யோகம்
---
"யோகம்" என்னும் சொல்லுக்குப் 'பொருந்துதல்' அல்லது 'ஒன்றி இருத்தல்' என்று பொருள். பரம்பொருளுடன் பொருந்துதல் யோகம் எனப்படும்.
பொருந்துதல் என்ற உடனே,
1. பொருந்துகின்ற பொருள் எது?
2. எந்தப் பொருளோடு பொருந்த வேண்டும்?
3. பின் பொருந்துதற்கு உரிய காரணம் என்ன?
4. இதற்கு முன் பொருந்தாது இருந்தமைக்குக் காரணம் என்ன?
5.ஒன்றை மற்றொன்றைனொடு பொருத்துகின்ற உபகார சக்தி எது?
6.பொருந்திய பின்விளையும் பயன் என்ன?
என்ற வினாக்கள் எழும். இவ்வினாக்களுக்கு விடை பின்வருமாறு:
1.பொருந்துகின்ற பொருள், சீவன்.
2.பொருந்தப்படும் பொருள், பரம்பொருள்.
3..பின் பொருந்துதற்குரிய காரணம், பரமானந்த வேட்கை;
4.முன் பொருந்தாது இருந்தாமைக்குக் காரணம், ஆணவமல மறைப்பு;
5. பொருத்துகின்ற பொருள், இறைவனோடு தாதான்மியப்பட்டு நிற்கும் அனுக்கிரக சக்தி;
6. பொருந்திய பின் விளைவது பரமானந்தம்.
இது எதைப் போல என்றால், ஒருத்தியும் ஒருவனும் கூடி இன்புறுவார்களானால், கூடுகின்றவள் மனைவி. கூட்டப்படுகின்றவன் மணாளன். அவள் அவனைக் கூடுவதற்குக் காரணமாக அமைந்தது காமவேட்கை. முன் அவனைக் கூடாது இருந்தமைக்குக் காரணம் அவனை அறியாமை. அறியாமை இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு காம வேட்கை என்றால் என்னவென்று அறிந்து கொள்ள முடியவில்லை. பக்குவம் வந்தபோது, அவளுக்குக் காமவேட்கை தானாகவே உண்டாகிறது. தனது ணாளனைக் கேடி மகிழ்கிறாள். அப்போது கிடைத்த இன்பத்தை எண்ணுகின்ற போது, இதனை அறியாமல் இருந்தோமே என்று தனது பக்குவம் இன்மையை எண்ணி அவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறாள். கூடிய பின் விளைவது சொல்லால் விவரிக்க முடியாத இன்பம் என்கிறார் தாயுமான அடிகளார்.
"இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
எ(ன்)ன ருசித்திட, வலியவந்து
இன்பம் கொடுத்த நி(ன்)னை எந்நேரம் நின்அன்பர்
இடையறாது உருகிநாடி
உன்னிய கருதது அவிழ, உரைகுளறி, உடல் எங்கும்
ஓய்ந்து உயர்ந்து அவசமாகி,
உணரவு அரிய பேரின்ப அநுபூதி உணர்விலே
உணர்வார்கள் உள்ளபடிகாண்;
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும்,
கைக்கொள்வள் பக்குவத்தில்
கணவன் அருள் பெறின், மு(ன்)னே சொன்னவாறு என் என்னக்
கருதி நகையாவள், அதுபோல்
சொன்னபடி கேட்கும் இப் பேதைக்கு நின்கருணை
தோற்றில் சுக ஆரம்பம் ஆம்
சுத்த நிர்க்குணமான பரதெய்வமே! பரஞ்
சோதியே! சுகவாரியே!"
இதன் பொருள் ---
சொன்னபடி கேட்டு நடக்கும் அறிவில்லாத அடியேனுக்கு, உன்னுடைய பேரருட்பெருக்கு இருக்குமாயின், நீங்காத பேரின்பத் தோற்றம் ஓங்கும். முக்குணச் சார்பில்லாத நன்மைக்கு மேலான விழுமிய முழுமுதற்பொருளே! பேரொளிப் பிழம்பே! பேரின்பப் பெருங்கடலே! இனிய அமுதுக்கு ஒப்பான வாழை மா பலா என்னும் முக்கனியைப் போலவும், சருக்கரைப் பாகுபோலவும், கற்கண்டு எனவும், சீனத்துச் சீனிபோலவும், தேன் போலவும் சுவை உண்டாகும்படி வலிய எழுந்தருளி வந்து திருவடி இன்பத்தினை அருட்கருணையால் ஊட்டி அருளிய உன்னை, அந்த இன்பத்தினை அனுபவித்த மெய்யன்பர்கள், எப்பொழுதும் உன்னையே இடையறாது நினைந்து உள்ளம் உருகி, எண்ணி, எண்ணிய உள்ளமும் நெகிழ்ந்து, சொல் தடுமாறி, உடம்பு இளைத்து, நினைவு இழந்து, தன்வசம் இழந்து நின்வசம் ஆகி, அறிதறகு அரிய பேரின்ப நுகர்வு உணர்விலே உணர்ந்து இன்ப வண்ணமாய் அமர்ந்திருப்பர்; இது மெய்ம்மை ஆகும்.
அது எதைப் போன்றது என்றால்) மங்கைப்பருவம் எய்தாத கன்னிப் பெண் ஒருத்தி, தனது பருவம் இன்மையால், உண்மையில் பலராலும் விழைந்து அனுபவிக்கப்பட்டு வரும் சிற்றின்பத்தினை கசக்கும் வேம்பு என வெறுத்துப் பேசுவாள். அவளே மங்கைப் பருவத்தினை அடைந்து, தனக்கு வாய்த்த கணவனுடன் இல்வாழ்க்கையை ஏற்று, கணவனுடன் கூடி மகிழ்ந்து வரும் காலத்தில், அவள் அனுபவித்து வரும் இன்பமே பேரின்பம் என அவளுக்குத் தோன்ற, முன்னம் என்ன சொன்னோம் என்று நினைந்து அடங்காத சிரிப்பினை எய்துவாள்.
பருவம் அடையாதபோது, ஒரு கன்னிப் பெண்ணுக்கு சிற்றின்பம் என்றால் என்னவென்று தெரியாது. எனவே, அதை வேப்பங்காயாக எண்ணி வெறுத்தாள். பருவம் வந்து காமவேட்கை மீதூர, கணவனாக அமைந்த ஒருவனுடன் கூடி இன்பத்தை அனுபவித்தபோது அந்த இன்பம் அவளுக்குப் பேரின்பமாகத் தோன்றியது. மருவம் இல்லாத காலத்தில் தான் எண்ணியதை நினைத்து இப்போது அவளுக்கே சிரிப்புத் தோன்றுகின்றது.
அருள்நந்தி சிவாச்சாரியார் தாம் அருளிய "சிவஞான சித்தியார்" என்னும் நூலில் இதே நிகழ்வை வைத்துப் பின்வருமாறு பாடுகின்றார்.
"கருவி கழிந்தால் காணார், ஒன்றும் எனில் காணார்
காணாதார், கன்னிகைதான் காமரதம் காணாள்
மருவி இருவரும் புணர வந்த இன்பம்
வாயினால் பேச அரிது, மணந்தவர்தாம் உணர்வர்;
உருவின் உயிர் வடிவதுவும் உணர்ந்திலர் காண்; சிவனை
உணராதார் உணர்வினால் உணர்வது கற்பனைகாண்;
அருள்பெறின் அவ் இருவரையும் அறிவுஇறந்து அங்கு அறிவர்;
அறியாரேல் பிறப்பும் விடாது ஆணவமும் அறாதே."
கருவிகளை விட்டு நீங்கப் பெற்றவர்கள் எதனையும் காண முடியாதவர் ஆவார் அல்லவா! எனவே அந்தக்கரணங்களோடும் கூடாதே நின்றவர்களே இறைவனைக் காண்பார் என்பது பொருந்துமா? என்று சிலர் வினவுவர். உலகியல் பொருளைக் காண்பதற்கு உட்கருவியாகிய மனக்கண்ணும், புறக்கருவி ஆகிய கண்ணும் வேண்டும். இது உலகியாருக்கே பொருந்தும். ஆனால் ஞானநிட்டை கூடியவர்கள் இறைவனைத் தமது உள்ளக்கண்ணால் கண்டவர்கள் ஆதலால், ஞானத்தால் யாவற்றையும் அறியும் அறிவு பெற்றவர்கள். இது எத்தகையது என்றால், திருமணமாகாத கன்னிப் பெண் ஒருத்தி இன்பச் சுவையை அறிய மாட்டாள். ஒருவனும் ஒருத்தியுமாகக் கலந்து அனுபவிக்கும் இன்பம் இத்தகையது எனச் சொல்லினால் உணர்த்த இயலாது. அவ்வின்பத்தை துய்த்தவரே அதனை உணர்வர். அது போலவே இறைவனைக் கண்டவர்கள் பெறுகின்ற இன்பமும் இத்தகையது என்று உணர்த்த இயலாது. திருவருள் வழி நின்று உணராதவர்கள் தாம் உணர்வதாகக் கூறினால் அது கற்பனையே அன்றி வேறு அல்ல. திருவடி ஞானம் பெற்றவர்க்கு அல்லாமல் பிறர்க்குப் பிறப்பும் நீங்காது. ஆணவமும் அறாது.
இறைவன் உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்கி அருளும் நிலையைத் திருமூல நாயனார் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.
"அற்புதமாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்து நின்றானே." --- திருமந்திரம்.
இதன் பொருள் ---
கருத்து ஒருமித்த காதலர் கூடி அனுபவித்த அந்தக் காம இன்பம்போல், இறைவன் நிலையும், அவன் திருவடியின்பமும் நுண்ணுணர்வால் உணர்ந்து அனுபவிக்கப் படுவது ஆகும்.
இது பொய்யெனக் கூறப்படும் கற்பனை அல்ல.
ஓர் அறிவற்ற பொருள் மற்றோர் அறிவற்ற பொருளுடன் கூடி இன்புறுவது இல்லை. ஒரு மரப்பலகை ஒரு மாம்பழத்துடன் கலந்து அதன் சுவையை அறியாது. அறிவற்ற பொருளாய் இருப்பினும் அறிவு உடைய பொருளுடன் கூடும்போதுதான் அறிவுடைய பொருள் இன்புறும். ஒரு மாங்கனியை ஒரு மனிதன் நுகர்ந்து இன்புறுவன். ஆயினும் அது அற்ப இன்பமே ஆகும்.
அதனினும் சிறந்தது, அறிவுடைய ஒருவனும் மற்றோர் அறிவுடைய ஒருத்தியும் கூடுகின்ற பொழுது உண்டாகும் மிகுந்த இன்பம். ஆயினும் அந்த இன்பம் கூட, கணப்பொழுதில் மறைவதும், தூய்மை இல்லாததும், நோய் செய்வதும், வெறுக்கத் தக்கதும் ஆகி விடும்.
சிற்றறிவுடைய ஆன்மா பேரறிவுடைய பரம்பொருளோடு கூடுகின்ற பொழுது, தெவிட்டாத பேரின்பமும், அனுபவிக்க அனுபவிக்கக் குறையாத ஆனந்தமும், நிலைபேறான உண்மை இன்பமும் உண்டாகும். ஆதலால், அருளியல் நிலையில் யோகம் என்பது, ஆன்மா பரம்பொருளுடன் பொருந்துதல் எனப் பொருள்படும்.
இதனைத் திருமூல நாயனார் பின்வரும் திருமந்திரப் பாடலால் விளக்கி அருளுகின்றார்.
"புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல,
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே."
இதன் பொருள் ---
பெண்டிரோடு கூடும் கூட்டத்தில், ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே தனது அறிவு அழிந்து நிற்றல்போல, பரம்பொருளினிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவு அழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு, அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையில் இருந்து பெயராத வகையில் பெருகி விளங்கி, விழுங்கி அன்பு வடிவாக நிற்கும்.
ஆணும் பெண்ணும் கூடி மகிழ்கின்றபோது, அறிவு அழிந்து, பிற உணர்வுகள் ஏதும் இன்றி, அன்பு மட்டுமே விஞ்சி நிற்பதைப் போல, பிற உணர்வுகள் எவையும் இல்லாமல், அறிவு அழிந்து, அன்பு மேலிட்டு இறைவன் ஒருவனையே எண்ணி இருத்தல் வேண்டும்.
இதனை இன்னும் தெளிவாக, "ஒழிவில் ஒடுக்கம்" என்னும் நூலில் சொல்லப்பட்டு உள்ளது. காழிக் கண்ணுடைய வள்ளல் என்னும் அருளாளர் அருளிய இந்த நூலை, அதன் அருமை உணர்ந்து, வடலூர் வள்ளல்பெருமான் பதிப்பித்து அருளினார். இந்த நூலில் முதல் பாடலுக்கு அருமையான விளக்கத்தையும் அருளினார். நூல் முழுமைக்கும் வள்ளல்பெருமானுடைய விளக்கம் நமக்குக் கிடைக்கத் திருவருள் இல்லைபோலும். பின்னாளில், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் நூல் முழுமைக்கும் விளக்கம் எழுதி அளித்தார்கள். பாடலையும், சிதம்பர சுவாமிகள் அருளிய விளக்கத்தையும் காணலாம்.
"முலைமுதிர நாணம் முதிர்ந்து, அடங்கி, மூடி,
கலவியிலே நக்கினத்தைக் காட்டல் - சலனைபயன்
ஆனாலும் தம்பனைசெய் ஆநந்தம் ஆக்குவது
போனாலாம் இந்தப் பொருள்."
இதன் பதவுரை ---
முலைமுதிர நாணம் முதிர்ந்து அடங்கி மூடிக் கலவியிலே நக்கினத்தைக் காட்டல் - ஓர் பேதைப் பெண் தனது முலை முதிர முதிர, நாணம் மேன்மேலும் முதிர்ந்து, புற புருடரோடு முன்போல நகையாடல் செய்யாது அடங்கி, அம் முலையினை மறைத்துத் தனது சுய புருடனுக்குக் கூட்டுறவின்கண் நக்கினத்தைக் காட்டுவதுபோலும், ஒருவன் அறிவு முதிர முதிர, முன்போல் விடயங்களில் செல்வதற்கு நாணம் முதிர்ந்து, அவ் விடயங்களில் செல்லும் போதத்தை (அறிவை) உள்ளடக்கித் திருவருளில் மறைத்து, ஆநந்தத்திற்கு ஒப்பித்து நிற்றல், அப் போதத்தை ஆனந்தத்திற்கு ஒப்பிக்க எனின், அங்ஙனம் ஒப்பிக்குமாறே நில்லாமல்,
சலனை பயன் ஆனாலும் தம்பனை செய் ஆநந்தம் ஆக்குவது போனாலாம் இந்தப் பொருள் - போதச் சலனை ஆனாலும் விடயப் பயனை அனுபவிப்பதானாலும், இவ் விடயப் பயனை நீக்கி, அப்போதச் சலனையை அடக்கி, அப் போதத்தை ஆனந்த மயமாக்குவதானாலும், இவ் ஆநந்தப் பொருள் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றாது, அங்ஙனம் செய்வன் போம் ஆயின், இப்பொருளும் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றுவதாம்.
குறிப்பு --- முலை முதிர்ந்த பெண், அம் முலையையும் அல்குலையும் பிற புருடருக்குக் காட்டாது மறைத்துத் தன் புருடனுக்குக் காட்டுதல்போல், அறிவு முதிர்ந்தோர் தற்போதத்தை விடயங்களில் செல்ல ஒட்டாது மீட்டு உள்ளடக்கி, அதனைச் சிவாநந்தத்திற்கு ஒப்பிக்க வேண்டும். ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.
தலைவனும் தலைவியும் கூடித் தம்மை மறந்து இன்பத்தை அனுபவிப்பது யோகம் ஆகும். நாற்றைப் பிடுங்கி நடுவதைப்போல, திருமணத்தின் மூலம் தான் பெற்ற மகளை வேற்றுக் குடும்பத்துக்குள் புகுத்துகிறார்கள். பிறந்த வீட்டின் சூழலுக்கு முற்றும் மாறாகப் பெகுந்த வீடு இருக்கும். அந்தச் சூழலுக்குத் தக்கவாறு தன்னை அமைத்துக் கொள்ளாவிட்டால் துன்பப்படுவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து, மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் மணவாளனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. காரணம், அந்த அனுபவம் தாய்க்குக் கிடைக்கவில்லை என்பது அல்ல. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே.
கணவனோடு உறவாடித்தான் மகளைப் பெற்றாள். அந்த உறவின் மூலம் பெற்ற இன்பத்தைத் தனது மகளுக்கு அவளால் எப்படிச் சொல்லமுடியும்? கருத்தில் வைத்து அனுபவித்துப் பார்க்கவே முடியும். எல்லாவற்றையும் கண்ணில் பார்க்க வேண்டும் என்றால், தனிநிலை அக அனுபவங்களை வெளிப்படுத்திக் காட்ட யாராலும் முடியாது. எனவே, உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள், அதில் தோயுங்கள், கண்டுகொள்வீர்கள் என்று கடவுளைத் தேடுதலை யோக அனுபவமாகக் காட்டுகிறார்கள் நமது முன்னோர்கள். அதைப் பாடல்களாக வடித்து வைத்து அருளி உள்ளனர்.
இந்த யோக நிலையைத்தான், "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா" என்று ஆண்டாள் நாச்சியார் காட்டினார். தெய்வச் சேக்கிழார் பெருமான், யோகம் என்பதற்கு விளக்கமாகப் பெரியபுராணத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாருடன் கூடி வாழ்ந்த வகையைக் காட்டிப் பாடியுள்ள பாடல் வருமாறு...
"தென்நாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்ஆருங் கொடிமருங்குல் பரவைஎனும் மெல்லியல்தன்
பொன்ஆரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வுஆகப்
பல்நாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்."
இதன் பொருள் ---
அழகிய திருநாவலூரின் மன்னராக விளங்கும் ஆரூரர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்), தியாகேசப் பெருமானின் திருவருளால் மின்னலையும் கொடியையும் ஒத்த இடையினை உடைய பரவையார் என்னும் மெல்லியலாரின், பொன் அணிகலன்களை உடைய தனங்களாகிய இருமலைகளின் நெருங்கிய சிகரங்களையே அரணாகக் கொண்டு பலநாள்களும் பழகும் யோகத்தை, அதற்கு உரித்தான வழிவழியாகச் சொல்லப் பெறும் அறத்தின் வழிநின்று துய்த்து மகிழ்வாராயினார்.
குறிப்புரை : மின்னல், இடையின் அசைவிற்கும், கொடி அதன் மென்மைக்கும் உவமை ஆயின. யோகம் - கூடுவது. மனத்தை இறைவன்பால் கூட்டவும் பின் அதனை விட்டு நீங்காது காக்கவும் கொள்ளும் பயிற்சியே யோகமாகும். இதனைச் செய்தற்கு உலகியல் சூழலினின்றும் நீங்கி மலைச் சிகரங்களைச் சார்ந்து பயில்வர். அப்பொழுது தான் அது விரைவாகவும் நிறைவாகவும் கைகூடும். இவ்வாறே நம் ஆரூரரும் பரவையாரை மணந்திருந்தும், உலகியலில் காணும் இன்பவழியன்றி, அருளியல்வழிக் காணும் இன்பமாம் இவ் யோகப் பயிற்சியைச் செய்தார் என்பதை இவ்வாறு கூறினார்.
ஓங்கல் - மலை. குவடு - சிகரங்கள். இங்குப் பரவையாரின் தனங்களாகிய மலைகளின் நெருங்கிய சிகரங்களையே இடனாகக் கொண்டு ஆரூரர் யோகம் செய்தார் என்றார். இறைவன் திருவருளிலேயே அழுந்தி நின்று அவன் செயலாகவே அனைத்தையும் கண்டு நிற்பார்க்கு நாம் காணும் உலகியல் இன்பங்களும் இறைவனின் அருள் வழிவரும் இன்பங்களாகவே தோன்றும். அம் மனநிலையால் அவர் அனுபவிக்கும் உலகியல் இன்பங்கள் நம்போன்று வினை வழிப்படுவனவும் ஆகா.
ஆக, யோகம் என்னும் சொல்லுக்கு ஒன்றி இருத்தல், பொருந்தி இருத்தல், சேர்க்கை, புணர்ச்சி என்று பொருள்கள் உண்டு. தியானத்திற்கு "யோகிப்பு" என்ற ஒரு பொருளும் உண்டு. எதனோடு ஒன்றி இருக்கின்றோமோ, அதற்கு யோகம் என்று பொருள். அதனால் பெறப்படும் அனுபவம் யோக அனுபவம் ஆகும். தத்துவமசி யோகம் என்று ஒன்று உண்டு. இதற்குப் பொருள் "அது நீயாக இருக்கிறாய்" என்பதாகும். வடமொழியில் `தத்+த்வம்+அசி` என்னும் மூன்று பதங்களின் சேர்க்கையே `தத்துவமஸி` என்று ஆகின்றது. தத் - அது. த்வம் - நீ, அசி - ஆகின்றாய். தத்துவமசி - அது நீ ஆகின்றாய். இங்ஙனமாயினும் 'ஆகின்றாய்' என்பதனால், 'நீ அது ஆகின்றாய்' என்பதே கருத்து. பக்குவம் வாய்த்தவர்க்கு யோக அனுபவம் கைகூடும்.
புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால், அதன் பச்சை நிறம் பொன் நிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் இறைவன் திருவடியை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏறஏற, யோகமுதிர்ச்சி உண்டாக உண்டாக உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே.
No comments:
Post a Comment