மதுரை --- 0971. ஏலப்பனி நீர்அணி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஏலப்பனி நீர்அணி (மதுரை)

 

முருகா! 

விலைமாதர் மீது உள்ள மயல் அற அருள்வாய்.

 

 

தானத்தன தானன தானன

     தானத்தன தானன தானன

          தானத்தன தானன தானன ...... தனதான

 

 

ஏலப்பனி நீரணி மாதர்கள்

     கானத்தினு மேயுற வாடிடு

          மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும்

 

ஏமக்கிரி மீதினி லேகரு

     நீலக்கய மேறிய னேரென

          ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச்

 

சோலைக்குயில் போல்மொழி யாலுமெ

     தூசுற்றிடு நூலிடை யாலுமெ

          தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும்

 

சோமப்ரபை வீசிய மாமுக

     சாலத்திலு மாகடு வேல்விழி

          சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ

 

ஆலப்பணி மீதினில் மாசறு

     மாழிக்கிடை யேதுயில் மாதவ

          னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன்

 

ஆதித்திரு நேமியன் வாமன

     னீலப்புயல் நேர்தரு மேனியன்

          ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே

 

கோலக்கய மாவுரி போர்வையர்

     ஆலக்கடு வார்கள நாயகர்

          கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா

 

கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய

     சீரற்புத மாநக ராகிய

          கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

ஏலப் பனி நீர் அணி மாதர்கள்

     கானத்தினுமேஉறவாடிடும்

          ஈரத்தினுமேவளை சேர்கரம் ...... அதனாலும்,

 

ஏமக் கிரி மீதினிலே,கரு

     நீலக் கயம் ஏறிய நேர் என,

          ஏது உற்றிடு மாதனம் மீதினும்,...... மயல் ஆகி,

 

சோலைக்குயில் போல் மொழியாலுமெ,

     தூசு உற்றிடு நூல் இடையாலுமெ,

          தோம் இல் கதலீ நிகர் ஆகிய ...... தொடையாலும்,

 

சோம ப்ரபை வீசிய மாமுக

     சாலத்திலும்,மா கடு வேல்விழி

          சூதத்தினும்,நான் அவமே தினம் ......உழல்வேனோ?

 

ஆலப் பணி மீதினில்,மாசு அறும்

     ஆழிக்கு இடையே துயில் மாதவன்,

          ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் ...... நெடுமாயன்,

 

ஆதித் திரு நேமியன்,வாமனன்,

     நீலப் புயல் நேர்தரு மேனியன்,

          ஆரத் துளவு ஆர் திரு மார்பினன் ...... மருகோனே!

 

கோலக் கய மா உரி போர்வையர்,

     ஆலக்கடு ஆர் கள நாயகர்,

          கோவில் பொறியால் வரு மா சுத! ...... குமரஈசா!

 

கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய

     சீர் அற்புத மா நகர் ஆகிய

          கூடல்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.

 

பதவுரை

 

            ஆலப் பணி மீதினில்--- நஞ்சு பொருந்திய ஆதிசேடன் என்னும் பாம்பின் மீது,

 

            மாசு அறு ஆழிக்கு இடையே துயில் மாதவன்--- குற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன்,

 

            ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடுமாயன்--- கஜேந்திரன் என்னும் யானைக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன்

 

            ஆதி--- ஆதிமூர்த்தியாய் விளங்குபவன்,

 

            திரு நேமியன்--- அழகிய அழிப்படையைத் திருக்கையில் ஏந்தியவன்,

 

            வாமனன்--- குறளனாக அவதரித்தவன்,

 

            நீலப்புயல் நேர் தரு மேனியன்--- நீலமேகத்துக்கு ஒப்பான திருமேனியை உடையவன்,

 

            ஆரத் துளவு ஆர் திரு மார்பினன் மருகோனே ---  துளவ மாலையை நிரம்ப அணிந்துள்ள திருமார்பினை உடையவன் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

            கோலக் கயமா உரி போர்வையர்--- அழகிய யானையின் தலை உரித்துப் போர்த்தியவர்,

 

            ஆலக்கடு ஆர் கள(ர்) நாயகர்--- ஆலால விடம் பொருந்திய கண்டத்தை உடைய தலைவர் ஆகிய சிவபெருமானின்,

 

            கோவில் பொறியால் வரு மாசுத--- திருகண்களில் இருந்து வெளிபட்ட நெருப்புப் பொறியால் அவதரித்த அழகிய திருமகனாரே!

 

            குமர ஈசா-- குராமக் கடவுளே!

 

            கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மாநகர் ஆகிய--- சிறந்த முத்தமிழ் வாணர்கள் விளங்கிய பெருமைக்கு உரிய அற்புதமான பெரிய நகரமாகி,

 

            கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே --- நான்மாடக்கூடல் பதியினில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            ஏலப் பனி நீர் அணி மாதர்கள் கானத்தினுமே--- மயிர்ச்சாந்தும்பனிநீரும்பூசியுள்ள விலைமாத்ரகளின் இன்னிசை மீதும்,

 

            உறவு ஆடிடும் ஈரத்தினுமே--- அவர்கள் உறவாடிப் பேசுகின்ற அன்பு மொழிகள் மீதும்,

 

            வளைசேர் கரம் அதனாலும்--- வளையைல அணிந்த கைகளின் மீதும்,

 

            ஏமக் கிரி மீதினிலே--- பொன்மலை ஆகிய மேருமலை போலவும்,

 

            கருநீலக் கயம் ஏறிய நேர் என--- அதன் மீது கரிய நிறமுடைய யானை ஏறி இருப்பதற்கு ஒப்பு என,

 

            ஏது உற்றிடு மாதனம் மீதினும் மயலாகி--- பொருந்தி இருக்கும் பருத்த கொங்களைகளின் மீதும் காம இச்சை வைத்து,

 

            சோலைக் குயில் போல் மொழியாலுமெ --- சோலையில் உள்ள குயிலைப் போன்று அவர்கள் பேசுகின்ற இனிய மொழியாலும்,

 

            தூசு உற்றிடு நூல் இடையாலுமெ--- ஆடை சுற்றி உள்ள நூல் போன்ற இடையாலும்,

 

            தோம் இல் கதலீ நிகர் ஆகிய தொடையாலும்--- குற்றமற்ற வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும்,

 

           சோம ப்ரபை வீசிய மாமுக சாலத்திலும்--- நிலவொளி வீசுகின்ற அழகிய முகத்தின் நடிப்பாலும்,

 

            மா கடு வேல்விழி சூது அ(த்)தினும்--- மிக்க விடம் பொருந்தியதும்,வேலைப் போன்றும் உள்ள கண்களின் சூதுப் பார்வையாலும்,

 

            நான் அவமே தினம் உழல்வேனோ --- அடியேன் வீணாக நாள்தோறும் உழலுதல் தகுமோ?  

 

பொழிப்புரை

 

     நஞ்சு பொருந்திய ஆதிசேடன் என்னும் பாம்பின் மீதுகுற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன்கஜேந்திரன் என்னும் யானைக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன்,  ஆதிமூர்த்தியாய் விளங்குபவன்அழகிய அழிப்படையைத் திருக்கையில் ஏந்தியவன்குறளனாக அவதரித்தவன்நீலமேகத்துக்கு ஒப்பான திருமேனியை உடையவன்,துளவ மாலையை நிரம்ப அணிந்துள்ள திருமார்பினை உடையவன் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

      அழகிய யானையின் தலை உரித்துப் போர்த்தியவர்ஆலால விடம் பொருந்திய கண்டத்தை உடைய தலைவர் ஆகிய சிவபெருமானின்திருகண்களில் இருந்து வெளிபட்ட நெருப்புப் பொறியால் அவதரித்த அழகிய திருமகனாரே!

 

     குராமக் கடவுளே!

 

     சிறந்த முத்தமிழ் வாணர்கள் விளங்கிய பெருமைக்கு உரிய அற்புதமான பெரிய நகரமாகிநான்மாடக்கூடல் பதியினில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      மயிர்ச்சாந்தும் பனிநீரும் பூசியுள்ள விலைமாத்ரகளின் இன்னிசை மீதும்அவர்கள் உறவாடிப் பேசுகின்ற அன்பு மொழிகள் மீதும்வளையைல அணிந்த கைகளின் மீதும்பொன்மலை ஆகிய மேருமலை போலவும்அதன் மீது கரிய நிறமுடைய யானை ஏறி இருப்பதற்கு ஒப்பு எனவும் பொருந்தி இருக்கும் பருத்த கொங்களைகளின் மீதும் காம இச்சை வைத்துசோலையில் உள்ள குயிலைப் போன்று அவர்கள் பேசுகின்ற இனிய மொழியாலும்ஆடை சுற்றி உள்ள நூல் போன்ற இடையாலும்குற்றமற்ற வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும்நிலவொளி வீசுகின்ற அழகிய முகத்தின் நடிப்பாலும்மிக்க விடம் பொருந்தியதும்வேலைப் போன்றும் உள்ள கண்களின் சூதுப் பார்வையாலும்,அடியேன் வீணாக நாள்தோறும் உழலுதல் தகுமோ?

 

விரிவுரை

 

 

ஏலப் பனி நீர் அணி மாதர்கள் கானத்தினுமே--- 

 

ஏலம் --- மயிர்ச்சாந்து. மயிர்ச்சாந்து கூந்தலில் பூசப்படுவது.

 

ஏலவார்குழலாள் என்பது உமையம்மையின் திருநாமம்.

 

பனி நீர் --- உடல் குளிர்ச்சிக்காகப் பூசப்பெறுவது.

 

கானம் --- இன்னிசை.

 

விலைமாதர்கள் தமது இனிய இசையாலும்நாட்டியத்தாலும் ஆடவரை மயக்குவர்.

 

உறவு ஆடிடும் ஈரத்தினுமே--- 

 

ஈரம் --- அன்பு. 

 

அன்பு உள்ளவர்கள் போல உறவாடுவது விலைமாதர்ஙளின் இயல்பு.

 

ஏமக் கிரி மீதினிலேகருநீலக் கயம் ஏறிய நேர் எனஏது உற்றிடு மாதனம் மீதினும் மயலாகி--- 

 

ஏமம் --- பொன்.  ஏமக்கிரி --- பொன்மலை ஆகிய மேருமலை.

 

கருநீலக் கயம் --- கரிய நிறம் உடைய யானை.

 

மா தனம் --- பெரிய கொங்கைகள்.

 

மேருமலை மீது கரிய நிறம் உடைய யானே ஏறி இருப்பது போன்றுவிலைமாதர்களின் அழகிய பருத்த கொங்கைகளின் மீதுகருத்த முலைக் காம்புகள் உள்ளன என்பது காட்டப்பட்டது.

 

கொங்கைக்கு --- மேருமலையும் முலைக் காம்புக்கு --- கரிய நீல யானையும் உவமை கூறப்பட்டுளது.

 

தூசு உற்றிடு நூல் இடையாலுமெ--- 

 

தூசு --- ஆடை. 

 

தோம் இல் கதலீ நிகர் ஆகிய தொடையாலும்--- 

 

தோம் இல் --- குற்றமற்ற.

 

கதலி நிகர் --- வாழைத் தண்டுக்கு ஒப்பான.

 

சோம ப்ரபை வீசிய மாமுக சாலத்திலும்--- 

 

சோமப் பிரபை --- நிலவு ஒளி.

 

மா கடு வேல்விழி சூது அ(த்)தினும்--- 

 

மா கடு --- விடம் மிகுந்,

 

வேல் விழி --- வேலைப் போன்ற கண்கள்.

 

சூது --- வஞ்சகம்.

 

ஆலப் பணி மீதினில்--- 

 

அலம் --- நஞ்சு. பணி --- பாம்பு. ஆதிசேடனைக் குறித்தது.

 

மாசு அறு ஆழிக்கு இடையே துயில் மாதவன்--- 

 

மாசு அறு --- குற்றம் அற்ற,

 

ஆழி -- கடல். பாற்கடலைக் குறித்தது.

 

ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடுமாயன்--- 

 

ஆனை -- கஜேந்திரம் என்னும் யானை.

 

உதவீ --- விரைந்து வந்து உதவியதைக் குறிக்கநெடில் எழுத்து வந்தது.

 

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும்பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும்பெரிய ஒளியோடு கூடியதாயும்திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம்மந்தாரம்சண்பகம் முதலிய மலர் தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர்நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும்,தாமரை ஓடைகளும்,பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும்இந்திரர் முதலிய இமையவரும்வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில்வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய மலர்த் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானதுஅநேக பெண் யானைகளாலே சூழப்பட்டுதாகத்தால் மெலிந்துஅந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்திபக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலைபாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,உடனே கருடாழ்வான் மீது தோன்றிசக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்துகஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால்உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

 

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவி ஒரு விசை ஆதிமூலம் என

 வரு கருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

 

வாரணம் மூலம் என்ற போதினில்,ஆழி கொண்டு,

     வாவியின் மாடு இடங்கர் பாழ்படவேஎறிந்த

     மாமுகில்போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்... மருகோனே! --- திருப்புகழ்.

                                    

 

வெங்கை யானை வனத்திடை,துங்க மா முதலைக்கு

     வெருண்டு,மூலம் எனகரு- ...... டனில் ஏறி,

விண் பராவ,அடுக்கிய மண் பராவஅதற்கு

     விதம் பராவ அடுப்பவன் ...... மருகோனே!    --- திருப்புகழ்.

                                   

 

ஆதி--- 

 

திருமால் அடியார்கள்திருமாலையே ஆதிமூர்த்தியாகப் போற்றுபவர்கள்.

 

ஆதிஆதி ஆதிநீ ஓர் அண்டம் ஆதிஆதலால்

சோதியாத சோதி நீஅது உண்மையில் விளங்கினாய்,

வேதம் ஆகிவேள்வி ஆகிவிண்ணினோடு மண்ணுமாய்,

ஆதியாகிஆயன் ஆய மாயம் என்ன மாயமே?    --- திருமழிசை ஆழ்வார்.

                                    

 

திரு நேமியன்--- 

 

நேமி --- சக்கரப் படை. ஆழிப் படை. 

 

வாமனன்--- 

 

வாமனன் --- குறளனாக அவதரித்தவன்,

 

நீலப்புயல் நேர் தரு மேனியன்--- 

 

நீலப் புயல் --- நீலமேகம்.

 

ஆரத் துளவு ஆர் திரு மார்பினன் மருகோனே --- 

 

ஆர --- மாலையா,

 

துளவு ஆர் --- துளவத்தை நிரம்ப.

 

 

கோலக் கயமா உரி போர்வையர்--- 

 

கயமா --- கயம் --- யானை. மா --- விலங்கு.

 

யானையின் தோல உரித்துப் போர்த்தியவர் சிவபெருமான்.

 

ஆலக்கடு ஆர் கள நாயகர்--- 

 

ஆலம் -- விடம்.

 

கடு --- விடம்.

 

கொடிய ஆலால விடம் பொருந்திய கண்டத்தை உடைய தலைவர் ஆகிய சிவபெருமான்,

 

கோவில் பொறியால் வரு மாசுத--- 

 

கோ --- கண். 

 

பொறி --- நெருப்புப் பொறி.

 

கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மாநகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே--- 

 

சிறந்த முத்தமிழ் வாணர்கள் மதுரையம்பதியில் இருந்து தமிழை வளர்த்தார்கள். 

 

மதுரைமயம்பதியின் சிறப்பைத் தெய்வ ச்சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

 

சால்புஆய மும்மைத் தமிழ்தங்கிய அங்கண் மூதூர்

நூல்பாய் இடத்தும் உளநோன்றலை மேதி பாயப்

பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம் பாய எங்கும்

சேல்பாய் தடத்தும் உளசெய்யுள் மிக்குஏறு சங்கம். --- பெரியபுராணம்.

 

மதுரை "நான்மாடக் கூடல்"  ஆன வரலாறு....

 

பண்டைய பாண்டிய நாட்டை அபிடேகபாண்டியன்ஆட்சி செய்து வந்த காலத்தில்பேரூழி ஏற்பட்டது. இதனால் கடல் பொங்கிச் சீற்றம் கொண்டுகடலலைகள் மதுரைவரை வந்தன. அப்போது பூமியில் படிந்த கடல்நீர் எல்லாம் ஆவியாகி ஏழு மேகங்களாக மாறின. இம் மேகங்கள்பூசணிக்காய் போன்ற நீர்த்துளிகளுடன்பளிங்குத் தாரை போன்ற நீர்த் தாரைகளுடன்  இடைவிடாது மழையாய் பெய்தன. இப் பெருமழையில் மதுரை மாநகரம் அழியும் நிலை ஏற்பட்டது.  அப்போதுமதுரை சோமசுந்தரப் பெருமான் திருவருள் செய்துதனது சடைமுடியிலிருந்து நான்கு மேகக் கூட்டங்களை அனுப்பினார். இந்த நான்கு மேகக் கூட்டங்களும் மதுரையை வளைத்து மாடங்களாகிச் சந்துவாய் தெரியாதவாறுமதுரைக்கு மேலே ஒரு குடைபோல் காத்து நின்றன. இதனால் பெருமழையின்  அழிவிலிருந்து மதுரை மாநகரம் காப்பாற்றப் பெற்றது. இந் நிகழ்ச்சியால் மதுரைக்கு, "நான்மாடக் கூடல்" என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம். 

 

"வன்திறல் வருணன் விட்ட மாரியை விலக்க,ஈசன்

மின்திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்

குன்றுபோங் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே

அன்றுநான் மாடக் கூடல் ஆனதால் மதுரை மூதூர்" --- திருவிளையாடல் புராணம்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மீது உள்ள மயல் அற அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...