சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை
-----
சின்னக் குழந்தைக்கு ஒழுக்க நெறியைப் போதிக்க வந்த ஒளவைப் பிராட்டியார், சிறியவர் யார், பெரியவர் யார் என்பதை ஒரு பாடலின் மூலம் சொல்லி நல்வழிப்படுத்துகிறார். நல்வழிப்படுவதற்குப் பாடியதால், அந்த நூலின் பெயர் "நல்வழி" ஆயிற்று. மக்களை ஆண்சாதி பெண்சாதி என்றோ, நால்வகை சாதி என்றோ அவர் வகுக்கவில்லை. மேல் சாதி, கீழ்சாதி என்று இருவகையாகப் வகுத்துக் காட்டுகிறார்.
"சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்,
பட்டாங்கில் உள்ள படி"
என்பது ஔவையார் பாடியருளிய அருமையான பாடல்.
இதன் பதவுரை ---
சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவர் எனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர் - உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி - உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவே ஆம். (பட்டாங்கு = உண்மை, உள்ள நிலைமை, சாத்திரம்)
இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளை யார் பிறருக்குக் கொடுக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள். கொடுக்காமல் இருக்கிறவர்கள் சிறியவர்கள் என்று நமது பெரியபாட்டி சொல்கிறாள்.
ஔவையார் காட்டிய இரண்டு சாதிகளில் ஒன்று உயர்ந்ததாகிய நீதிச் சாதி. மற்றொன்று தாழ்ந்ததாகிய அநீதிச் சாதி. உயர்ந்த சாதிக்கு அறிவு இருக்கிறது. தாழ்ந்த சாதிக்கு ஆசை இருக்கிறது. அறிவு, நீதியைச் சார்ந்து தெய்வத் தன்மையோடு விளங்குவது. ஆசை, அநீதியைச் சார்ந்து விலங்குத் தன்மையோடு இருப்பது. அறிவு இருக்கின்ற இடத்தில் அன்பு விளங்கும். ஆசை இருக்கின்ற இடத்தில் வஞ்சகம் இருக்கும். நீதிக்கும் அநீதிக்கும் நடக்கின்ற போர் எப்போதும் ஓயாது இருக்கும். அறிவு விஞ்சுகின்ற போது தெய்வத் தன்மை விளங்கும். ஆசை விஞ்சுகின்ற போது விலங்குத் தன்மை இருக்கும்.
நாம் தெருவிலே நடந்து போய்கொண்டு இருக்கின்ற போது ஒரு பையைக் காண்போம். பையிலே உள்ளதை அறிந்து கொள்ள ஆசை மேலிடும். அதிலே நிச்சயம் பணம் அல்லது பணமதிப்பு உள்ள பொருள் காணப்படும். இப்போது ஆசைக்கும் அறிவுக்கும் இடையே போர் மூளும். இது யாரோ உழைத்துச் சேர்த்த பொருள். இதை இழந்தவர் வருத்தப்படுவார். இதற்கு உரியவர் யார் என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடவேண்டும் என்று அறிவு சொல்லும். பையைத் துழாவிப் பார்த்தால் ஒரு முகவரி இருக்கும். மனம் நிம்மதி அடையும். ஆனால், ஆசை விடாது தனது போர்க்குணத்தைக் காட்டும். அந்தப் பை கிடைத்தது தமது அதிருஷ்டம் என்று வியக்கும். இந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்வது அறிவாக இருந்தால் நீதி தழைக்கும். ஆசையாக இருந்தால் அநீதி தாண்டவம் ஆடும்.
"புண்ணியம் ஆம், பாவம் போம்" என்பது ஔவையார் அருள்வாக்கு. புண்ணியம் செய்யத் தக்கது. பாவம் விலக்கத் தக்கது. நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு. ஒன்று அறியாமை, மற்றொன்று வஞ்சகம். அறியாமை பாவம் அல்ல. இருந்தாலும், அறியாமல் இருப்பது குற்றம் என்பதால், அறியாமை என்பது நீக்கிக் கொள்ளக் கூடிய குற்றம் ஆகிறது. ஆனால், வஞ்சகம் பெரும் குற்றம் ஆகும். அது நரகத்துக்கு வித்தாக அமைகிறது. அது உயிரின் அறிவை அழித்து, அறியாமை என்னும் இருளிலேயே மக்களை வைத்து இருப்பது.
வழியில் கண்டு எடுத்த பொருள் நமது இல்லை என்பது நன்றாகவே தெரியும். பொருளுக்கு உரியவர் இன்னார் என்று தெரிகிறது. அவர் குறித்து அறிந்து கொள்ள வழியும் உள்ளது. பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது. வஞ்சகம் அந்த அறிவு மழுங்கச் செய்கிறது. இந்தக் கள்ளத்தனம்தான் நமக்குப் பரமவிரோதி. அதனோடு நாம் சதாகலமும் போர் தொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். வஞ்சகம் ஒரு கணத்தில் மனதைத் தன் வசப்படுத்திவிடும். நாம் அதனைச் சிறை செய்து அறிவினிடம் ஒப்புவிக்க வேண்டும். நீதி பற்றிய விசாரம் வேண்டும். அது, அறியாமை மற்றும் வஞ்சகத்தைச் சிறிது சிறிதாக அகற்றும் ஒளி ஆகும். அறிவு உதயம் ஆக ஆக, அறியாமை இருள் கொஞ்ச கொஞ்சமாக அகலும்.
நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன். நீதியின் வழி நடப்பவன் அகச் சமயவாதி. அதற்குப் புறம்பானவன் சமயத்துக்கும் புறம்பானவனே. நீதி மிக ஆழமானது. மிக நீளமானது. அந்த நீதியை நான் எனது என்னும் அகப்பற்றும் புறப்பற்றும் உள்ளர்களால் காணமுடியாது. "பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே" என்று மணிவாசகப் பெருமான் பாடிருளியதை உணரவேண்டும். நீதியோடு சம்பந்தப்பட்டவன் இறைவனோடு சம்பந்தப்பட்டவன் ஆகிறான்.
நீதி மிக ஆழமானது என்று சொன்னோம். நீதியின் ஆழத்தை இப்போது காண்போம்.
தமிழ்நாட்டில் ஈகையின் பெருமையைப் பல புலவர்கள் மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். திருவள்ளுவர் ஈகையை மிகச் சிறப்பித்துப் பேசுகின்றார். ஈபவனுக்கு வாங்குகிறவன் இருந்தால்தான் பெருமை. ஈதலினால் ஒருவனுக்கு இன்பம் வரவேண்டுமானால் அவனிடத்தில் ஏற்றுக் கொள்வான் ஒருவன் இருக்க வேண்டும். ஆகையால், ஒரு வகையில் பார்த்தால் ஈதலும் ஏற்றலும் ஒன்றாகவே நிகழ்வன என்று தெரியும். புறநானூற்றில் ஈதலையும் இரத்தலையும் பற்றி ஒரு புலவர் பேசுகிறார். இழிந்ததிலும் இழிந்தது இன்னது, உயர்ந்ததிலும் உயர்ந்தது இன்னது என்று காட்டுகிறார். நமக்கு இறைவன் உடம்பையும், அறிவையும், பிற வசதியையும் கொடுத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும். அப்படியின்றி முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்து, பொருள் ஈட்டாமல் பிறரிடத்தில் சென்று பல்லைக் காட்டிக் கொண்டு 'ஈ' என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல். அப்படி ஒருவன் மானத்தை விட்டுப் பிறர் இழிவு படுத்துவதற்குரிய நிலையில் பல்லைக் காட்டி இரக்கும்போது செல்வம் உள்ளவன் ஈதலே முறை. அப்படியின்றி இல்லை என்று சொல்கிறானே அவன் மிகவும் இழிந்தவன். அவனுடைய குணம் இழிந்த குணம். "ஈ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" என்று இப்படி இழிவையும், அதனினும் இழிவையும் சொன்ன புலவர், உயர்வையும் அதனினும் உயர்வையும் சொல்ல வருகிறார். பிறருடைய குறைபாட்டைக் குறிப்பினால் தெரிந்து கொண்டு தமக்கு இறைவன் அருளிய செல்வம் பிறருடைய வறுமையை நீக்குவதற்கு என்று அறிந்து, தாமே வலிந்து சென்று, 'இந்தா, இதைப் பெற்றுக்கொள்' என்று கொடுப்பது மிக உயர்ந்த இயல்பு. இனி இந்த உயர்ந்த இயல்புக்கு மேல் மற்றோர் இயல்பைப் பற்றிக் கூறுகின்றார். கொள்வாயாக என ஒருவன் கொடுக்கும் போது, நான் இதனைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுக்கிறானே, அவன் கொடுக்கும் உயர்ந்த குணம் படைத்தவனை விடச் சிறந்தவன். "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று" என்கிறார் புறநானூற்றுப் புலவர். கொள் என்று கொடுப்பவனுக்கு முன்னாலே நின்று, கொள்ளமாட்டேன் என்று சொல்வதற்கு மனத் திண்மை வேண்டும். நம்பிக்கை வேண்டும். இறைவன் திருவருள் நமக்கும் ஒரு வழி காட்டும் என்ற உறுதி வேண்டும். ‘'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை, யாண்டும் அஃது ஒப்பது இல்" என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். வேண்டாமை என்பது ஒன்றுதான் மேலான செல்வம்.
"வேண்டாமை ஒன்றை அடைந்து, உளம்
மீண்டு ஆறி, நின் சரணங்களில்
வீழந்து, ஆவல் கொண்டு உருகு அன்பினை...உடையேனாய்,
வேந்தா! கடம்பு புனைந்து அருள்
சேந்தா! சரண் சரண் என்பது,
வீண்போம் அது ஒன்று அல என்பதை .....உணராதோ?"
என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.
இதன் பொருள் ---
ஒரு பொருளையும் விரும்பாத தன்மையை அடைந்து, உள்ளமானது இங்கு ஆறுதலாக இருந்து, தேவரீருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி, ஆவல் கொண்டு உள்ளம் உருகுகின்ற அன்பை உடையவனாகி, அரசரே, கடப்ப மாலை அணிந்து அருள் புரிகின்ற செம்மைப் பண்பு உடையவரே, உமது திருவடியே சரணம் சரணம் என்று அடியேன் கூறுவது வீண்போகாது என்பதைத் தேவரீர் திருவுள்ளம் அறியாததோ?
வேண்டும் என்பது உள்ளவரை பிறவிப் பிணி அகலாது. வேண்டும் என்பது ஒன்று உண்டாயின், அது பிறவாமையே ஆகும். அப் பிறவாமை வேண்டாமை எய்தினால் எய்தும்.
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்." --- திருக்குறள்.
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்,
வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது, வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால், வேண்டிடுக
வேண்டாமை வேண்டும் அவன் பால்." --- திருக்களிற்றுப்படியார்.
வேண்டும் என்ற தன்மை உள்ளவரை துன்பம்தான். ஆதலின், வேண்டும் என்ற எல்லாவற்றையும் ஒருங்கே விடவேண்டும்.
"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு."
என்ற திருவள்ளுவ நாயனார் அருளிய வானமுத வாக்கை நன்கு உணர்ந்து, அதனைச் செயலில் கொண்டுவர வேண்டும். கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வனாக விளங்குகிறான். பணம் இருந்தாலும், மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக வாங்குகிறவர்கள் உலகத்தில் உண்டு. அப்படி இருக்க, நம்முடைய வறுமை தெரிந்து ஒருவன் கொடுக்கிறான் என்றால், அதனை மறுப்பது சாமானிய மனம் படைத்தவனால் இயலாது. அதற்கு ஒரு சிறந்த மனத் துணிவு ஆகையால் கொள் என்பதற்கு எதிரே கொள்ளேன் என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னார். எனவே, கொடுப்பவர் உயர்ந்த சாதி. இறுக்கம் பிடிப்பவர் தாழ்ந்த சாதி.
இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலப்போக்கில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண்பெருமாள் என்னும் திருநாமத்தோடு, ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக அவதரித்தவர் சிறந்த திருமால் அடியார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும், அந்த மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே, பண் இசைத்துத் திருவரங்கனைப் பாடி வந்தார். காவிரியிலிருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துச் சென்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் என்னும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரைப் பலமுறை அழைத்தும் அவர் செவிமடுக்காததால், பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். லோகசாரங்கர் எறிந்த கல் பாணரின் தலையில்பட்டு குருதி பெருக, அதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் சிறந்த பத்தி உணர்வையும், அவரது உயர்வையும் உணர்த்த விரும்பிய திருவரங்கன், இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சி கொடுத்ததோடு, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தனது சந்நிதியில் நிறுத்தும்படியும் லோகசாரங்கருக்கு ஆணையிட, அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு திருப்பாணாழ்வாருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடியபடி தன் பருவுடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக் கலந்தார். இதனால், திருமால் குலம் கோத்திரம் பார்ப்பதில்லை. அன்பு செய்யும் அடியவரையே விரும்புகின்றான் என்பது தெளிவாகும்.
தில்லையின் சிறப்பை அறிந்தும் உணர்ந்தும் இருந்த திருநாளைப் போவார் நாயனார் என்னும் நந்தனார், தமது குலத்தின் இழிவைக் கருதி, தில்லைத் திருத்தலத்தை மிதிப்பதற்கு ஆஞ்சி, தில்லையின் எல்லையை இரவு பகல் பலகாலும் வலம் செய்து வந்தார். ஒருநாள், "தில்லையின் உள் நுழைவிற்கு இப்பிறவி தடையாக நிற்கிறதே, எந்த வழியில் திருக்கூத்தைக் கண்டு தொழுவது" என்று நினைந்து, நினைந்து, மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டார். அன்பர் உள்ளம் கோயில் கொண்ட தில்லையம்பலவாணப் பெருமான், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல் செய்து, "இப் பிறவி ஒழிய, நீ நெருப்பில் மூழ்கி வேதியர்களுடன் நம் முன் அணைவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். மேலும் தொடர்ந்து, தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்களுக்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்து அருளினான். அந்தணர் பெருமக்கள் விழித்து எழுந்து, அச்சத்துடன் ஆலயத்திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடம் சேர்ந்தார்கள். சென்று, "ஐயரே! ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம், உம்பொருட்டு எரி அமைக்கப் போகிறோம்" என்றார்கள். திருநாளைப் போவார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார்.
ஆகவே சாதியை வைத்து மனிதன் உயர்நிலையை அடைவது இல்லை. எனவே சாதி வேற்றுமை பார்ப்பது கூடாது. நல்ல குலம், தீய குலம் என்பதன் பொருளை நாலடியார் உணர்த்துமாறு காணலாம்.
"நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல்அளவு அல்லால் பொருள்இல்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி, ஆள்வினை
என்று இவற்றான் ஆகும் குலம்". --- நாலடியார்.
இதன் பொருள் ---
நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் உலகத்தில் பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறும் சொல்லளவே அல்லால், அதற்குப் பொருள் இல்லை. குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினை உடைய செல்வத்தால் மட்டுமல்ல, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மால் எல்லாம் உண்டாவதாகும்.
உயர்ந்த குலத்தில் பிறந்து, அந்தக் குல ஒழுக்கம் தவறி, கன்ம சண்டாளனாக ஒருவன் ஆவது இழுக்கு. குலத்திற்கு ஏற்ற ஒழுக்க நிலையில் இருந்து உயர்கதியை அடைதல் வேண்டும். ஒழுக்கம் கெடுமானால், இழிந்த பிறப்பு ஆகிவிடும். மறந்துபோனால் கூட, வேதத்தை, திரும்பவும் தக்கவரை அடுத்து ஓதிக் கொள்ளலாம். ஆனால், உயர் குலப் பிறப்பானது ஒழுக்கம் குன்றினால் கெட்டுப் போகும் என்பதைக் காட்ட, "மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்றார் திருவள்ளுவ நாயானர். சன்ம சண்டாளனாகப் பிறந்த ஒருவர், தமது ஒழுக்க நெறியால் உயர் நிலையை அடையலாம் என்பதே திருப்பாணாழ்வார் மற்றும் திருநாளைப் போவார் நாயானார் வரலாறு உணர்த்துவது.
பெரிய கடலின் நீரானது தன்னை அடுத்து உள்ள சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும். அது போல, உயர்ந்தவர்கள் தம்முடைய தம்மையும் தம்முடைய தலைமைத் தன்மையையும் எண்ணிப் பார்த்து தம்மைத் தாமே வியக்காமல், தாழ்ந்தவர்கள் இருக்கும் இடமும் சென்று அவர் துன்பத்தைப் போக்குவார்கள் என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
"தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர்
தம்மை மதியார், தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர், இடர்தீர்ப்பர், அல்கு
கழியினும் செல்லாதோ கடல்." --- நன்னெறி.
தலைமை - பெருமை. இழியினும் - கீழானவர்களாக இருந்தாலும். அல்கு கழி - சிறிய உப்பங் கழிநிலம்.
மேலும், அறிவு உடையோரே உயர்குலத்தவர் என்றும் அறிவு இல்லாதவர் இழிகுலத்தவர் என்றும் பின்வரும் பாடலால் வகுத்துக் கூறுகின்றார்.
"ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு." --- நன்னெறி.
நஞ்சை உடைய பாம்பினிடத்தே தோன்றிய பெரிய மாணிக்கத்தை இகழ்பவர் இல்லை. திருப்பாற்கடலினிடத்தே தோன்றிய நஞ்சை விரும்புபவரும் இல்லை. அதுபோல அறிவினால் அல்லாமல் பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளக் கூடாது.
ஆக்கும் - கல்வியால் உண்டாக்கும். மீக்கொண்ட - மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின் பருமணி - பாம்பின் சிறந்த மணி. கடு - நஞ்சு.
எனவே, நீதி வழுவா நெறிமுறையில் நின்று வறுமையில் வாழ்வோர்க்கு அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றும், தம்மிடம் தேடி வந்தபோதும் இல்லை என்னாமல் உதவி புரிபவரே உயர்ந்த சாதியினர். "இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்து உண்மின்" என்கிறது நாலடியார். "வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள்" என்கிறார் அருணகிரிநாதர். பெரிதாகத் தருமம் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், இயன்ற வரையில் நொய்யரிசியில் பாதி அளவாவது ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து, தாம் உண்ணுதல் வேண்டும். நற்சிந்தையும், நற்சொல்லும், நற்செயலும் என்று மூன்று வகைப்பட்ட அறத்தை முறையே மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் ஒழியாது செய்து வருதல் வேண்டும். அவரே உயர்ந்த சாதியினர்.
செல்வமானது நீர்மேல் குமிழிபோல் நிலையற்றது. ஆதலால், அதனை உள்ளபோதே அறவழியில் செலவழித்தல் வேண்டும். செல்வம் வந்தபோது அதன் நிலைமையை உணர்தல் வேண்டும். நம்மைக் காட்டிலும் அறிவும் ஆற்றலும் உடையவர்கள் எல்லாம் ஏழையாய் இருக்கிறார்களே? நமக்கு மட்டும் செல்வம் உண்டாவதற்குக் காரணம் என்ன? "கொடுத்து வைத்த புண்ணியவான்" என்கிறார்களே? எப்போது கொடுத்து வைத்தோம்? முந்தின பிறவியில் ஏழைகளுக்குக் கொடுத்து வைத்தோம். அதன் புண்ணியத்தால் இப்போது பெருஞ்செல்வராய் இருக்கிறோம். இப்போதும் கொடுத்து வைத்தால் தானே, இனிவரும் பிறிவியிலும் சுகமே வாழ்வோம். நாம் எந்தப் பொருளை ஏழைக்குத் தருகிறோமோ அதுதான் நம்முடைய பொருள். எவ்வளவு பொருளை அறவழியில் செலவழிக்கிறோமோ, அவ்வளவும் மறுமைக்கு வந்து துணை செய்யும். இதனை ஒவ்வொருவரும் தனியே இருந்து சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பிறக்கும் பொழுது கொண்டு வந்ததில்லை. இறக்கும் பொழுது கொண்டு போவதுமில்லை. எனவே இடையில் வந்த பொருள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதனை இறைபணியிலும், அடியார் பணியிலும் செலவழித்தல் வேண்டும். அங்ஙனம் செலவழிக்காது காவல் புரிந்து கொண்டிருந்தால், செல்வம் விரைவில் அழியும். தேனீயானது மிகவும் துன்புற்று அலைந்து சிறிது சிறிதாகத் தேனைச் சேர்த்து வைத்துத் தானும் உண்ணாமல் பிறருக்கும் வழங்காமல் காத்துக் கொண்டிருக்கிறது. பின்னர் என்ன ஆகிறது? பிறரால் அத்தேன் கவரப்பட்டு, தேனீ வீணே வருந்தி அழிகிறது. அதுபோல் அறம் செய்யாதான் செல்வம் அழியும்.
"உடா அதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார்-கெடா அது
வைத்து ஈட்டினார் இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்து ஈட்டும் தேனீக் கரி." --- நாலடியார்.
பெருந் தருமங்களைப் புரிவதற்குப் போதிய செல்வம் இல்லாதோரும் தமது தகுதிக்குத் தக்கவாறு சிறிதாவது அறம் புரிதல் வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காகவே “இயல்வது கரவேல்” என்ற அமுதமொழி எழுந்தது. ஒவ்வொரு நாளும் நமது வருவாயில் சிறிதாவது அறத்தில் செலவழிந்ததா என்று இரவில் படுக்கும்போது சிந்தித்தல் வேண்டும்.
"ஒல்லும் வகையான் அறவினைஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல்." --- திருக்குறள்.
சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. --- கந்தர் அந்தாதி.
இதன் பதவுரை -----
சிறு - சிறிதான, உமிக்கும் - குற்று உமியை ஆயினும், பகிர மர நிகர்வீர் - பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே, சிதை - அழிந்து போவதும், உயிர் - பிராணனுக்கு, துச்சில் - ஒதுக்கிடமும் ஆகிய இவ் உடலின்கண், துமி - ஒரு தும்மல் உண்டாகும் அக் காலையினும், குமர - குமரனே, சரணம் - உனக்கு அடைக்கலம், என்னீ்ர் - என்று சொல்லுங்கள், உய்விர் - பிழைப்பீர்கள், செம் - சிவந்த, தினைமேல் - தினைப் புனத்தில் வாசம் செய்த, சிறுமிக்கு - வள்ளிநாயகிக்கு, மரபு - தமது மரபின் வழிகளை, உரைத்து - எடுத்து உரைத்து, நின்றோன் - குறையிரந்து நின்றவனும், சிலை - வில்லை உடைய, வேட்டுவன் - வேடத் திருமேனியை உடைய கண்ணப்ப நாயனார், எச்சில் - ஊன் முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை, து - உவப்புடனே உண்டவராகிய, மிக்கும் - மேன்மையாக, அரவு - பாம்பு ஆபரணத்தை, அணி - தரித்த, முடியான் - முடியை உடைய பரமசிவனது, மகன் - மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது, சீறடிக்கு - சிறிய திருவடியைக் கருதிக் கொண்டே.
அறிஞர் அறமொழியைக் கேட்பதனாலும், அறிவு நூல்களைப் படிப்பதாலும் அறஞ்செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். அங்ஙனம் உண்டாயின் உடனே அறத்தைச் செய்யவேண்டும். இன்று புரிவோம் நாளை புரிவோம் என்றிருத்தல் கூடாது, ஏனெனில் மறுகணம் இருப்போம் என்பது நிச்சயம் இல்லை. நாம் இளையோம் முதுமையில் அறம் புரிவோம் என்னில், இளமையில் அழிதலும் கண்கூடு. காற்று அடித்தால் முற்றிய கனி உதிர்வதோடு, முதிராத பிஞ்சுகளும் உதிர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். ஆதலால், யாக்கை நிலையாமையை யஉணர்ந்து, அறம்புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டானபோதே, விரைந்து தருமம் செய் என்றனர்.
"அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க, மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை." --- திருக்குறள்.
"மற்றுஅறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது
கைத்துஉண்டாம் போதே கரவாது அறஞ்செய்மின்,
முற்றி இருந்த கனிஒழியத் தீ வளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு." --- நாலடியார்.
ஆன்றோர் அறமொழிகள், அறிவு நூல்கள் இவைகளைக் கொண்டு யாக்கை, இளமை, செல்வ நிலையாமைகளை உணரவில்லை என்றாலும், தினந்தோறும் இறந்தவரைப் பறை ஒலி முழக்கிக் கொண்டு போவதைக் கண்டாவது நெஞ்சம் அஞ்ச வேண்டாமோ? இறந்தோரை அலங்கரித்து அழுகை ஒலியுடன் ஈமதேசத்திற்குக் கொண்டுபோகப் போகிறதைக் கண்டும் ஆசையில் அழுந்தலாமா?
நெடு நாளைக்கு நாம் இருப்போம் என்று எண்ணுவது மதியீனம். "ஐயோ! இறையருளால் பொருளைப் பெற்று இருந்தும், இதுவரையில் அறஞ்செய்யாது ஒழிந்தோமே? நாமும் ஒரு நாள் இறப்போம். பாடுபட்டுத் தேடிய இவ்வளவு செல்வத்தையும் விட்டுப்போய் விடுவோம். நமக்கு இப்போது இருக்கிற பெயரை நீக்கி, பிணம் என்ற பெயரினை இட்டு, பறை ஒலியுடன் கொண்டுபோய்த் தீக்கு இரையாக்குவர்? அதற்குள் விரைந்து தருமம் செய்து இகபர சௌபாக்கியத்தைப் பெற வேண்டும்" என்று நினைத்து நினைத்து நெஞ்சம் அஞ்சிப் பகிர்ந்து அளிக்கவேண்டும். அந்த ஈகையின் பயனாக உண்டாகும் புகழினை இப்பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும்.
"ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். நாயனாரும், ஔவையாரும் இன்னபிற அருளாளர்களும் காட்டிய வழியில் வாழ்பவர் உயர்ந்த சாதியினர். அல்லாதவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று காட்டி, அந்த வழியில் வாழ்ந்து காட்டியது முந்தைய தமிழ்ச் சமுதாயம். அதனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. "குலமும் கோத்திரமும் கொண்டு என் செய்வீர்?" என்று கேட்டவர் அப்பர் பெருமான். "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி" என்று பாடியவர் மணிவாசகப் பெருமான்.
"சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே,
சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே,
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே"
என்று வள்ளல்பெருமானும் அறிவுறுத்தி உள்ளார். எல்லா வேறுபாடுகளும் நீங்கி 'ஒருமையின் உலகெலாம் ஒங்குக' என உலக ஒருமைக்கு அவர் வித்திட்டு உள்ளார். நாயன்மார்கள், ஆழ்வார்கள், உட்பட இன்னும் பல அருளாளர்களும் அறிஞர்களும் உலக ஒற்றுமைக்கு அடிகோலி வந்துள்ளனர். சாதி மத வேற்றுமைகளைப் போலவே, இன வேற்றுமையும் ஒழிக்கப்படல் வேண்டும். இவ்வளவும் இருக்க, தமிழ்ச் சமுதாயத்திற்கு, அதற்குப் புறம்பானவர்கள் போதிப்பது அவசியம் அற்றது. "சாதிகள் இல்லையடி பாப்பா" பாரதியார் சொன்ன பிறகும் ஏன் இந்தப் பதைபதைப்பு? அங்கலாய்ப்பு! சமணத்தில் சாதி இல்லை. பௌத்தத்தில் சாதி இல்லை. இன்னும் சில சமயங்களில் சாதிப் பாகுபாடு இல்லை. சாதிக்குப் புறம்பானவர்களிடம் நால்வருணம் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை.
No comments:
Post a Comment