மாந்துறை --- 0907. ஆங்குடல் வளைந்து

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஆங்குடல் வளைந்து (திருமாந்துறை)

 

முருகா!

இம்மையில் வேண்டிய பதங்கள் தந்து,

மறுமையில் திருவடியை அருள்வாய்

 

 

தாந்தன தனந்த தாந்தன தனந்த

     தாந்தன தனந்த ...... தனதான

 

 

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து

     ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி

 

ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து

     ஆண்டுபல சென்று ...... கிடையோடே

 

ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து

     ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்

 

ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து

     ஊன்றிய பதங்கள் ...... தருவாயே

 

வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த

     வேந்திழையி னின்ப ...... மணவாளா

 

வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச

     வேண்டிய பதங்கள் ...... புரிவோனே

 

மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து

     மாண்புநெல் விளைந்த ...... வளநாடா

 

மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற

     மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

ஆங்கு உடல் வளைந்து, நீங்கு பல் நெகிழ்ந்து,

     ஆய்ஞ்சு தளர் சிந்தை ...... தடுமாறி,

 

ஆர்ந்துஉள கடன்கள் வாங்கவும் அறிந்து

     ஆண்டுபல சென்று ...... கிடையோடே,

 

ஊங்கு இருமல் வந்து, வீங்கு குடல் நொந்து,

     ஓய்ந்து, ணர்வு அழிந்து ...... உயிர்போமுன்,

 

ஓங்குமயில் வந்து, சேண்பெற இசைந்து,

     ஊன்றிய பதங்கள் ...... தருவாயே.

 

வேங்கையும் உயர்ந்த தீம்புனம் இருந்த

     ஏந்திழையின் இன்ப ...... மணவாளா!

 

வேண்டும் அவர் தங்கள் பூண்டபதம் மிஞ்ச,

     வேண்டிய பதங்கள் ...... புரிவோனே!

 

மாங்கனி உடைந்து, தேங்க வயல் வந்து,

     மாண்பு நெல் விளைந்த ...... வளநாடா!

 

மாந்தர், தவர், உம்பர் கோன்  பரவி நின்ற

     மாந்துறை அமர்ந்த ...... பெருமாளே.

 

பதவுரை 

 

         வேங்கையும் உயர்ந்த தீம்புனம் இருந்த --- உயரமான வேங்கை மரங்களும், இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த

 

         ஏந்திழையின் இன்ப மணவாளா --- அழகிய அணிகலன்களைப் பூண்டு விளங்கிய வள்ளிநயகிக்கு இனிய மணவாளரே!

 

         வேண்டும் அவர் தங்கள் பூண்ட பதம் மிஞ்ச --- (உமது திருவருளை) வேண்டி வழிபடும் அடியார்கள் மிகுந்த பக்குவத்தை அடைந்து,

 

         வேண்டிய பதங்கள் புரிவோனே --- இம்மையில் அவர்கள் விரும்பிய உலகியல் பதவிகளையும், மறுமையில் தேவரீரது திருவடிகளையும் அருள் புரிபவனே,

 

         மாங்கனி உடைந்து, வயல் வந்து தேங்க --- மாம்பழங்கள் உடைந்து, அவற்றின் சாறு வயலில் தேங்கி இருக்க

 

         மாண்பு நெல் விளைந்த வளநாடா --- சிறந்த நெற்பயிர் விளையும் சோழவளநாட்டுக்குத் தலைவரே!

 

         மாந்தர், தவர், ம்பர் கோன் பரவி நின்ற --- மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற எழுந்தருளி

 

         மாந்துறை அமர்ந்த பெருமாளே --- திருமாந்துறைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

         ஆங்கு உடல் வளைந்து --- நன்றாக இருந்த உடல் வளைவுற்று கூன் விழுந்து,

 

         நீங்கு பல் நெகிழ்ந்து --- விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து,

 

         ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி --- ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து,

 

         ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து --- வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி,  

 

         ஆண்டு பல சென்று --- இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல,

 

     கிடையோடே --- படுத்த படுக்கையாகி,

 

         ஊங்கு இருமல் வந்து --- மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு,

 

         வீங்கு குடல் நொந்து --- வீங்கும் குடலும் நோவுற்று,

 

         ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போமுன் --- சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு,

 

         ஓங்கும் மயில் வந்து --- விளங்கிய மயில் மீது தேவரீர் எழுந்தருளி வந்து,

 

         சேண் பெற இசைந்து --- அடியேன் விண்ணுலகை அடைவதற்கு மனம் இரங்கி,

 

         ஊன்றிய பதங்கள் தருவாயே --- தேவரீரது நிலைபெற்ற திருவடிகளைத் தந்து அருளவேண்டும்.

 

பொழிப்புரை

 

     உயரமான வேங்கை மரங்களும், இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய அணிகலன்களைப் பூண்டு விளங்கிய வள்ளிநயகிக்கு இனிய மணவாளரே!

 

         உமது திருவருளை வேண்டி வழிபடும் அடியார்கள் மிகுந்த பக்குவத்தை அடைந்து, இம்மையில் அவர்கள் விரும்பிய உலகியல் பதவிகளையும், மறுமையில் தேவரீரது திருவடிகளையும் அருள் புரிபவனே,

 

         மாம்பழங்கள் உடைந்து, அவற்றின் சாறு வயலில் தேங்கி இருக்க சிறந்த நெற்பயிர் விளையும் சோழவளநாட்டுக்குத் தலைவரே!

 

         மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற எழுந்தருளி, திருமாந்துறைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

         நன்றாக இருந்த உடல் வளைவுற்று கூன் விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து,  ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி,  இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு,  வீங்கும் குடலும் நோவுற்று,  சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கிய மயில் மீது தேவரீர் எழுந்தருளி வந்து,  அடியேன் விண்ணுலகை அடைவதற்கு மனம் இரங்கி,

தேவரீரது நிலைபெற்ற திருவடிகளைத் தந்து அருளவேண்டும்.

 

  

விரிவுரை

 

 

வேண்டும் அவர் தங்கள் பூண்ட பதம் மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே ---

 

பதம் --- பக்குவம்.

 

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்கள் சிறிது சிறிதாக நீங்கி, உயிர்கள் பக்குவப்படுதல் வேண்டும். அதற்கு இறைவன் திருவருள் ஒன்றே துணை புரியும். பக்குவ நிலையை அடைந்த உயிர்களுக்கு, இம்மையில் அவர்களுக்கு வேண்டும் நல்வாழ்வையும், மறுமையில் திருவடியையும் அருள் புரிபவன் இறைவன்.

 

"மிகுத்த கனம் அது உறு நீள்ச வுக்ய, சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு, தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து

உதவி புரிய வேணும்" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் வேண்டி உள்ளது அறிக.

 

சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு --- இம்மையில் பெறவேண்டிய பயன்கள்.

 

தகைமை சிவஞான முத்தி --- மறுமையில் பெறவேண்டிய பயன்.

 

 

மாங்கனி உடைந்து, வயல் வந்து தேங்க மாண்பு நெல் விளைந்த வளநாடா ---

 

சோழநாட்டின் வளமையை விளக்கும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் காண்க.

 

மந்தம் ஆர்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்

உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை

நிந்தியா எடுத்து ஆர்த்தவல் அரக்கனை நெரித்திடு விரலானைச்

சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீநெறி அதுதானே.

        

நின்று உணும்சமண் தேரரும் நிலையிலர்,

         நெடுங்கழை  நறவுஏலம்

நன்று மாங்கனி கதலியின் பலங்களும்

         நாணலின் நுரைவாரி

ஒன்றி நேர்வரு காவிரி வடகரை

         மாந்துறை ஒருகாலம்

அன்றி உள்அழிந்து எழும்பரிசு அழகிது

         அதுஅவர்க்கு இடமாமே.

 

மாந்தர், தவர், ம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே ---

 

திருமாந்துறையில் எழுந்தருளி உள்ள இறைவனை மண்ணுலக மன்னவரும், சூரியனும், திங்களும், விண்ணுலகத் தேவரும் வழிபடுவதைத் திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.

 

பெருகு சந்தனம் கார்அகில் பீலியும்

         பெருமரம் நிமிர்ந்துஉந்திப்

பொருது காவிரி வடகரை மாந்துறைப்

         புனிதன்எம் பெருமானைப்

பரிவி னால்இருந்து இரவியும் மதியமும்

         பார்மன்னர் பணிந்துஏத்த

மருத வானவர் வழிபடு மலர்அடி

         வணங்குதல் செய்வோமே.

 

திருமாந்துறை, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

 

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், லால்குடிக்கு முன்னால் 3 கி.மீ. தொலைவில் திருமாந்துறை உள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

இறைவர்      : ஆம்ரவனேசுவரர், மிருகண்டீசுவரர்

இறைவியார்  : அழகம்மை, பாலாம்பிகை

தல மரம்       : மாமரம் (ஆம்ரம்)

 

         ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் நிறைந்து இருந்ததால் "மாந்துறை" என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்றழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியிலுள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.

 

         வடகரை மாந்துறையில், இறைவன் ஆம்ரவனேசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

 

         மேற்குத் திருச்சுற்றில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தனிச் சந்நிதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

 

         முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த முனிவர் ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேட்டுவத் தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது.

 

         மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக நம்பிக்கை உள்ளது. இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

கருத்துரை

 

முருகா! இம்மையில் வேண்டிய பதங்கள் தந்து, மறுமையில் திருவடியை அருள்வாய்


No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...