பத்தி என்னும் வித்து

 


பத்தி என்னும் வித்து

-----

 

     பத்தி என்னும் சொல்லுக்குவழிபாடுஒழுக்கம்முறைமைவரிசைவகுப்பு என்றெல்லாம் பொருள்கள் உண்டு. கடவுளிடத்தும்பெரியோர்களிடத்தும் முறையாக உள்ளன்போடு செலுத்துகின்ற அன்பு "பக்தி" எனப்படும். பத்தி என்றும் சொல்லப்படும். முறையாக எதுவும் இருந்தால்முறையான வளர்ச்சி இருக்கும். முறையான பயன் விளையும். பத்தி முறையானதாக இருந்தால்முத்தி என்னும் பயன் விளையும். முத்தியைப் பெறுவதற்கே பத்தி செய்தல் வேண்டும். பயன் கருதிச் செய்தலும் உண்டு. செய்யப்படும் பத்தி முறைக்கு ஏற்பப் பயன் விளையாமல் போகாது. பத்தி என்னும் பண்பு உடைமையைபத்தி செய்வதைப் "பத்திமை" என்பர் மேலோர்.

 

     பத்திமை வாழ்க்கை எளிதான ஒன்றல்ல. உழவு செய்வது எப்படி எளிதானது அல்லவோஅப்படியை பத்தித் தனிவித்து இட்டுமெய்ம்மையான உழவைச் செய்வதும் எளிதானது அல்ல. பத்திமை வாழ்க்கையை இன்று மேற்கொண்டு ஒழுகுவோர் பலகோடியாக இருக்கலாம். ஆனாலும் அவர்களில் எத்துணை பேர் பத்திமையில் உண்மையாகத் தோய்ந்து எழுந்தவர்கள்எத்துணைப் பேர் பத்திமையில் தோய்ந்து எழும் தகுதி உடையவர்கள்என்பதை எண்ணிப் பார்த்தால் ஒரு சிலரே தேறுவர். சமயச்சின்னங்கள்சடங்குகள் ஆகியவை பத்திமை வாழ்விற்கும்முடிந்த பயனான முத்தியைப் பெறுவதற்கும் கருவிகளே தவிரஅவை ஞானத்தைத் தரமாட்டா. சடங்குகள் தொடக்க நிலையே. முடிவு நிலையாகா. இன்று நம்மிடையில் நிலவும் சமய வாழ்க்கைசடங்கு நெறிச் சமய வாழ்க்கையே தவிரபத்திமை,சீலம் நிறைந்த சமய வாழ்க்கை அல்ல.

 

     நம்முடைய உடலியல் வாழ்க்கை விந்தையானது. உடலில் பொருந்திய உள்ள ஐம்பொறிகள் வேற்றுமை உடையவை. புலன்களும் வேற்றுமை உடையவை. ஆயினும்நோக்கத்தால்பயன்படும் திறத்தால் ஒற்றுமை உடையன. பொறிகள் - புலன்கள் தோற்றத்தால் ஒருமைப்பாடு உடையன. இந்த உடலியல் வாழ்க்கை பழக்கத்தால் பண்படுத்தப் பெறவேண்டிய ஒன்றாகும்வழக்கத்தால் வளப்படுத்தப் பெறவேண்டிய ஒன்றாகும்.

 

     இந்த உலகியலில் எங்கும் எதிலும் சுவையூற்றுக்கள் மலிந்துள்ளன. அச் சுவையினை மோப்பம் பிடித்துச் செல்லும் இயல்பினை உடையவைதான் புலன்கள். புலன்கள் தாம் மட்டும் செல்வன அல்ல.  தம்மையுடைய தலைவனையும் இழுத்துச் செல்லும் தன்மை உடையன. அங்ஙனம் புலன்கள் இழுக்கும் பொழுது அவை போன வழிச் செல்லாமல்செல்லவேண்டிய நெறியைத் தேர்ந்து அவ்வழியில் மட்டும் புலன்களைச் செலுத்தித் தாமும் செல்ல வேண்டியது மனித வாழ்க்கையின் கடமை. 

 

     நன்கு செழித்து வளருகின்ற பயிரின் ஊடு வளர்கின்ற களையானது பகை ஆகும். அதுபோலவே நல்ல பத்திமை வாழ்க்கைக்கு உயிர்ப் பகையாகிய காமம்குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் என்னும் ஆறும் பகைகளே. இவைகளை ஒருவன் வெற்றி கொள்ளவேண்டும். பயிரின் ஊடு வளர்கின்ற களையை வேர் அறப் பறித்து எறிவது போல்இந்த உயிர்ப் பகைகளை அறுத்து எறியவேண்டும்.

 

     அடுத்துஇறைவன்பால் மாறாத இன்ப அன்பை அடையத் தடையாக இருப்பவை நம்மிடத்தில் உள்ள முக்குணங்கள். அரச குணம் என்று சொல்லக்கூடிய இராஜசம் உயர்ந்த குணம்அறிவு விருப்பம் உடையதுஆள்வினை ஆற்றல் உடையது.விரைந்து தொழிற்படும் இயல்பினை உடையது. ஆயினும்உலகியல் இன்பத்திற்கு ஏற்புடையதாக உள்ள இந்தக் குணம்நிறைவான இறையின்பத்திற்கு உதவாது. வானில் இருந்து விழும் மழைத் துளிகள் பலப்பலவாகச் சிதறும் பொழுது உரிய பயனை அவை தருவதில்லை. அந்த நீர்த்துளிகள் ஒரு வாய்க்காலாகஓர் ஆறாகஓர் ஏரியாக உருமாறும் பொழுதே உண்மையில் அவை பயன்படுகின்றன. அதுபோலவேசிந்திக்கும் திறனுடைய சித்தத்தைசிந்தனையை ஒரு நெறிப்படுத்திக் கொள்ளத் தவறினால்சிந்தனைத் திறன் பயனற்றுப் போகிறது.  "ஒரு நெறிய மனம் வைத்து உயர்ஞான சம்பந்தன்"என்றார் ஆளுடைப் பிள்ளையார் ஆகிய திருஞானசபந்தர். "ஒன்றி இருந்து நினைமின்கள்உம் தமக்கு ஊனம் இல்லை என்றார் அப்பர் பெருமான். "ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்"என்றார் வள்ளல்பெருமான். ஆதலால்நுண்ணுடலின் செயலுறுப்புக்களாகிய மனம்புத்திசித்தம்அகங்காரம் என்னும் நான்கு கருவிகளையும் ஒருநெறிப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் செய்தாலும் இதயத்தின் ஆழத்தில்ஒன்றுக்கும் உதவாத பேய்ச்சுரையை விதையாகப் போட்டுவிட்டால் பயனில்லை. இதயத்தின் ஆழத்தில் பத்திமை என்னும் விதையை விதைக்க வேண்டும். 

 

     பத்திமை என்னும் வித்தை எப்படி விதைக்கவேண்டும் என்று திருஞானசம்பந்தப் பெருமான் காட்டுமாறு காணலாம். "பத்திப் பேர் வித்து இட்டேபரந்த ஐம்புலன்கள் வாய்ப் பாலே போகாமே காவாபகை அறும் வகை நினையாமுத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடாஊடாநால் அந்தக் கரணமும் ஒரு நெறியாச் சித்திக்கே உய்த்திட்டுதிகழ்ந்த மெய்ப்பொருள் சேர்வார்" என்று அடியார்களின் சிறந்த இலக்கணத்தைக் காட்டிஅந்த மெய்ப்பொருளையே ஒருமை உணர்வுடன் எண்ணுபவர்கள் வாழுகின்ற திருத்தலம் கழுமலம் (என்னும் சீகாழி) என்கின்றார்.

 

பத்திப்பேர் வித்துஇட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்

பாலே போகாமே காவாப் பகைஅறும் வகைநினையா

முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்

மூடா ஊடா நால்அந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்

சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்

சேர்வார் தாமே தான்ஆகச் செயும் அவன் உறையும்இடம்

கத்திட்டோர் சட்டங்கங் கலந்து இலங்கும் நல்பொருள்

காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே.

 

என்பது திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்.

 

இதன் பொருள் ---

 

     அன்பாகிய விதையை ஊன்றிபரந்துபட்ட சுவை (ஒளிஊறுஓசைநாற்றம்)முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக் காத்து,காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு இடையூறாக விளங்கும் (இராஜசம் முதலான) முக்குணங்களின் வழி ஒழுகாது. (மனம்புத்திசித்தம்அகங்காரம் என்னும்)அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி,விளங்கும்மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம்ஆறு அங்கங்களையும் கற்று உணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம்பொருளின் திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகர் ஆகும்.

 

     அன்பாகிய விதையை இட்டுபுலன்வழி பொருந்தாதுபகைகள் ஆறையும் கடிந்துமுத்திக்கு இடையூறாகிய சாத்விக இராஜச தாமசங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி அந்தக்கரணம் ஒரு நெறிப்பட சிந்திக்கமெய்ப்பொருளையே தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும் சிவன் உறையும் இடம் கழுமலவளநகர் என்கின்றார். 

 

     பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா --- எங்கும் பரவியுள்ள சுவை முதலாகிய ஐம்புலன்களிடம் சென்று பற்றாதபடி காத்துபகை அறும்வகை நினையா --- காமம் முதலான உட்பகை ஆறையும் நீங்கும் வகை நினைத்து. முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா --- முத்திக்கு இடையூறாக முடிக்கும் முக்குணங்களின் வழியை மூடிப் பிணங்கி. நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டு --- மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கையும் ஒருநெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி. திகழ்ந்த மெய்ப்பொருள் சேர்வார் --- விளங்கிய சிவபரம்பொருளைத் தியானிப்பவர்கள். தாமே தானாகச் செய்யும் அவன் --- அவர்கள் அனைவரையும் சிவமாகச் செய்யும் இறைவன். சட்டங்கம் கத்திட்டோர் கலந்திலங்கும் காலே ஓவாதார் --- ஆறு வேதாங்கங்களையும் ஓதி உணர்ந்தோர்கள் ஒன்றி விளங்கும் சிவபரம்பொருளின் திருவடியை இடைவிடாது தியானிப்பவர்கள். இவர்களே மெய்யடியார்கள்பத்தர்கள்.

 

     அடியார்கள் உள்ளத்தையே இறைவன் தனக்கு உரிய கோயிலாகக் கொண்டு எழுந்தருளி விளங்குகின்றான் என்பதை"மாதவம் மேவினர்அகத்து இடத்தினில் வாழ் சிவனார்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். அடியவர்களுடைய இயல்பினை அறிவிக்க வந்த அருணகிரிநாதப் பெருமான்

 

"மதித்த முத்தமிழ் ஆய்வினர்,மேலவர்,

     உரைத்து உ(ள்)ளத் திருவாசகம் ஆனது

     மனத்துள் எத்துஅழகார்புகழ் வீசிய ...... மணிமாடத்

 திரைக்கடல் பொரு காவிரி மாநதி

     பெருக்கு எடுத்துமெ பாய்வள நீர்பொலி

     செழித்த நெல்செநெல் வாரிகளே குவை .....குவையாகச்

 செருக்கு செய்ப்பதி வாழ் முருகா! அறம்

     வளர்த்த நித்யகல்யாணிக்ருபாகரி

     திருத்த வத்துறை மாநகர் தான் உறை ...... பெருமாளே".

 

என்று பாடிக் காட்டினார்.

 

இதன் பதவுரை ---

 

     மதித்த முத்தமிழ் ஆய்வினர் --- போற்றிச் சொல்லப்படும் முத்தமிழை ஆய்ந்தவர்களும்மேலவர் உரைத்துள திருவாசகம் ஆனது--- மேலோர்களும் பாடி அறிவுறுத்தியுள்ள திருவாசகத்தின் கருத்துக்களை,மனத்துள் எத்து --- மனத்தில் கொண்டு வழிபாடு செய்கின்றஅழகார் புகழ் வீசிய--- அழகும் புகழும் விளங்குகின்ற, மணிமாட --- மணிமாடங்களை உடையதும்திரைக் கடல் பொரு காவிரி மாநதி பெருக்கு எடுத்துமெ பாய் வளநீர் பொலி செழித்த--- கடல் போல் அலைகள் வீசுகின்ற காவிரி மாநதியானது பெருக்கு எடுத்துப் பாய்கின்ற வளம் பொருந்திய நீரால் செழிப்புற்று விளங்குகின்றதும்நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ் முருகா ---நெற்பயிரும்செந்நெல் பயிரும் குவியல்  குவியலாக விளைந்து பெருகும் வயல்களை உடையதும் ஆகிய வயலூர் என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற முருகப் பெருமானே!

 

     உள்ளம் உருகி நினைப்பவர் உள்ளக் கோயிலில் இறைவன் உறைகின்றான் என்பதற்குப் பிரமாணங்கள் வருமாறு....

 

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்.--- அப்பர்.

 

நினைப்பவர் மனத்துளான்                  --- திருஞானசம்பந்தர்.

 

ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை --- மணிவாசகர்.

 

"சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்,

திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்,"       --- மணிவாசகர்.

 

இறைவனையே நினைப்பதால் ஏனைய நினைப்புகள் தானே நீங்குகின்றன. அதனால் அமைதியும் ஆறுதலும் உண்டாகின்றன.  ஓயாத உலக நினைவு நம்மை அல்லல் படுத்துகின்றது. மற்றைய நினைப்புகள் அறமயில்வாகனனை நினைந்து உய்வு பெறவேண்டும்.

 

"உருகுதலைச் சென்ற உள்ளத்தும்அம்பலத்தும்ஒளியே

பெருகுதலைச் சென்று நின்றோன்" பெருந்துறைப்  பிள்ளைகள்ஆர்

முருகுதலைச் சென்ற கூழைமுடியாமுலை பொடியா,

ஒரு குதலைசில் மழலைக்குஎன்னோஐய! ஓதுவதே". 

                                                                                    

 என வரும் மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையார்இறைவன் தன்னை நினைந்து உருகின்ற உள்ளத்திலும்திருச்சிற்றம்பலத்திலும் அஞ்ஞான இருள் நீங்கி,ஞானவொளி பெருகும்படியாக எழுந்தருளி உள்ளான் என்று காட்டுகின்றது.

 

    ஆழ்வார்களும்அடியார் உள்ளத்திலும் திருவேங்கடத்தான் எழுந்தருளி உள்ளான் என்கின்றனர்.

 

உளன் கண்டாய்நன்னெஞ்சே!. உத்தமன் என்றும்

உளன் கண்டாய்உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்,

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்,

மண் ஒடுங்கத் தான்அளந்த மன்.        --- பூதத்தாழ்வார்.

 

உளன் கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்

உளன் கண்டாய்உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்,

வெள்ளத்தின் உள்ளானும்வேங்கடத்து மேயானும்,

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.  --- பொழ்கை ஆழ்வார்.

 

     உண்மையான பத்தி என்னும் விதையை உள்ளத்தில் விதைத்துஅங்கே முன்னமே முளைத்து உள்ள களைகள் ஆகிய காமக் குரோதாதிகளைக் களைந்துஆர்வமாகிய தெறிந்த நீரைப் பாய்ச்சிவளரவிட்டுமுத்தியாகிய அருங்கனியைப் பறித்து உண்டு,பேரின்பம் ஆகிய சுவையை அனுபவிப்போம்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...