உள்ளது போகாது, இல்லது வாராது.

 

 

உள்ளது போகாது, இல்லது வாராது

-----

 

திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம்.

 

     அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கி, பொருள் இன்பங்களின் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார்.

 

     நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை ஊழ் என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.

 

     "ஊழ்த்தல்" என்னும் சொல்லுக்கு, பதன் அழிதல், கெடுதல், மலர்தல், விரிதல், மூடுதல், பருவம் என்று பொருள்கள் உண்டு. நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயன், இப் பிறவியில் ஊழாக வந்து மூடுகின்றது, மலர்கின்றது என்று பொருள்.

 

     இந்த ஊழ், பொருள் இன்பம் இரண்டினுக்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியில் வைத்துக் கூறினார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "ஊழ் வசத்தால் தமக்கு உரியவை அல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாது போகும். ஊழ்வசத்தால் தமது உடைமையாக வேண்டிய பொருள்களை வெளியில் கொண்டு போய்ப் போட்டாலும், அவை தம்மை விட்டுப் போகமாட்டா" என்கின்றார் நாயனார்.

 

     அனுபவிக்கும் ஊழ் உள்ளவன் பொருளைக் காப்பாற்ற வேண்டுவது இல்லை, அது அவனை விட்டு நீங்காமல் இருக்கும். அனுபவிக்கும் ஊழ் இல்லாதவன், எவ்வளவுதான் வருந்திக் காத்தாலும், பொருளானது அனுபவிப்பதற்கு இல்லாமல் போய்விடும் என்பதை உணர்த்த,

 

பரியினும் ஆகாவாம் பால் அல்ல, உய்த்துச்

சொரியினும் போகா தம.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்று நிகழ்வு ஒன்றைக் காட்டி, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடிய ஒரு பாடல்...

 

அளந்து அருள் செம்பொன் மணிமுத்தாற்றில் இட்டு, ஆரூர்க்

குளந்தனிலே கண்டு, எடுத்துக் கொண்டார் --- உளைந்து

பரியினும் ஆகாவாம் பால்அல்ல, உய்த்துச்

சொரியினும் போகா தம.                                 

 

         தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டுக்குத் திருவுள்ளம் மகிழ்ந்து திருமுதுகுன்றத்து ஈசர் பன்னிரண்டாயிரம் பொன்னைக் கொடுத்து, அங்கே உள்ள மணிமுத்தாற்றிலே போகட்டுப் பின்பு திருவாரூரிலே கமலாலயத் திருக்களத்திலே எடுத்துக்கொள்க என்று கட்டளை இட்டவாறே நாயனார் எடுத்துக் கொண்டார் என்பது பெரியபுராணத்தில் காணப்படும் வரலாறு. 

 

         தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும் தம்மிடத்து நில்லாவாம். ஊழால் தமக்கு உரியதான பொருள்களைப் புறத்தே கொண்டபோய்ச் சொரிந்தாலும் தம்மைவிட்டுப் போகா. பொருள்கள் ஆவதும் அழிவதும் ஊழினால் அன்றிக் காப்பினாலும் காவாமையாலும் அன்று என்க. 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

 

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண் ஆக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.        --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     ஊழின்படி வரக்கூடாதவைகளை வருந்தி அழைத்தாலும், அவை ஒருவனிடத்து வந்து சேரமாட்டா. ஊழால் வரக்கூடியவற்றைப் போயிடுங்கள் என வெறுத்துத் தள்ளினாலும் அவை போகமாட்டா. இவ்வுண்மையை அறியாமல் இருந்து ஏக்கமுற்று, மனம் புண்ணாகும்படி. வந்தற்றை நினைந்தும், வராதவற்றை நினைந்தும், நெடுங்காலம் சிந்தித்து இருந்து மாண்டு போவதே மனிதர்களின் தொழிலாக வுள்ளது.

 

         இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலை அடைதல் தக்கது அன்று.

                                                              

 

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினை உலந்தக் கால்.   --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     செல்வமானது, பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும், அது பெருகுதற்கு உரிய காலத்தில் மேலும் மேலும் பெருகும். நல்வினை முடிந்துவிட்டபோது,  அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும். இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.

 

     செல்வம் நிலைப்பதற்குக் காரணம் இறுக்கிப் பிடிப்பது அல்ல. அது நில்லாததற்குக் காரணம் பிறர்க்குக் கொடுத்தலும் அல்ல.  எல்லாம் முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு, நெகிழாமல் செய்துவரல் வேண்டும்.

 

 

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுத லரிது.            ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கடல் நீரால் சூழப்பட்ட இந்த உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தரும் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே. உண்மையில், மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்களிடத்து வந்து பொருந்துதற்குரியன பொருந்தாது போவதில்லை.

 

         இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளையே செய்து வரல்வேண்டும் என்பது கருத்து.

 

 

தம்மை இகழ்வாரை தாம் அவரின் முன் இகழ்க;

என்னை அவரொடு பட்டது?- புன்னை

விறல்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!

உறற்பால யார்க்கும் உறும்.          --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     புன்னை மலர் பூத்து மணம் கமழ்கின்ற நெய்தல் நிலத்துத் தலைவனே! தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிப்பதே நல்லது. புறக்கணிப்பவரோடு உண்டான தொடர்பால் என்ன பயன்?  நன்மையோ, தீமையோ, மதிப்போ, அவமதிப்போ அவரவர் முன் செய்த வினைப்படி அவரவரைச் சென்று நேரும் என்பது நிச்சயம்.

 

         வருவன வந்தே தீருமாதலின், அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ளுதலாகாது.

 

 

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்,

போகும் பொறியார் புரிவும் பயன் இன்றே,

ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்

ஆகாதார்க்கு ஆகுவது இல்.          ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     உயர்ச்சியை உடைய மலை நாடனே!, செல்வம் ஆக்கும் நல்வினைப் பயன் வந்து கூடும் காலம் நெருங்கியவர்களுக்கு, செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வத்தைப் போக்கும் தீவினைபயன் வந்து கூடும் காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் செல்வத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை ஆகும். எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்று இருந்தாலும், செல்வத்தைபெ பெருக்கும் நல்வினைப் பயன் இல்லாதவர்க்கு, அது ஆவது இல்லை.

 

     நல்வினைப் பயன் உள்ளவர்க்கு முயற்சி வேண்டா, வருவன் வந்து சேரும். தீவினைப் பயன் கூடுமானால் முயற்சி வேண்டா, போகவேண்டியன போய் விடும்.

 

 

அங்கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்

திங்களும் தீங்கு உறுதல் காண்டுமால் - பொங்கி

அறைப்பாய் அருவி அணிமலை நாட!

உறற்பால யார்க்கும் உறும்.     ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     கற்பாறையின்கண் மிகுந்து பாய்கின்ற அருவிகளை உடைய மலை நாடனே!, அழகிய இடமகன்ற வானத்தில் இருந்து, மிகுந்த வெண்மையான கிரணங்களை வீசுகின்ற சந்திரனும் கூட, கோளால் தீமை அடைதலைக் காண்கின்றோம். ஆதலால், தமக்கு வரக்கடவதான துன்பங்களை மாற்றும் இயல்புடையாரே ஆனாலும், வினைப் பயனானது, விடாது அவரைச் சென்று பற்றி நிற்கும்.

 

         வருவது வந்தே தீரும். அதை மாற்றுதலும் ஆகாது. அதன்பொருட்டு வருந்துதலும் ஆகாது.

 

        

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேல் சென்றதனால் - விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது.         ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     சீகாழியில் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரில் இருந்த சிறப்புடையவனாகிய கரிகால் சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை ஒருவன் விரும்பினும் விரும்பாவிட்டாலும், ஒருவனை அடைதற்கு உரியவாய் நின்ற நன்மைகள்,  அவனை அடையாது நிற்றல் இல்லை.

 

         தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும்.

 

         கழுமலம் என்னும் சீகாழி சோழநாட்டு உள்ளது. தற்காலத்தில் கரூர் எனப்படும் கருவூர் சேரநாட்டு உள்ளதோர் ஊர். இவ்விரண்டும் வெகு தொலைவில் இருந்தாலும், ஊழ்வினையானது கருவூரில் உள்ளவனை அரசனாக்கியது.

 

     கரிகாலன் நெடுந்தொலைவின்கண் இருந்து விரும்பாது இருப்பினும் ஊழ் விழுமிய பயனை அடைவித்தது. சீகாழியை ஆட்சிசெய்தவன் இறந்து படவே, அவன் வழியில் யாரும் அவ்வரசாட்சியை ஏற்க இன்மையால் அமைச்சர்கள் பட்டத்து யானையை விட்டு, அந்த யானை யாரைக் கொண்டு வருகின்றதோ அவனுக்கே முடிசூட்டுவது என்று உறுதிசெய்து யானையை விட்டனர். அவ்வாறு விடப்பட்ட பட்டத்து யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொண்டு வந்து முடிசூடுமாறு செய்தது.

 

     போர்க்களத்தில் வந்து நின்ற கும்பகர்ணனிடம் வந்து, இராமபிரானைச் சரண் புகுமாறு விபீடணன் கூறுகின்றான். விபீடணன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கும்பகர்ணன், அவனைத் தழுவி, அவனுக்கு விடையளித்துப் பின்வருமாறு கூறுகின்றான்.

 

'ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்

போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!'

         ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     என்றும் உள்ளாய்! --- எக்காலத்தும் அழியாது வாழ்பவனே!; ஆகுவது ஆகும் காலத்து --- உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்;  அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது --- அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும்;  அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் --- அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து

போயே தீரும்;  சேகு அறத் தெளிந்தோர் --- குற்றமற அதை உணர்ந்து தெளிந்தவர்கள்;  நின்னின் யார் உளர் --- உன்னைக் காட்டிலும் யாவர் உலகில் உளர்;   வருத்தம் செய்யாது --- வருத்தம் கொள்ளாமல்;  எம்மை நோக்கி இரங்கலை --- எம்மைக் குறித்து இரங்காமல்; ஏகுதி --- செல்வாய்.

 

     இராமபிரானைச் சரண் புகுந்த்தால் எக்காலத்தும் அழியாது வாழும் பேற்றை, விபீண்டன் பெற்றதால், எக்காலத்தும் அழியாது உள்ளவனே என்றான் கும்பகர்ணன். நடப்பதை ஏற்கும் பக்குவம் பெற்ற மனிதனாக கும்பகருணன் விளங்குகிறான். நடைமுறை உலகில் வாழ்பவர்க்கு இத்தகைய மனநிலை துன்ப நீக்கத்துக்கு உறுதுணையாக அமையும் என்பது அறியத்தக்கது.

 


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...