பசிப்பிணி மருத்துவர்
-----
உயிர்கட்கு தீராத நோய்கள் மூன்று இருக்கின்றன. 1. உடம்புக்கு இடையறாது வருகின்ற நோய் பசி. 2. உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற நோய் காமம். 3. உயிருக்கு என்றும் அகலாது வருகின்ற நோய் பிறவி. இவற்றுள் பசி அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள். பசி நோயுடன் சில மணி நேரம் போராட முடியாது. "பசி என்னும் தீப்பிணி" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.
உயிர்கள் கருவாய்ப் பதிந்த நாள் தொடங்கி, அவ்வுயிரினது உடம்பின் உள்ளே நிலைபெற்று இருப்பது பசி ஆகும். உடல் வளர்ச்சிக்கு வேண்டிய உணவினை அவ்வப்பொழுது பக்குவப்படுத்தி நிற்கும் பசியாகிய இத்தீயானது, உடலுக்குத் தர வேண்டிய உணவு உரிய காலத்தில் தரப் பெறாத நிலையில் வயிற்றின் உள்ளிருந்து மூண்டு வெதுப்பும். உயிர்களின் கருவி கரணங்களைத் தளர்ச்சி அடையும். எனவே உடம்பொடு கூடிய உயிர்கள் இத்தகைய பசி என்னும் இத்தகைய கொடிய தீயானது தணிய உரிய காலத்தில் உணவினை உட்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகின்றது.
உணவினை முதலாகக் கொண்டதே உயிர்கள் பெற்றுள்ள உடம்பாகும். இத்தகைய உணவினைப் பெற இயலாது மக்கள் பசியால் வருந்திய பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவினைக் கொடுத்தவர்கள், உயிரைக் கொடுத்தவராகவே மதித்துப் போற்றப் பெறுவர். உணவு என்று சொல்லப்படுவது நிலமும் நீரும் விரவிய நிலையில் விளையும் நெல் முதலிய தானியங்களும், காய் கனிகள் முதலியனவும் ஆகும். மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருள்களை விளைவிக்கும் நோக்குடன் நீரையும் நிலத்தையும் ஒரு வழிக்கூட்டி வளம்பெறச் செய்தவர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர் எனப் பாராட்டப் பெறுவர். இவ்வுண்மை,
"நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் - ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே."
என்னும் புறநானூற்றுப் பாடலால் விளங்கும்.
பொருள் அற்ற மக்கள் உணவு பெறாது பசித் தீயால் வாட்டமுற்ற போது பொருள் படைத்தவர்கள், அவர்களுக்கு வேண்டும் உணவு அளித்துப் பசித்தீயைத் தணிவித்தலே வாழ்வியல் அறமாகும். பொருளை ஈட்டியவர்கள் தாம் ஈட்டிய பொருளைச் சேமித்து வைக்கும் வங்கியாகத் திகழ்வது, பசி தீர்த்தலாகிய அறமே ஆகும் என்னும் உண்மையினை,
"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி."
என்னும் திருக்குற்ள காட்டுகிறது.
பசியின் கொடுமை குறித்து மணிமேகலைக் காப்பியம் பின்வருமாறு கூறும்.
"குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்,
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்,
நாண் அணி களையும், மாண் எழில் சிதைக்கும்,
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி"
இதன் பொருள் ---
உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம் கொல்லும். சிறப்பினை அழிக்கும். பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணாகிய அணிகலனைப் போக்கும். மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும். பூண் விளங்குகின்ற கொங்கைகளை உடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும் பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி.
பசிநோய் வந்தால், மானமும், குடிப்பிறப்பும், கல்வியும், ஈகையும், அறிவுடைமையும், தானமும், தவமும், உயர்வும், தொழில் முயற்சியும், தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் ஒருவனை விட்டு ஓடிப்போகும் என்கிறார் ஔவைப் பிராட்டியார்.
"மானம் குலங்கல்வி வண்மை அறிவுடைமை,
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - பத்தும்
பசிவந்திடப் போம் பறந்து." --- நல்வழி.
அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் வள்ளல், தான் உண்ணத் தொடங்கும் போது சிறிய அளவு சோறாக இருந்தாலும், மிக்க அளவு உடைய சோறாக இருந்தாலும், அதனை மிகப் பல கலங்களிலும் பகுத்து வழங்கிப் பலரோடும் உடனிருந்து உண்பான் எனவும், அவ்வாறு பகுத்து உண்ணுதலாகிய அறத்தினை உடைய அந்த வள்ளல் நம்மைவிட்டுப் பிரிந்தானே எனவும் செயலற்று இரங்கும் நிலையில்,
"சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே" -- புறநானூறு.
என ஒளவையார் வருந்திப் பாடியுள்ளார்.
இதன் பொருள் ---
"சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிறு அளவு உடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும் பகுத்துப் பலரோடும் உடனிருந்து உண்பன், மிக்க அளவினை உடைய சோறாயினும் அதனைப் பல உண்கலன்களிலும், பகுத்துப் பலரோடும் உண்பன், அத்தகைய நெடுமான் அஞ்சி இன்று நம்மைவிட்டுப் பிரிந்தனனே."
எல்லா நூல்களிலும். கூறப்படும் நல்லறங்களைத் தொகுத்து, எல்லா மக்களுக்கும் பொதுப்படக் கூறும் திருவள்ளுவ நாயனார், "கொல்லாமை" என்னும் நல்லறத்தை விளக்கும் அதிகாரத்தில் பகுத்து உண்ணுதலாகிய அறமே எல்லாவற்றிலும் தலையாயது என்றார்.
"பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
எனவரும் திருக்குறளில், உண்ணுதற்கு உரிய உணவினை, பசியால் வருந்திய உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து எஞ்சியதைப் பின் தான் உண்டு, எல்லா உயிர்களையும் சோர்ந்தும் இறப்பு நேராமல் குறிக்கொண்டு பாதுகாத்தல் அறநூலோர் தொகுத்த நல்லறங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையாகிய அறமாகும் என்பதை வலியுறுத்தினார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டில் உள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலைச் சோழ மன்னன் ஆகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான். பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று அவனுடைய நல்லறச் செயல்களைப் பாராட்டி மகிழவேண்டுமென எண்ணி, தானும் ஒரு பரிசிலன் போல் அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்று அவ்வூரின் எல்லையை அடைந்தான். பழுத்த மரத்தில் புறவைகள் கூடி ஒலித்தால் போன்று பண்ணனது மனையில் பெருந்திரளாகக் கூடி உண்ணும் மக்களின் ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலைவிலேயே கேட்டது. மழை பெய்யும் காலத்தை முன்னறிந்து தமது முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசை போன்று, பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத்தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளிவளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவலர்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன், "நான் உயிர் வாழும் நாளையும் தனக்கு உரிமையாகப் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக" எனப் பாராட்டி வாழ்த்திப் பின்வரும் பாடலைப் பாடினான்.
"யான் வாழு நாளும் பண்ணன் வாழிய!
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை,
யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந் தன்ன
ஊண் ஒலி அரவந் தானும் கேட்கும்,
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும், கண்டும்,
மற்று மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ, சேய்த்தோ கூறுமின் எமக்கே." --- புறநானூறு.
இதன் பொருள் ---
நான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் இனிது வாழ்வானாக. பாடும் பாணர்களே! இந்தப் பரிசிலனது சுற்றத்தின் வறுமையைக் காண்பீராக. புது வருவாயை உடைத்தாகப் பழுத்த மரத்தில் பறவைகள் கூடி ஒலித்தால் போன்று, உணவு உண்பவர்களின் ஆரவாரம் இந்த ஊரின் புறத்திலேயே கேட்கின்றது. பருவமழை பெய்யும் காலத்தை முன்னரே அறிந்து, தமது முட்டைகளை எடுத்துக்கொண்டு மேட்டு நிலத்தினை அடையும் மிகச்சிறிய எறும்புகள் வரிசையாகச் செல்லும். அதுபோலவே, தமக்குக் கிடைத்து சோற்று உருண்டையைக் கையில் எடுத்துக் கொண்டு போகும் பெரிய சுற்றத்தோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பீராக. இதனைக் கண்டு வைத்தும், எமது பசி வருத்தத்தாலும், வழிநடந்து வந்த களைப்புத் துயரத்தாலும், மீண்டும் மீண்டும் கேட்கின்றேன். பசி நோயைத் தீர்க்கின்ற அந்த மருத்துவனது வீடு அண்மையில் உள்ளதா? அல்லது வெகுதொலைவில் உள்ளதா? எமக்குத் தெளிவாகச் சொல்லுங்கள்.
ஒருவருடைய இயல்புகளைக் கூறி வாழ்த்துவோர், 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்துதல் உலக இயல்பு. மக்கள் கருவாய்ப் பதிகின்ற போதே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப்பட்டு விட்டது. அதற்கு மேலும் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துதல் பொருத்தம் அற்றது என, எண்ணுபவர்கள், 'ஊழால் உனக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக வாழ்வாயாக' என வாழ்த்துதலும் உண்டு. இப்படி இருவகையிலும் வாழ்த்துவோர்க்கு இழப்பு ஏதும் உண்டாவது இல்லை. ஆனால், பசிப்பிணி மருத்துவனாக விளங்கிய பண்ணனை வாழ்த்திய கிள்ளிவளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட ஆயுளில் கழிந்தன போக, இனி எஞ்சி இருக்கின்ற நாளையும் பண்ணன் தன் வாழ்நாட்களுடன் சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்துகின்றான். தனக்கென வாழா, பிறர்க்கு உரியாளனாகிய பண்ணனது அருளையும், அவனது அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளம் உருகிய சோழமன்னன் கிள்ளிவளவனது உள்ளத்தின் உயர்வையும் நன்கு சிந்தித்தல் வேண்டும். பசித்து வந்தோர்க்குப் பகுத்து உண்ணுதலாகிய அறச்செயல், பெரும் செல்வர்களால் மட்டுமின்றி ஏழை எளிய மக்களாலும் நாளும் மேற்கொள்ளுதற்குரிய எளிமை உடையதே, உளத்தால் உயர்ந்தவர்களால் இது இயலும் என்பதனை, "யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" எனத் திருமூல நாயனார் இரத்தினச் சுருக்கமாக அருளினார்.
தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் ஆபுத்திரனும், மாதவியின் மகள் மணிமேகலையும் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் பிச்சை எடுத்தாவது மக்களது பசிப்பிணியைப் போக்கிய செய்திகளைக் காணலாம்.
திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வழிபட்டு இருந்த காலத்தில் உண்டாகிய பஞ்சத்தால், உணவு இன்றி, உணவுப் பொருள்களும் இன்ளி, மக்கள் வருந்திய வருத்தத்தைத் தீர்க்க, மடங்களை அமைத்து, இறைவன் திருவருளால் நாள்தோறும் படிக்காசு பெற்று, நாள்தோறும் மக்களுடைய பசியை, பஞ்சம் தீரும் காலம் வரையில் செய்து வந்தார்கள்.
அருணகிரிநாதப் பெருமான் அருளிய உபதேசம் ஒன்று உண்டு. அது மிகவும் அற்புதமான உபதேசம். பின்பற்றுவதற்கு எளிமையான உபதேசம். "முருகா! என்று சொல்லிக் கொண்டு நாளும் இரு. அதற்காக உண்ணாமல் இருக்கவேண்டாம். உண்ணுகின்ற சோற்றில் ஒருபிடியை பசித்து வந்தவர்க்கு இட்டு, அதன்பிறகு நீ உண்டு மகிழ். இது போதும். இதுவே, ஒரு பிடி சாம்பலும் கூடக் காணாமல் அழிந்து போகக் கூடிய இந்த உடம்பை எடுத்து வந்ததன் பயன் ஆகும்" என்கின்றார் நமது அருட்குருநாதர் ஆகிய அருணை வள்ளலார்.
"பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி நித்தம்
இரு, பிடிசோறு கொண்டு இட்டுஉண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே" --- கந்தர் அலங்காரம்.
இவை எல்லாம் பண்டைத் தமிழினம், அற்றார் அழிபசியைப் போக்குவதைத் தமது வாழ்வியலாகக் கொண்டு இருந்தது என்பதை விளக்கிக் காட்டுவன ஆகும். இந்த அருள்நெறி மேலும் விளக்கம் பெறுவதற்காகவே, இறைவன் திருவருளால், சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளல்பெருமான் தோன்றி, எத்தகைய வேறுபாடும் கருதாது மக்களது பசிப்பிணியினைப் போக்குதற்கு என்றே, சத்திய தருமச் சாலையை நிறுவி, தமது அருட்கருணையால் ஏழை எளியவர்களின் பசிதீர உணவு அளிப்பதே இறைபணி என்ற சீரிய சிந்தனையை மக்கள் உள்ளத்திலே நன்கு நிலைபெறச் செய்து அருளினார்கள்.
பிற உயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய நன்மக்கள் உள்ளத்திலே இரக்க உணர்வு தன்னியல்பில் தோன்றுவதாகும். இத்தகைய இரக்கம் காரணமாகப் பிற உயிர்களின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் அருளாளர்களின் கருணைத் திறம் கொல்லாமை, புலால் உண்ணாமை, ஏழைகளின் பசி தீர்த்தல் என்னும் இம்மூவகை அறங்களால் நிகழும். இம் மூவகை அறங்களுள்ளும் பொருட்செல்வம் உடையோர், ஏழைத் தொழிலாளர், முதலிய பலதிற மக்களும் தம் வாழ்வில் எளிதில் கடைப்பிடித்தற்கு உரிய தலைசிறந்த அறமாகத் திகழ்வது, பசியால் வாட்டம் உற்றவர்களின் பசிப் பிணியைத் தீர்த்தலாகிய 'அன்னதானம்' ஒன்றே ஆகும். பசித்தோர்க்கு உணவு இடுதலின் இன்றியமையாமையை வள்ளல்பெருமான், தாம் இயற்றிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.
உயிர்களின் உணர்வு ஒழுக்கங்களை அழித்து, அவ்வுயிர்கட்கு இறுதி விளைப்பதாகிய பசிப்பிணியின் கொடுமையினையும், அற்றார் அழிபசி தீர்த்தலாகிய நல்லறத்தினை மேற்கொண்டு செய்வோர் அடைதற்குரிய பெரும் பயன்களையும், வறியோரது பசி தீர்த்தலாகிய அறத்தினைச் செய்யாது மக்கள் மேற்கொள்ளும் பிற அறச் செயல்களும், தீர்த்தயாத்திரை முதலிய கடவுள் வழிபாடுகளும் எத்தகைய பயனையும் தரமாட்டா என்பதனையும் அறிவுறுத்தி உள்ளார். இந்த அருள்மொழிகளை உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்.
அருளின் திருவுருவாய்த் தோன்றிய அடிகளார், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உளம் நைந்து வாடினார். பசியினால் இளைத்து, வீடுதோறும் சென்று பிச்சை எடுத்தும், பசிநோய் தணியப் பெறாது அயர்ந்தவர்களைக் கண்டு உள்ளம் வெதும்பினார். நாள்பட்ட நோயால் வருந்துவோரைக் கண்டு தமது உள்ளம் வருந்தி அவர்களுக்கு மருந்து அளித்துப் பிணிதீர்த்தார். உலகில் ஏழை மக்கள் பசியால் வருந்துகின்றார்கள் எனப் பிறர் சொல்லக் கேட்ட போதெல்லாம் உள்ளம் பகீர் எனத் துடித்தார். மானம் உடையவர்களாய், பிறரிடத்தில் சென்று இரந்து உண்ண மனம் கொள்ளாத ஏழைகள் நெஞ்சு இளைத்து இருந்தமையைக் கண்டு தானும் இளைப்பு உற்றார்.
"வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்;
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உள்ளம் துடித்தேன்;
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தம்மைக் கண்டே இளைத்தேன்" --- திருவருட்பா.
உலகியல் வாழ்வில் பசியின் கொடுமையினை உள்ளவாறு உணர்ந்து உள்ளம் வருந்திய வள்ளல்பெருமான், பசிப்பிணியினை அறவே நீக்கத் திருவுள்ளம் கொண்டு சீவகாருண்ணிய ஒழுக்கத்தை அன்றாடம் நடைமுறையில் செயற்படுத்துதற்கென்றே வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவிப் பசிப்பிணி மருத்துவராகத் திகழ்ந்தார்.
வியாதிகள் நீங்க வள்ளல் பெருமான் கூறும் மருந்து ---
சூலை, குன்மம், குட்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்கட்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக, அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேட சுகத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை.
பிள்ளைப் பேறு இல்லாதவர்க்கு வள்ளலார் கூறும் மருந்து ---
பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு, நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணும் என்பது உண்மை.
நீண்ட ஆயுள் பெற வள்ளலார் கூறும் மருந்து ---
அற்ப வயது என்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி. விசாரப்படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை.
கல்வியும் செல்வமும் பெற வள்ளலார் கூறும் வழி ---
கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பே கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டு பண்ணும் என்பது உண்மை.
மருத்துவர் ஆகவேண்டுமானால், அதற்கான கல்வியைப் பெரும்பொருள் செலவில் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், பணிப்பிணி மருத்துவர் ஆவதற்கு அவ்வளவு முயற்சி அவசியம் இல்லை. நாள்தோறும் தான் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடியைப் பசித்தோர்க்கு அளித்து வரும் உள்ளம் அமைந்தாலே போதும். "வயிற்றுக்குச் சோறு இட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்" என்றார் பாரதியார். எல்லோரும் பசிப்பிணி மருத்துவர் ஆவது எளிது.
No comments:
Post a Comment