மனித வடிவில் இழிந்த பேய்கள்

மனித வடிவில் பேய்கள்

-----

 

     "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரம் ஆகி......பேயாய்க் கணங்களாய்... எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மணிவாசகப் பெருமான் பாடி உள்ளார். உயிர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்படிப்படியே,அவ்வறிவு வளர்ச்சிக்கு இடம் தருகின்ற உயர்ந்த உடம்புகள் வரும். உயர்ந்த உடம்பைப் பெற்று இருந்தும்மனிதன் செய்கின்ற தீவினைகளுக்கு ஏற்பமனிதப் பிறவியினும் இழிந்த பிறவியிலும் செல்ல நேரும்என்பது இப் பாடல் வரிகள் உணர்த்தும் பொருள்.

 

     பேய் என்பது நுண்ணுடம்பில் நிற்கும் ஒருவகை உயிர். கண்டார்க்கு அச்சத்தைத் தருவது என்பதால் இப்பெயர் பெற்றது. "பேம்" என்னும் சொல்லுக்கு "அச்சம்" என்று பொருள். இதில் இருந்து வந்த,"பேய்" என்னும் சொல்லுக்கு,காட்டுத்தன்மைதீமைவெறி என்று பொருள்கள் உண்டு.

 

     பொதுவாகஇறப்புக் காலம் வரும் முன்னதாகவே இறந்த ஒருவரின் ஆவி,உயிருடன் உள்ள மற்றொருவரின் உடலில் புகுந்து அவரை ஆட்டுவிக்கும் நிகழ்வே பேய் பிடித்தல் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பேய் பிடித்ததாக கூறப்படுபவர்கள்இயல்புக்கு மாறாகப் பேசுவதும்செயல்களைச் செய்வதும்நினைவுகளை இழந்தவாறும் இருப்பதாக அறியப்படுகிறது.

 

     நுண்ணுடம்பில் இருக்கும் பேயானதுவேறு ஒருவரின் உடம்பில் புகுந்துகொண்டுஅவரை ஆட்டி வைக்கும் போதுஅப்படிப்பட்ட நபர் பேய்த்தன்மையே அடைகின்றார். பேயால் பிடிக்கப்பட்டவரின் செயல்கள் அனைத்தும் பேயினது செயல்களாகவே இருக்கும்.

 

     பேய்ப் பிடிப்பு இல்லாமலேயேபேயினது தன்மையை உடைய மனிதர்கள் இருக்கின்றார்கள். இவர்களது செய்கை மனிதத் தன்மைக்கு மாறானதாகபிறருக்கு அச்சத்தையும் கேட்டையும் தருவதாக அமைந்திருக்கும். 

 

     மனிதர்களில் பேய்த்தன்மை உடையவர்கள் யார் என்று "குமரேச சதகம்" என்னும் நூல் வகைப்படுத்தி உள்ளதைப் பார்ப்போம்....

 

கடன்உதவு வோர்வந்து கேட்கும்வே ளையில்முகம்

     கடுகடுக் கின்றபேயும்,

கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து

     கண்விழிக் காதபேயும்,

 

அடைவுடன் சத்துருவின் பேச்சைவிசு வாசித்து

     அகப்பட்டு உழன் றபேயும்,

ஆசைமனை யாளுக்கு நேசமாய் உண்மைமொழி

     ஆனதை உரைத்தபேயும்,

 

இடர் இலா நல்லோர்கள் பெரியோர்க ளைச்சற்றும்

     எண்ணாது உரைத்தபேயும்,

இனியபரி தானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு

     இடுக்கண்செய் திட்டபேயும்,

 

மடமனை இருக்கப் பரத்தையைப் புணர்பேயும்,

     வசைபெற்ற பேய்கள் அன்றோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே--- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     கடன் உதவு பேர்வந்துகேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும்---துன்பம் வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவியவர் வந்து,தாம் முன்னே கொடுத்த கடனைக் கேட்கும்போது முகத்தைச் சுளிக்கின்றபேய்க் குணம் பொருந்தியவர்களும்

 

     கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண்விழிக்காத பேயும்---மேன்மையைத் தரும் பெரும் செல்வம் கிடைத்தவுடன் செருக்குக் கொண்டுதன்னைக் காணவந்தவர்களைப் பார்த்தும் பாராதது போல இருக்கின்ற பேய்க் குணம் படைத்தவர்களும்

 

     அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும்---பகைவன் சொல்லை ஒழுங்காக நம்பிபின்னர்சிக்கி வருந்துகின்ற பேய்க் குணம் படைத்தவர்களும்

 

     ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும்---காதல் மனைவியின் மேலுள்ள அன்பு காரணமா,உண்மைச் செய்தியை அவளிடம் உரைத்த பேய்க் குணம் கொண்டவர்களும்

 

     இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும்--- பிறருக்குத்துன்பம் புரியாத நல்லோர்களையும் பெரியோர்களையும் சிறிதும் மதியாமல் இகழ்ந்து பேசிய பேய்க் குணம் படைத்தவர்களும்

 

     இனிய பரிதானத்தில் ஆசை கொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும்---இனியதாகத் தோன்றும்இலஞ்சப் பொருளின் மேல் ஆசைப்பட்டு,ஒருவனுக்குத் தீமையைச் செய்யும் பேய்க் குணம் படைத்தவர்களும்

 

     மடமனை இருக்கப் பரத்தையைப் புணர் பேயும்---இளமைப் பருவம் உடைய மனைவி இருக்கவும்,விலைமாதைக் கூடுகின்ற பேய்க் குணம் படைத்தவர்களும்

 

     வசைபெற்ற பேய்கள் அன்றோ ---பிறரால் இழிவாகப் பேசப்படுகின்ற பேய்கள் அல்லவா?

 

     கருத்து--- எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லாமல் தான் நினைத்தபடியே இருப்பவனைப் பேய் என்று உலகத்தார் சொல்லுவர். பேய் என்றாலே இழிந்த பிறவிதான். பேய்களில் எல்லாம் இழிந்த பேய்கள் என்று சிலரை இந்தப் பாட்டில் சொல்லப்பட்டு உள்ளது. கடன் கொடுத்தவனிடம்நன்றி உணர்வோடு திருப்பிக் கொடுக்க வேண்டும். கடனைக் கொடுத்தவன் வந்து கேட்டாலும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.கடன் பட்டவன் நெஞ்சம் கலக்கம் கொள்ளவேண்டும். அதுதான் இயல்பு. "தாளாளன் என்பான் கடன்படா வாழ்வினான்" என்பது திரிகடுகம்.

 

     The rich ruleth over the poor, and the borrower is servant to the lender. --- Solomon.

 

     கம்பராமாயணத்தை அறியாதவர்கள்"கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்என்ற அடியைக் கம்பர் பாடியதாகக் கூறுவதுண்டு. 

 

"விடம் கொண்ட மீனைப் போலும்,

     வெந்தழல் மெழுகைப் போலும்,

படங்கொண்ட பாந்தள் வாயில்

     பற்றிய தேரை போலும்,

திடம் கொண்ட ராம பாணம்

     செருக்களத்து உற்ற போது,

கடன் கொண்டார் நெஞ்சம் போலும்

     கலங்கினான் இலங்கை வேந்தன்".

 

     இந்தப் பாடல் பலருக்கும் மனப்பாடாகவும் உள்ளது. இதனைப் பாடியவர் யார் என்று தெரியவில்லை. அருணாசலக் கலவிராயர் பாடியது என்பர் சிலர். ஆனாலும்கம்பர் பாடியது என்றே பலரும் நம்பி இருக்கின்றனர். இப் பாடலின் சுவையானதுஅதனைக் கவிச்சக்கரவர்த்திக்குச் சொந்தமாக்கி உள்ளது. பாம்பின் வாயில் அகப்பட்ட தேரைவிடத்தை உண்ட மீன்நெருப்பில் இட்ட மெழுகு ஆகியவை கடன்பட்டவனுக்குக் காட்டப்பட்டன. தேரையும் மீனும் உயிர்ப் பிராணிகள். அவை தப்பிக்க வழியை இல்லை. இவை கடன்பட்டவர் அல்லது கடன்கொண்டவர் உள்ளத்தில் இருக்கும் பதைபதைப்பினை உணர்த்தி நின்றன. கடன் படுவதை நஞ்சுபாம்புநெருப்பு என்று எண்ணிஅவற்றினின்றும் நீங்கி இருத்தல் வேண்டும் என்பதை இப் பாடல் உணர்த்தி நின்றது.

 

     காலப் போக்கில்கடன் கொடுத்தவன்தான் கலங்கி நிற்கின்ற நிலை உருவாகிவிட்டது. கடன்பட்டவர்கள் கலங்குவதே இல்லை. நிதி நிறுவனங்களில் கடன்பட்டுஎப்படி தவிர்க்கலாம் என்று சிந்திக்கும் நிலை இன்று உள்ளது. மற்றொருவனின் பொருள்தான் தனக்குக் கடனாக வந்துள்ளது என்பதை அறிந்துஅவன் மனம் வேதனைப்படுமே என்று எண்ணினால் பரவாயில்லை.

 

     இது ஒருபுறம் இருக்கசெல்வமானது ஒடவனிடம் சேர்ந்துவிட்டால்நிலைமை தலைகீழாகி விடும். "செல்வம் வந்து உற்ற காலைதெய்வமும் சிறிது பேணார்" என்பார் விவேக சிந்தாமணி ஆசிரியர். (இந்தப் பாடல்வில்லிபாரதத்திலும் வருகின்றது. இடைச் செருகலாக இருக்கலாமோ?) அப்படிப்பட்டவருக்கு எதிரில் வருபவர் யார் என்று தெரியாது. செருக்கு அவ்வளவுக்கு மிஞ்சி நிற்கும். கண் இருந்தும் குருடராகவும்காது இருந்தும் செவிடராகவும்வாய் இருந்தும் ஊமையாகவும்கால் இருந்தும் முடவராகவும்அறிவிருந்தும் முட்டாளாகவும்,ஒருவனைச் செய்விப்பது பொருட்செல்வமே ஆகும்.

 

நோக்குஇருந்தும்அந்தகரா,காதுஇருந்தும்

    செவிடரா,நோய்இல்லாத

வாக்குஇருந்தும்மூகையரா,மதிஇருந்தும்

    இல்லாரா,வளருங்கைகால்

போக்குஇருந்தும்முடவரா,உயிர்இருந்தும்

    இல்லாதபூட்சியாரா

ஆக்கும்இந்தத்தனம்அதனை,ஆக்கம்என

    நினைத்தனைநீஅகக்குரங்கே.         --- நீதிநூல்.

 

 இதன்பொருள்---

 

     நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கேநீகண்ணிருந்தும் குருடராய்க்காதிருந்தும் செவிடராய்க்குற்றமற்றவாயிருந்தும் ஊமையராய்அறிவிருந்தும் மூடராய்நீண்ட கைகால்களிருந்தும் முடவராய்உயிரிருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீயபொருளைவளரும் செல்வமாம் வாழ்வு என நினைத்தாயே.

 

     "அடக்கம் உடைமை" என்னும் அதிகாரத்தைஅறத்துப்பாலில் நாயனார் வைத்துள்ள அருமையை எண்ணிப் பார்த்திடல் வேண்டும். பணிவானதுஒருவன் பெற்றுள்ள செல்வத்தை மேலும் வளர்ப்பதாக அமையும் என்பதால், "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து" என்றும் அருளினார் நாயனார்.  செல்வம் வந்து சேர்ந்த காலத்தும் பணிவு இன்றியமையாது வேண்டும். ஒருவனுக்குப் பெருமையைத் தருவது அவனிடத்து உள்ள பணிவுடைமையே என்பதைக் காட்ட"பணியுமாம் என்றும் பெருமைசிறுமை அணியுமாம் தன்னை வியந்து" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     பகைவர் பேச்சிலே மறந்தும் நம்பிக்கை வைத்துப் பின்னர் ஏமாறுதல் கூடாதுநல்லோரையும் பெரியோரையும் இகழ்தல் கூடாதுஇலஞ்சம் வாங்கிக்கொண்டு பிறருக்குத் தீமை செய்தல் ஆகாதுவிலைமாதர் நட்புக்கூடாது

 

     ஆசை மனைவியிடம் உண்மையை உரைக்கக் கூடாது என்றார். மனைவியாய் இருந்தும்அதற்கேற்ப நடவாதவர்களும் உண்டு என்பதால்இவ்வாறு கூறினார் எனக் கொள்ளல் பொருந்தும்.                        

 

எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை.           --- நாலடியார்.

 

     தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்றுஅவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்லஎமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்லதீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள்மனைவி அல்லவீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களே போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.

 

     "கூற்றமேஇல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்" என்பது நான்மணிக் கடிகை.தனது தீய குணத்தினால்கணவன் ஒடுங்கி உயிர் ஒழிவதற்குக் காரணமாக இருத்தல் பற்றி இவ்வாறு கூறப்பட்டது. காலம் அறிந்து உணவு இடாமையால்அவனுக்கு நோய் வந்து சார்வதற்குக் காரணமாக இருத்தலால், "அரும்பிணி" என்றும்"பேய்ப் பிறப்பில் பெரும்பசியும்" என்று கூறி இருப்பதால்வீட்டில் உள்ளோர் பசியை நோக்காமல்தானே உண்பது பற்றி, "பேய்" என்றார். "கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்" என்றார் மூதுரையில் ஔவையார்.

 

     "தாரம் மாணாதது வாழ்க்கை அன்று" என்பது முதுமொழிக் காஞ்சி. "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல்" என்றார் திருவள்ளுவ நாயனார். "இல்லாள் அகத்து இருக்கஇல்லாதது ஒன்று இல்லை" என்றார் ஔவையார். இவை யாவும் இல்லாளின் பெருமைகளைப் பறைசாற்றுவன.

 

     காட்டில் திரிந்துபலரையும் ஆட்டிவைக்கும் பேயினும்வேறுபாடு தோன்றமனிதர்கள் வடிவில் இருக்கும்தீய குணம் படைத்தவர்களை, "இழிவான பேய்கள்" என்றார்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...