திரு இலஞ்சி --- 0978. கரம் கமலம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கரம் கமலம் (இலஞ்சி)

 

முருகா! 

எனது வினைகளைத் தொலைத்து, 

இயம பயத்தைத் தீர்த்து அருள்வாய்.

 

 

தனந்த தனதன தனந்த தனதன

     தனந்த தனதன ...... தனதான

 

 

கரங்க மலமின தரம்ப வளம்வளை

     களம்ப கழிவிழி ...... மொழிபாகு

 

கரும்ப முதுமலை குரும்பை குருகுப

     கரும்பி டியினடை ...... யெயின்மாதோ

 

டரங்க நககன தனங்கு தலையிசை

     யலங்க நியமுற ...... மயில்மீதே

 

அமர்ந்து பவவினை களைந்து வருகொடி

     யவந்த கனகல ...... வருவாயே

 

தரங்க முதியம கரம்பொ ருததிரை

     சலந்தி நதிகும ...... ரெனவான

 

தலம்ப ரவமறை புலம்ப வருசிறு

     சதங்கை யடிதொழு ...... பவராழி

 

இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப

     னிரண்டு புயமலை ...... கிழவோனே

 

இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு

     இலஞ்சி மருவிய ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

கரம் கமலம்மின் அதரம் பவளம்வளை

     களம்பகழிவிழி,...... மொழிபாகு,

 

கரும்பு அமுது,முலை குரும்பை,குருகு 

     பகரும் பிடியின் நடை,...... எயில்மாதோடு

 

அரங்க நக கன தனம்குதலை இசை

     அலங்க,நியம் உற ...... மயில்மீதே

 

அமர்ந்து,பவவினை களைந்து,வருகொடிய

     அந்தகன் அகல ...... வருவாயே,

 

தரங்க முதிய மகரம் பொருத திரை

     சலந்தி நதி கும ...... ரன்என,வா

 

தலம் பரவ,மறை புலம்ப,வருசிறு

     சதங்கை அடி தொழு ...... பவர்,ழி

 

இரங்கு தொ(ல்)லை திரு அரங்கர் மருக! பன்

     இரண்டு புயமலை ...... கிழவோனே!

 

இலங்கு தர தமிழ் விளங்க வருதிரு

     இலஞ்சி மருவிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            தரங்கம்--- அலைகள் நிறைந்ததும்,

 

           முதிய மகரம் பொருத--- பெரிய மகர மீன்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு உலாவுவதும்,

 

           திரை சலதி நதி குமரன் என--- அலைகளை வீசுகின்ற  கடல் போன்றதும் ஆகிய நதியான கங்காதேவியின் திருக்குமரரே என்று,

 

            வான தலம் பரவ--- விண்ணுலகில் உள்ளோர் போற்ற,

 

            மறை புலம்ப வரு--- வேதங்கள் துதித்துத் தொழ வந்துருளுகின்,

 

           சிறுசதங்கை அடி தொழுபவர்--- சிறிய சதங்கைகளை அணிந்த உமது திருவடிகளைத் தொழுபவரும்,

 

            ஆழி இரங்கு தொ(ல்)லை திரு அரங்கர் மருக--- பாற்கடலிடையே கருணையுடன் பள்ளிகொண்ட பழையவரும் ஆகிய  திருவரங்கநாதரின் திருமருகரே!

 

            ப(ன்)னிரண்டு புய மலைகிழவோனே--- மலை திரண்டன்ன பன்னிரண்டு திருத்தோள்களை உடைய குறிஞ்சி நிலக் கடவுளே!

 

            இலங்கு தர தமிழ் விளங்க வரு--- விளக்கம் பெற்ற தமிழ் மேலும் பொலிவு பெற திருஞானசம்பந்தராகவும், உருத்திரசன்மராகவும் வந்து அவதரித்து 

 

            திரு இலஞ்சி மருவிய பெருமாளே--- திரு இலஞ்சி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

 

            கரம் கமலம்--- திருக் கைகள் தாமரைக்கு ஒப்பாகும்.

 

            மின் அதரம் பவளம்--- ஒளி பொருந்திய வாயிதழ் பவளத்துக்கு ஒப்பாகும்.

 

            வளை களம்--- கழுத்து சங்குக்கு ஒப்பாகும்.

 

            பகழி விழி --- கண்கள் அம்புக்கு ஒப்பாகும்.

 

            மொழி பாகு கரும்பு அமுது--- பேச்சு சர்க்கரைப் பாகுகரும்புஅமுது ஆகியவைகளுக்கு ஒப்பாகும்.

 

            முலை குரும்பை--- முலைகள் தென்னங் குரும்பைப் போன்றவை. 

 

            குருகு பகரும் பிடியின் நடை --- நடையானது அழகு பெற்ற பெண் யானையின் நடைக்குச் சமம்.

 

            எயின் மாதோடு--- இத்தகு சிறப்புக்களை உடைய வேடர் குலப் பெண்ணாகிய வள்ளிப் பிராட்டியின்

 

            அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க--- மலை போன்ற கனத்த மார்புகள் அழுந்தவும்மழலைச் சொல் போலஇன்னிசை கூடிய வள்ளியின் மொழி கேட்கவும்,

 

            நியமம் உற மயில் மீதே அமர்ந்து--- தேவரீர் அழகாக மயிலின் மீது வீற்றிருந்து,

 

            பவ வினை களைந்து--- பல பிறவிகளிலும் அடியேன் செய்த வினைகளை அறுத்து, 

 

            வரு கொடிய அந்தகன் அகல வருவாயே--- இந்தப் பிறவியின் முடிவில் என்னைப் பிடிக்க வரும் அந்தக் கொடிய எமன் என்னை அணுகாமல் இருக்க வந்து அருள வேண்டும்.

 

பொழிப்புரை

 

     அலைகள் நிறைந்ததும்பெரிய மகர மீன்கள் சண்டையிட்டு உலாவுவதும்கடல் போன்றதும் ஆகிய நதியான கங்காதேவியின்  திருக்குமரரே என்றுவிண்ணுலகில் உள்ளோர் போற்றவேதங்கள் துதித்துத் தொ,சிறிய சதங்கைகளை அணிந்த உமது திருவடிகளைத் தொழுபவரும்பாற்கடலிடையே கருணையுடன் பள்ளிகொண்ட பழையவரும் ஆகிய  திருவரங்கநாதரின் திருமருகரே!

 

            மலை திரண்டன்ன பன்னிரண்டு திருத்தோள்களை உடைய குறிஞ்சி நிலக் கடவுளே!

 

            விளக்கம் பெற்ற தமிழ் மேலும் பொலிவு பெற திருஞானசம்பந்தராகவும், உருத்திரசன்மராகவும் வந்து அவதரித்துதிரு இலஞ்சி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

 

            திருக் கைகள் தாமரைக்கு ஒப்பாகும்.ஒளி பொருந்திய வாயிதழ் பவளத்துக்கு ஒப்பாகும்.கழுத்து சங்குக்கு ஒப்பாகும். திருக் கண்கள் அம்புக்கு ஒப்பாகும்.பேச்சு சர்க்கரைப் பாகுகரும்புஅமுது இவைகளுக்கு ஒப்பாகும்.முலைகள் தென்னங் குரும்பைப் போன்றவை. நடை அழகு பெற்ற பெண் யானையின் நடைக்குச் சமம்.இத்தகு சிறப்புக்களை உடைய வேடர் குலப் பெண்ணாகிய வள்ளிப் பிராட்டியின்மலை போன்ற கனத்த மார்புகள் அழுந்தவும்மழலைச் சொல் போலஇன்னிசை கூடிய வள்ளியின் மொழி கேட்கதேவரீர் அழகாக மயிலின் மீது வீற்றிருந்துபல பிறவிகளிலும் அடியேன் செய்த வினைகளை அறுத்து, இந்தப் பிறவியின் முடிவில் என்னைப் பிடிக்க வரும் அந்தக் கொடிய எமன் என்னை அணுகாமல் இருக்க வந்து அருள வேண்டும்.

 

விரிவுரை

 

மின் அதரம் பவளம்--- 

 

மின் --- ஒளி.

 

வளை களம்--- 

 

வளை --- சங்கு.  களம் --- கழுத்து. 

 

பகழி விழி ---

 

பகழி --- கணை, அம்பு.

 

குருகு பகரும் பிடியின் நடை --- 

 

குருகு --- இளமை, அழகு.

 

பிடி --- பெண் யானை.

 

எயின் மாதோடு--- 

 

எயினர் -- வேடர்.

 

வேடர்களால் வளர்க்கப்பட்டதால், வள்ளநாயகியை எயினமாது என்றார்.

 

அரங்க நக கனதனம் குதலை இசை அலங்க--- 

 

அரங்க --- முழுதும்.

 

நகம் --- மலை.

 

நியமம் உற மயில் மீதே அமர்ந்து--- 

 

நியம் --- நியமமாக,நிச்சயமாக. 

 

பவ வினை களைந்து--- 

 

பவம் --- பிறவி. பல பிறவிகளிலும் ஈட்டிய நல்வினை, தீவினைகள் பிறவிக்குக் காரணமாக உள்ளன. அவ்வினைகளை முருகப் பெருமான் திருவருளால் மட்டுமே அறுத்துக் கொள்ள முடியும் என்பதால், இவ்வாறு வேண்டினார்.

  

திரை சலதி நதி குமரன் என--- 

 

கங்காதேவியால் சரவணத்தில் கொண்டு உய்க்கப் பெற்றவர் முருகப் பெருமான். எனவே, அவர் "காங்கேயன்" எனப்படுகின்றார்.

  

மறை புலம்ப வரு சிறுசதங்கை--- 

 

முருகப்பெருமானுடைய திருவடியில் விளங்கும் பொற் சதங்கைகள் நான்கு வேதங்களின் மந்திரங்களை ஒலித்துக் கொஞ்சுகின்றன.

 

மறைசதுர் விதம் தெரிந்து,வகை சிறு சதங்கை கொஞ்சு,

     மலர் அடி வணங்க என்று ...... பெறுவேனோ?

 

என்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில்.

 

தொ(ல்)லை திரு அரங்கர் மருக--- 

 

"தொல்லையஞ்சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று" யென்றார் நம்மாழ்வார்.

 

ப(ன்)னிரண்டு புய மலைகிழவோனே--- 

 

முருகப் பெருமானை "மலைகிழவன்" எனச் சீர்பாத வகுப்பில் அடிகளார் போற்றி உள்ளார். 

 

இலங்கு தர தமிழ் விளங்க வரு--- 

 

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும்சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்.கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ்பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்இயற்கையான மொழி தமிழ்பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர்.  சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

"மற்று,நீ வன்மை பேசிவன்தொண்டன் என்னும் நாமம்  

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்

சொல்தமிழ் பாடுகஎன்றார் தூமறை பாடும் வாயார்".

 

"சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை இன்னும்    

பல்லாறு உலகினில் நம்புகழ் பாடுஎன்று உறு பரிவின்

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்

எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்".

 

"என்ற பொழுதில் இறைவர்தாம்

     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றின் இடை நம் கூத்து ஆடல்

     வந்து வணங்கி வன்தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி

     உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்

     என்றார் அவரை நினைப்பிப்பார்".

 

என வரும் பெரியபுராணப் பாடல்களையும்,அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக.

 

இறைவன், "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்" என்று போற்றினார் மணிவாசகப் பெருமான். பெருமானுக்குஅவர் ஆய்ந்த தமிழில் விருப்பம் மிகுதி. ஆதலால்,

 

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்

    பலத்தும்,என் சிந்தையுள்ளும்

உறைவான்,உயர்மதிற் கூடலின்

    ஆய்ந்த ஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ?அன்றி

    ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்

    ஆம் புகுந்து எய்தியதே"

 

என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி அருளினார்."தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்புஇலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?

 

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்முதலை

உண்ட பாலனை அழைத்ததும்எலும்பு பெண் உருவாக்

கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும்கன்னித்

தண்தமிழ்ச் சொலோமறுபுலச் சொற்களோ சாற்றீரே.

 

எனத் திருவிளையாடல் புராணம் கூறுமாறு காண்க.

 

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து அவதரித்தது. "திசை அனைத்தின் பெருமை எல்லாம் தென்திசையே வென்று ஏறவும்அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும்வந்து அவதரித்தவர். அவர் அருளிய திருப்பதிகங்கள் தமிழ் மக்களின் மொழிசமயம்தத்துவம்இலக்கியம்பண்பாடுவரலாறு ஆகிவற்றை விளக்கி நிற்கும் ஞானப் பெருங்கடல் எனலாம். திருஞானசம்பந்தர் தமிழோடு இணைந்து நின்று திருப் பதிகங்கள் அருளியிருப்பதை அவர்தம் தேவாரத் திருப்பதிகங்களில் காணலாம். ஆளுடைய நம்பிகள் ஞானசம்பந்தரை `நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்எனக் குறித்தருளுவார். திருஞானசம்பந்தரே தன்னைத் தமிழ்ஞானசம்பந்தன்தமிழ்விரகன்தமிழாகரன்முத்தமிழ்விரகன் முதலிய பல பெயர்களால் குறிப்பிட்டுள்ளதை அவர்தம் திருப் பதிகங்களில் காணலாம். திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களை `நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள் யாப்புக்கு உரியனஎன்று அருளிச்செய்கின்றார் நம்பியாண்டார் நம்பிகள். ஞானசம்பந்தர் பல்வேறு சந்த யாப்புக்களில் திருப்பதிகங்கள் அருளியுள்ளார்.

 

அவ்வாறே உருத்திரசன்மராக மதுரையில் வந்து அவதரித்து, தமிழ்மொயிழை விளக்கம் பெறச் செய்தவர்.

 

திரு இலஞ்சி மருவிய பெருமாளே--- 

 

திருஇலஞ்சி என்னும் திருத்தலம் தென்காசி இரயில் நிலையத்துக்கு 6 கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! எனது வினைகளைத் தொலைத்து, இயமபயத்தைத் தீர்த்து அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...