ஆய்க்குடி --- 0985. வாட்படச் சேனை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வாட்படச் சேனை (ஆய்க்குடி)

 

முருகா! 

பிறவி அற அருள்வாய்

 

 

தாத்தனத் தானதன தாத்தனத் தானதன

     தாத்தனத் தானதன ...... தனதான

 

 

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு

     மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும்

 

மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்

     வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக்

 

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை

     கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக்

 

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு

     கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ

 

தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை

     சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச்

 

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி

     தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும்

 

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு

     மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே

 

ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை

     ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

வாள்படச் சேனைபட,ஓட்டி ஒட்டாரைஇறு-

     மாப்பு உடைத்து ஆள் அரசர் ...... பெருவாழ்வும்,

 

மாத்திரைப் போதில் இடு காட்டினில் போம் என,இல்

     வாழ்க்கை விட்டு ஏறும் அடி- ...... யவர்போலக்

 

கோள் படப் பாதமலர் பார்த்து இளைப்பு ஆற,வினை

     கோத்தமெய்க் கோலமுடன்,...... வெகுரூபக்

 

கோப்பு உடைத்தாகிஅலமாப்பினில் பாரி வரு

     கூத்து இனிப் பூரையிட ...... அமையாதோ?

 

தாள்படக் கோபவிட பாப்பினில் பாலன்மிசை

     சாய்த்தொடுப் பாரவும்நிள் ...... கழல்தாவிச்

 

சாற்றும் அக் கோர உரு கூற்று உதைத்தார்,மவுலி

     தாழ்க்க வஜ்ராயுதனும் ...... இமையோரும்

 

ஆள்படச் சாம பரமேட்டியைக் காவல் இடும்

     ஆய்க்குடிக் காவல! ...... உததிமீதே

 

ஆர்க்கும் அத் தானவரை வேல் கரத்தால்வரையை

     ஆர்ப்பு எழச் சாட வல ...... பெருமாளே.

 

பதவுரை

 

            தாள்படக் கோப விட பாப்பினில்--- கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல

 

            பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவும்--- பாலன் ஆகிய மார்க்கண்டேயனிடம் இயமன் குறி வைத்துத் தொடரவும்

 

            நிள் கழல்தாவி சாற்றும் அக் கோர உருக் கூற்று உதைத்தார் --- தமது நீண்ட திருவடியை நீட்டி பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட இயமனை உதைத்த பரமசிவனார் 

 

            மவுலி தாழ்க்க--- (தேவரீரிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக) தமது திருமுடியைத் தாழ்த்தி வணங்க

 

            வஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட--- வஜ்ராயுதனாகிய இந்திரனும்தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க

 

            சாம பரமேட்டியைக் காவலிடும்--- பொன்னிறமான பிரமதேவனைச் சிறையிலிட்ட 

 

            ஆய்க்குடிக் காவல--- ஆய்க்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அரசனே

 

            உததி மீதே ஆர்க்கும் அத் தானவரை --- கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும்

 

            வேற் கரத்தால் வரையை ஆர்ப்பு எழச் சாட வல பெருமாளே 

--- திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்ச மலையையும் பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமையில் மிக்கவரே!.

 

            வாட்படச் சேனைபட ஓட்டி ஒட்டாரை--- வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும்

 

            இறுமாப்புடைத்து ஆள் அரசர் பெருவாழ்வும்--- செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும்

 

            மாத்திரைப் போதில் இடு காட்டினில் போம் என--- இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்து 

 

            இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர் போல--- இல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல

 

            கோட்படப் பாதமலர் பார்த்து இளைப்பாற--- ஒரு குறிக்கோளுடன் வாழவும்உன் திருவடி மலரினைப் பார்த்து யான் இளைப்பாறவும்

 

            வினை கோத்த மெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்புடைத் தாகி--- வினை வசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை பலவித அலங்காரங்களைச் செய்து

 

            அல மாப்பினிற் பாரிவரு கூத்து--- துன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு

 

            இனிப் பூரை இட அமையாதோ --- இனிமேல் முடிவு பெறவே முடியாதோ?

 

பொழிப்புரை

 

     கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போலபாலன் ஆகிய மார்க்கண்டேயரிடம் இயமன் குறி வைத்துத் தொடரவும்,  தமது நீண்ட திருவடியை நீட்டி பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட இயமனை உதைத்த பரமசிவனார்,தேவரீரிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக தமது திருமுடியைத் தாழ்த்தி வணங்கவச்சிராயுதனாகிய இந்திரனும்தேவர்களும் ஆட்பட்டு நிற்க,  பொன்னிறமான பிரமதேவனைச் சிறையிலிட்ட ஆய்க்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அரசரே!

 

      கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும்திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்ச மலையையும் பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமையில் மிக்கவரே!.

 

      வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும்செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும்இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்துஇல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல,  ஒரு குறிக்கோளுடன் வாழவும்உன் திருவடி மலரினைப் பார்த்து யான் இளைப்பாறவினை வசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை பலவித அலங்காரங்களைச் செய்துதுன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டுஇனிமேல் முடிவு பெறவே முடியாதோ

 

விரிவுரை

 

வாட்படச் சேனைபட ஓட்டி ஒட்டாரை--- 

 

ஒட்டார் --- பகைவர்.

 

இறுமாப்புடைத்து ஆள் அரசர் பெருவாழ்வும்--- 

 

இறுமாப்பு --- செருககுகர்வம்.

 

மாத்திரைப் போதில் இடு காட்டினில் போம் என--- 

 

மாத்திரை --- கணப் பொழுது. கண் இமைக்கும் நேரம்.

 

இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர் போல--- 

 

"நிலையாத சமுத்திரமான சமுசார துறை" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். இலவாழ்க்கையிலையே பற்றுக் கொண்டு வாழ்வதை விடுத்துஇல்லறத்தை இனிதாக இயற்றிபற்றற்ற நிலையை அடைந்துஇறைவன் திருவடிக்கு ஆளாவது வேண்டும்.

 

கோள்படப் பாதமலர் பார்த்து இளைப்பாற--- 

 

கோள் --- கொள்ளுதல். குறிக்கோள்.

 

இறைவன் திருவருள்ளுக் பாத்திரமாக வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழைக்க நடத்திட வேண்டும்.

 

வினை கோத்த மெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்புடைத்து ஆகி--- 

 

பிறவிகள்தோறும் இயற்றிய வினைகளின் பயனாக இந்த உடம்பு வந்தது. வினை தீரும் மட்டும் இது இருக்கும். உடம்பு நிலையற்றது. நிலையாமையை உணராமல்இந்த உடம்பையே பொருளாக எண்ணிஇது நிலைத்திருக்க வேண்டிஉணவுஉடை முதலியனவற்றைக் கொண்டு அழகு செய்துகொள்வதே வாழ்க்கையாகி விடக் கூடாது.

 

அலமாப்பினிற் பாரிவரு கூத்து--- 

 

அலமாப்பு --- துன்பம்.

 

துன்பத்திற்கே இடமாக உள்ள இந்த உடலுயில் வாழ்க்கையை விளையாட்டக எண்ணாமல்கருத்து உணர்ந்து வாழ்ந்து ஈடேறவேண்டும்.

 

இனிப் பூரை இட அமையாதோ --- 

 

பூரை --- முடிவு. நிறைவுபோதியது. 

  

தாள்படக் கோப விட பாப்பினில் பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவும் நிள் கழல் தாவி சாற்றும் அக் கோர உருக் கூற்று உதைத்தார் 

 

பாப்பு --- பாம்பு. விடப் பாம்பு. 

 

நீள் கழல் என்பது நிள்கழல் என வந்தது.

 

கோரம் --- கொடுமை.

 

கோர உருக் கூற்று --- கொடுமையான உருவத்தைக் கொண்ட இயமன்.

 

பாலன் --- பாலகன் ஆகிய மார்க்கண்டேயரைக் குறிக்கும்.

     

     சிவபெருமான் இயமனைத் திருவடியால் உதைத்தது

 

அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து,தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி,காசித் திருத்தலத்தை அடைந்து,மணிகர்ணிகையில் நீராடி,விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர். 

 

வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர். முனிவர் பெருமான் புரமூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டும் என்றனர். 

 

அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து,“தீங்குறு குணம்ஊமைசெவிடுமுடம்தீராப்பிணிஅறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோஅல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமாபகருதி” என்றனர்.

 

"தீங்கு உறு குணமே மிக்கு,சிறிது மெய் உணர்வுஇலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி,முடமும் ஆய்,விழியும்இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",    

     

"கோலமெய் வனப்பு மிக்கு,குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி,எமக்கும் அன்பு உடையோன்ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று,கலைபல பயின்றுவல்ல

பாலனைத் தருதுமோ?நின் எண்ணம் என் பகர்தி"என்றான். --- கந்த புராணம்.

                                           

முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.

 

மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி,யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி,எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன்,புரிக"என்றான்.  --- கந்த புராணம்.

                                            

         

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும்பூதல இடும்பை நடுங்கவும்புரை தவிர் தருமம் ஓங்கவும்மாதவ முனிவர் உய்யவும்வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தனவிண்ணவர் மலர்மழைச் சிந்தினர்முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாதாண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்திஅறிவுஅடக்கம்அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர்,இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோசிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தனஇன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர். 

 

மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்உமக்கு வரம் அளித்த சிவபெருமான் இருக்கின்றனர்அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறதுஅர்ச்சிக்க நறுமலர் இருக்கிறதுஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சன்மின்” என்று கூறி விடைபெற்றுகாசி க்ஷேத்திரத்தில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து,அன்பின் மயமாய்த் தவமியற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தாநினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,

 

ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்யநேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’      --- கந்தபுராணம்.

 

சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல்அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

 

மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து,இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி,சைமினி நகரம் போய்தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூறஇயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லைமார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லைகயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி,முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துளன்உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவன்வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”

 

நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன்,விரைவில்

 போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”

                                     

அது கேட்ட காலன்,நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற,இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி,ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன். 

 

அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனையாது செய்தனைஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்ஈசனாரது வரத்தை மறந்தனை போலும்நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது,நான் வீசும் பாசத்தை விலக்குமோகடற்கரை மணல்களை எண்ணினும்,ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோபிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு,கமலாசனுக்கும் உண்டுஎனக்கும் உண்ட.ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும்மூவர் காப்பினும்,மற்ற எவர் காப்பினும்உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்விரைவில் வருதி” என்றனன்.

 

மார்க்கண்டேயர் “அந்தக! அரன் அடியார் பெருமை அறிந்திலைஅவர்களுக்கு முடிவில்லைமுடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி நின் புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.

 

தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய்பேதாய்,நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான்.      --- கந்தபுராணம் 

                                         

"இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனைஎன் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால்மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடலுற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய் ! அஞ்சேல்அஞ்சேல்செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை யணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.

 

மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னி,வெகுண்டான்,பதி மூன்றும்

சிதைத்தான்,வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான்,கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான்.   --- கந்தபுராணம்.

                                               

நலமலி தருமறை மொழியொடு

            நதிஉறு புனல்புகை,ஒளிமுதல்,

மலர்அவை கொடுவழி படுதிறல்

            மறையவன் உயிர் அது கொளவரு

சலமலி தரு மறலி தன்உயிர்

            கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இது என உலகுகள் புகழ்

            தருபொழில் அணிதிரு மிழலையே. ---  திருஞானசம்பந்தர்.

 

நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு

ஒன்றிவழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றிவரு காலன்உயிர் கண்டுஅவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே. ---  திருஞானசம்பந்தர்.

                                         

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,

சாற்றுநாள் அற்றது என்று,தருமராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.  --- அப்பர்.

 

மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து,உங்ஙனே

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பர்.

 

அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத

            அவனைக் காப்பது காரணமாக

வந்தகாலன் தன்ஆருயிர் அதனை

            வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,டியேன்

எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்

            இவன்  மற்றுஎன் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்துஉன் திருவடி அடைந்தேன்

            செழும்பொழில் திருப்புன் கூர்உளானே --- சுந்தரர்.

 

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட 

     உதைத்துக்கோத்த தோள்உடை

     என்அப்பர்க்கு ஏற்றி      திரிவோனே. ---(வார்குழல்) திருப்புகழ்    

                                    

கூற்று உதைத்தார் மவுலி தாழ்க்கவஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட--- 

 

திருமால்பிரமன்இந்திரன்சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம்பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனு நூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான்.

 

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

 

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வணங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து,பிரணவப் பொருளை வினாவிஅதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

 

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்,தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுபுன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

 

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல்உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும்அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய்எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையதுஅறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறுஅங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

 

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்னகுன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்துமுறையினால் கழறவல்லேம்” என்றனர். 

 

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை;ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறதுநீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டுபிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்றுதம் புரிசடைத் தூங்கவேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர் வேலண்ணல் தோன்றலும்ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டுசீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.  --- தணிகைப் புராணம்.

                                                                                             


நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

                                                                                    

 “நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 

 

தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”  ---(கொடியனைய) திருப்புகழ்.

                                                                                   

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

சிவனார் மனம் குளிஉபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...         --- திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாததுஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

                                                                      

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

 

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.     ---  தணிகைப் புராணம்.                                                                                                                  

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.  --- அபிராமி அந்தாதி.

                                        

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

                                          

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

                                    

 

திருமால் சிவஞானம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணத்தில் இராமன் அருள் பெற்ற வரலாற்றினில் காண்க.

 

இந்திரன் திருத்தணிகை மலையிலும்திருவேரகத்திலும் முருகப் பெருமானைப் பூசித்துஉபதேசம் பெற்றான்.

 

சாம பரமேட்டியைக் காவலிடும் ஆய்க்குடிக் காவல--- 

 

சாமம் --- பொன்.

 

பரமேட்டி --- பிரமன்.

 

பிரமன் பொன் நிற மேனியன் என்பது பின்வரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களால் தெரிய வரும்.

 

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலும் தேட நின்ற

அம்பவ ளத்திரள்போல் ஒளி ஆய ஆதிபிரான்

கொம்புஅண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய

நம்பன தாள்தொழுவார் வினைஆய நாசமே.

 

பொன்நிற நான்முகன் பச்சையான் என்றுஇவர் புக்குஉழித்

தன்னைஇன் னான்எனக் காண்பரி யதழல் சோதியும்

புன்னை பொன் தாதுஉதிர் மல்கும்அந் தண்புக லிந்நகர்

மின்இடை மாதொடும் வீற்றிருந் தவிம லன்அன்றே.

 

பிரமதேவன் ஒருசமயம் கயிலை சென்றபொது, “நான் படைப்புத் தலைவன்” என்று இறுமாந்து சென்றான். முருகவேள் அவனுடைய இறுமாப்பு நீங்குமாறு பிரணவப் பொருளை வினவஅதனை சொல்லமாட்டாது அவன் திகைக்கஅவனைச் சிறையில் அடைத்து தருக்ககற்றி அருள் புரிந்தனர்.

 

அயனைச் சிறை புரிந்த வரலாறு

 

குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும்,கின்னரர்கிம்புருடர்சித்தர்வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும்,யான் எனது என்னும் செருக்கின்றி,சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அருந்தார். அவர்  அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர். 

 

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான்,சிவன் வேறு தான் வேறன்றுமணியும் ஒளியும்போல்சிவனும் தானும் ஒன்றே என்பதையும்முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும்பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார். 

 

தருக்குடன் செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து,வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.  பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன்.  முருகப்பெருமான்அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.  “நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.  உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி" என்றனர்.

 

தாமரைத் தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி

மா மறைத்தலை எடுத்தனன் பகர்தலும்,வரம்பில்

காமர் பெற்று உடைக் குமரவேள்,"நிற்றிமுன் கழறும்

ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக",ன்று உரைத்தான்.    ---கந்தபுராணம்.

                                                                                                

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும்பிரமன் அக் குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றனசிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றதுவெட்கத்தால் தலை குனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில்இதன் பொருளை உணராமற் போனோமேஎன்று ஏங்கினன்.  சிவபெருமானுக்குப் பீடமாகியும்ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும்காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன். 

 

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்விரைவில் விளம்புதி” என்றனர். பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன். அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோபேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

 

சிட்டி செய்வது இத் தன்மையதோ?னச் செவ்வேள்

குட்டினான் அயன் நான்குமா முடிகளும் குலுங்க”     ---கந்தபுராணம்.

 

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

 

வேதநான்முக மறையோ னொடும் விளை

  யாடியே குடுமியிலே கரமொடு

  வீரமோதின மறவா”             --- (காணொணா) திருப்புகழ்.

 

அயனைக் குட்டிய பெருமாளே”    --- (பரவை) திருப்புகழ்.

 

ஆர ணன்றனை வாதாடி ஓருரை

 ஓது கின்றென வாராது எனாஅவன்

 ஆண வங்கெட வேகாவலாம்அதில்      இடும்வேலா...  --- (வாரணந்) திருப்புகழ்.                                                                                              

 

      “.......................................படைப்போன்

அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று

     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்

சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்

     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”              --- கந்தர் கலிவெண்பா.

 

தென்காசியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் தென்காசியிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள நான்குமுனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. செங்கோட்டையிலிருந்து 13 கிமீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

 

முருகனை முதன்மைக் கடவுளாகக் கோயில் இது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிபாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. 

 

அரசுவேம்புகறிவேப்பிலைமாதுளைமாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்கு உரியதாகக் கருதப்படுகிறது.மூலவருக்கு வலப்புறம் மகாதேவன்மகாவிஷ்ணுஅம்பிகைகணேசரும் இடப்புறம் சூரியனும் உள்ளனர். பஞ்ச தேவர்கள் சூழ பஞ்ச விருட்சங்களின் கீழ் மூலவர் அமைந்துள்ளார். அனுமன் நதி இக்கோவிலின் தல தீர்த்தமாகும். இக்கோவிலில் அரச இலை திருநீற்றுப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

 

ஆய்க்குடிக்கு அருகிலுள்ள மல்லிபுரம் என்னும் ஊரில் ஒரு குளத்தைத் தூர்வாரும் போது ஒரு முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அடியவர் ஒருவர் அச்சிலையைத் தன் வீட்டு ஆட்டுத் தொழுவத்தின் அருகே கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டு வரலானார். அரசும் வேம்பும் இணைந்து உள்ள இடத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து வழிபடும்படியும்அவ்விடத்தை ஆடு ஒன்று அடையாளம் காட்டும் என்றும் அடியவரின் கனவில் தோன்றி முருகன் கூறினார். அதன்படியே செம்மறி ஆடொன்று அரசும் வேம்பும் உள்ள ஒரு இடத்துக்குச் செல்லஅடியவரும் அந்த இடத்தில் ஓலைக் கீற்றால் குடிசை அமைத்து முருகர் சிலையைத் தாபித்து வழிபடலானார். பிற்காலத்தில் அவ்வூரை ஆண்ட அரசர்களால் இக்கோயில் மேம்படுத்தப்பட்டது.

 

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோயில்களுக்குச் சென்றுஇறுதியாக ஆய்க்குடிக் கோயிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாகவைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப் பாயசம் நிவேதனம் செய்தார். இன்றும் இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு படிப் பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! பிறவி அற அருள்வாய்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...