ஏற்பது இகழ்ச்சி அல்ல, அரத்தலும் இகழ்ச்சி அல்ல - எப்போது?

 

ஏற்பது இகழ்ச்சி அல்ல,

இரத்தல் இகழ்ச்சி அல்ல, எப்போது?

-----

 

     திருக்குறளில் இரவு என்னும் ஓர் அதிகாரம். "இரவு" என்றால் பிச்சை கேட்டல் என்று ஒரு பொருள் பொதுவாக உள்ளது. ஆனால், வாய்ப்பு இல்லாத நிலையில், நற்பணிகளின் பொருட்டு, தக்காரிடம் சென்று பொருள் கேட்டல் என்பதே திருவள்ளுவ நாயனார் காட்டிய பொருள் ஆகும். "மானம் தீரா இரவு" என்று பொருள் கண்டார் பரிமேலழகர். மானம் என்றால் பெருமை என்று பொருள். தமது பெருமைக்குக் குறைவு வராத "இரவு" பிச்சை கேட்டதாக ஆகாது. இரவுக்கு எதிர்ப்பதம் "கரவு". கரவு என்றால், வஞ்சனை, மறைவு, பொய் என்று பொருள். எனவே, "இயல்வது கரவேல்" என்றார் ஔவைப் பிராட்டியார். கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு என்பது இதன் பொருள்.

 

     தம்மிடத்தில் வந்தவர் கேட்டபோது, தம்மிடம் உள்ள பொருளை மறைத்து, இல்லை என்று சொல்லுவதைத் தமது கனவிலும் அறியாதவர் இடத்தில் சென்று ஒரு பொருளை யாசிப்பதும், இல்லாதவர்க்கு ஒன்றைக் கொடுப்பது போன்றது என்கின்றார் திருவள்ளுவ நாயானர்.

பொருள் உள்ளது. ஆனால் பொருள் உள்ளவர் இடத்தில் புண்ணியம் அல்லது அருள் இருக்கும் சொல்வதற்கில்லை. பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் புண்ணியம் வருவதில்லை. பொருளை அருளாக மாற்றவேண்டும். அதற்குத் தன்னிடத்தில் உள்ள பொருளைத் தக்கார்க்கு, நற்பணிகளுக்குக் கொடுத்து உதவவேண்டும். ஒருவரிடம் உள்ள பொருளைப் பெற்றுக் கொண்டு, அதன் பயனாக அவருக்கு, அருளை, புண்ணியத்தைக் கொடுக்கின்றதால், இரந்து கேட்பதும், ஈவது போன்றதே என்றார் நாயனார்.

 

இரத்தலும் ஈதலே போல்ஆம், கரத்தல்

கனவினும் தேற்றாதார் மாட்டு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் ஒரு பாடல்...  

 

ஈசர் இரந்தாலும், ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார்,

நேசர் இடத்து இரந்து நிற்றலால் --- பேசின்

இரத்தலும் ஈதலே போல்ஆம், கரத்தல்

கனவினும் தேற்றாதார் மாட்டு.

 

இதன் பொருள் ---

 

     பேசின் --- சொல்லப் போனால்,  கரத்தில் கனவினும் தேற்றாதார் மாட்டு --- ஒளித்தல் என்பதைக் கனவிலும் கூட அறியாதவர் இடத்திலே சென்று, இரத்தலும் ஈதலே போல் ஆம் --- யாசிப்பது கூட, இல்லாதவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவியது போன்றது. (ஆகையால்)

 

     நேசர் இடத்து இரந்து நிற்றலால் --- அன்புடைய அடியவர்களிடத்தில் சென்று இரந்து நின்றதால், ஈசர் இரந்தாலும் --- சிவபெருமான் தனக்கு இது வேண்டும் என்று கேட்டாலும், ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார் --- கொடுத்து உதவியர்களுக்கு ஒப்பாக உயர்ச்சியையே பெற்றார் (என்றே கொள்ள வேண்டும்)

 

     நேசர் --- இயற்பகையார்,   சிவனடியாருக்குத் தனது மனைவியையே தானமாகக் கொடுத்தவர்.  மானக்கஞ்சாறர், திருமணம் தொடங்கும்போது மணமகளாகிய தனது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர். இவ் வரலாறுகளைப் பெரிய புராணத்தில் காண்க.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல்..

 

அங்கிஉம்பர் கோன்கா அருந்தநினைந்து அர்ச்சுனன்பால்

இங்கிதமாப் பெற்றான், இரங்கேசா! - மங்காது

இரத்தலும் ஈதலே போலுங் கரத்தல்

கனவிலுந் தேற்றாதார் மாட்டு.          

 

இதன் பொருள் ---

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! அங்கி --- அக்கினி பகவான், உம்பர்கோன் கா --- தேவேந்திரனுடைய காண்டவ வனத்தை, அருந்த நினைந்து --- உண்ண எண்ணி, அர்ச்சுனன் பால் --- அர்ச்சுனனிடத்தில் (யாசித்து), இங்கிதமா பெற்றான் --- (யாதொரு தடையும் இன்றி) மனமகிழ்ந்து கொடுக்கப் பெற்றான், (ஆகையால், இது) கரத்தல் --- தமக்குள்ளது மறைத்தலை, கனவிலும் தேற்றாதார் மாட்டு --- கனவிலும் அறியாதாவரிடத்து, மங்காது --- கூசாமல், இரத்தலும் --- யாசித்தலும், ஈதலே போலும் --- வறியவர்க்குக் கொடுத்தலே போலும் (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- இயல்வது கரவாதவரிடத்தில் இரத்தலும் ஈதலே போலாம்.

 

         விளக்கவுரை --- அக்கினி பகவான் காண்டவ வனத்தைப் புசித்து ருசி காண இச்சை கொண்டான்.  ஆகையால், அவன், அது தேவேந்திரனுடையது என்று தெரிந்திருந்தும், அவன் குமாரனாகிய அர்ச்சுனனே அதைத் தனக்கு வழங்கவல்லவன் என்றறிந்து, அவனிடத்தில் ஒரு வேதியனாக வடிவெடுத்துச் சென்று, ", பற்குனா! நான் பசித்திருக்கின்றேன், எனக்கு உணவாகக் காண்டவ வனத்தை நீ வழங்கினால் என் பசி தணியும்" என்று இரந்தான். அதற்கு அர்ச்சுனன் மனமகிழ்ந்து, "அப்படியே ஆகுக" என்று சற்றேனும் தாழாமல் தத்தம் செய்து கொடுத்து, தேவர்களோடு போர் புரிந்து வென்று, காண்டவ வனத்தை அக்கினி உண்ணக் கொடுத்துப் புகழ் பெற்றான்.

 

     கரத்தல் கனவினும் தேற்றாதவன் ஆகிய அர்ச்சுனனிடத்தில் அக்கினிபகவான் காண்டவ வனத்தை இரந்து பெற்று, அதனால் அவனுக்குப் புகழைக் கொடுத்தான். கரத்தல் செய்யாது கொடுத்தவனுக்கு, அவன் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டவன், அதற்கு ஈடாகப் புகழைக் கொடுத்ததனால், இரத்தலும் இங்கு, ஈதலாயிற்று என்று உணர்க. இப்படியே இன்றும் இவ் உலகில் இயல்வது கரவாமல் கொடுப்பவர்க்கு, இரப்பவர், புகழைக் கொடுப்பதனால், இரத்தல் ஈவதாவது காண்க.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல்..

                                                                       

தருமகுண மாவலிபால் தானம் எனச் சேர்ந்தான்

திருமகிணன் தான், சிவசிவா - பரிவின்

இரத்தலும் ஈதலே போலாம் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

 

இதன் பொருள் ---

 

     சிவசிவ --- சிவபரம்பொருளே! தருமகுண மாவலிபால் --- தரும குணம் படைத்த மகாபலிச் சக்கவர்த்தியிடம் சென்று, திருமகிணன் தான் --- திருமகள் மணாளன் ஆகிய திருமால், தானம் எனச் சேர்ந்தான் --- தானமாகத் தனக்கு மூவடி மண் வேண்டும் எனக் கேட்டுச் சென்றான். (இந்த நிகழ்வு)

 

     பரிவின் --- அன்போடு, கரத்தல் --- தமக்குள்ளதை மறைத்தலை, கனவிலும் தேற்றாதார் மாட்டு --- கனவிலும் அறியாதாவரிடத்து, இரத்தலும் --- யாசித்தலும், ஈதலே போலும் --- வறியவர்க்குக் கொடுத்தலே போலும் (என்பதை விளக்குகின்றது).

 

     திருமால் மாவலிபால் சென்று மூவடி மண் இரந்தமை எல்லோரும் அறிந்ததே.

                                                              

     "எனது நெஞ்சமே! இரப்பவர்க்கு இல்லை என்னாமல் கொடுப்பவரிடம் சென்ற கேட்பதும், இல்லை என்பவர்க்குக் கொடுத்தலே ஆகும் என்பதை (திருவள்ளுவ நாயானர் அருளியதை) நீ அறிந்திருக்கவில்லையா? தன்னிடத்தில் உள்ள பொருளை மறைக்கின்றவர்களை நீ கனவில் கூட நினைக்க வேண்டாம். கிடைக்கும் எனக் கருதித் தன்னிடம் வந்தவர்கள் பொல்லாதவர்கள் ஆனாலும், அவர்களைக் காத்து அருள் புரிபவர் திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமான். அவர் கொன்றை மலர்களைச் சூடியுள்ள திருச்சடையை உடையவர். உயிர்களுக்கு எல்லாம் தலைவர். பொன்மலை ஆகிய மேருமலையை வில்லாக உடையவர். அவர் எழுந்தருளியிருக்கும் வலிய குன்றுபோன்ற மணற்குன்றில் அமைந்துள்ள திருவொற்றியூர்க்குச் சென்று அப் பெருமானுடைய திருவருளை எண்ணிப் பரவி வேண்ட, நீ வேண்டுவதைப் பெறுவது உறுதி. என்னுடன் வருவாயாக" என்று நெஞ்சறிவுறுத்தலா, வள்ளல்பெருமான் பாடியுள்ள "திருவட்பா" இது....

 

இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்பால்

         இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ?

கரக்கின்றோர்களைக் கனவிலும் நினையேல்,

         கருதி வந்தவர் கடியவர் எனினும்

புரக்கின்றோர், மலர்ப் புரிசடை உடையார்,

         பூதநாயகர், பொன்மலைச் சிலையார்,

உரக்குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி

         உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே.

 

     யாசிப்பவர்கள், கொடுத்து உதவுபவர்களுக்கு இம்மையில் புழையும், மறுமையில் இன்பத்தையும் அளிக்கின்றனர். ஆதலால், கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்கள் உயிர்களுக்கும், இரப்பவர்களைப் போன்ற சிறந்த வள்ளல்கள் வேறு யாரும் இல்லை என்கின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூல். எனவே, பொருள் படைத்தவருக்குப் புகழும், இன்பமும் இரப்பவர்களாலேயே வருகின்றது.

 

பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட்கு எல்லாம்

இரப்பாரின் வள்ளல்களும் இல்லை, - இரப்பவர்

இம்மைப் புகழும், இனிச் செல்கதிப் பயனும்

தம்மைத் தலைப்படுத்த லால். 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...