ந்த மாயை வடிவான கிரெளஞ்சமலை தகரும்படியாக வெற்றி பொருந்திய வேலாயுதத்தை விடுத்தருளிய குழந்தை வேலரே!

         சந்திரனைச் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே!

         திசைகள் தோறும் உள்ள கீர்த்தி வாய்ந்த அரசர்களும்,  நான்முகனும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சைத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
        
         ஒப்பில்லாத ஐந்து பூதங்களும், நினைக்கின்ற நெஞ்சும், உயிரும், நெகிழும்படியாக வந்து கூடுகின்ற விரோதமின்மை என்னும் ஞானஒளியை நிகழ்த்தித் தரும் ஞானபானுவே, அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும்,  சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான கடலைப் போல பெருத்த ஆரவாரத்துடன் வாதம் செய்கின்றவராகிய சமயவாதிகளான பஞ்ச மாபாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும்,  கிண்கிணியும் தண்டையும் அணிந்துள்ளதுமான திருவடித் தாமரைதனைத் தந்து அருள்வாயாக.

விரிவுரை

நிகரில் பஞ்ச பூதமும், நினையும் நெஞ்சும், ஆவியும் நெகிழ வந்து நேர் படும் அவிரோதம் ---

ஒப்பில்லாத பஞ்சபூதங்களால் ஆன உடம்பும்,  அந்த உடம்பினுள் வாழுகின்ற உயிரும், அந்த உடம்பின் உள் பொருந்தி உள்ள அந்தக் கரணம் என்னும் நெஞ்சமும் உருகும்படியாக வந்து நேர்படுவது அவிரோதம் என்னும் உண்மை ஞானம்.

வானம், காற்று, நெருப்பு, நீர், மண் என்பவை ஐந்து பூதங்கள்.

ஓசை என்னும் சத்தம், ஊறு என்னும் பரிசம், ஒளி என்னும் ரூபம், இரசம் என்னும் சுவை, மணம் என்னும் கந்தம் ஆகியவை தன்மாத்திரைகள். இவற்றை வடமொழியில் சத்த, பரிச, ரூப, ரச, கந்தம் என்றும், தமிழில் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்றும் சொல்லுவர். திருவள்ளுவ நாயனார், இந்த வரிசை முறையை மாற்றி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றார். அதற்கும் ஒரு உண்மை உள்ளது.

ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும் அவ்வாறு பரிணமித்த பொழுது இந்த ஓசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.
        
தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் முறையை இனிக் காண்போம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

தோன்றிய முறையிலேயே அவை ஓடுங்கும் என்பதைப் பின்வரும் தேவாரப் பாடலால் அறியலாம்.

இருநிலன் அது புனல் இடை மடி
         தர, எரி புக, எரி அதுமிகு
பெருவெளியினில் அவி தர, வளி
         கெட, வியன் இடை முழுவதுகெட,
இருவர்கள் உடல்பொறை யொடுதிரி
         எழில்உரு உடையவன், இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல்
         மறைவனம் அமர்தரு பரமனே.       --- திருஞானசம்பந்தர்.

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும். ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும். சுவை நீரின் குணமாய் நிற்கும்.  நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. அதாவது, சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தமும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையனவாயிருக்கும். அதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.

மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
         வயங்குஎரியில் மூன்றைமா ருதத்துஇ ரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிக திரைத்
         தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்
         எழில்அழிய எரிஉமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

மின்உருவை விண்அகத்தில் ஒன்றாய் மிக்கு
         வீசுங்கால் தன்அகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்உருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
         தரணிதலத்து அஞ்சுஆகி எஞ்சாத் தஞ்ச
மன்உருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
         வளர்ஒளியை வயிரத்தை மாசுஒன்று இல்லாப்
பொன்உருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

என வரும் அப்பர் திருத்தாண்டகப் பாடல்களில் ஐம்பூதங்களின் குணங்கள் கூறப்பட்டுள்ளமை காணலாம்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி   --- திருவாசகம்.
  
பூதங்கள் இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்திற் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவிற் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும் தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

இந்த பூதங்களால் ஆனதுதான் உயிர்களின் உடல் ஆகும்.

ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்
          ஆகின்ற ஆக்கை, நீர் மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்
          அறியாத காலம் எல்லாம்
புந்திமகிழுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே
          போந்த நெறி என்று இருந்தேன்,
பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை
          போனவழி தெரியவில்லை..         --- தாயுமானார்.

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால், உடல் ஒன்று எனல் ஆமே?

நிலையாய் இராமல் நிலை அழிந்து ஒழிந்து போவன ஆகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாம் பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும் என்கின்றார் திருமூல நாயனார்.

இவ்வாறு பஞ்சபூதங்களின் கூட்டால் ஆன உடம்பில் பொருந்தி இருப்பது உயிர்.  அந்த உயிர் அறிவு விளக்கம் பெறுவதற்காக இறைவன் தனது பெருங்கருணையால் வைத்தவையே அந்தக் கரணங்கள் என்னும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை ஆகும்.

நிகழ் தரும் ப்ரபாகர ---

ப்ரபை - ஒளி. அது ஞானத்தைக் குறிக்கும்.
ப்ரபையைச் செய்பவன் ப்ரபாகரன்.

ஆணவ வல்லிருளில் மூழ்கிக் கிடந்த உயிருக்கு, உடம்பைத் தந்து, அந்த உடம்பைக் கொண்டு அனுபவிக்க வினைகளைக் காட்டி, அநுபவப் பொருள்களாகிய பிற உயிர்களையும், இந்த உலகப் பொருள்களையும் படைத்து, அந்த உயிர்களுக்கு உற்ற துணையாக இருந்து, சிறிது சிறிதாகப் பக்குவத்தை உண்டாக்கி, உண்மை அறிவு விளங்கச் செய்து, ஆணவ வல்லிருளின் வலிமை குறையுமாறு செய்து, அருள் ஒளி நிறையுமாறு செய்பவன் இறைவன். அவன் ஞானசூரியனாக உள்ளவன்.

அண்ட ஆதித்தன், பிண்ட ஆதித்தன், மன ஆதித்தன், ஞான ஆதித்தன், சிவ ஆதித்தன் என்று விரிவாகத் திருமூல நாயனார் அருளி உள்ளதைத் தக்கவர் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிரவயம் பராபர நிருப அம் குமாரவெள் என வேதம் ---

நிர் அவயவம் - உறுப்பு அற்றது. 

பராபரம் - மேலான பொருள்.

நிருபம் - ரூபம் இல்லாதது.

அவயவம் இல்லா, தனக்கென ஒரு உருவமும் இல்லாத ஒப்பற்ற பரம்பொருள் முருகப் பெருமான் என்று வேதங்கள் முழங்குகின்றன.

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள், சமய பஞ்ச பாதகர் அறியாத தனிமை கண்டது ---

சகரம் என்ற சொல் சாகரம் ஆகியது. 

சகரர்களால் உருவாக்கப்பட்ட கடல் சாகரம் எனப்படுகின்றது.

கடலிலே சங்குகள் நிறைந்து இருக்கும்.

கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும்.

சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பொறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள் உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலை ஆகும்.

ஞானம் என்பது, பசு ஞானம், பாச ஞானம், பதி ஞானம் என மூவகைப்படும்.

பசு ஞானம் என்பது உயிர் அறிவு, ஆன்ம அறிவு. ஆன்மபோதம் எனப்படும்.

பாச ஞானம் என்பது ஆன்மாவானது பண்டங்களால் பெறுகின்ற அறிவு.

பதி ஞானம் என்பது, மேற்குறித்த இரண்டிலும் சாராது இறையைச் சார்வதால் பதிகின்ற உண்மை அறிவு. பதிவதால் பதி அறிவு என்றும் பதிஞானம் என்றும் காட்டப்பட்டது. 

பாச ஞானம்

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிவதால் பெறுகின்ற அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறி கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையின் காரியங்களே ஆகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாம் அறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் "பாசஞானம்" எனப்படுவது. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானாகவும் தனது என்றும் மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பையோ, அறிகின்ற பொருள்களின் உண்மை இயல்பையோ அறியாது போகிறது.

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்,
பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்,
தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,
தன்னில் மறைந்தது தன்கரணங்களே.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூவே.

என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல்களின் கருத்தை ஓர்க.

பசு ஞானம்

ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்றால், ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்கு உரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில், அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேக படலம் மூடி இருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கிய போது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்ம உணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும்.

கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.

இவ்வாறு கருவி அறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி
நாம் அல்ல; நாமும் அரன் உடைமை. - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;
முற்செய்வினை யும்தருவான் முன்.     --- சிவஞானபோத வெண்பா.

பார்ஆதி பூதம் நீ அல்லை --- உன்னிப்
பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,
ஆராய் உணர்வு நீ என்றான் --- ஐயன்
அன்பாய்உரைத்த சொல் ஆனந்தம் தோழி. --- தாயுமானார்.

பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்கும் கால், அப்பரத்தின்
சீர் ஆக நிற்கும் கண்டாய் --- நேர் ஆக
சிற்கும் திருவருளில் நெஞ்சே, யாம் நிற்பது அல்லால்
கற்கும் நெறி யாது இனிமேல் காண்.      --- தாயுமானார்.

பார்ஆதி அண்டம்எலாம் படர்கானல் சலம்போல்
     பார்த்தனையே, முடிவில் நின்று பார், துதான் நின்றது?
ஆராலும் அறியாத சத்து அன்றோ? அதுவாய்
    அங்கு இரு நீ, எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்,
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப்
     புலம்பாதே, சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே,
ஓராதே ஒன்றையும் நீ, முன்னிலை வையாதே,
    உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே.     --- தாயுமானார்.

பதிஞானம்

இறைவனது அருளின் உண்மையை ஆன்மா உள்ளத்தில் கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது. அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின், அவ்வருளுக்கு முதலாகிய சிவமானது பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறிய வாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறிய ஒண்ணாது.

பதிஞானம் என்னும் உண்மை ஞானம் உணர்ந்தோர் எப்படி இருப்பர் என்பதைப் பட்டினத்து அடிகள் கூறுமாறு காண்க.

பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து இருளே சிதை,
வெறி வென்றவரோடு உறும் வேலவனே. --- கந்தர் அனுபூதி.

பதிஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமை உவந்துகொண்டும், பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டு, கலகமிட்டுத் திரிவர்.

கலகல கல என, கண்ட பேரொடு
     சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்
     கதறிய, வெகு சொல் பங்கம் ஆகிய ...... பொங்கு அளாவும்,

கலைகளும் ஒழிய, பஞ்ச பூதமும்
     ஒழி உற, மொழியில் துஞ்சு உறாதன
     கரணமும் ஒழியத் தந்த ஞானம் ......இருந்தவாறு என்? 
                                                                --- (அலகில் அவுணரை) திருப்புகழ்.
 
"சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். மேலும்,

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்
செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.

சரண புண்டரீகம் அது அருள்வாயே ---

சரணம் - திருவடி.  புண்டரிகம் - தாமரை.

திருவடித் தாமரை தனைத் தந்து அருள்வாயாக.

மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட ---

விம்பம் - ஒளி. முகரம் - சங்கு. வங்கம் - கப்பல், கலம். வாரிதி - கடல்.  மறுகுதல் - மனம் கலங்குதல், வருந்துதல், சிதைதல்.

மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடலானது கலக்கம் உற்று, மனம் வெந்து கொந்தளிக்கின்றது.

அண்டர் உலகும் சுழல, எண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலைகடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,

மண்டலம் நிறைந்த ரவி சதகோடி மதி உதிர,
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும்வேல்..        --- வேல் விருத்தம்.

"மகர சலநிதி குறுகி, மறுகி, முறையிட முனியும் வடிவேலன்" என்றார் சீர்பாதவகுப்பில்.

நெடு வானவழி திறந்து சேனையும், எதிர் மலைந்த சூரனும் மடிய ---

முருகப் பெருமான் சூரபதுமனோடு போர் புரிந்த போது, அண்டத்திற்கு அப்பால் இருந்த அசுர சேனைகள் நெருங்காத வண்ணம், அண்ட வாயிலை முருகப்பெருமான் அடைத்தார். சூரபதுமன் தனது கணைகளை ஏவி, அண்ட முகட்டைத் திறந்து, தனது சேனைகளைப் போர்க்களத்திற்கு வரவழைத்தான்.

ஆற்றிடுகின்ற காலத்து அவுணர் கோன் அண்ட கோள
மேல் திகழ் வாயில் செல்ல, விமலனும் அங்கண் ஏகி,
ஏற்று எதிர் மலையா, அன்னான் ஏறிய இவுளித் தேரைக்
கூற்று உறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றம் கொண்டான்.                             

கந்துக விசய மான் தேர் இற்றலும், கடும் கோன் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எறுழ் மணித் தடந்தேர் தன்னைச்
சிந்தனை செய்தலோடும், சேண்கிளர் செலவிற்று ஆகி
வந்திட, அதன் மேல் ஏறி வல்லை போர் புரிதல் உற்றான்.  

மண்டு அமர் புரியும் எல்லை, வள்ளல் தன் பகழி தன்னால்                             
அண்டம் அது அடைந்த வாயில் அடைத்ததும், அப்பால் உள்ள                                  
தண்டம் அது எல்லாம் செல்லாத் தன்மையும்,தகுவர்கோமான்                                    
கண்டனன், "நன்றுநன்று என் இறைத்தொழில் காவல்" என்றான்.      

இறைத் தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை வாங்கி,                                திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரம் தூண்டி, அண்ட
நெறிப்படு வாயில் பொத்து, நெடுங்கணைக் கதவம் முற்றும்
அறுத்து, நுண் தூளி ஆக்கி அம்பரம் சுழல விட்டான்.   

காவலன் அண்ட வாயில் கணைகளின் கபாடம் நீக்கி,
மாவொடு களிறும் தேரும் வயவரும் வரம்பு இன்று ஆகி,
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்
கூவினன் "வருக" என்று, குவவுத் தோள் கொட்டி ஆர்த்தான்.                                

ஆர்த்திடுகின்ற காலத்து, அண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த் தொகை களிற்றின் ஈட்டம் திறல் கெழும் இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வெள்ளம் துண் என ஈண்டை ஏகி,
போர்த்தொழில் முயன்று,செவ்வேள் புடையுறத் தெழித்துச்சூழ்ந்த.
     
நீள்நுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை,
ஏண் ஒடும் அண்டத்து அப்பால் இருந்திடு தானைச் சுற்ற,
சேண் உறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாம் தேவர்
காணுதலோடும் உள்ளம் கலங்கி மற்று இனைய சொல்வார்.   --- கந்தபுராணம்.  

இந்திராதியர் குடியேற ---

இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற விடுத்து அருள் புரிந்தவர் முருகப் பெருமான்.

சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு சிறுவ ---

சிகரங்களை உடைய உயர்ந்த மாயை வடிவான கிரெளஞ்சமலை தகரும்படியாக வெற்றி பொருந்திய வேலாயுதத்தை விடுத்தருளிய குழந்தைவேலர்.

சந்த்ர சேகரர் பெருவாழ்வே ---

அந்த முருகப் பெருமான் சந்திரனைச் சூடிய சிவபிரானின் அருளால் வந்து உதித்தவர்.

கருத்துரை

முருகா! திருவடித் தாமரையைத் தந்து அருள்வாயாக.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...