திருக் குற்றாலம் --- 0984. முத்தோலை தனை

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முத்தோலை தனை (திருக்குற்றாலம்)

 

முருகா! 

விலைமாதர் வலையில் படாமல் அருள்.

 

 

தத்தான தனத்த தத்தன

     தத்தான தனத்த தத்தன

          தத்தான தனத்த தத்தன ...... தனதான

 

முத்தோலை தனைக்கி ழித்தயி

     லைப்போரி கலிச்சி வத்துமு

          கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார்

 

முற்றாதி ளகிப்ப ணைத்தணி

     கச்சார மறுத்த நித்தில

          முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே

 

வித்தார கவித்தி றத்தினர்

     பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு

          வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ

 

மெய்த்தேவர் துதித்தி டத்தரு

     பொற்பார்க மலப்ப தத்தினை

          மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே

 

பத்தான முடித்த லைக்குவ

     டிற்றாட வரக்க ருக்கிறை

          பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே

 

பற்பாசன் மிகைச்சி ரத்தைய

     றுத்தாத வனைச்சி னத்துறு

          பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே

 

கொத்தார்க தலிப்ப ழக்குலை

     வித்தார வருக்கை யிற்சுளை

          கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங்

 

கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி

     சிற்றாறு தனிற்க ளித்திடு

          குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

முத்தோலை தனைக் கிழித்துயி

     லைப் போர் இகலிசிவத்துமு-

          கத் தாமரையில் செருக்கிடும் ...... விழிமானார்,

 

முற்றாது இளகிப் பணைத்துணி

     கச்சு ஆரம் மறுத்த,நித்தில

          முத்தாரம் அழுத்து உகிர்க்குறி ...... அதனாலே

 

வித்தார கவித் திறத்தினர்,

     பட்டோலை நிகர்த்து இணைத்து எழு

          வெற்புஆன தனத்தில் நித்தலும் ...... உழல்வேனோ?

 

மெய்த்தேவர் துதித்திடத் தரு

     பொற்பு ஆர் கமலப் பதத்தினை

          மெய்ப்பாக வழுத்திட க்ருபை ...... புரிவாயே.

 

பத்தான முடித் தலைக் குவடு

     இற்று ஆட,அரக்கருக்கு இறை

          பட்டுவி விடச் செயித்தவன் ...... மருகோனே!

 

பற்ப ஆசன் மிகைச் சிரத்தை     

     அறுத்துதவனைச் சினத்து உறு

          பல்போக உடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே!

 

கொத்து ஆர் கதலிப் பழக் குலை

     வித்தார வருக்கையில் சுளை

          கொத்தோடு உதிரக் கதித்து எழு ...... கயல்ஆரம்

 

கொட்டா சுழியில் கொழித்து எறி

     சிற்றாறு தனில் களித்திடு

          குற்றாலல் இடத்தில் உற்றுஅருள் ...... பெருமாளே.

 

பதவுரை

 

      பத்தான முடித் தலைக் குவடு உற்று ஆட--- பத்து மணிமுடிகளை உடைய மலை போன்ற தலைகள் அறுபட்டு விழ,

 

     அரக்கருக்கு இறை பட்டு--- அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணன் அழிந்து 

 

     ஆவி விட--- உயிர் விடும்படி 

 

     செயித்தவன் மருகோனே--- வெற்றி கொண்ட திருமாலின் திருமருகரே!

 

      பற்ப ஆசன் மிகைச் சிரத்தை அறுத்து--- பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுக்கு மிகையாய் இருந்த ஐந்தாவது தலையை அறுத்து,

 

     ஆதவனைச் சினத்து உறு பல் போகவும் உடைத்த--- தக்கன் வேள்வியில் சூரியனைக் கோபித்து அவனது பற்களை உதிர்த்த 

 

     தற்பரன் மகிழ்வோனே--- பரம்பொருளாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்பவரே!

 

      கொத்து ஆர் கதலிப் பழக் குலை --- கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் 

 

     வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர--- விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக உதிரும்படி 

 

     கதித்து எழு கயல் ஆரம் கொட்டா--- கயல் மீன்கள் தாவிக் குதித்து முத்துக்களை எறிந்து,

 

     சுழியில் கொழித்து எறி--- நீர்ச் சுழிகளில் கொழித்து எறிகின்,

 

     சிற்றாறு தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே--- சிறிய ஆற்றின் கரையில் திருக்கோயில் கொண்டு விளங்கும் குற்றால நாதருக்கு அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமையில் மிக்கவரே!

 

      முத்து ஓலை தனைக் கிழித்து--- முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி,

 

     அயிலைப் போர் இகலி--- வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து,

 

     சிவத்து முகத் தாமரையில் செருக்கிடும் விழி மானார்---செந்நிறம் கொண்டமுகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய விலைமாதர்களின்

 

      முற்றாது இளகிப் பணைத்து --- முற்றாமல்,நெகிழ்ந்து பெருத்து,

 

     அணி கச்சு ஆரம் அறுத்த--- அழகிய கச்சின் மேலுள்ள மாலை அற்றுப் போகும்படி செய்த,

 

     நித்தில முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி அதனாலே--- நல்ல முத்து மாலை அழுந்தும்படி உள்ளதும்நகக் குறியைக் கொண்டதும்,

 

      வித்தார கவித் திறத்தினர்--- வித்தார கவிகளைப் பாட வல்ல புலவர்களின்

 

     பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு--- ஓலைக் கட்டுகளுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள 

 

     வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ --- மலை போன்ற மார்பகங்களில் தினந்தோறும் உழலுவேனோ?

 

      மெய்த் தேவர் துதித்திடத் தரு பொற்பு ஆர் கமலப் பதத்தினை --- உண்மைத் தேவர்கள் போற்ற,அவர்களுக்கு உதவும் அழகிய தாமரைத் திருவடிகளை 

 

     மெய்ப்பாக வழுத்திட க்ருபை புரிவாயே--- மெய்யான பத்தியுடன் வழிபட அருள் புரிவாயாக.

 

 

பொழிப்புரை

 

 

            பத்து மணிமுடிகளை உடைய மலை போன்ற தலைகள் அறுபட்டு விழஅசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணன் அழிந்து உயிர் விடும்படி  வெற்றி கொண்ட திருமாலின் திருமருகரே! 

 

     பத்மாசனத்தில் இருக்கும் பிரமனுக்கு மிகையாய் இருந்த ஐந்தாவது தலையை அறுத்து,தக்கன் வேள்வியில் சூரியனைக் கோபித்து அவனது பற்களை உதிர்த்த பரம்பொருளாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்பவரே!

 

            கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக உதிரும்படி கயல் மீன்கள் தாவிக் குதித்து முத்துக்களை எறிந்துநீர்ச் சுழிகளில் கொழித்து எறிகின், சிறிய ஆற்றின் கரையில் திருக்கோயில் கொண்டு விளங்கும் குற்றால நாதரு அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமையில் மிக்கவரே!

 

            முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கிவேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்துசெந்நிறம் கொண்டமுகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய விலைமாதர்களின்முற்றாமல்,நெகிழ்ந்து பெருத்துஅழகிய கச்சு மேலுள்ள மாலை அற்றுப் போகும்படி செய்தநல்ல முத்து மாலை அழுந்தும்படி உள்ளதும்நகக் குறியைக் கொண்டதும்வித்தார கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலைக் கட்டுகளுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள  மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் உழலுவேனோ?

 

     உண்மைத் தேவர்கள் போற்ற,அவர்களுக்கு உதவும் அழகிய தாமரைத் திருவடிகளை மெய்யான பத்தியுடன் வழிபட அருள் புரிவாயாக.

 

விரிவுரை

 

இத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்களின் சாகசங்களை எடுத்துக் கூறி நம்மை நெறிப்படுத்துகின்றார்.

  

பத்தான முடித் தலைக் குவடு உற்று ஆடஅரக்கருக்கு இறை பட்டு ஆவி விட செயித்தவன் மருகோனே--- 

 

அரக்கர் குலத் தலைவனான இராவணனின் தலைகளை மலைகளைப் போன்று இருந்தன என்கின்றார்.

 

வேலை வற்றிட நல்கணை தொட்டுலை

     மீது அடைத்துதனிப்படை விட்டு உற,

          வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் .....மலைபோலே

மீது அறுத்தி நிலத்தில் அடித்துமெய்

     வேத லட்சுமியைச் சிறை விட்டு அருள்

          வீர அச்சுதனுக்கு நல் அற்புத ......       மருகோனே!   --- திருப்புகழ்.

                                         

பற்ப ஆசன் மிகைச் சிரத்தை அறுத்து--- 

 

பற்பாசன்பற்ப+ஆசன்.  தாமரை மலரைத் தனக்கு இருக்கையாக உடைய பிரமதேவனின் ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபெருமான் திருகி அருளினார்.

 

ஆதவனைச் சினத்து உறு பல் போகவும் உடைத்த--- 

 

தக்கன் வேள்வியில் சூரியனின் பற்களைத் தகர்த்து அருளினார்.

     

கொத்து ஆர் கதலிப் பழக் குலைவித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர,கதித்து எழு கயல் ஆரம் கொட்டாசுழியில் கொழித்து எறி சிற்றாறு தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே--- 

 

கதலி --- வாழை.

 

வருக்கை --- பலா.

 

ஆரம் --- முத்து.

 

குற்றாலத் திருத்தலத்தின் இயற்கை எழிலை அடிகளார் பாடினார்.

 

     திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5கி.மீ. தொலைவிலும்செங்கோட்டையில் இருந்து 7கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது. 

 

     கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போதுஅங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோயிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும்,உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.

 

            கோயிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் திருமால் சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்தவிஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் இலிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் சிவலிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும்பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.

 

திருக்கோயில் மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது. ஆலயம் சுமார் 3.5ஏக்கர் பரப்பளவில் நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோதுசங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதை திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில்அருவியின் மேற்பரப்பில் இருந்து காணலாம். திரிகூடநாதர் என்றும் குற்றாலநாதர் என்று அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது.

 

            இத்தலத்தின் தலவிருட்சமாக பலாமரம் உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும்பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், இலிங்கத்தின் வடிவில் இருப்பது பார்த்து பரவசப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

            குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றால அருவிக்கு அருகிலேயே இது தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. 

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் வலையில் படாமல் அருள்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...