ஆன்ம நேய ஒருமைப்பாடு
-----
அன்பு என்பது உயிருக்கு இயல்பாக அமைந்திருக்க வேண்டிய பண்பு ஆகும். அன்பு செலுத்துவதையே பண்பாகவும், அறச் செயலைச் செய்வதையே பயனாகவும் கொண்டு விளங்குவதே இல்வாழ்க்கை என்பதை விளக்க, "அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு என்னும் சொல்லுக்கு நேயம் என்றும் பொருள் உண்டு. ஆன்மநேயம் என்பது, எல்லா உயிர்களையும் ஒர் இனம் எனக் கருதி, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு உடையவராக ஒழுகுகின்ற நிலையைக் குறிப்பது. ஆன்மா = உயிர்; நேயம் = அன்பு; ஒருமை = அன்பு என்னும் பாசத்தால் எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் மனத்தின் ஒருமைப்பாடு.
உயிர் என்பது காட்சிக்குப் புலனாகாத அருவப் பொருள். "காணா மரபிற்று உயிர் என மொழிப" என்பது தொல்காப்பியம். கண்ணால் காண முடியாத உயிரின் இருப்பை, காணப்படும் அதன் உடம்பின் இயக்கத்தைக் கொண்டு நாம் உணர்கின்றோம். எனவே, உயிர் உணரும் தன்மை உடையது. உடம்பு உணர்வு அற்றது. உயிர் என்றும் அழியாத நிலைபேறு உடையது என்பதால், அதனை 'மன்னுயிர்' என வழங்குகிறோம். உயிரினது நிலைக்களம் ஆகிய உடம்பு அழியக் கூடியது. அறிவில்லாததும் அழியக் கூடியதும் ஆகிய இவ்வுடம்பிற்கும், அறிவுடையதும் நிலைபேறு உடையதும் ஆகிய உயிருக்கும் உண்டாகிய தொடர்புக்குக் காரணம் என்ன என்று திருவள்ளுவ நாயனார் தெளிவிக்கின்றார்.
"அன்போடு இயைந்த வழக்கு என்ப, ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு"
'காணா மரபினதாகிய உயிர்க்குக் காணப்படும் உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை அன்பு என்னும் உயிர்ப் பண்பினை வளர்த்தல் பொருட்டு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்' என்கிறார் திருவள்ளுவ நாயனார். அருவ நிலையிலே உள்ள உயிர்கள், உடம்பின் தொடர்பைப் பெற்றுத்தான், அன்பு என்னும் உயிர்ப்பண்பை வளர்த்துக் கொள்ள முடியும். "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி" என்றார் மணிவாசகப் பெருமான். புல் முதலாகிய உடம்புகள் உயிர்க்குப் படிகால் முறையாகப் படைத்து வழங்கப் பெற்றன என்பதை அறியலாம். புல் என்பது, ஓரறிவு உயிருக்கு வாய்த்த உடம்பு. அதுபோலவே, ஈரறிவு முதல் ஆறறிவு உயிர்க்கு, அவற்றிற்கு ஏற்ற உடம்பு வாய்த்தது.
ஒரறிவு உயிராகிய புல் முதல், ஆறறிவு உயிராகிய மக்கள் ஈறாக எல்லா உயிர்களும் தாம் பெற்றுள்ள உடம்புகளால் வேறுபட்டுத் தோன்றினாலும், ஊழ்வினை காரணமாகப் பிறக்கும் பிறப்பு இயல்பினால் ஒத்த தன்மை உடையனவே என்பது, "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" எனவரும் திருவள்ளுவ நாயனார் அருள்மொழியால் நன்கு விளங்கும். உயிர்கள் செய்த புண்ணிய பாவம் ஆகிய இருவினைப் பயன்களை, செய்த உயிர்களே அனுபவிக்கும்படி வரையறுத்து ஊட்டுவது ஊழாகிய நியதி தத்துவம் ஆகும். இந்த நியதி காரணமாகவே உலகில் பல்வேறு உயிர்களும் பல்வேறு உடம்பினைப் பெற்று, மாறிமாறிப் பிறந்து வருகின்றன. இவ்வாறு உயிர்த் தொகுதிகள் தாம் தாம் பிறக்கும் இடவகையாலும் அவ்வப்பொழுது மேற்கொள்ளும் உடல் வகையாலும் வேறுபட்டனவாயினும், உணர்வுடைய பொருளாய் உயிர் எனப் பேசப்படும் தன்மையில் ஒற்றுமையும், உயிர்ப் பண்பாகிய அன்பின் தொடர்ச்சியினால் உறவும் உடையனவே.
சங்க காலச் சான்றோர் இந்த உண்மையைத் தமது அனுபவத்தால் உணர்ந்து, ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு வித்திட்டு உள்ளார்கள்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன,
சாதலும் புதுது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம், ஆதலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
எனவரும் கணியன் பூங்குன்றனார் பாடலால் இது உய்த்து உணரப்படும்.
வானத்தில் உலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப்பெருக்கு, மலைமுகட்டில் உள்ள கற்களை அலைத்துக்கொண்டு பேராறாக இழியும் நிலையினை ஒத்தது உலகின் இயக்கம். பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும், அந்த ஆற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த் தொகுதி என்பதும், ஊழின் வயப்பட்ட உயிர்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு இனங்களிலும், பிறந்தும், இறந்தும் உழன்று இருவினைப் பயன்களை நுகர்ந்து வருதலால், அவ்வுயிர்கட்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினையின் பயனாகத் தாமே வருவன என்பதும், உலகிலேயே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அவரவர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணம். ஆதலால் நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ, அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யறிவு பெற்றோர் ஆகிய தத்துவஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்கள் என்பதும் ஆகிய உண்மைகள் இப்பாடலில் தெளிவுபடுத்தப் பெற்றுள்ளன.
படைப்புக் காலம் தொடங்கி மன்னுயிர்கள் ஊழ்வினை காரணமாகப் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு உடம்புகளிலும் பிறந்து இறந்து துன்புறும் நிலையில், அவ்வுயிர்கட்கு யாதும் ஊராகவும், யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள திறத்தை.
"அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை; யான் அவர்
தாயர் ஆகியும், தந்தையர் ஆகியும்
வந்து இராததும் இல்லை; முந்து
பிறவா நிலனும் இல்லை; அவ்வயின்
இறவா நிலனும் இல்லை;"
என 11 -ஆம் திருமுறையில் திருக்கழுமலமும்மணிக் கோவைப் பகுதியில் பட்டினத்து அடிகளார் விரித்துக் கூறி உள்ளார். இது மேற்குறித்த, புறநானூற்றுப் பாடலுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்.
உயிர்களுக்கு மறுபிறப்பு உண்டு. இருவினைப் பயனால் இறந்த உயிர் மீளவும் பிறக்கும்போது, வெவ்வேறு இடங்களில் சென்று பிறக்கும். அவ்வுயிரிடத்தே அன்பு செலுத்துவோர் அது எங்கே பிறந்தது என்று அறியமுடியாமையால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். சோழ இளவரசனாகிய உதயகுமரன் என்பவன், மாதவியின் மகள் ஆகிய மணிமேகலையை விரும்பி, அவளைப் பின் தொடர்ந்து செல்லும் போது, துறவியாகிய மணிமேகலை, காயசண்டிகை என்ற பெண்ணின் வடிவம் உடையவளாக உருமாறினாள். காயசண்டிகையின் கணவன், அவள் மணிமேகலை என்பதை அறியாமல், தன் மனைவி காயசண்டிகையே என எண்ணி, அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அதனைக் கேட்ட சோழ மன்னன் தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் வருந்தாமல், மணிமேகலையைச் சிறையில் வைத்தான். தன் புதல்வனை இழந்த அரசமாதேவி தன்மகன் இறந்ததற்குக் காரணமாயிருந்த மணிமேகலையை இனி உயிரோடு வைக்கமாட்டேன் எனச் சினந்து, மணிமேகலையைச் சிறையில் இருந்து விடுவித்து, அவளைப் பலவாறு துன்புறுத்தினாள். தான் பெற்ற மந்திர ஆற்றலால் அத்துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட மணிமேகலை, சிறிதும் மாற்றம் இன்றிக் காணப்பட்டாள். அதனைக் கண்டு வியந்த அரசமாதேவி நடுக்கமுற்றவளாய், "என் மகனை இழந்த துன்பத்தால் உனக்கு இத்தகைய கொடுமைகளைச் செய்தேன். இவற்றைப் பொறுத்தருள வேண்டும்" என மணிமேகலையைப் பலவாறு வேண்டினாள். அது கேட்ட மணிமேகலை, சென்ற பிறப்பில் நீலபதியின் வயிற்றில் தோன்றிய இராகுலன் என்பவனைத் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட அவன் இறந்தபொழுது, அவன் மனைவியாக இருந்த நான் அத்துயரத்தைப் பொறாது தீயில் பாய்ந்து உயிர் துறந்தேன். அந்த இராகுலனே இப் பிறப்பில் உனக்கு மகனாக வந்த உதயகுமாரன் ஆவான். அவன் முன்பிறப்பில் பாம்பு தீண்டி இறந்தபொழுது அவனது பிரிவாற்றாது நான் தீப்பாய்ந்து உயிர் விட்ட அந்நாளில், இளங்கோ ஆகிய அவன்பொருட்டு அரசியாகிய நீ எங்கிருந்து அழுதாய்? அப்பொழுது அவனுக்கும் உனக்கும், மகன்-தாய் என்னும் உறவு முறைமை இல்லாமையால் அழாது இருந்தாய். இப்பொழுது அவன் உன் மகனாகிய நிலையில் இறந்தபொழுது, பிற உயிர்க்குத் தீங்கு செய்தல் என்னும் பொருந்தாத செயல்களைச் செய்துவிட்டாய். இப்போது நீ அழுகின்றாய். நீ உன் மகனது உடலை நினைந்து அழுதாயா? அல்லது அவனது உயிரை நினைந்து அழுதாயா? உடலை நினைந்து அழுதாயானால் அவனது உடம்பையும் (எண்ணெய் முதலிய பாதுகாப்புப் பொருளில்) பேணி வைக்காமல் அதனை இடு காட்டில் இட்டவர்கள் யார்? இல்லை, உயிரை நினைந்து அழுதாயானால், அவ்வுயிர் சென்று புகும் உடம்பு அவ் வுயிர் செய்த வினைப்பயனால் பெறுவதாதலின் யாராலும் தெரிந்து காணுதற்கு இயலாது. அவ்வுயிர்க்கு, உண்மையான அன்பினைச் செலுத்துவாயானால், அவ்வுயிரோடு தொடர்புடைய எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் உள்ளவளாய் அன்பு செலுத்துதல் வேண்டும், என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வினை அறிவுறுத்திக் காட்டினாள் மணிமேகலை என்பதைப் பின்வருமாறு காப்பயிம் கூறும்.
"யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை,
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல், உன் மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே!
உயிர்க்கு அழுதனையேல், உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது,
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின், ஆய்தொடி!
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்." --- மணிமேகலை.
ஆருயிர்களிடத்திலே செலுத்தும் அன்பு, அவ்வுயிர்கட்கும் உயிராக விளங்கும் பரம்பொருள் இடத்தும் சென்று சேரும் இயல்பினது ஆகும். உயிர்ப் பண்பாகிய அன்புக்கும், உயிர்க்கு உயிராகிய சிவத்துக்கும் உள்ள பிரிக்கமுடியாத அன்பின் தொடர்பின் உடையது என்கிறார் திருமூல நாயனார்.
"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே." --- திருமந்திரம்.
இறைவனை அடைவதற்குச் சாதனமாகிய அன்பும் அதனால் அடையக் கூடிய பயனாகிய சிவமும் என அன்பையும், சிவத்தையும், அவற்றின் இயல்பை அறியாதவர், இருவேறு பொருளாகப் பிரித்துக் கூறுவர். உயிர்களிடத்துக் காணப்படும் அன்பே சிவபரம்பொருளின் விரிந்த விளக்கமாகும் என்பதை அவர்கள் உள்ளவாறு அறியமாட்டாதவர். உயிர்ப் பண்பாகிய அன்பே சிவத்துவ விளக்கம் ஆகும் என்னும் உண்மையினை யாவரும் அழுந்தி அறிந்தார்களானால், எவ்வுயிரிடத்தும் விரிந்து விளங்குவதாய்த் தம்மிடத்து நிலைபெற்ற அன்பே சிவமாகி விரிந்து தோன்ற, அத்தகைய சிவத்தின் வியாபகத்துள்ளே அன்புருவாய்ப் பிரிப்பின்றி அமர்ந்திருந்தார்கள் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.
உயிர்க்குணமாகிய அன்பு என்பது சிவபரம் பொருளின் திருவுருவ விளக்கமே அல்லாமல், சிவத்தின் வேறான பிறிதொரு பொருள் அல்ல என்பதால், "அன்பே சிவம் ஆவது” என்றார். "ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே;" என்றும், "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும், "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் மணிவாசகப் பெருமான் அருளியதைப் பொருள் உணர்ந்து ஓதி உணர்தல் வேண்டும். எனவே, சிவத்துவ விளக்கமாகிய அன்பினைப் பெருக்குவதற்கே உயிர்களுக்கு எலும்போடு இயைந்த இவ்வுடம்பு கொடுக்கப் பெற்றது என்பது புலனாகும். "அன்பைப் பெருக்கி, எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே" என்பது தாயுமான அடிகளார் அருள்வாக்கு. மேற்குறித்த திருக்குறளை மீண்டும் ஓதி உணர்க.
"மகிழ்தி மடநெஞ்சே! மானுடரில் நீயும்
திகழ்தி, பெருஞ்சேமம் சேர்ந்தாய், - இகழாதே
யார் என்பே யேனும் அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு."
என வரும் காரைக்கால் அம்மையார் பாடலும் இங்கு வைத்து எண்ணத் தக்கது.
"அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ" என்று கண்ணப்ப நாயனாரின் பெருமையை தெய்வச் சேக்கிழார் பெருமானும், "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை" என்று மணிவாசகப் பெருமானும் அருளியது காண்க.
"ஈசனுக்கு அன்பு இல்லார், அடியவர்க்கு அன்பு இல்லார்,
எவ்வுயிர்க்கும் அன்பு இல்லார், தமக்கும் அன்பு இல்லார்,
பேசுவது என்? அறிவிலாப் பிணங்களை நாம் இணங்கில்
பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர், விடு நீ"
என்பது அருள்நந்தி சிவம் அருள்வாக்கு. அடியாரிடத்து உண்மை அன்பு செலுத்தாதவர்கள் இறைவனிடத்தும் உண்மையான அன்பு இல்லாதவர்களே. அத்தகையவர்கள் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுதல் இல்லை. "தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும் துன்னற்க தீவினைப் பால்" என்று திருவள்ளுவ நாயனார் கூறி அருளியது போல, இவர்கள் தம் மீதும் அன்பு இல்லாதவர்கள். அத்தகையவர்கள் உயிரோடு இருந்தும் அறிவற்ற பிணத்தினை ஒத்தவர்கள். இதற்கு மேலும் அவர்களைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்களோடு இணங்கி இருத்தல் மேலும் பிறப்பு இறப்புக்களில் நம்மை ஆட்படுத்திக் கொள்ளுதல் ஆகும். ஆதலால் அவர்களை விட்டு நீங்கி இருத்தலே நலம் பயக்கும்.
இறைவனுக்கு அன்புடைமை என்பது, அவன் அடியவரைக் கண்டு நிகழும் அன்பின் அளவு பற்றியே தெளியப்படும் ஆதலால், அடியவர்க்கு அன்பு இல்லாமல், இறைவனுக்கு அன்புடையோர் போல் ஒழுகுதல் நாடக மாத்திரையே ஆகும். எனவே, அடியவர்க்கு அன்பு இல்லாதார் ஈசனுக்கும் அன்பு இல்லாதவரே ஆவார். எவ்வுயிர்க்கும் உயிராய், அன்பே உருவாய்த் திகழும் பரம்பொருளிடத்தே உண்மையான அன்பினைச் செலுத்த எண்ணுவோர், அப் பரம்பொருள் எழுந்தருளியுள்ள கோயில்களாகத் திகழும் ஆருயிர்களிடத்திலே உண்மையான அன்பினைச் செலுத்துதல் வேண்டும்.
"எவ்வுயிரும் நீங்காது உறையும் இறை சிவம் என்று
எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு"
என்பது சைவசமயநெறி.
"எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!"
என்பது தாயுமான அடிளார் அருள்வாக்கு.
"அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்" என்று விண்ணப்பிக்கத் தொடங்கிய வள்ளல்பெருமான், முதலில் "ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்" என்று வேண்டியதைக் கருத்து ஊன்றிக் கவனித்தால், ஆன்மநேய ஒருமைப்பாடு ஒன்றுதான் மனித குலத்தில் விளங்கி இருக்க வேண்டிய பண்பு என்பது புலன் ஆகும்.
"உயிர் எ(ல்)லாம் ஒரு நீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொது என அறிந்தேன்;
செயிர் எ(ல்)லாம் தவிர்ந்தேன்; திருஎ(ல்)லாம் அடைந்தேன்;
சித்து எ(ல்)லாம் வல்லது ஒன்று அறிந்தேன்;
மயிர் எ(ல்)லாம் புளகித்து, உ(ள்)ளம் எ(ல்)லாம் கனிந்து
மலர்ந்தனன்; சுத்த சன்மார்க்கப்
பயிர் எ(ல்)லாம் தழைக்க, பதி எ(ல்)லாம் களிக்கப்
பாடுகின்றேன் பொதுப் பாட்டே!"
"எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே
எண்ணி, நல் இன்புறச் செய்யவும்,
அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
அகற்றியே அச்சம் நீக்கிடவும்,
செவ்வை உற்று உனது திருப்பதம் பாடிச்
'சிவ சிவ’ என்று கூத்தாடி,
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே
ஓங்கவும் இச்சை காண் எந்தாய்!"
எனவரும் வள்ளல்பெருமான் அருட்பாடல்கள் ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உண்மையைத் தெளிவிக்கும்
No comments:
Post a Comment