மரம் போல்பவர் மக்கள்

 

 

மரம் போல்பவர் மக்கள்

-----

 

    மனிதர்கள் தம்மை எவ்வளவு வெட்டினாலும், மரங்கள் அவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலைத் தந்து காக்கின்றதைப் போல, அறிவில் சிறந்த பெரியவர்கள், தாம் சாகும் அளவும் கூட ஒருவர் தமக்குத் தீங்குகளையே செய்தாரானாலும், அவரையும் தம்மால் ஆகும் அளவும் காப்பார்கள் என்று ஔவைப் பிராட்டியார் "மூதுரை" என்னும் நூலில் அறிவுறுத்தி உள்ளார்.

 

    சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

    ஆம்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

    குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து

    மறைக்குமாம் கண்டீர் மரம்.

 

இதன் பொருள் ---

 

     மரங்களானவை, மனிதகள் தம்மை மனிதர் வெட்டுமளவும், அவருக்கும் குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும். அதுபோல, அறிவுடையவர், தாம் இறந்து போகுமளவும் பிறர் தமக்குத் தீங்குகளையே செய்தாராயினும்,  அவரை வெறுக்காது, அவரையும் தம்மால் முடிந்த அளவு காப்பார்கள்.

 

    அறிவுடையவர், தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து.

 

    படிக்காசுப் பலவர் பாடிய பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் ஒரு பாடல்..

 

    ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

    எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்

    காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து

    உதவிசெய்து, கனமே செய்வார்,

    மால்அறியாத் தண்டலைநீள் நெறியாரே,

    அவரிடத்தே வருவார் யாரும்,

    ஆலமரம் பழுத்தவுடன், பறவையின்பால்

    சீட்டு எவரே அனுப்பு வாரே.

 

இதன் பொருள் ---

 

    திருமாலால் அறிய முடியாதவரும், திருத்தண்டலை நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானே! உலகத்திலே நல்லவர்களுக்குச் செல்வம் வந்தால், எல்லோர்க்கும், கற்றறிந்தவர்க்கும், அவருக்குத் தேவைப்படும் காலம் அறிந்தும், அவருடைய பெருமையை அறிந்தும் உதவி செய்து பெருமைப்பட வாழ்வார்கள். அப்படிப்பட்ட செல்வர்களிடத்தே எல்லாரும் வருவார்கள். எப்படி என்றால், ஆலமரம் பழுத்தவுடன், பறவைகளுக்கு யாரும் சீட்டு எழுதி அனுப்புவதில்லையே.

 

    செல்வம் படைத்தவர்கள், அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள்.

 

    நாலடியார் சொல்லும் செய்தி...

 

     பலராலும் விரும்பப்படும் வள்ளல்கள், ஊரின் நடுவிலே சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ளஒபோதும் ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள், சுடுகாட்டில் உள்ள காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர். நாலடியார் பாடலைக் கவனியுங்கள்.

 

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

    படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்,

    குடிகொழித்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்

    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

 

இதன் பொருள் ---

 

     ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில், எல்லோரும் வந்து பயன் பெறுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பனைமரம் போன்றவர்கள், பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி, பிறர்க்கு உதவி புரிந்து வாழுகின்ற பெரியவர்கள். அப்படி இல்லாது, மிகப் பெரி செல்வச் செழிப்பில் இருந்தும், பிறருக்கு உதவி வாழாதவர்கள், ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் பனைமரம் போன்றவர்கள்.

 

     இதனை, இருவேறு திருக்குறள் பாக்களால் திருவள்ளுவ நாயனார் காட்டி அருளினார்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன் உடையான்கண் படின்.

இதன் பொருள் ---

     இரக்கம், தயவு முதலிய நற்குணங்கள் பொருந்திய ஒருவனிடம் செல்வம் திரண்டு இருந்தால், அது பழங்கள் தருகின்ற பயனுள்ள மரம் ஒன்று ஊரின் உள்ளே பழுத்தால் போன்றது.

 

நச்சப் படாதவன் செல்வம், நடு ஊருள்

நச்சு மரம் பழுத்தற்று.

 

     இதன் பொருள் --- நற்குணங்கள் இன்மையால் ஒரு சிறிதும் பிறரால் விரும்பப்படாதவனுடைய செல்வமானது, ஊரின் நடுவில் நஞ்சுமரம் ஒன்று பழுத்து இருத்தலைப் போன்றது.

 

     ஆக, தான் படைத்த செல்வத்தைக் கொண்டு தாமே "வல்லாங்கு வாழலாம்" என்று எண்ணி இராது, இல்லாதவர்க்கும் கொடுத்து உதவி, செல்வத்தால் ஆன பயனை, இறையருளாக, புண்ணியமாக மாற்றிக் கொள்வதே அறிவு உடையார் பண்பு என்பது தெளியப்படும். இப்படிப்பட்டவர்களை, "உத்தம புருடர்" என்றும் "உத்தமர்" என்றும் சொல்வார்கள்.

 

     உத்தமம் என்னும் சொல்லுக்கு, எல்லாவற்றுள்ளும் சிறந்தது, முதன்மை, மேன்மை, உயர்வு, நன்மை என்று பொருள் உண்டு.

 

     உத்தமபுருடர் அல்லது உத்தமர் என்னும் சொல்லுக்கு, உயர்ந்த குறிக்கோள்களை உடையவர், நன்னெறியில் ஒழுகுபவர், நற்குணம் உடையவர் என்று பொருள்.

 

     பிறர்க்கு உதவி வாழுகின்ற நல்லோரையும், உத்தமர், மத்திமர், அதமர் என்று பிரித்து வகைப்படுத்திக் கூறுகின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.

 

உத்தமர்தாம் ஈயும்இடத்து ஓங்குபனை போல்வரே,

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே, - முத்துஅலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர், அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.

 

இதன் பொருள் ---  

 

     தமது செல்வத்தைப் பிறருக்கு, அவரது குறிப்பினை அறிந்து கொடுத்தலில், தலையாயவர் ஓங்கி வளரும் பனைமரத்துக்கு ஒப்பாவார்கள். இடைப்பட்டவர்கள், தென்னை மரத்துக்கு ஒப்பாவார்கள். கடைப்பட்டவர் முத்துப் போலப் பூக்கும் பாக்குமரத்துக்கும், இன்சுவை மிக்க பழங்களைத் தரும் வாழைமரத்துக்கும் ஒப்பாவார்கள்.

 

     (உத்தமர் --- தலையாயவர், மேலானவர். மத்திமர் --- இடைப்பட்டவர். தெங்கு --- தென்னை. மானுவர் --- ஒப்பர். அலர்தல் --- விரிதல், பூத்தல். கமுகு --- பாக்கு. அதமர் --- கடைப்பட்டவர், கீழோர். அவர்கள் --- கடைப்பட்டவர்கள் எனப்படுவோர். தேம் --- இனிமை. கதலி --- வாழை. தேர்ந்து --- ஆராய்ந்து, குறிப்பறிந்து.)

 

     பனைமரம் நீர் ஊற்றிக் காக்காமலே வளர்வது.  பனங்கிழங்கு, பனஞ்சாறு, பனையோலை, பனங்காய், பனம்பழம், வயிரமுள்ள பனங்கட்டை முதலிய எல்லா உறுப்புக்களாலும் எல்லோருக்கும் பயன்படுவது.

 

     தென்னைமரம், நீர் ஊற்றிக் காவல் காத்து வளர்த்துக் காத்த பின்னரே பயன்படக் கூடியது.

 

     பாக்குமரம் நெடுங்காலம் காத்து வளர்த்தால் தான் பயன் தரக் கூடியது. சிறிய பயனையே தரவல்லது.

 

     வாழைமரம் ஒருமுறைக்கு மேல் மறுமுறை குலை ஈன்று பயன் தராது. இதற்குக் காவலும் நீரும் வேண்டும்.

 

     தலையாயவர், முன்னால் தமக்கு எந்தவிதமான உதவியும் செய்யாதவர்க்கும் போதுமான அளவு கொடுத்துப் பேருதவி செய்வர்.

 

     இடைப்பட்டவர், முன் உதவி செய்யாதவர் கேட்ட பின்பு சிறிது கொடுத்து உதவுபவர்.

 

     கடைப்பட்டவர் சிறிதே உதவி செய்வர். கைம்மாற்றை எதிர் நோக்குவர். ஒருமுறைக்கு மேல் மறுமுறை எவ்வளவு வருந்திக் கேட்டாலும் கொடுக்கமாட்டார்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...