பிறரது குற்றங்களைத் தூற்றுதல் கூடாது

 


பிறரது குற்றத்தையே தூற்றுதல் கூடாது

-----

 

     தம்முடைய குற்றங்களைப் பிறர் பலரும் அறியுமாறு சொல்லும்போதுதமக்குப் பெருந்துன்பம் உண்டாவதை ஊகித்து உணர்பவர்பிறருடைய குற்றங்களைப் பலர் அறிய சொல்லமாட்டார் என்பது நூல்களில் சொல்லப்பட்டுள்ள அற்புதமான செய்தி. எனவேபிறருடைய குற்றங்களைப் பலர் அறியச் சொல்லாது இருத்தலை எவ்வகையாலும் கடைப்பிடித்து வருதல் வேண்டும்.

 

     புறங்கூறுவதை இயல்பாக உடையவன்தான்அது செய்வதற்கு அயலாரது குற்றங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துத் தூற்றுவான். பிறரது குற்றத்தைக் காண்பது போலதனது குற்றத்தையும் ஒருவன் காண வல்லவன் ஆனால்உலக உயிர்களுக்குத் தீது உண்டாகாது என்கின்றார் திருவள்ளுவ நாயனார். பொறாமை காரணமாகப் பிறரிடம் உள்ள குற்றம் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்துதூற்றுவதில் களிப்பு அடைகின்றவர்கள் உண்டு. பிறர் குற்றங்களைத் தூற்றுவதன் மூலமாகவேதங்களை உயர்த்திக் கொள்வதாக இவர்களது மனப்பான்மை இருக்கும். இப்படிப்பட்டவர்கள்அன்னியர் குற்றங்களைத் தேடிக் கண்டுபிடித்தல் போலதன்னிடத்தில் குற்றங்களையும் ஆராய்ந்து அறிய முற்பட்டால்தனது குற்றங்களில் இருந்து மேம்படுவர் என்பது இதனால் அறியப்படும்.

 

"ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்,

தீது உண்டோ மன்னும் உயிர்க்கு".     --- திருக்குறள்.

 

     நாக்கு என்ற ஒன்றை இறைவன் நமக்கு வைத்ததேநல்லதைப் பேசி நல்வழிப்பட வேண்டும் என்பதற்காகத் தான். பயன்றறதும்தீமையைப் பயப்பதும் ஆன சொற்களைச் சொல்லாது இருத்தல் வேண்டும். எப்போதும் பிறரது குற்றங்களையே பூதக் கண்ணாடி கொண்டு ஆராய்ந்து தூற்றுகின்றவர்களது நாக்கு எதனால் உருவானதோஎன்று ஐயப்படுகின்றது "நாலடியார்". கயவர்களின் தன்மையை அவர்களது நாக்கின் மேல் ஏற்றி இழித்துக் கூறுகின்றது.

 

"கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்

குணனேயுங் கூறற் கரிதால்குணன் அழுங்கக்

குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு

எற்றால் இயன்றதோ நா".         ---  நாலடியார்.

 

இதன் பொருள் --- 

 

     கூட்டமான மலைகளை உடைய உயர்ந்த நாட்டுக்கு உரியவனே!. நேருக்கு நேராகக் கண்டும் கூபெரியோர் ஒருவரிடம் இல்லாத குணங்களை இருப்பதாகக் கூறிப் பொய் சொல்லமாட்டார்கள். ஆனால்சிற்றறிவு படைத்த கயவர்களோபிறரிடம் உள்ள நல்ல குணங்களை மறைத்துகுற்றங்களையே பெரிதாகக் கூறிக் கொண்டு இருப்பர். இப்படிப்படவர்களுடைய நாக்கு எதானல் அமைந்ததாக இருக்கும்

 

     புறத்தில் குறை கூறாது குணம் கூறுதல் தகும் என்றாலும்,அதனையும் காரணம் இல்லாமல் கூறச் சான்றோர் கூசுவர்அப்படி இருக்ககாரணம் இன்றியேஇருக்கின்ற குற்றத்தையும்இல்லாத குற்றத்தையும் புனைந்து பழித்துப் பேசுவார்கள் என்றால் அதனை என்ன என்பது என்றே தெரியவில்லை.

 

"தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்

எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்

வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல்".         ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     குற்றம் அற்றவர் என்று மனித வர்க்கத்தில் யாரும் இருந்துவிட முடியாது. குற்றங்களை நீக்கிநல்வழிப்பட வேண்டும் என்பதற்காகவே மனிதப் பிறவி வாய்த்தது. எனவேதன்னிடத்தில் பொருந்தி உள்ள குற்றங்களை நீக்கி நல்வழியில் ஒழுகாத ஒருவன்,பிறருடைய குற்றங்களை நீக்கக் கருதுவது பொருந்தாத செயல் ஆகும். வெள்ளாட்டினால் தனது வாதநோயைத் தீர்த்துக் கொள்ள முடியாது. பிறருக்கு வந்த வாதநோயைத் தீர்க்க உதவும். வெள்ளாட்டின் செயலைப் போன்றதே இதுவும் ஆகும். வளி என்பது வாதநோயை.

 

     ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றம் களைய முற்படுதல் வேண்டும்.

 

     மழைக்காலங்களில் வீசும் சாரல் காற்றுக்குத் தாங்காது,ஆடுகள் நோய்வாய்ப் படும். சாரல் காற்றால் உண்டாகும் நோய் "தன்வளி" எனப்பட்டது. 

 

     பிறரது குற்றங்களையேஎப்போதும் தூற்றுபவருக்குப் புகழ் வந்து சேராது. பழியே வந்து சேரும். பிறர் தன்னைப் பாராட்ட வேண்டும் என்று ஒருவன் கருதினால்பிறருடைய குற்றங்களைத் தூற்றுவதை விட்டுவிடுதல் வேண்டும்.

 

பிறரால் பெரும்சுட்டு வேண்டுவான் யாண்டும்

மறவாமே நோற்பதுஒன்று உண்டு,- பிறர்பிறர்

சீர்எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து,

யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.   

 

என்று பிறரால் பாராட்டுப் பெறுவதற்கான நல்லதொரு வழியை "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் அருளிச் செய்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

    எல்லோராலும்எப்போதும் நன்கு மதித்துப் பாராட்டுபடி  வாழவேண்டினால்அதற்கு நோற்க வேண்டிய நோன்பு ஒன்று உண்டுஅது யாரையும் தாழ்த்திப் பேசாமல்எல்லோரிடத்தும் பணிவன்புடன் இருத்தல் ஆகும்.  தாழ்ச்சி சொல்லாமல் இருப்பது. இது மக்களாகப் பிறந்தார் யாவருக்கும் கூறிய அறிவுரை ஆகும்.

 

இதன் பொருள் ---

 

     மற்றவர்களால் நன்கு மதிக்கப்படவேண்டும்பெருமதிப்பைப் பெறவேண்டும் என்று விரும்புகின்ற ஒருவன்எல்லோதும் மறவாமல் செய்யத்தக்க அரிய செயல் ஒன்று உள்ளது. அது மற்றவரிடத்தில் உள்ள பெருமைகளை எல்லாம் மறைக்காமல் எடுத்துச் சொல்லிஅவர்களிடத்தில் உள்ள குற்றம் குறைகளைப் பரப்பாமல் பாதுகாத்துக் கொண்டுஎல்லோரிடத்திலும் வணக்கமான சொற்களையே பேசுதல் வேண்டும்.

 

     பெரும்பாலும் குற்றங்களைப் பேசுதலையே தூற்றுதல் என்று சொல்லுவது உண்டு. ஆனால், "தூற்றுதல்" என்னும் சொல்லை நல்ல செயலுக்குப் பயன்படுத்துதல் வேண்டும் என்று கூறி அருளினார் அடிகளார். பிறரைப் பற்றிய நல்ல செய்திகளை எல்லாம் மறைக்காமல் வெளியே பரவச் செய்து,கெட்ட செய்திகளை அங்ஙனம் பரப்பாமல் காத்துக் கொள்ளும் உயர்ந்த செயல் கடவுளுக்கு நோன்பு எடுக்கும் வணக்கச் செயலோடு ஒத்தது ஆகும் என்பதைக் குறிப்பால் உணர்த்தி அருளினார்.

 

     கெட்ட செய்திகளை விரைந்தும் ஆவலோடும் பரப்புவதை நிறுத்திக் கொண்டுவிரைந்தும் அவாவோடும் நல்ல செய்திகளைப் பரப்புதல் வேண்டும் என்று அறிவுறுத்திய அற்புதம் எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

 

     தான் செய்தது தவறு என்பதைச் சுட்டிக் காட்டியபோதுஅதற்காகத் தனது கையையே குறைத்துக் கொண்டுபின்னாளில் "பொற்கைப் பாண்டியன்" ஆனான் ஒரு அரசன். சான்றோர்கள் பிறர் காணவில்லை என்பதற்காகமாட்சிமை அற்ற செயலைச் செய்யமாட்டார்கள்.

 

எனக்குத் தகவு அன்றால் என்பதே நோக்கித்

தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை

நினைத்துத்தன்கைகுறைத்தான் தென்னவனும் காணார்

எனச்செய்யார் மாணா வினை.        --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தென்னவனும் --- பாண்டியனும்எனக்கு தகவு அன்று என்பதே நோக்கி --- எனக்குத் தகுதின்று என்பதனை ஆராய்ந்து அறிந்துதனக்கு கரியாவான் தானாய் --- தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்றுதவற்றை நினைத்து --- கதவை இடித்த குற்றத்தை நினைத்துதன் கை குறைத்தான் --- தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) காணார் என செய்யார் மாணா வினை --- அறிவுடையோர் பிறர் காணவில்லை என்பது கருதி,மாட்சிமைப்படாத செயலைச் செய்யார்.

 

     பிறருடைய குற்றங்களைச் சொல்லும்படி நேரிட்டால்அவருக்கு இதமான சொற்களால்தனிமையான இடத்தில் இருந்துமனத்தில் வருத்தம் தோன்றாதபடிஇணக்கம் தோன்றுமாறு சொல்லிநன்னெறியில் அவரை ஒழுகுமாறு செய்தல் வேண்டும். அதுவே மக்கள் தன்மை. இவ்வாறு சொல்லி நல்வழிப்படுத்துபவரைகுருநாதராகக் கொண்டு வழிபடுதல் வேண்டும். குற்றம் தன்னது என்று அறிந்தால்தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...