திரு இலஞ்சி --- 0980. சுரும்பு அணி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சுரும்பு அணி (இலஞ்சி)

 

முருகா! 

திருவடி அருள்வாய்

  

தனந்தன தந்த தனந்தன தந்த

     தனந்தன தந்த ...... தனதானா

 

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு

     துரந்தெறி கின்ற ...... விழிவேலால்

 

சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு

     சுருண்டும யங்கி ...... மடவார்தோள்

 

விரும்பிவ ரம்பு கடந்துந டந்து

     மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே

 

விளங்குக டம்பு விழைந்தணி தண்டை

     விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய்

 

பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற

     பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே

 

புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்

     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா

 

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்

     குரும்பைம ணந்த ...... மணிமார்பா

 

இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று

     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

சுரும்பு அணி கொண்டல் நெடுங்குழல் கண்டு

     துரந்து எற கின்ற ...... விழிவேலால்,

 

சுழன்று சுழன்று,துவண்டு துவண்டு,

     சுருண்டுமயங்கி,...... மடவார்தோள்

 

விரும்பிவரம்பு கடந்து,நடந்து,

     மெலிந்து,தளர்ந்து ...... மடியாதே,

 

விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை

     விதங்கொள் சதங்கை ...... அடிதாராய்

 

பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற

     பொலம் கிரி ஒன்றை ...... எறிவோனே!

 

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள்

     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா!

 

இரும்புன மங்கை பெரும் புளகம் செய்

     குரும்பை மணந்த ...... மணிமார்பா!

 

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று

     இலஞ்சி அமர்ந்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            பொருந்தல் அமைந்து--- நன்றாகப் பொருந்தி இருந்து,

 

            உசிதம் பெற நின்ற--- பெருமை பெற நின்ற,

 

            பொலம் கிரி ஒன்றை எறிவோனே--- பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவரே!

 

            புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம்கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா--- தேவரீரைப் புகழ்ந்தும்,கண்டு மகிழ்ந்தும்வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானை அம்மையின் மணவாளரே!

 

            இரும் புன மங்கை--- பெரிய தினைப் புனத்தைக் காவல் செய்திருந்த மங்கையாகிய வள்ளியம்மையின்

 

           பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணிமார்பா--- நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பரே!

 

            இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே --- சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தில் வந்து "இலஞ்சியம்" என்னும் திருப்பெயர் பெற்று, "இலஞ்சி* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு--- அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் மொய்த்துள்ள,கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்து,

 

            துரந்து எறிகின்ற விழி வேலால்--- வேகமாக வீசப்பட்ட வேல் போன்ற கண்களின் பார்வையால் (அடியேன் மனமானது)

 

            சுழன்று சுழன்று துவண்டு துவண்டு சுருண்டு மயங்கி--- மிகவும் சுழற்சி அடைந்துமிகவும் வாட்டமுற்றுசோர்வுற்றுமயக்கம் உற்று,

 

            மடவார் தோள் விரும்பி வரம்பு கடந்து நடந்து--- அந்த  விலைமாதர்களின் தோள்களைத் தழுவ விருப்பம் கொண்டு அளவு கடந்து சென்று,

 

            மெலிந்து தளர்ந்து மடியாதே--- அதனால் மெலிவுற்றும் தளர்வுற்றும்  அடியேன் மடிந்து போகாமல்,

 

            விளங்கு கடம்பு விழைந்து--- உமது திருமார்பிலே அழகாக விளங்குகின்ற கடப்ப மாலையை விரும்பி,

 

            அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய்--- அழகிய தண்டையையும்இனிமையாக ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தந்து அருள்வீராக.

 

பொழிப்புரை

 

     நன்றாகப் பொருந்தி அமைந்துமேன்மை பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவரே!

 

            தேவரீரைப் புகழ்ந்தும்,கண்டு மகிழ்ந்தும்வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானை அம்மையின் மணவாளரே!

 

            பெரிய தினைப் புனத்தைக் காவல் செய்த மங்கையாகிய வள்ளியம்மையின் நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பரே!

 

            சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தில் வந்து "இலஞ்சியம்" என்னும் திருப்பெயர் பெற்று, "இலஞ்சி* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் மொய்த்துள்ள,கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்து மயங்கி,வேகமாக வீசப்பட்ட வேல் போன்ற கண்களின் பார்வையால் அடியேன் மனமானதுமிகவும் சுழற்சி அடைந்துமிகவும் வாட்டமுற்றுசோர்வுற்றுமயக்கம் உற்றுஅந்த விலைமாதர்களின் தோள்களைத் தழுவ விருப்பம் கொண்டு அளவு கடந்து சென்றுஅதனால் மெலிவுற்றும் தளர்வுற்றும் அடியேன் மடிந்து போகாமல்உமது திருமார்பிலே அழகாக விளங்குகின்ற கடப்ப மாலையை விரும்பி,அழகிய தண்டையையும்இனிமையாக ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தந்து அருள்வீராக.

 

விரிவுரை

 

சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு--- 

 

சுரும்பு --- வண்டு.  சுரும்பு அணி என்பது வண்டுகள் சூழ்ந்துள்ள மாலையைக் குறிக்கும்.

 

கொண்டல் --- மேகம்.

 

துரந்து எறிகின்ற விழி வேலால்--- 

 

துரந்து எறிதல் --- ஓட்டிச் செலுத்துதல், எறிதல், வீசுதல்.

 

விழியாகிய வேலால் வேகமாக் காமுகர் உள்ளத்தை அடித்துத் துரத்துவர் விலைமாதர்கள்.

 

சுழன்று சுழன்று துவண்டு துவண்டு சுருண்டு மயங்கி--- 

 

 

அதனால் ஆடவரின் உள்ளமானது மிகவும் சுழற்சி அடைந்துமிகவும் வாட்டமுற்றுசோர்வுற்றுமயக்கம் உற்று வாடும்.

 

மடவார் தோள் விரும்பி வரம்பு கடந்து நடந்து--- 

 

காமம் மீதூரப்பட்ட ஆடவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ள வரம்பு கடந்து நடந்துகொள்வர்.

 

பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொலம் கிரி ஒன்றை எறிவோனே--- 

 

உசிதம் --- மேன்மை.

 

பொலம் கிரி -- பொன்மலை. கிரவுஞ்ச மலையையும் குறிக்கும். பொன்மலை ஆகிய மேருமலையையும் குறிக்கும்.

 

கிரவுஞ்ச மலையை எறிந்த வரலாறு

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கிகிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்துகிரவுஞ்ச மலையைப் பிளந்துஅதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

 

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

 

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்துஅண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி,அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

 

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

 

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம்கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்துஅவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடியநீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடிநமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

 

மேருவைச் செண்டால் அடித்த வரலாறு

 

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் சிறந்ததும் துவாதசாந்தத் திருத்தலமும் ஆகிய மதுரையம்பதியில் சோமசுந்தரக் கடவுள் திருவருளால் தடாதகைப் பிராட்டியாரது திருவுதரத்தில் புகாது,அயோநிஜராக முருகவேளது திருவருட்சத்தியுடன் சேர்ந்து முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்ய மூர்த்திகளில் ஒருவர் உக்கிரகுமார பாண்டியராகத் தோன்றிஅறநெறி பரப்பி அரசாண்டு கொண்டிருந்த காலத்தில்கோள்கள் திரிந்ததால் மழை பொழியாதாயிற்று. அதனால் நதிகள்,குளங்கள்கிணறுகள்முதலிய நீர் நிலகள் வற்றி,விளைபொருள் குன்றிகொடிய பஞ்சம் ஏற்பட்டது. மாந்தர்கள் பசியால் வாடி வருந்தினார்கள். உக்கிரகுமார பாண்டியர் “மழை வளம் வறந்தது யாது காரணம்” என்று வினவகால அளவுகளை நன்கு உணர்ந்த புலவர்கள் சோதிட நூலை ஆராய்ந்து “மன்னர் பெருமானே! அழியாத பிரமகற்பம் மட்டும் ஏனைய கிரகங்கள் கதிரவனை அடைந்து பார்த்து நிற்றலால் ஓராண்டு வரை வானத்தினின்றும் மழை பொழியாது” என்றனர்கள்.

 

            அதுகேட்ட உக்கிரகுமாரர் குழந்தையின் நோயைக் கண்டு வருந்தும் நல் தாய்போல் குடிகளிடத்து மனமிரங்கி,அத் துன்பத்தை நீக்கும் உபாயத்தை உன்னிஆலயம் சென்று மதிநதி அணிந்த சோமசுந்தரக் கடவுளைக் கண்டு பணிந்து, “தேவதேவ! மகாதேவ! தென்னாடுடைய சிவபரஞ்சுடரே! எந்நாட்டவர்க்கும் இறைவ! மழையின்றி மாந்தர்கள் பசியால் வாடி மெலிகின்றனர். தேவரீர் திருவருள் புரியவேண்டும்” என்று குறையிரந்தனர். முறையே மும்முறை வலம் வந்து வணங்கி தம் இருக்கை புக்கு கங்குல் வந்ததும் துயில் புரிவாராயினர். வெள்ளியம்பலத்தில் கால் மறியாடிய வித்தகர் உக்கிரப்பெருவழுதியார் கனவில் வந்து தோன்றி, “சீருடைச் செல்வ! இக்காலத்து மழை பெய்தல் அரிது. அதனைக் குறித்து வருந்தாதே. மலைகட்கு அரசாயிருக்கிற மேருமலையின்கண் ஒரு குகையில் அளவு கடந்த ஒரு வைப்பு நிதி சேமம் செய்து உள்ளதுஆங்கு நீ சென்று அம்மலையின் செருக்கழிய செண்டால் எறிந்துஉனது ஆணைவழிப் படுத்தி,சேமநிதியில் வேண்டியவற்றை எடுத்து அந்த அறையை மூடி உனது அடையளமிட்டு மீளுதி” என்று அருளிச் செய்தனர்.

 

            உக்கிரகுமாரர் கண்விழித்தெழுந்து மகிழ்ந்து காலைக் கடனாற்றி,அங்கையற்கண் அம்மையுடன் எழுந்தருளியுள்ள ஆலவாயானை வழிபட்டு விடைபெற்று,நால்வகைப் படைகள் சூழ சங்குகள் முழங்கவும்ஆலவட்டங்கள் வீசவும் வந்தியர்கள் பாடவும் இரதத்தின் மீதூர்ந்து,வடதிசையை நோக்கிச் செல்வாராயினர். தென்கடலானது வடதிசையை நோக்கி செல்வது போலிருந்தது அக்காட்சி. எதிர்ப்பட்ட மன்னர்களால் வணங்கப் பெற்று இமய வரையைக் கடந்து பொன்மயமாய்த் திகழும் மகாமேருகிரியின் சாரலை அடைந்து அம்மேருமலையை நோக்கி “எந்தையாகிய சிவபெருமானது அரிய மலையே! உலகிற்கு ஓர் பற்றுக்கோடே! கதிரும் மதியும் உடுக்களும் சூழ்ந்து வலம்வரும் தெய்வத வரையே! தேவராலயமே!’ என்று அழைத்தனர். வழுதியர்கோன் அழைத்தபோது மேருமலையரசன் வெளிப்பட்டு வரத் தாமதித்ததால்,இந்திரனை வென்ற இளங்காவலன் சினந்து மேருமலையின் தருக்கு அகலுமாறு வானளாவிய அம் மகாமேருவின் சிகரத்தை செண்டாயுதத்தால் ஓங்கி அடித்தனர். மேருமலை அவ்வடி பட்டவுடனே பொன்னால் செய்த பந்துபோல் துடித்தது. எக்காலத்தும் அசையாத அம்மலை அசைந்து நடுங்கியது. சிகரங்கள் சிதறினஇரத்தினங்களைச் சொரிந்தது.

 

     மேருமலையின் அதிதேவதை உடனே அட்டகுல பருவதங்கள் போன்ற எட்டுப் புயங்களையும் நான்கு சிகரங்களையும் கொண்டு நாணத்துடன் வெளிப்பட்டு உக்கிர குமார பாண்டியரை வணங்கியது. பாண்டிய நாட்டிறைவன் சினந்தணிந்து “இதுகாறும் நின் வரவு தாமதித்த காரணம் யாது?” என்று வினவமேருமலையின் அதிதேவதை “ஐயனே! அங்கயற்கண் அம்மையுடன் எழுந்தருளியுள்ள சோமசுந்தரேசுவரரை இவ்வடிவத்துடன் ஒவ்வொருநாளும் சென்று வழிபடும் நியமம் பூண்டிருந்தேன். இன்று அறிவிலியாகிய அடியேன் ஒரு மடவரலைக் கண்டு மனமருண்டு வெங்காம சமுத்திரத்தில் மூழ்கி ஆலவாய்க் கடவுளை வழிபடும் நியமத்தை மறந்து வாளாயிருந்தேன். எம்பெருமானது திருவடிக்குப் பிழைசெய்த இத் தீங்கின் காரணத்தால் தேவரீரது செண்டாயுதத்தால் அடியும் பட்டேன். புனிதன் ஆயினேன். சிவ வழிபாட்டினின்றுந் தவறிய எனது அஞ்ஞானத்தை நீக்கி உதவி செய்தனை. அண்ணலே! இதைக் காட்டிலும் சிறந்த உதவி யாது உளது?இதற்குக் கைம்மாறு அடியேன் யாது செய்ய வல்லேன். பற்றலர் பணியும் கொற்றவஇங்கு வந்த காரணம் என்கொல்திருவாய் மலர்ந்து அருளவேண்டும்” என்று வினவஉக்கிர குமாரர் “வரையரசே! பொன்னை விரும்பி நின்பால் வந்தனன்” என்றனர். மலையரசன் “ஐயனே! பொன் போன்ற தளிரையுடைய மாமர நிழலில் ஓர் அறையில் ஒரு பாறையில் மூடப்பட்டுக் கிடக்கிறது. அச்சேம நிதியில் நினக்கு வேண்டியவற்றைக் கொண்டு நின் குடிமக்களுக்கு ஈந்து வறுமைப் பிணியை மாற்றுதி” என்று கூறவருணனை வென்ற மாபெருந் தலைவராகிய உக்கிரப் பெருவழுதி அவ்வறைக்குள் சென்றுமூடி இருந்தபாறையை எடுத்து,அளவற்ற பொன்களை எடுத்துக் கொண்டு,மீண்டும் அப்பாறையை மூடி மிகுந்த பொருளையுந் தம்முடையதாகத் தமது கயல் முத்திரையை அப்பாறை மேல் எழுதிஆங்கிருந்து புறப்பட்டுமதுரையம்பதியை யணுகிதேரை விட்டிழிந்து முக்கட் பரமனுடைய திருவாலயம் புகுந்து மூவர் முதல்வனை மும்முறை வணங்கி அந்நிதிகளை யெல்லாம் மாந்தர்களுக்கீந்து பசி நோயை நீக்கி இன்பந் தந்து இனிது அரசாண்டனர்.

 

 

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம்கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா--- 

 

புரந்தரன் --- தேவர்கோமான் ஆகிய இந்திரன்.

 

வஞ்சி --- தேவயானை அம்மையார்.

 

இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணிமார்பா--- 

 

இரும்புனம் --- பெரிய தினைப்புனம்.

 

மங்கை என்றது வள்ளிநாயகியாரை. 

 

 

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே --- 

 

இலஞ்சி --- மடு, குளம். பொய்கை.

 

சரவணப் பொய்கையில் வந்ததால், முருகப் பெருமான் "இலஞ்சியம்" எனப் பெற்றார்.

 

"உமையாள் பயந்த இலஞ்சியமே" என்றார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.

 

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்,முத்தமிழால்

வைதாரையும் அங்கு வாழ வைப்போன்,வெய்ய வாரணம் போல்

கைதான் இருபது உடையான் தலை பத்தும் கத்தரிக்க

எய்தான் மருகன்,உமையாள் பயந்த இலஞ்சியமே.   --- கந்தர்அலங்காரம்.

                                         

திருஇலஞ்சி என்னும் திருத்தலம் தென்காசி இரயில் நிலையத்துக்கு ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! திருவடி அருள்வாய்

 

 

 

 

 

No comments:

Post a Comment

கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

  கேளுங்கள் ,  அருமையான ஓர் வரம் -----      வள்ளல்பெருமான் என வழங்கப்படும் ,  இராமலிங்க சுவாமிகள் ,  சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் ,  விரா...