கற்ற கல்வியைக் கொண்டு இறைவனை வழிபட்டு உயர்வோம்

 

கற்ற கல்வியைக் கொண்டு இறைவனை வழிபட்டு உயர்வோம்.

---

 

     கடல் நிறைய நீர் இருக்கிறது. காற்று அந்தக் கடல் நீரைப் பருகுகின்றது. நீர்த் தன்மையை மட்டுமே பருகுகின்றது. உப்பை அது பருகுவதில்லை. உப்பு கடலிலேயே உள்ளது. காற்று முகந்த நீர் மேகமாகின்றது. மேகம் கருப்பம் மிகுந்தபோதுகுளிர்ந்து மழையாய்ப் பொழிகின்றது. பூமியில் உள்ள கடலில் இருந்து வானத்திற்குப் போன நீரானதுமீண்டும் பூமிக்கே வருகின்றது. பூமி வளம் பெறுகின்றது. பூமியில் உள்ள உயிரினங்களும்தத்தமது இயல்புக்கு ஏற்ற வளத்தையும் நலத்தையும் பெறுகின்றன. எஞ்சிய நீரானதுஆறுகள் வழியாக மீண்டும் கடலிலேயே வந்து கலக்கின்றது. இப்படிக் கொடுத்துக் கொடுத்துப் பெறுவதால்கடலுக்கோமேகத்துக்கோ எந்தவிதமான நன்மையும் இல்லை. அதுதான்இயற்கை வடிவாக உள்ள இறைவனின் பெருங்கருணை. அதனை, "வான் சிறப்பு" எனச் சிறப்பித்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     "கற்றது கைம்மண் அளவுகல்லாதது உலகு உளவு" என்று ஔவைப் பிராட்டி கூறியது போலஉலகத்தில் நூல்கள் கடல் அளவு பெருகி உள்ளன. அவரவது விருப்பத்திற்கும் ஈடுபாட்டிற்கும் ஏற்ப நூல்கள் பயன் தருகின்றன. சிறந்த ஞானம் வாய்ந்த அடியார்கள்இறைவன் அருளால் பூவுலகிற்கு இறைவனால் அனுப்பப்படுகின்றார்கள். பிறவிகள்தோறும் தாம் கற்றறிந்த கல்வி அறிவின் துணைக் கொண்டுமெய்ப்பொருளை உணர்ந்த அவர்கள்மெய்ப்பொருளாகிய இறைவன் மீது பலப்பல நூல்களை அருளிச் செய்கின்றார்கள். தமது காரியம் முடிந்த பின்னர்இறைவன் திருவடி நிலையில் அடைக்கலம் ஆகின்றார்கள். அவர்கள் இயற்றி வைத்த நூல்கள் இந்த உலகத்தில் கடல் நீரைப் போல் இன்னமும் உலவிக் கொண்டு இருக்கின்றன. கடலின் தன்மையை அளக்க முடியாது. அதுபோலவேஅருளாளர்கள் அருளிச் செய்துள்ள நூல்களையும்அவன்னிற் தன்மையையும் அளக்க முடியாது.

 

     நிலவுலகத்திற்கு மழையைக் கொடுத்தது கடல். அதுபோலவேஅருளாளர்களுக்கு அறிவைக் கொடுத்தது இறைவன். கொடுத்த இறைவன்அவர்களைத் தமது திருவடிக்கே திரும்பப் பெற்றுக் கொள்கின்றான். எங்கிருந்து அறிவைப் பெற்றார்களோஅங்கேயே அவர்கள் அடைக்கலம் ஆகிவிடுகின்றார்கள். யாரிடம் இருந்து பெற்றார்களோஅந்த இறைவனையே பாடிப் பரவி வாழ்கின்றார்கள்.

 

     இதை நமக்கு உணர்த்த,

 

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்த அதனால்,

பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்!

நாமேல் நடவீர்! நடவீர்! இனியே.

 

என்று தாம் பெற்ற அனுபூதிச் செல்வத்தைக் காட்டினார் அருணகிரிநாதர்.

 

     நாம் கற்ற கல்வியும்அதனால் பெற்ற மெய்யறிவும் வேலாயுதப் பெருமானால் கொடுக்கப்பட்டது. எதற்காகக் கொடுத்தான்தாமே மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகக் கொடுத்தான். இந்த உண்மையை உணர்ந்துஉலகத்தவர்களே! நீங்கள் இந்த உலகின் மேலுள்ள மயக்க அறிவினைப் போக்கிக் கொண்டுஇனியும் தாமதிக்காமல்மெய்ப்பொருளை உணர்ந்துநாவாரப் பாடி வழிபட்டுஉய்வீர்களாக.

 

     பெற்றவர்கள் தமது பிள்ளைகளைக் கல்வி அறிவு பெற்றுச் சிறந்து வாபள்ளிக்கு அனுப்புகின்றார்கள். தாமும் கற்றுக் கொடுக்கின்றார்கள். சொல்லிக் கொடுத்ததைகுழந்தைகளின் வாயால் திருப்பிக் கேட்பதில் பேரானந்தம் உண்டாகின்றது. தப்பும் தவறும் இருந்தாலும் பொருட்படுத்தாமல்கேட்டு மகிழ்ந்துதிருத்துகின்றார்கள். "குழல் இனிது,யாழ் இனிது என்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்" என்றார் திருவள்ளுவ நாயானர்.

 

     இறைவன் திருவருளால் தாம் பெற்ற கல்வி அறிவைக் கொண்டுமெய்ப்பொருளை உணரத் தலைப்பட்ட அருளாளர்கள்இறைவனது அருமையை உணர்ந்துஅதை உலகவர்க்கு உணர்த்தப் பாடுகின்றார்கள். அது கேட்பவர்க்கும்ஓதி உணர்ந்தவர்க்கும் உரிய முறையில் பயனைத் தருகின்றது. எப்படிப் பாடினாலும்இறைவனுக்கு அது இனிமையைத் தருகின்றது. "என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்று சுந்தரமூர்த்தி நாயனாரைத் தூண்டிஅவர், "பித்தா! பிறைசூடீ!" என்று பாடக் கேட்டுப் பெருமகிழ்வு எய்தினார். அவர்வழி வந்த அருணகிரிநாதப் பெருமான், "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவேப்போன்" என்று அருளினார்.

 

அத்தன் நீ,எமது அருமை அன்னை நீ,தெய்வம் நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல் நீ மாரன் நீ,

    ஆண்மை உ(ள்)ள விசயன் நீ,என்று

எத்தனை விதம் சொ(ல்)லி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கம் செ(ய்)யார்;

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சி எனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறு தகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி! அப்

பேய்ச்சிமுலை உண்ட கள்வன் மருகன்! வேடுவப்

    பெண் மணவன் என்று ஏசினும்,

சித்தமகிழ அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ!

    சிறுபறை முழக்கி அருளே!

                    

என்பது கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்.

 

"புன்கவி சிலபாடி இருக்கும் சிலர் திருச்செந்திலை உரைத்து,உய்ந்திட அறியாரே?" என்று வருந்துகின்றார் அருணை அடிகளார்.

 

     "ஓதிய கல்வியும்" என்றார் அடிகளார். படித்தல் முதலாக ஒவ்வொரு நிலையும் ஒரு பயனை அடைவிக்கும்.

 

படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றி திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி ஒழுகி உயர்தல்.

 

     நூல்களைக் கற்பது நான் பயன் பெறுவதற்காக. பெற்ற பயனைப் பிறரும் பெறும்படிச் செய்வதுஓதுதல் ஆகும். ஓதுவது பிறர்க்காக. பிறரும் தெய்வ உணர்வு பெறுவதற்காக. ஒருவருக்கு ஒரு பொருளை அன்போடு கொடுப்பதை, "ஓதிக் கொடுத்தல்" என்பார்கள். காதலாகிகசிந்து கண்ணீர் மல்க ஓதவேண்டும். "காதலாகிகசிந்துகண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தப் பெருமானார். "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" என்பது உலகநீதி. "ஓதுவது ஒழியேல்" என்பது ஔவையார் வாக்கு. ஓதுவது ஒழியேல் என்று சொன்னதால்பிறருக்காக ஓதுவதுஉடம்பில் இருந்து உயிர் பிரியும் வரையும் நிகழவேண்டும். ஓதுவதற்கு எல்லை இல்லை.

 

     கற்றாலும்படித்தாலும்மையல் தீராது. வெற்றுக் கல்வி பாச உணர்வை வளர்க்கும். "எம் அறிவும்" என்றது நூல்களால் பெற்ற அறிவாகிய பாசஞானம் ஆகும். பாசஞானம்பசுஞானம் ஆகியவற்றால் பெற்ற பயனை இறைவனுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும். அல்லாமல்உலகியலுக்குப் பயன்படுத்திஅவற்றின் தரத்தைக் குறைத்துக் கொள்ளுதல் கூடாது.

 

     ஓதி வந்தால் மையல் தீரும். மையல் என்பது மயக்க அறிவைக் குறிக்கும். உலகப் பொருள்களைத் துய்க்கின்றபோதுஅறிவு மயக்கம் உண்டாகும். துய்க்கின்ற பொருள்களும் உண்மைப் பொருள்கள் அல்ல. துய்க்கப்படுகின்ற உடம்பும் உண்மைப் பொருள் அல்ல. இவை எல்லாம் அழியக் கூடியவை என்பதை உணர்ந்தால் அறிவு மயக்கம் தீரும். கற்ற கல்வியின் பயன் மெய்ப்பொருளை உணர்வதே. பொய்ப்பொருள் எது என்று தெளிந்தால்மெய்ப்பொருளைத் தெளிவதில் நாட்டம் உண்டாகும். எனவே, "பூ மேல் மயல் போய் அற" என்று அடிகளார் உணர்த்தினார். பூமேல் மயல் போய் அற்ற பிறகு செய்யவேண்டியுதுமெய்யைப் புணருவது. 

 

கண்உண்டு காணகருத்து உண்டு நோக்ககசிந்து உருகிப்

பண்உண்டு பாடசெவிஉண்டு கேட்கபல் பச்சிலையால்

எண்உண்டு சாத்தஎதிர் நிற்க ஈசன் இருக்கையிலே

மண்உண்டு போகுதையோ! கெடுவீர் இந்த மானுடமே!         ---  பட்டினத்தார்.                                                                                                                    

 

     அடியவர்கள் இறைவனைப் பற்றிப் பாடுகையில் மக்களுக்குப் பல நல்ல கருத்துகள் பல கூறுவர். அது கற்பவர்க்கும் கேட்பவர்களுக்கும் பயனளிக்கும். தாம் கற்ற கல்வியின் பயன்,தம்மிடமே நிலைத்து இருக்க அல்ல. மற்றவர்க்கும் கொடுத்து உதவுதல். எத்தனையோ நூல்கள் உலகத்தில் உருவாகின்றன. மெய்ப்பொருளை உணர்ந்து பாடாததால்அத்தனையும் நிலைப்பதில்லை.

 

     "எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி" என்பார் அப்பர் பெருமான். "கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன்" என்றும் அருளினார். இறைவன் கல்வியாகவும்ஞானமாகவும்கலைப்பொருளாகவும் விளங்குபவன். கல்வி --- கற்கவேண்டிய அறிவு நூல்கள். ஞானம் --- கல்வியால் விளையும் மெய்யறிவு. கலைப் பொருள் --- கல்வி முதலிய கலைகளால் உணர்ப்படுகின்ற பொருள். இவ்வாறு எல்லாமாய் இருப்பவன் இறைவன். அந்த இறைவன் எங்கே இருப்பான்என்றால்கற்றவர்கள் நெஞ்சில் இருப்பான். "கற்றார்கள் உற்று ஓரும் காதலான்" என்று அப்பர் பெருமானும், "கல்லார் நெஞ்சத்து நில்லான் ஈசன்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும் காட்டினார்கள்.

 

     கல்விஞானகலைப்பொருளாக உள்ள பெருமான்கற்றவர்கள் மனத்தில் இருந்து அருளிஅவர்களைச் செல்லாத செந்நெறிக்கே செலுத்துவான் என்கின்றார் அப்பர் பெருமான். அடியார்கள் முயன்று செல்லமுடியாத செம்மையான நெறியில்அவர்களுக்குத் தோன்றாத் துணையாய் இருந்து செலுத்துவான் என்றது அருமையிலும் அருமை.

 

கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை,   

     கற்றார்கள் உற்று ஓரும் காதலானை,

பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும்

     பொன்றிவிழ அன்றுபொரு சரம் தொட்டானை,

நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க    

     நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து,என்றும்

செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்  

     செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே.

 

என்று அப்பர் பெருமான் கல்வியின் பயனால் விளையும் நன்மையை எடுத்துக் காட்டி அருளினார்.

     

இதன் பொருள் ---

 

     உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும்மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும் அன்பனும்பிறர்க்குத் துன்பம் இழைத்தல் ஆகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலால் குடிலாகிய இந்த உடலிடத்து நரை திரை மூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க,நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து,வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்துபவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன்.

 

     மெய்ந்நூல்களைக் கல்லாதவர்க்குஇறை உணர்வு உண்டாவது இல்லை. உண்மை உணர்வு இல்லாத இடத்தில் இறைவன் இருப்பு இல்லை. உண்மை உணர்வு உண்டாவதற்காகவேஅருளாளர்களை அதிட்டித்துஅறிவு நூல்களையும்அருள் நூல்களையும் நாம் ஓதி உய்யும்பொருட்டு அருளிச் செய்கின்றான்.

 

     "ஒருமைக் கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்பது திருக்குறள். மற்ற செல்வங்கள் யாவும் ஒருவனைப் பிறவிகள் தோறும் பின் தொடர்ந்து வரமாட்டா. அவை நிலையற்றவை. அழிந்துபோகும் இயல்பை உடையவை. கேடு இல்லாத விழுமிய செல்வம் கல்விச் செல்வமே ஆகும். அதுபிறவிகள் தோறும் தொடர்ந்துவந்து காவலாக அமையும்.

 

     "செல்லாத செந்நெறி" என்றார். பிறவியில் செல்வது செந்நெறி அல்ல. அதுசெல்லுகின்ற நெறி. அவநெறி. இறைவன் திருவடியை அடைவது, "செல்லாத செந்நெறி" ஆகும். பிறவியில் செல்லாத செந்நெறி. அதை, "ஈண்டு வாரா நெறி" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     எனவேஇறையருளால் பெற்ற கல்வி அறிவைக் கொண்டுபிறரும் பயன் பெறுமாறு ஓதிஅவனையே வழிபட்டு உய்தி பெறுதல் வேண்டும்.முருகவேள் நமக்குக் கல்வியும் அறிவும் தாம் பெறவே தந்துள்ளார். ஆதலின்,அவர் புகழையே பாடுங்கள் பாடுங்கள் என்று அறிவுறுத்துகின்றார் அருணை அடிகள். இறைவன் நமக்குக் கொடுத்த கல்வியையும் அறிவையும் அவனுக்கே ஒப்படைத்தல் ஞானநெறி ஆகும். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே" என்று திருமூலர் பாடி அருளியதை எண்ணுக. இறைவன் நமக்கு அளித்த கண்ணும்கையும் அவனுக்குப் பணி செய்யவே என்பதை, "எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்ககங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க" என்று மணிவாசகப் பெருமான் காட்டினார்.

 

     எனவேஇறைவன் கொடுத்த கல்வியைக் கொண்டுஅவனை நாவாரப் பாடி வழிபட்டுஅவன் திருவடியில் அடைக்கலம் ஆவோமாக.

 

            கந்தர் அனுபூதிப் பாடலை வைத்து இவ்வாறு விளக்கம் காணப்பட்டு உள்ளது என்பதால்மேலே சொல்லப்பட்டது முருகன் அடியார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கொள்ளுதல் பொருந்தாது. எந்தச் சமயத்தவர் ஆனாலும் கடவுளை எந்த வடிவில் கொள்பவர் ஆக இருந்தாலும்கடவுளை  வணங்கியே கல்வி கற்பது முதலான செயல்களை மேற்கொள்ளுகின்றனர். எனவேயாராக இருந்தாலும்கடவுள் நினைவோடு எதையும் கற்றுத் தெளிந்துகடவுளை வழிபட்டு நற்கதியைப் பெற முயலுதல் வேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...