இருவேறு உலகத்து இயற்கை

 

 

 

இருவேறு உலகத்து இயற்கை

---

 

     திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம். அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கி, பொருள் இன்பங்களின் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார்.

 

     நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை ஊழ் என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.

 

     "ஊழ்த்தல்" என்னும் சொல்லுக்கு, பதன் அழிதல், கெடுதல், மலர்தல், விரிதல், மூடுதல், பருவம் என்று பொருள்கள் உண்டு. நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயன், இப் பிறவியில் ஊழாக வந்து மூடுகின்றது, மலர்கின்றது என்று பொருள்.

 

     இந்த ஊழ், பொருள் இன்பம் இரண்டினுக்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியில் வைத்துக் கூறினார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "ஊழினால் ஆகிய உலக இயற்கையானது இரண்டு கூறுகளாய் இருக்கின்றது. ஆதலால், ஒருவர் செல்வம் உடையர் ஆதலும், அறிவு உடையர் ஆதலும் வேறு" என்கின்றார் நாயனார்.

 

     அறிவு உடையவர்க்கு, செல்வத்தை உண்டாக்குதலும், உண்டாக்கிய செல்வத்தைக் காத்தலும், காத்த செல்வத்தால் பயன் கொள்ளுதலும் எளிமையாக இருந்தும், அவ்வாறு செல்வத்தை அடையாது ஏழைகளாய் இருப்பதும், அறிவே இல்லாதவர் எல்லாச் செல்வங்களையும் பெற்று இருப்பதும் காணப்படுதவது உலக இயற்கை. இதனால், அறிவு உடையார்க்கு உள்ள ஊழானது, செல்வம் உடையார்க்கு ஆகாது. செல்வம் உடையார்க்கு உள்ள ஊழ், அறிவு உடையார்க்கு ஆகாது என்றது.

 

     செல்வத்தைத் தேடுதற்கும், அறிவைத் தேடுதற்கும் அவரவர்க்கு உள்ள ஊழே முதற்காரணம் என்றார்.

 

     "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என நாயனார் முன்னர் அறிவுறுத்தியது கொண்டு, இறையருளால் மெய்யறிவு என்னும் ஞானத்தைப் பெற்றவர், பொருட்செல்வத்தை ஒரு பொருட்டாக மதியார் என்பதும், பொருட்செல்வம் அவரிடத்து இருப்பினும், நிலையற்றதாகிய அதனை ஒரு பொருட்டாக மதியாமல், பிறர்க்கு வழங்கி வாழ்வர் என்பதால், அறிவு உள்ளோரிடத்துப் பொருள் தங்குவதில்லை. கீழோர் பொருளையே பொருளாக மதிப்பதால், தானும் துய்க்காது, பிறர்க்கும் வழங்கி மகிழாது வைத்து இழப்பர் என்பதும் பெறப்படும்.

 

     இதனால் ஊழினை உப்பக்கம் காண்பவர்க்கு, இறையருளால் பொருட்செல்வமும், அறிவுச் செல்வமும் ஒருங்கே அமையப் பெறும் என்பதும் பெறப்படும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு,

தெள்ளியர் ஆதலும் வேறு.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;

உணர்வது உடையார் இருப்ப, - உணர்வுஇலா

வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,

பட்டும் துகிலும் உடுத்து.             --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கடலால் நாற்புறமும் சூழப்பட்டு இருக்கும் இந்த  உலகத்தில் நல்வினை என்னும் புண்ணியம் என்பது தனி நிலைமையை உடையதுதான். காரணம், நல்லறிவினை உடைய பெருமக்கள் போதிய செல்வச் சிறப்பு இன்றி வருந்தி இருக்க, எதற்கும் பயன்படாத கறிமுள்ளிச் செடியும், கண்டங்கத்தரிக் காயும் போன்ற கீழ்மக்கள், பட்டும் பலவிதமான உடைகளும் உடுத்துக் கொண்டு செழிப்பாக வாழ்கின்றார்கள்.

 

         தக்க உணர்வில்லாதவர், அவரது நல்வினை வயத்தால் செல்வம் உடையவராயினும், அச்செல்வம் தக்கோரால் கண்ணியமாகக் கருதப்படாத நிலையினை உடையது.

 

நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்

கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம், - தொல்லை

வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!

நினைப்ப வருவது ஒன்று இல்.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வேல்படை போன்ற நீண்ட கண்களை உடைய பெண்ணே! உயர்ந்த அறிவு செயல்களை உடையாரும் இனியருமான மேலோர் உலகத்தில் வளம் இன்றி இருக்க, இனிமையும் கல்வியறிவும் இல்லாத மூடர்கள் செல்வ வளம் பெற்று இருக்கின்றார்கள். இதற்கு என்ன காரணம்?  என்றால், அவரவர் முன் செய்த வினைப்பயனே இதன் காரணம். இது அல்லாமல் ஆராய்தற்கு உரிய காரணம் வேறு இல்லை.

 

         நற்குண நற்செயல்களில்லார் செல்வராய் இருப்பினும், சான்றோர் அதனை முன்வினைப் பயன் என்று கருதி மதியாது செல்வர் என்பது கருத்து.

 

குலத்துப் பிறந்தார், வனப்பு உடையார், கற்றார்,

நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர், - வினைப்பயன்கொல்

கல்லார் குலம்இல்லார் பொல்லார் தறுகட்பம்

இல்லார்பின் சென்ற நிலை.         ---  அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     உயர்குடியில் பிறந்தவர்களும், அழகுடையவர்களும், கற்றவர்களும்,  தமது மானத்துக்குக் கேடு நேர்ந்த இடத்திலேயே உயிரை விடக் கூடியவர்களும் ஆன பெரியோர்கள், செல்வம் நிறையப் படைத்துள்ள கல்லாதவர்கள் இடத்திலும், இழிகுலத்தில் பிறந்தோர் இடத்திலும், பொல்லாதவர்கள் இடத்திலும், தீவினை செய்வதற்கு அஞ்சாதவர்களாகிய கீழோர் இடத்திலும் சென்று அவர்களை வழிபட்டு நிற்பதற்குக் காரணம், அவர்கள் முன்செய்த தீவினையின் பயன்தானே!

 

செய்வினை அல்லால் சிறந்தார் பிறர் இல்லை,

பொய்வினை மற்றைப் பொருள் எல்லாம்--மெய்வினவில்

தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் ஆர்?

நீ யார்? நினைவாழி நெஞ்சு.          --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சே!, நீ செய்த வினை உனக்குத் துணையாகு வருமே அல்லாமல், வேறு சிறந்த துணைவர் பிறர் யாரும் இல்லை. நிலையானவை என்று நீ கருதுகின்ற பொருள்கள் எல்லாம் அழிய்மு தன்மையை உடையவன ஆகும். உண்மையை அறிய விரும்பி நீ கேட்பாயாகில், நீ தாய் என்று நினைப்பவர் யார்? மனைவி என்று நினைப்பவர் யார்? தந்தை என்று நினைப்பவர் யார்? மக்கள் என்று நினைப்பவர் யார்? நீதான் யார்? இவர்கள் உன்னோடு எத்தகைய தொடர்பினை உடையவர்கள் என்று ஆராய்ந்த அறிவாயாக.

 

     ஒருவன் பிறப்பினை எடுத்து வந்ததும் அவனுடைய வினையின் பயன்தான். தாயாகவும், தந்தையாகவும், பிற உறவுகளாகவும் வந்து சேர்ந்தவை அவன் முற்பிறப்பில் செய்த வினைகளளின் பயனாகவே என்பதை அறிதல் வேண்டும். தமது உடம்பையோ, அல்லது உறவுகளையோ நாமாகத் தேடிக் கொள்ளவில்லை.

 

 

உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,

நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,

வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே

சுரை ஆழ அம்மி மிதப்பு.             ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மலையினின்றும் விழுகின்ற ஒளிவிளங்கும் அருவியை உடைய மலைநாடனே!, புகழ் நிறைந்த குடியில் பிறந்த அறிவு நிறைந்தவர்கள் வறுமையால் வருந்தி நிற்க, நல்ல குடிமரபின் வரிசையில் சேராதவரான கீழோர் செல்வத்தால் தலை நிமிர்ந்து பெருகுதல் என்பது, நீரிலே சுரை ஆழ்வதையும் அம்மி மிதப்பதையும் ஒக்கும்.

 

         ஆழ வேண்டிய அம்மி மிதந்தும், மிதக்க வேண்டிய சுரை ஆழ்ந்தும் இருத்தல் போல, செல்வம் பெறவேண்டியவர் வறுமை உற்றும், வறுமையடைய வேண்டியவர் செல்வம் பெற்றும் இருப்பர். சுரை ஆழ்தலும் அம்மி மிதத்தலும் இயற்கையில் பொருந்தாதவாறு போல, சான்றோர் வருந்தி நிற்கக் கீழோர் பெருகி நிற்றல் பொருந்தாதது. ஆனாலும், வினையின் பயனாக இவை நிகழும்.

 

 

இருவினை என்ப மனமுதல் மூன்றின்

     இயற்றும் இதம் அகிதங்கள்,

பெருவினைப் பயன்கள் புண்ணிய பாவம்,

     பேசும் இக் கருமத்தின் பயன்கள்

மருவிடும் இன்ப துன்பமாம், அவைதாம்

     ஆய்வின் அவ் இருவினை தோற்றும்,

ஒருதனு விளைப்ப மற்றொரு தனுவின்

     உணப்படுங் கெட்டும் கேடு இலவாய்.--- தணிகைப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஆன்மாக்கள் மனவாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் செய்யப்படும் நன்மை தீமை என்பனவே இருவினை என்று சொல்வார்கள். (நூல்களால் விதந்து) சொல்லப்படுவனவாகிய புண்ணிய பாவங்கள் பெரிய இருவினையின் பயனாய்க் காரணமும் காரியமுமாய் இருக்கும். இப்புண்ணிய பாவங்களின் பயன்கள் (ஆன்மாக்களிடத்து) இன்பமும் துன்பமுமாகப் பொருந்தும். அவ்வின்ப துன்பங்களை ஆன்மாக்கள் நுகர்ந்து நீக்குங்காலத்துப் பின்னரும் அவ் இருவினை உளவாகும். ஓர் உடல் வினைகளைச் செய்ய வேறோர் உடலின்கண் வினைகள் கெட்டும். (பயன் கேடு இன்றி) வேறோருடம்பில் நுகரப்படும்.

 

தூயவாய் அமைக்கப் படும்வினை எவர்க்குந்

     தூயவாய் இருப்பன பலவே,

தீயவாய் விலக்கப் படுவன எவர்க்கும்

     தீயவாய் இருப்பன பலவே,

தூயவாய் ஒருவர்க்கு, ஒருவருக்கு ஒழியும்

     தீயவாய் இருப்பவும் பலவே,

தீயவாய் ஒருவர்க்கு, ருவருக்கு அடுக்கும்

     தூயவாய் இருப்பவும் பலவே.  ---  தணிகைப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     நூல்களால் தூயனவாக நியமிக்கப்படும் நல்வினைகள் யாவர்க்கும் நன்மை உடையனவாக இருப்பன பலவாம். நூல்களால் தீயன என்று விலக்கப்படும் தீவினைகள் யாவர்க்குந் தீயனவாக இருப்பன பலவாம். நூல்களால் விதித்த நல்வினைகள் பெரியார் ஒருவர்க்கு நல்லனவாய், (நூல் நெறி ஒழுகாத கீழோற்கு) விதி ஒழிந்து தீயனவாய் இருப்பவும் பலவேயாம். (நூல்களால் விலக்கப்பட்ட) வினைகள் ஒருவர்க்குக் கருத்து வகையான் பொருந்தும் தூயனவாய் இருப்பனவும் பலவேயாம்.

 

இன்பமே பயக்கும் புண்ணியம் எல்லாம்,

     இழிதரு பாவங்கள் எல்லாம்

துன்பமே பயக்கும், புண்ணிய பாவம்

     தொக்கதம் பயன் தராது ஓழியா,

கொன்படு வினைகள்ஒழி இரு வினையும்

     குலாவுறு புண்ணிய பாவ

வன்புறு பயனை அப்பயன் போல

     வழங்குறாது ஒழிவகை இலையே.  ---  தணிகைப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     புண்ணியச் செயல்கள் யாவும் இன்பத்தையே தரும். இழிக்கத் தக்க பாவங்கள் யாவும் துன்பத்தையே தருவனவாம். புண்ணிய பாவம் என்னும் இருசெயலும் தமக்கெனத் தொகை செய்யப்பட்ட பயனாய இன்ப துன்பினைத் தாராது ஓழியாவாம். (நீரடித்தல் அழுக்குத் திரட்டல் முதலிய) வீணாகிய வெறுவினைகள், ஒழிக்கின்ற சிவ நல்வினை தீவினைகளும், தம் பயனாகப் பொருந்தும் புண்ணிய பாவங்களின் வலிய பயனாகிய இன்பதுன்பினை அப் பசுக்களின் இருவினைப் பயன்கள்போலத் தராமல் நீங்கும் வகையும் இல்லையாம்.

 

தானமால் களிறும், மாநிதிக் குவையும்

ஏனைய பிறவும் ஈகுநர் ஈக,

நலம்பாடு இன்றி நாண் துறந்து ஒரீஇ

இலம்பாடு அலைப்ப ஏற்குநர் ஏற்க,

புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்

இருவேறு இயற்கையும் இவ்வுலகு உடைத்தே.. ---  திருவாரூர் நான்மணி மாலை.

 

இதன் பொருள் ---

 

     மதத்தை உடைய பெரிய யானையையும், குவிந்துள்ள பெரும் செல்வத்தையும்,  பிற செல்வங்களையும், பிறர்க்குக் கொடுப்பவர் கொடுத்தலும், நன்மை ஏதும் இல்லாமல், வறுமை காரணமாக நாணத்தை விட்டு ஒழித்து, வறுமையானது வருத்த, இரந்து பெற்றுக் கொள்வோர் பெற்றுக்கொள்ளுதலும் உலகில் நிகழும். ஈகைக் குணம் உடையோர் தம்மிடத்து வந்து இரந்தார்க்கு ஈந்து பாதுகாத்தலும், வறுமை நிலையில் உள்ளோர் வந்து இரந்து நிற்பதும், ஆக, இருவேறுபட்ட இயல்புகளை உடையது இந்த உலகம்.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...