திரு இலஞ்சி --- 0979. கொந்தள ஓலை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கொந்தள ஓலை (இலஞ்சி)

 

முருகா! 

திருவடியைத் தரிசிக்க அருள்வாய்

 

 

தந்தன தான தனந்தன தானத்

     தந்தன தான தனந்தன தானத்

          தந்தன தான தனந்தன தானத் ...... தனதான

 

 

கொந்தள வோலை குலுங்கிட வாளிச்

     சங்குட னாழி கழன்றிட மேகக்

          கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர்

 

கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்

     கண்கயல் மேனி சிவந்திட கோவைக்

          கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே

 

சந்திர ஆர மழிந்திட நூலிற்

     பங்கிடை யாடை துவண்டிட நேசத்

          தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன்

 

சந்திர மேனி முகங்களு நீலச்

     சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்

          சந்திர வாகு சதங்கையு மோசற்று ...... அருள்வாயே

 

சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்

     கொண்டுநல் தூது நடந்தவ ராகத்

          தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி

 

தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்

     சங்கரி மோக சவுந்தரி கோலச்

          சுந்தரி காளி பயந்தரு ளானைக்கு ...... இளையோனே

 

இந்திர வேதர் பயங்கெட சூரைச்

     சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்

          கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே

 

எண்புன மேவி யிருந்தவள் மோகப்

     பெண்திரு வாளை மணந்திய லார்சொற்

          கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

கொந்தள ஓலை குலுங்கிட,வாளிச்

     சங்குடன் ஆழி கழன்றிட,மேகக்

          கொண்டைகள் மாலை சரிந்திட,வாசப் ...... பனிநீர்சேர்

 

கொங்கைகள் மார்பு குழைந்திட,வாளிக்

     கண்கயல் மேனி சிவந்திட,கோவைக்

          கொஞ்சிய வாய் இரசங்கொடு,மோகக் ...... கடல்ஊடே,

 

சந்திர ஆரம் அழிந்திட,நூலில்

     பங்குஇடை ஆடை துவண்டிட,நேசத்

          தந்திட,மாலு ததும்பியும் மூழ்குஉற் ...... றிடுபோது,ன்

 

சந்திர மேனி முகங்களும்,நீலச்

     சந்த்ரகி மேல்கொடு அமர்ந்திடு பாதச்

          சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று ...... அருள்வாயே!

 

சுந்தரர் பாடல் உகந்து,ரு தாளைக்

     கொண்டுநல் தூது நடந்தவர்கத்

          தொந்தமொட் ஆடி இருந்தவள்,ஞானச் ...... சிவகாமி,

 

தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள்,நீலச்

     சங்கரி,மோக சவுந்தரி,கோலச்

          சுந்தரி,காளி பயந்துஅருள் ஆனைக்கு ...... இளையோனே!

 

இந்திர வேதர் பயம்கெட,சூரைச்

     சிந்திட,வேல்கொடு எறிந்துநல் தோகைக்கு

          இன்புற மேவி இருந்திடு வேதப் ...... பொருளோனே!

 

எண்புனம் மேவி இருந்தவள்,மோகப்

     பெண்திரு வாளை மணந்துயல் ஆர்சொற்கு,

          இஞ்சி அளாவும் இலஞ்சி விசாகப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      சுந்தரர் பாடல் உகந்து--- சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருப்பாடல்களில் மகிழ்ந்து 

 

     இரு தாளைக் கொண்டு நல் தூது நடந்தவர்--- தமது இரண்டு திருவடிகளைக் கொண்டு நல்ல தூது நடந்த சிவபெருமானுடைய

 

     ஆகத் தொந்தமொடு ஆடி இருந்தவள்--- திருமேனியில் சேர்ந்து,அவருடன் நடமாடி இருந்தவள்

 

     ஞானச் சிவகாமி --- ஞானச் சொரூபி ஆகிய சிவகாமி அம்மை,

 

     தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள்--- அடியார்களுடைய உடம்பைத் திருக் கோயிலாகக் கொண்டு அமர்ந்தவள்,

 

     நீலச் சங்கரி--- நீல நிறத்தை உடையவள்சுகத்தைச் செய்பவள்,

 

     மோக சவுந்தரி--- இன்ப சுகம் தரும் அழகு மிக்கவள்.

 

     கோலச் சுந்தரி---  அழகிய சிவந்த திருமேனியை உடையவள்.

 

     காளி --- துர்க்கைஆகிய பார்வதிதேவி

 

     பயந்து அருள் ஆனைக்கு இளையோனே--- பெற்றருளிய யானை முகக் கணபதிக்கு இளையவரே!

 

     இந்திர வேதர் பயம் கெட--- இந்திரர்கள்பிரமாதி தேவர்களின் அச்சம் நீங்குமாறு 

 

     சூரைச் சிந்திட--- சூரபதுமன் முதலானோர் அழியுமாறு 

 

     வேல் கொடு எறிந்து--- வேலாயுதத்தைச் செலுத்தி,

 

     நல் தோகைக்கு இன்புற மேவி இருந்திடு வேதப் பொருளோனே --- நல்ல மயிலின் மேல் மகிழ்வோடு வீற்றிருக்கின்ற வேதப் பொருளானவரே!

 

     எண் புனம் மேவி இருந்தவள்--- மதிக்கத் தக்க தினைப் புனத்தில் இருந்தவளும்,

 

     மோகப் பெண் திருவாளை மணந்து --- மோகம் தந்த மங்கையும் தெய்வத் தன்மை பொருந்தியவளும் ஆகிய வள்ளியம்மையை திருமணம் செய்த 

 

     இயல் ஆர் சொற்கு--- தகுதி நிறைந்த புகழுக்கு உரியவரே!!

 

     இஞ்சி அளாவும் இலஞ்சி விசாகப் பெருமாளே---  உயர்ந்த மதில்கள் உள்ள இலஞ்சி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் விசாகரே! 

 

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

 

      கொந்தள ஓலை குலுங்கிட--- தலை மயிர்ச் சுருளின் கீழ் உள்ள காதோலைகள் குலுங்கி அசைய,

 

     வாளிச் சங்குடன் ஆழி கழன்றிட--- வாளி என்ற காதணியும் சங்கு வளையல்களும்மோதிரமும் கழல,

 

     மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட--- கருமேகம் போன்ற கூந்தலில் உள்ள மலர் மாலை சரிய,

 

      வாசப் பனி நீர் சேர் கொங்கைள் மார்பு குழைந்திட--- நறுமணப் பன்னீர் சேர்ந்த மார்பகங்கள் நெஞ்சில் துவள

 

     வாளிக் கண்கயல் மேனி சிவந்திட--- அம்பு போன்றதும் கயல் மீன் போன்றதுமான கண்களும் உடலும் சிவக்க,

 

     கோவைக் கொஞ்சிய வாய் இரசம் கொடு--- கொவ்வைப் பழம் போலிருந்து கொஞ்சும் வாயிதழ் இனிப்பான ஊறலைக் கொடுக்க,

 

      மோகக் கடலூடே சந்திர ஆரம் அழிந்திட--- காம இச்சைக் கடலில் சந்திர ஆரம் என்ற பொன் மாலை அலைந்து குலைய,

 

     நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட--- நூல் போன்ற பாகமான இடையில் ஆடை குலைந்து துவண்டுபோக,

 

     நேசம் தந்திட--- பொதுமாதர்களின் நேசத்தில் திளைத்து,

 

     மாலு(ம்) ததும்பியும் மூழ்குற்றிடு போது--- மயக்கமும் காம இச்சையும் பொங்கி எழுஅதில்அடியேன் முழுகி இருக்கின்ற தருணத்தில்,

 

      உன் சந்திர மேனி முகங்களும்--- உமது குளிர்ந்த நிலவொளி பொருந்திய திருமேனியும்திருமுக மண்டலங்களும்

 

      நீலச் சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாதச் சந்திர வாகு சதங்கையும்--- நீல மயிலின் மேல் ஏறி அமர்ந்திடும் உமது ஒளி பொருந்திய திருவடியில் விளங்கும் சதங்கைகளையும்

 

     (அடியேன் கண்குளிரக் கண்டு வணங்கி மகிழ)

 

     --- ஓசுவாமியே!

 

     சற்று அருள்வாயாக--- சிறிது திருவருள் செய்வாயாக.

 

பொழிப்புரை

 

     சுந்தரமூர்த்தி நாயனாருடைய பாடல்களில் மகிழ்ந்துதமது இரண்டு திருவடிகளைக் கொண்டு நல்ல தூது நடந்த சிவபெருமானுடைய திருமேனியில் சேர்ந்து,அவருடன் நடமாடி இருந்தவள்ஞானச் சொரூபி ஆகிய சிவகாமி அம்மைஅடியார்களுடைய உடம்பைத் திருக் கோயிலாகக் கொண்டு அமர்ந்தவள்நீல நிறத்தை உடையவள்சுகத்தைச் செய்பவள்,

இன்ப சுகம் தரும் அழகு மிக்கவள்.அழகிய சிவந்த திருமேனியை உடையவள்.துர்க்கைஆகிய பார்வதிதேவிபெற்றருளிய யானை முகக் கணபதிக்கு இளையவரே!

 

      இந்திரர்கள்பிரமாதி தேவர்களின் அச்சம் நீங்குமாறும்சூரபதுமன் முதலானோர் அழியுமாறும்,வேலாயுதத்தைச் செலுத்தி,நல்ல மயிலின் மேல் மகிழ்வோடு வீற்றிருக்கின்ற வேதப் பொருளானவரே!

 

     மதிக்கத் தக்க தினைப் புனத்தில் இருந்தவளும்மோகம் தந்த மங்கையும் தெய்வத் தன்மை பொருந்தியவளும் ஆகிய வள்ளியம்மையை திருமணம் செய்த,தகுதி நிறைந்த புகழுக்கு உரியவரே!

 

     உயர்ந்த மதில்கள் உள்ள இலஞ்சி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் விசாகரே! 

 

     பெருமையில் சிறந்தவரே!

 

     தலை மயிர்ச் சுருளின் கீழ் உள்ள காதோலைகள் குலுங்கி அசைய,வாளி என்ற காதணியும் சங்கு வளையல்களும்,மோதிரமும் கழல,கருமேகம் போன்ற கூந்தலில் உள்ள மலர் மாலை சரிய,நறுமணப் பன்னீர் சேர்ந்த மார்பகங்கள் நெஞ்சில் துவளஅம்பு போன்றதும் கயல் மீன் போன்றதுமான கண்களும் உடலும் சிவக்க,கொஞ்சிப் பேசுகின்ற,கொவ்வைப் பழம் போலும் வாயிதழ் இனிப்பான ஊறலைக் கொடுக்க,காம இச்சைக் கடலில் சந்திர ஆரம் என்ற பொன் மாலை அலைந்து குலைய,நூலினும் நுண்ணிய இடையில் ஆடை குலைந்து துவண்டு போகபொதுமாதர்களின் நேசத்தில் திளைத்துமயக்கமும் காம இச்சையும் பொங்கி எழுஅதில்அடியேன் முழுகி இருக்கின்ற தருணத்தில்,உமது குளிர்ந்த நிலவொளி பொருந்திய திருமேனியும்திருமுக மண்டலங்களும்,நீல மயிலின் மேல் ஏறி அமர்ந்திடும் உமது ஒளி பொருந்திய திருவடியில் விளங்கும் சதங்கையையும் அடியேன் கண்குளிரக் கண்டு வணங்கி மகிழ, ஓசுவாமியே! சிறிது திருவருள் செய்வாயாக.

 

விரிவுரை

 

கொந்தள ஓலை குலுங்கிட--- 

 

கொந்தளம் --- பெண்களின் தலை மயிர்ச் சுருள்.

 

வாளிச் சங்குடன் ஆழி கழன்றிட--- 

 

வாளி, வாளிகை --- பெண்களின் காதணி வகைகளுள் ஒன்று.

 

சங்கு --- சங்கினால் ஆன வளையல்கள்.

 

ஆழி --- கணையாழி, மோதிரம்.

 

மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட--- 

 

கருமேகம் போன்று உள்ள கூந்தலைக் கொண்டையாக முடித்து, அதன் மீது மாலைகளை அணிந்துள்ளனர்.

 

வாளிக் கண்கயல் மேனி சிவந்திட--- 

 

வாளி --- அம்பு. 

 

சந்திர மேனி முகங்களும்--- 

 

சந்திரனை ஒத்த ஒளி பொருந்திய குளிர்ந்த திருமேனியும், அத் திருமுகத்தில் விளங்கும் பன்னிரு திருக்கண்களும்.

 

நீலச் சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாதச் சந்திர வாகு சதங்கையும்--

 

நீலச் சந்திரகி --- நீலமயில்.

 

சந்திர வாகு --- சம்+திர+வாகு. நல்ல திரண்ட அழகு.

 

சுந்தரர் பாடல் உகந்து இரு தாளைக் கொண்டு நல் தூது நடந்தவர் ஆகத் தொந்தமொடு ஆடி இருந்தவள்--- 

 

ஆகம் --- உடல். திருமேனி.

 

தொந்தம் --- தொடர்பு. புணர்ச்சி.

 

சிவபெருமானுடைய திருமேனியில் கலந்து இருந்தவள் ஆகிய உமாதேவியார்.

 

நேரியன் ஆகுமல்லன் ஒருபாலு மேனி

            அரியான்முன் ஆய ஒளியான்

நீர்இயல் காலும்ஆகி நிறைவானும் ஆகி

            உறுதீயும் ஆய நிமலன்

ஊர்இயல் பிச்சைபேணி உலகங்கள் ஏத்த

            நல்குண்டு பண்டு சுடலை

நாரியொர் பாகம்ஆக நடமாட வல்ல

            நறையூரின் நம்பன் அவனே.   --- திருஞானசம்பந்தர்.

 

"நாரி ஓர் பாகமாக நடமாடவல்ல நறையூரின் நம்பன்" என்று அருளியதைக் கவனிக்கவும். 

 

துஞ்சுஇருள் ஆடுவர் தூமுறுவல் துளங்கும்  உடம்பினராய்

அஞ்சுடர் ஆர்எரி யாடு வர்ஆர்அழ லார்வி ழிக்கண்

நஞ்சுஉமிழ் நாகம் அரைக்குஅசைப் பர்நலன் ஓங்கு நாரையூர்

எம்சிவ னார்க்குஅடி மைப்படுவார்க்குஇனி இல்லை ஏதமே. --- திருஞானசம்பந்தர்.

                                    

 

"தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்" என்பது உமாதேவியைத் திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டதைக் குறிக்கும்.

 

சுந்தரர் பாடல் உகந்துரு தாளைக்கொண்டுநல் தூது 

நடந்தவர் ---

 

மாதவம் செய்த தென்திசை வாதீதிலாத் திருத்தொண்டத் தொகை தரவும் இறைவனது வற்றாத பெரும் கருணையால் அவதரித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவனுக்கு மிகவும் உகந்தது அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அருச்சனை ஆகும். அது இறைவனைப் பாடிப் பரவுவதே. ஆதலால் தமிழில் பாடல் கேட்க இச்சை கொண்டார். அதையே தமது விருப்பமாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் வெளிப்படுத்தினார்.

 

"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை;நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும்;ஆதலால்மண் மேல் நம்மைச்

சொற் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார். ---பெரியபுராணம்.

 

தில்லையிலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களை அனுபவித்த பெருமான்அந்தப் பாடல்களில் மயங்கியதால்சேரமான் பெருமாள் நாயனாருக்குத் தினமும் கேட்ட நடராசப் பெருமானின் சிலம்பொலி சிறிதே தடைப்பட்டது.

 

திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே சடையனார் என்பவர்க்கு இசைஞானியார் திருவயிற்றிலே திருவவதாரம் செய்த நம்பியாரூரர் அந்நாடாளும் அரசராகிய நரசிங்கமுனையரையரால் வளர்க்கப் பெற்றுபுத்தூர்ச் சடங்கவிசிவாசாரியின் மகளைத் திருமணஞ்செய்து கொள்ள மாப்பிள்ளைக் கோலத்துடன் வந்திருந்தபொழுது, பரமசிவனால் ஆவணம் காட்டித் தடுத்தாட்கொள்ளப்பெற்றுஇறைவன் கட்டளை இட்டபடியே பல திருப்பதிகளுக்கும் சென்று திருப்பதிகம் பாடித் திருவாரூரை அடைந்து சிவபெருமான் திருவருளால் அங்கே உருத்திர கணிகையர் குலத்தில் திருவவதாரம் செய்திருந்த பரவைநாச்சியாரை மணந்து இன்பம் துய்த்துவருகின்றவர்திருவொற்றியூரை அடைந்து சங்கிலி நாச்சியாரை மணந்து மீண்டு திருவாரூரை அடைந்து,பரவையார் மிக்க சினத்துடன் இருப்பதைப் பரிசனங்களால் அறிந்துபரவையின் ஊடலைத் தணித்துத் தம்மை அவருடன் சேர்ப்பிக்கவேண்டும் எனச் சிவபெருமானைப் பிரார்த்தித்தனர். திருவாரூராளும் அடிகளாகிய இறைவனும் நள்ளிரவில் பரவையார் வீட்டுக்குஅருச்சகர் வடிவில் சென்றுஅவரால் மறுக்கப்பட்டுமீட்டும் தேவர்களும்முனிர்களும்சிவகணங்களும் புடைசூழச் சென்று பரவையாரின் ஊடலைத் தீர்த்துத் தன் தோழ நம்பியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தனர்.

 

இதனைப் பட்டினத்துச் சுவாமிகள் வியந்து பாடுகின்றார்..

 

யாவரே இருந்தும்,யாவரே வாழ்ந்தும்,

     யாவரே எமக்குஉறவுஆயும்,

தேவரீர் அல்லால் திசைமுகம் எனக்குத் 

     திருவுளம் அறிய வேறுஉளதோ?

பாவலான் ஒருவன் செந்தமிழ்க்கு இரங்கி

     பரவையார் ஊடலைமாற்ற

ஏவல் ஆள்ஆகி இரவெலாம் உழன்ற 

     இறைவனே ஏகநாயகனே.

 

அரவுஅகல் அல்கு லார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு

தருவம் என்று அளவில் வேதம் சாற்றிய தலைவன் தன்னைப்

பரவைதன் புலவி தீர்ப்பான்,கழுதுகண் படுக்கும் பானாள்

இரவினில் தூது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்.

                                                                                   --- திருவிளையாடல் புராணம்.

 

பேரூரும் பரவைமனப் பிணக்கு அற,எம் பெருமானை

ஊர்ஊரும் பலபுகல,ஓர்இரவில் தூதன்என,

தேர்ஊரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்,

ஆரூர! நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.   --- திருவருட்பா.

 

தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள்--- 

 

அடியார்களுடைய உடம்பைத் திருக் கோயிலாகக் கொண்டு அமர்ந்தவன் இறைவன் என்பது,

 

போகமும் இன்பமும் ஆகிப்

            போற்றிஎன் பார்அவர் தங்கள்

ஆகம் உறைவிட மாக

            அமர்ந்தவர் கொன்றையி னோடும்

நாகமும் திங்களும் சூடி

            நல்நுதன் மங்கைதன் மேனிப்

பாகம் உகந்தவர் தாமும்

            பாண்டிக் கொடுமுடி யாரே.

 

என வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தாலும்,

 

கடலினுள் நாய்நக்கி யாங்கு உன் கருணைக் கடலின்உள்ளம்

விடல் அரியேனை விடுதி கண்டாய், விடல் இல்அடியார்

உடல் இலமே மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே!

மடலின் மட்டே! மணியே! அமுதே! என் மதுவெள்ளமே.

 

தந்தது உன் தன்னைக் கொண்டத்து என் தன்னைச்

    சங்கராத! ஆர்கொலோ சதுரர்?

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்,

    யாதுநீ பெற்றது ஒன்று என்பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்!

    திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்,

    யான்இதற்கு இலன் ஓர் கைம்மாறே.

 

என வரும் திருவாசகப் பாடல்களாலும் அறியவரும்.

 

நல் தோகைக்கு இன்புற மேவி இருந்திடு வேதப் பொருளோனே --- 

 

தோகை --- தோகையை உடைய மயிலைக் குறிக்கும். மயிலை வாகனமாக உடையவர் முருகப் பெருமான்.

 

அழகிய வேதங்களின் உட்பொருளாக இருப்பவன் நானே என்று முருகக் கடவுள் மார்தட்டிக் கூறுகின்றார். ஏன்உலகம் உணர்ந்து உய்யும்பொருட்டு. வேதம் இறைவன் திருவாக்கு. தூமறைபாடும் வாயார் என்பது பெரியபுராணம். அவ் வேதம் பொதுவானது. முருகவேள் ஆறுசமயங்கட்கும் பொதுவானவர். "அறுசமய சாத்திரப் பொருளோனே" என்பார் "பிறவியலை" எனத் தொடங்கும் திருப்புகழில். ஆகவேமறைகள் கூறும் உட்பொருள் அவரே ஆவார். "வேத மந்திர சொரூபா" என்பார் பழநித் திருப்புகழில்.

 

குருகுகொடி யுடன்மயிலில் ஏறி மந்தரம்

     புவனகிரி சுழலமறை ஆயி ரங்களும்

     குமரகுரு என,வலிய சேடன் அஞ்சவந் ......திடுவோனே.. --- (ஒருவரையும்) திருப்புகழ்.

                                                                                    

இதனால்வேதகாரணர் முருகப் பெருமானே என்பதும்ஞானவீரரும்ஆணவத்தினை அடக்கிபிறவிப் பெருங்கடலைக் கடத்துபவரும் அக் கருணாகரரே என்பதும் விளங்கும்.

 

எண் புனம் மேவி இருந்தவள்--- 

 

எண்ணுதல் --- மதித்தல்.

 

எண் புனம் --- மதித்துப் போற்றுதற்கு உரிய தினைப்புனம்.

 

இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார்சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்துதினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார்.

 

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

 

     உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும்மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும்சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.

 

(1)      ஒரு நாளைக்கு 50ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.  இது பொய். உண்மையாக இருக்கும்பட்சத்தில்,நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன்,புத்தகம் அடங்கிய பெரிய பையைச் சுமந்துவிற்றுக்கொண்டு அலைய வேண்டாமே

 

(2)       இந்த மருந்து பல வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000இனாம். இதுவும் பொய். 

 

(3)       நோயில்லாத பொழுதுமருத்துவரிடம் பணம் தந்துமருத்துவச் சான்றிதழ் பெற்றுவிடுமுறை எடுத்தல்

 

     இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள். இந்தப் பொய்யான வாழ்க்கையால்ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனம் பாழ்பட்டுக் கிடக்கின்றது. மெய்ம்மையான உழவைச் செய்துநல்ல எண்ணங்கள் ஆகிய பயிரை வளர்க்கவேண்டும். 

 

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,

அன்பு என் பாத்தி கோலி,முன்புற

மெய் எ(ன்)னும் எருவை விரித்துங்குயமில்

பத்தித் தனி வித்துட்டு,நித்தலும்

ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்கு அஞ்சிள் சென்று

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்,

ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,

கருணை இளந்தளிர் காட்ட,அருகாக்

காமக் குரோதக் களை அறக் களைந்து

சேமப் படுத்துழி,செம்மையின் ஓங்கி

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டும் எனக்

கண்ணீர் அரும்பி,கடிமலர் மலர்ந்துபுண்ணிய

அஞ்செழுத்து அருங்காய் தோன்றி;நஞ்சுபொதி

காள கண்டமும்,கண் ஒரு மூன்றும்,

தோள் இரு நான்கும்,சுடர்முகம் ஐந்தும்,

பவளநிறம் பெற்று,தவளநீறு பூசி,

அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்

காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி

பையப் பையப் பழுத்துக் கைவர,

எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்

செம்மாந்து இருப்ப;சிலர்இதின் வாராது,

 

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்

காமக் காடு மூடி,தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர,

இச்சை வித்து உகுத்துழி,யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,

பொய் என் கவடுகள் போக்கி,செய்யும்

பாவப் பல்தழை பரப்பி,பூ எனக்

கொடுமை அரும்பிகடுமை மலர்ந்து,

துன்பப் பல்காய் தூக்கி,பின்பு

மரணம் பழுத்து,நரகிடை வீழ்ந்து,

தமக்கும் பிறர்க்கும் உதவாது,

இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே".

 

எனவரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"என்னும் அருள் நூலில்மெய்ம்மையான உழவு குறித்தும்அது அல்லாதது குறித்தும் பட்டினத்தடிகள் பாடி உள்ளது காண்க.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சப் புனத்து --- மனமாகிய கொல்லைப் புறத்தில்வஞ்சக் கட்டையைவேர் அற அகழ்ந்து போக்கி --- (அநாதியே முளைத்து வேர் விட்டு இருந்த) வஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு அற்றுப் போகுமாறு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி,தூர்வை செய்து --- நல்ல முளை முளைப்பதற்கு உரியவாறு பதப்படுத்தி,அன்பு என் பாத்தி கோலி --- அன்பு என்னும் பாத்தியைச் செய்துமுன்புறமெய் எ(ன்)னும் எருவை விரித்து --- முதலில் வாய்மை என்கின்ற எருவை இட்டுங்கு --- அந்தக் கொல்லையில்யம் இல் பத்தித் தனி வித்து ட்டு --- பழுது முதலியவற்றால் முளைக்காது என்னும் சந்தேகம் சிறிதும் இல்லாதபத்தி எனப்படுகின்ற விதையை விதைத்துநித்தலும்ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி --- நாள்தோறும் ஆர்வம் என்கின்ற தெளிந்த நீரைப் பாய்ச்சிநேர் நின்று --- எதிரில் நின்றுதடுக்குநர்க்கு அடங்காது --- உள் புகாதவாறு தடுப்பவர்க்கு அடங்காதுஇடுக்கண் செய்யும்பட்டி அஞ்சினுக்கு அஞ்சி --- துன்பத்தைச் செய்கின்ற ஐந்து பட்டிமாடுகளுக்குப் பயந்துஉள்சென்று --- அவைகளைத் தடுப்பதற்குகொல்லையின் உள்ளே சென்று,சாந்த வேலி கோலி --- சாந்தம் என்னும் வேலியினை அமைத்து,வாய்ந்த பின் --- (இவை அனைத்தும்) முடிந்த பின்னர்,ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து --- ஞானம் என்னும் பெரிய முளையானது கெடாது முளைத்து,கருணை இளந்தளிர் காட்ட--- அது வளர்ந்துகருணை என்கின்ற பசுமையான தளிர்கள் தழைத்து வளர்ந்து,அருகா --- எடுக்கும் தோறும் கெடாது வளர்கின்றகாமக் குரோதக் களை அறக் களைந்து --- காமம் குரோதம் என்னும் களைப் பூண்டுகளை வைரோடு பறித்து எறிந்துசேமப் படுத்துழி --- அந்தக் கொல்லையைச் செம்மையாக்கிய பின்னர்செம்மையின் ஓங்கி --- செம்மையாக வளர்ந்துமெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு --- உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் உண்டாகும் புளகாங்கிதம் என்னும் அரும்பு உண்டாகி,ம் எனக்கண்ணீர் அரும்பி --- அந்தப் புளகாங்கிதத்தால் உண்டான ஆனந்தக் கண்ணீர் என்னும் அரும்பை விட்டு,கடிமலர் மலர்ந்து --- ஞானமணம் உள்ள மலர் மலர்ந்துபுண்ணிய அஞ்செழுத்து அருங்காய் தோன்றி --- புண்ணியத்தின் வடிவான திருவைந்தெழுத்து என்னும் கிடைத்தற்கு அரிய காய் உண்டாகிநஞ்சு பொதிகாள கண்டமும் --- ஆலகால விடம் பொருந்திய நீலகண்டமும்,கண் ஒரு மூன்றும் --- ஒப்பற்ற மூன்று திருக்கண்களும்,தோள் இரு நான்கும் --- எட்டுத் திருத்தோள்களும்சுடர்முகம் ஐந்தும் --- அருள் ஒளி வீசும் ஐந்து திருமுகங்களும்,பவளநிறம் பெற்று--- பவள நிறத்தோடு விளங்கிதவள நீறு பூசி --- வெண்மையான திருநீற்றினைப் பூசி,அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய் --- கைப்புஇனிப்புதுவர்ப்புகார்ப்பு,புளிப்புஉவர்ப்பு என்னும் ஆறுவகையான சுவையிலும் மிக்க இனிமையான சுவையினை உடையதாய்,காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் --- கண்ணால் கண்டாலும்காதால் கேட்டாலும்மனத்தால் கருதினாலும் ஆனந்தத்தை தருகின்ற,சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி --- மிக உயர்ந்த மருதமாணிக்கம் என்னும் இனிய கனியானதுபையப் பையப் பழுத்துக் கைவர --- மெல்ல மெல்ல முதிர்ந்து கையில் எளிதாகக் கிடைக்க,எம்மனோர்கள் இனிது இனிது அருந்திச் செம்மாந்து இருப்ப --- எம்மைப் போன்றவர்கள் (அந்தச் சிவஞானக் கனியை) இன்புற உண்டு மகிழ்ந்து இருக்க,

 

     சிலர் இதின் வாராது--- இதன் அருமையை உணர்ந்து தெளியாத சிலர்இந்த உழைப்பினை முயலாது,மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி --- மனமாகிய கொல்லைப் புறத்தை பயனற்ற பாழ் நிலமாக இருக்கவிட்டுகாமக் காடு மூடி--- காமம் என்னும் காடு மூடிக் கிடந்ததால்,தீமை செய்ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக--- தீமைகளைப் புரிகின்ற ஐம்புல வேடர்கள் வழிப்பறி செய்து இழுக்க, இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட--- சிற்றின்பம் ஆகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர--- கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற மான் ஆனது இங்கும் அங்குமாக ஓடித் திரியும்படி,இச்சை வித்து உகுத்துழி--- ஆசை என்னும் வித்தை (அந்தப் பாழ் நிலத்தில்) உதிர்த்த காலத்தில்,யான் எனப் பெயரியநச்சு மாமரம் நனிமிக முளைத்து--- நான் என்னும் ஆங்காரம் ஆகிய பெரிய நச்சுமரமானது மிகவும் முளைத்து,பொய் என் கவடுகள் போக்கி--- பொய்ம்மையாகிய கிளைகளைப் பரப்பிசெய்யும் பாவப் பல்தழை பரப்பி--- செய்யப்பட்டு வருகின்ற பாவம் ஆகிய பல தழைகளை விரித்து,பூ எனக் கொடுமை அரும்பி--- கொடுமை என்னும் அரும்புகளை விட்டு,கடுமை மலர்ந்து--- தீமையே மலர்ந்து,துன்பப் பல்காய் தூக்கி--- துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கிக் கொண்டு,பின்பு --- அதன் பின்புமரணம் பழுத்து--- மரணம் என்கின்ற பழமானது பழுத்துநரகிடை வீழ்ந்து--- நரகத்தில் விழுந்துதமக்கும் பிறர்க்கும் உதவாது--- தமக்கும்மற்றவர்க்கும் பயன்படாதுஇமைப்பில் கழியும் --- இமைக்கின்ற நேரத்தில் அழிந்து கெடுகின்,இயற்கையோர் உடைத்தே --- குணம் உடையவர்களை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.

 

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்

காமம் வெகுளி கழிபெரும் பொய்எ(ன்)னும்

தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை

அரிதின் இகழ்ந்து போக்கி,பொருதிறல்

மைருள் நிறத்து மதன் உடை அடுசினத்து

வகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி,அருள்விளக்கு ஏற்றி,

துன்ப இருளைத் துரந்து,முன்புறம்

மெய்யெனும் விதானம் விரித்து,நொய்ய

கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை க்கிச்

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு

ந்தைநீ இருக்க இட்டனன்"

 

என்று "திருக்கழுமல மும்மணிக் கோவை" என்னும் அருள்நூலில்பட்டினத்தடிகள்மெய்ம்மையான உழவைச் செய்வதுதமது உள்ளம் என்னும் பாழறையைஇறைவனுக்குப் பள்ளியறை ஆக்கிய அருமை குறித்துப் பாடி உள்ளார்.

 

இதன் பொருளைச் சிந்திப்போம்....

 

         கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்--- நான் கருவில் அகப்பட்டுபூமியில் பிறக்கத் தொடங்கிய காலம் முதலாகக் கழிந்த எண்ணில்லாத காலங்கள் எல்லாம்,காமம் --- காமத்தால் விளைந்த தீமையும்வெகுளி--- நல்லோரையும் மற்றோரையும் கோபித்துக் கொண்டதால் வந்த தீமையும்கழிபெரும் பொய்எ(ன்)னும் --- மிகுதியாகப் பொய்யைப் பேசுவதால் வந்த தீமையும் எனப்படும்தூய்மையில் குப்பை ---தூய்மை இல்லாத குப்பைகள்தொலைவின்றிக் கிடந்ததை--- அழியாமல் இருப்பில் இருந்தவற்றை.அரிதின் இகழ்ந்து போக்கி--- நீக்கக் கூடாதவையாக இருந்த அவற்றால் விளைந்த தீமைகளால் அவற்றை வெறுத்துஅவை என்னை விட்டுப் போகும்படியாகச் செய்துபொருதிறல்--- போர் புரியும் தன்மை கொண்ட,மைருள் நிறத்து ---மிக்க கருமை நிறம் கொண்டமதன் உடை--- மதம் பிடித்த,அடுசினத்துவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி--- கொல்லத்தக்க கோபத்தினை உடைய ஐந்து வகையான வேறுபட்ட ஒழுக்கம் கொண்டஐந்து புலன்கள் ஆகிய கடாக்களையும்அவைகள் கட்டப்பட்டு இருந்து கட்டினை அவிழ்த்து அப்புறப்படுத்தி அன்புகொடு மெழுகி--- அந்த இடத்தினை அன்பு என்னும் நீரால் மெழுகிஅருள்விளக்கு ஏற்றி--- அருள் என்னும் விளக்கினை ஏற்றி வைத்து,துன்ப இருளைத் துரந்து--- துன்பமாகிய இருட்டினை ஓட்டிமுன்புறம்--- இவ்வாறு இருந்த அந்த இடத்தில் மெய்எ(ன்)னும் விதானம் விரித்து--- வாய்மை என்கின்ற மேற்கட்டினை விரித்து விளங்கக் கட்டிநொய்யகீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்பாழறை --- அற்பமாகிய தாழ்ந்த குணங்களில் சிக்கியிருந்த எனது மனமாகிய பாழான அறையைஎந்தைனக்குப் பள்ளியறை க்கி--- எனது பெருமானே! நீ திருத்துயில் கொண்டு இருக்கும் இடமாகப் பண்ணிஅந்தப் பள்ளியறையில்நீ இருக்க--- தேவரீர் எழுந்தருளி இருக்கசிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசுஇட்டனன்--- எனது சிந்தையாகிய அழகிய தாமரை மலரினால் ஆகிய அழகிய இருக்கையை இட்டு வைத்தேன்.

 

     இவ்வாறுமனம் என்னும் நல்ல கொல்லைப் புனத்தில் வளர்கின்றநல்ல எண்ணம் ஆகிய தினைப்பயிரைதீய எண்ணங்கள் ஆகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாமல் காவல் புரிந்து கொண்டுஇறைவனையே எண்ணித் தவம் புரிந்துகொண்டுதமது மனத்தை முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கும் பள்ளியறையாக மாற்றிஇருந்தவர்சீவான்மா ஆக உருவெடுத்து வந்த எம்பிராட்டிஅகிலாண்ட நாயகியாகிய வள்ளித் தாயார். நாரதர் ஆகிய பழஅடியார் பரிந்துரைக்கஅவரது சகாயத்தோடு,முருகப் பெருமான் அந்த சீவான்மா ஆகிய வள்ளிநாயகியைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

 

நாவலர் பாடிய நூல்இசை யால்வரு

     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக!

     நாயக! மாமயில் ...... உடையோனே.--- (ஏவினைநேர்) திருப்புகழ்.

 

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,

     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,

நாணம் அழிந்துஉரு மாறிய வஞ்சக!

     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

 

மார சரம் படமோகம் உடன் குற-

     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,

மா முநிவன் புணர் மான் உதவும்தனி

     மானை மணம் செய்த ...... பெருமாளே.  --- (பாரநறுங்) திருப்புகழ்.

 

என்று வள்ளித் திருமணம் பற்றிஅருணகிரிநாதப் பெருமான் அழகுறப் பாடியருளினார். வள்ளித் திருமணம் பல அருமையான தத்துவங்களை உள்ளடக்கியது.

 

மோகப் பெண் திருவாளை மணந்து --- 

 

வள்ளிநாயகியிடம் முருகப் பெருமான் மோகம் கொண்டு நின்றதைஅருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் ஆங்காங்கே வைத்து அழகாகப் பாடி அருளி உள்ளார். பின்வரும் மேற்கோள்களைக் காண்க.

 

முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...

 

குறவர் கூட்டத்தில் வந்து,கிழவனாய்ப் புக்கு நின்று,

     குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,

குணமதாக்கிசிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த

     குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.  --- கச்சித் திருப்புகழ்.

                                    

 

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்

     புணர் காதல் கொண்ட அக் ......    கிழவோனே!   --- பழநித் திருப்புகழ்.

                                    

 

செட்டி வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....

 

செட்டி என்று வன மேவி,இன்ப ரச

     சத்தியின் செயலினாளை அன்பு உருக

     தெட்டி வந்துபுலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே. --- சிதம்பரத் திருப்புகழ்.

                              

 

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,

செட்டி என்று எத்தி வந்துடி நிர்த்தங்கள் புரி

    சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ......எங்கள் கோவே! --- சிதம்பரத் திருப்புகழ்.

                                    

 

வள்ளிநாயகிக்ககாக மடல் ஏறியது ....

 

பொழுது அளவு நீடு குன்று சென்று,

     குறவர்மகள் காலினும் பணிந்து,

          புளிஞர் அறியாமலும் திரிந்து,...... புனமீதே,

புதியமடல் ஏறவும் துணிந்த,

     அரிய பரிதாபமும் தணிந்து,

          புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

                                   

முருகப் பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....

 

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்

     மங்கை தனை நாடி,...... வனமீது

வந்த,சரண அரவிந்தம் அது பாட

     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.

 

குஞ்சர கலாப வஞ்சி,அபிராம

     குங்கும படீர ...... அதி ரேகக்

கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!

     குன்று தடுமாற ...... இகல் கோப!                 --- நிம்பபுரத் திருப்புகழ்.

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் .....அணைவோனே

                                                                           --- திருவருணைத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகி தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...

 

தவநெறி உள்ளு சிவமுனி,துள்ளு

     தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்

தரு புன வள்ளி மலை மற வள்ளி,

     தரு தினை மெள்ள ...... நுகர்வோனே! --- வெள்ளிகரத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகி முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....

 

மால் உற நிறத்தைக் காட்டி,வேடுவர் புனத்தில் காட்டில்,

     வாலிபம் இளைத்துக் காட்டி,...... அயர்வாகி,

மான்மகள் தனத்தைச் சூட்டி,ஏன் என அழைத்துக் கேட்டு,

     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.       --- பொதுத் திருப்புகழ்.

                                  

 

வள்ளிநாயகியின் திருக்கையையும்திருவடியையும் பிடித்தது...

 

பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய ...... மணவாளா!                --- சுவாமிமலைத் திருப்புகழ்.

 

கனத்த மருப்பு இனக் கரி,நல்

     கலைத் திரள்கற்புடைக் கிளியுள்

     கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி

கனிக் குதலைச் சிறுக் குயிலைக்

     கதித்த மறக் குலப் பதியில்

     களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

                                   

 

வள்ளிநாயகியின் எதிரில் துறவியாய்த் தோன்றியது...

 

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்

     வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.  --- திருவேங்கடத் திருப்புகழ்.

                                

 

வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....

 

கன்னல் மொழி,பின்அளகத்துன்னநடை,பன்ன உடைக்

     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்

     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!   --- கண்ணபுரத் திருப்புகழ்.

                                

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...

 

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு

     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!

உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,

     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!

                                --- திருவருணைத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி,சரசம் புரிந்தது.....

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் .....அணைவோனே

                                                                                              --- திருவருணைத் திருப்புகழ்.

 

தழை உடுத்த குறத்தி பதத் துணை

     வருடி,வட்ட முகத் திலதக் குறி

     தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்துரு

     குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு

     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே. --- திருத்தணிகைத் திருப்புகழ்.

                                 

இஞ்சி அளாவும் இலஞ்சி ---

 

இஞ்சி --- மதில். உயர்ந்த மதிலோடு கூடிய திருக்கோயில்.

 

திருஇலஞ்சி என்னும் திருத்தலம் தென்காசி இரயில் நிலையத்துக்கு 6 கி. மீ. தொலைவில் உள்ளது. திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! திருவடியைத் தரிசிக்க அருள்வாய்

 

 

No comments:

Post a Comment

கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

  கேளுங்கள் ,  அருமையான ஓர் வரம் -----      வள்ளல்பெருமான் என வழங்கப்படும் ,  இராமலிங்க சுவாமிகள் ,  சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் ,  விரா...