பேச்சும் பேச்சு இறந்த மோனமும்

 


 

 

பேச்சும், பேச்சு இறந்த மோனமும்

-----

 

     மோனம் என்பதுதிரிகரணங்கள் ஆகிய மனம்வாக்குகாயம் ஆகியவற்றால் முறையே உண்டாகும் நினைவுசொல்செயல் யாவும் அற்ற பெருநிலை ஆகும். ஆன்மாவானது அஞ்ஞானத்தினின்றும் நீங்கி ஞான நிலையைப் பெறவேண்டும். அந்த ஞானத்தின் எல்லை எங்கே தொடங்குகின்றது என்றால்மோனநிலையில்தான். "மோனம் என்பது ஞான வரம்பு" என்பது ஔவையார் அருள்வாக்கு. மோனம் என்பது வாய் பேசாது இருத்தல் மட்டும் அல்ல. அது "வாய்மௌனம்" எனப்படும். உடம்பு அசையாமல் இருக்கும் நிலை "காஷ்ட மௌனம்" எனப்படும். மனம் அடங்கி சலனம் இல்லாமல் இருப்பதே உண்மையான மௌனம் ஆகும். இந்த மோன நிலை திடீரென்று வந்துவிடாது. உலகியல் நிலைகளில் உழன்றுகொண்டுபலபல பொருள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வழக்கத்தை மாற்றி இறைவனைப் பற்றி மிகுதியாகப் பேசிப் பழக வேண்டும்.

 

     "பெரும்பற்றப் புலியூரானைப்பேசாத நாள்எல்லாம் பிறவா நாளேஎன்றார் அப்பர் பெருமான். வாய் படைத்த பயன் இறைவனை வாழ்த்துவது தான். எனவே, "வாயே வாழ்த்து கண்டாய்" என்றும் பாடினார் அப்பர் பெருமான். இறைவனை வாழ்த்துகின்ற வாய், "நல்ல தெள்ளமுது உண்டு உவந்த திருவாய்" என்றும் வாழ்த்தாத வாய், "கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்றும் வள்ளல்பெருமான் வகுத்துக் காட்டினார். எனவேமற்ற மற்றக் காரியங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஒடுங்கஇறைவனைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டுஅவன் புகழைப் பற்றியே பேசி வர வேண்டும். மற்றவற்றைப் பற்றிச் சண்டப் பிரசண்டமாகப் பேசிவிட்டுஇறைவனைப் பேசுவதில்மட்டும் மெளனம் சாதிப்பது நன்மை தராது. 

 

     நாணத்தை விட்டுவிட்டு இறைவன் நாமத்தை நாம் சொல்ல வேண்டும். வசதி படைத்தவர்கள்உயர்ந்த பதவியில் உள்ளவர்கள்சொல்வாக்கு மிகுந்து உள்ளவர்கள் வாய் திறந்து இறைவன் திருநாமத்தைச் சொல்ல நாணம் கொள்வார்கள். "கூட்டத்திலே கோவிந்தா போடுவது" என்பார்கள். அப்படியாவது செய்தல் வேண்டும்.  பேர்களுக்கு மத்தியில் நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக இறைவன் நாமத்தைக் கூறினால் நமது அபஸ்வரம் புலப்படாது. பல பேர்களுடைய குரலுக்குள் அது கலந்து போய் விடும். இப்படியே சொல்லிச் சொல்லிப் பழகினால் கடைசியில் தனியாக இருந்து அவன் நாமத்தைக் கூறிக் கதற முடியும்.

 

     நமது உள்ளம் கசிந்தால்தான்இறைவனது திருவுள்ளமும் கசியும். அவனருளைப் பெறமுடியும். நமது உள்ளத்தைக் கல்லாக வைத்துக் கொண்டால் இறையருள் என்னதான் முயன்றாலும் வாய்க்காது. "திணியான மனோ சிலைமீது உனதாள் அணி ஆர் அரவிந்தம் அரும்பும் அதோ?"என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"உள்ளம் உள்கலந்து ஏத்த வல்லார்ககு அ(ல்)லால்

கள்ளம் உள்ள வழிக் கசிவான் அலன்,

வெள்ளமும் அரவும் விரவும் சடை

வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே".

 

என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

     கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய திருவான்மியூர் ஈசன்உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் வஞ்சகத் தன்மை உள்ள அருள் செய்யமாட்டான்.

 

     அவன் நாமத்தை உள்ளத்தோடு கலந்துஉணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பழகினால் மெளன நிலை தானே சித்திக்கும். பிறர்மனை நோக்காது இல்லறம் நடத்தி வருகின்றவனைச் சந்நியாசிக்குச் சமமானவன் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் பேச்சைத் தவிரப் பிற இழிவானஅவலமான பேச்சுக்களைப் பேசாமல் இருப்பது மெளனத்திற்குச் சமானம். இந்த நிலையை அடுத்து உள்ளத்திற்குள்ளேயே இறைவன் நாமத்தைச் சொல்லும் மெளன நிலை வரும். அதற்கும் அப்பால் "சொல்லுகைக்கு இல்லை என்று சும்மா இருக்கும் நிலை" வரும்.பேசப் பேச இனிக்கிற பொருள் ஆண்டவன். ஆண்டவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால்அந்தப் பேச்சு முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும். 

 

     ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள். வாசலில் கணவன் வருகின்ற காலடி ஓசை கேட்ட மாத்திரத்தில் வாய் அடங்கி விடும். இதைப் போலவேஇன்ப அநுபவம் தலைப்படும்போது தவநெறியில் மோனம் தலைப்படும். அதுவரைக்கும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

 

     ஒரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். திரும்பி வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். பிரிவு என்று சொன்ன உடனேயே அவளுக்குத் துன்பம் உண்டாகிறது. போகும்போது, "உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறாமல் கடிதம் போடுங்கள்" என்று சொல்லி அனுப்புகிறாள். அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தனது தலைவனுடைய குணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாட்கள் கழிந்தன. கடிதம் ஒன்றும் இல்லை. ஒரு நிமிடம் அவளுக்கு ஒரு யுகமாக அவளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து திரும்பி வரவில்லை. தலைவிக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம் கூடப் போடுவதில்லை. வரட்டும் சொல்கிறேன்;என்ன பண்ணுகிறேன் பார்" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள்.

 

     அவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். பெரிய சண்டை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த தோழிக்குப் பெரிய ஏமாற்றம். என்ன என்னவோ கேட்கப் போகிறேன் எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது அவளுக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியை, "நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயேஉன் கணவனிடம் நிறையக் குற்றங்கள் இருப்பதாக அடுக்கினாயே! ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே?" என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். அந்த விடை திருவள்ளுவ நாயானர் மூலமாக வருகின்றது. 

 

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்,கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து."

 

     பெண்கள் கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோதங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமாதங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, "எழுதுங் கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை.

 

     இறைவன் பெருமையை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். "கடவுளுக்குக் கண் இருந்தால் இப்படி நடக்குமாஎன் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டுஅவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால்தாபம் (துக்கம்) அடங்கிய தன்மை பிறந்துவிட்டால்பேச்சு எங்கே வரும்எல்லாம் இழந்த நலம் பிறக்கும். ஆனந்தம்ஆனந்தம்ஆனந்தமே.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...